தொடரும் எமாற்றங்கள்

என்னடா இது தலைப்பே 'தொடரும் ஏமாற்றங்கள்' என்று துவங்குகின்றது என்று ஆச்சரியப்பட வேண்டாம். எல்லாம் தொடர்வதனால்தான் இன்று முனக வேண்டியிருக்கின்றது. இன்று எதனைப்பற்றி எழுதலாம் என்று சற்று சிந்தித்து விட்டு, தலைப்பை சரியாக அழுத்தம் திருத்தமாக போட்டுவிடுவோம் என்ற எண்ணத்துடன் சுமார் பத்து நிமிடங்களை ஓட்டிவிட்டேன். அப்படி நேரம் சென்று கொண்டிருக்கையில்தான் இப்படியொரு தலைப்பு சடுதியாக மனத்தில் தோன்றியது. தோற்றத்தினைப் பற்றி கூறுகின்ற போதுதான் ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது 'இந்த வாழ்வில் தோற்றம் அல்லது தோன்றுதல் என்பதுதான் பெரும் அவதியும் கூடவே மகிழ்ச்சியும்'. ஆனாலும் இந்த தோற்றத்திற்கும் மனத்தின் அலைகளுக்குமிடையில் எப்போதும் உறவொன்று இருந்ததே கிடையாது. இதன் காரணமாகத்தான் வாழ்வியலின் அனைத்து பகுதிகளும் அடிக்கடி மாற்றம் பெறுகின்றன அல்லது நிலமைகளைப் பொறுத்து விசுவரூபமெடுக்கின்றன.

பாருங்கள் இந்த தலைப்பு சடுதியாக என் மனத்தில் தோன்றுவதற்கும் ஒரு காரணம் இருக்கின்றது. என்னால் நாளாந்தம் ஏமாறுகின்ற ஒருத்தி இருக்கின்றாள் என்னுடைய அலுவலகத்தில். மன்னிக்கவும்...அவர் வயதில் மூத்த ஒருவராக இருந்தாலும் இங்கு ஒருத்தி என்றுதான் கூறுகின்றேன். இப்படித்தான் என்னுடைய பாடசாலைக் காலத்தில் நான் சற்று புரட்சிகரமான நியாயங்களை முன்வைக்கின்ற தன்மை என்னிடம் இருந்ததாம். இப்படித்தான் ஒரு நாள் பாடசாலை ஆசிரியர்கள் ஓய்வெடுக்கும் அறையிலிருந்த கதிரையொன்றில் சற்று அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தேன். இந்த நேரம் அங்கு ஆசிரியர்கள் எவரும் இருந்திருக்கவில்லை. ஆனாலும், சற்று நேரத்தில் அங்கு வந்த ஒரு ஆசிரியர் நான் ஆசிரியர்கள் அமரும் கதிரையில் மிகவும் உல்லாசமாக அமர்ந்து கொண்டிருப்பதனை கண்டுவிட்டு இன்னும் சில ஆசரியர்களை அங்கு வரவழைத்து விட்டு எனக்கு திட்டிக் தீர்த்துக் கொண்டிருந்தார். நானும் பொறுமையாக கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். இறுதியில் என்மனத்தில் பட்டதனை அப்படியே கூறிவிட்டேன். அப்படியென்ன கூறியிருப்பேன் என்று ஆழமாக சிந்திப்பதற்கு அங்கு ஒன்றும் கிடையாது. அந்த ஆசியரியரை பார்த்து நான் கூறியது 'மரியாதை என்பது மனத்திலிருக்க வேண்டியது' என்பதுதான்.

விடயத்திற்குச் செல்வோம்.... அவள் வேறொருத்தியுமல்ல எனது அலுவலகத்தில் வேலை புரிபவர்களுக்கு தேநீர் தயாரித்து கொடுக்கின்றவள்தான். வழமை போன்று இன்றும் அவள் எனக்காக காலையில் பால் கலந்து கொண்டுவந்து வைத்திருந்தாள். ஆனால் எனக்கு இந்த தேநீர், பால் என்பவற்றிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. அது என்னுடைய நாளாந்த செயல்பாட்டில் இல்லாத மேலதிக விடயமாக இருப்பதனால் அவற்றை நான் கவனிப்பதும் கிடையாது. வழமையாக அவளும் எனக்காக இவற்றை மேசையில் வைத்து விட்டுச் சென்று மீண்டும் வெறும் கோப்பையினை எடுப்பதற்காக வருவாள். இந்த நேரத்தில்தான் நானும், அதன் ஞாபகம் வந்து அதனை குடிப்பதற்று முயற்சிப்பேன். பின்பு அவளும் சற்று புன்னகையுடன் சென்றுவிட்டு, மேலும் சில மணித்தியாலங்களில் வந்து வெறும் கோப்பையினை எடுத்துச் செல்வாள். இப்படி தொடர்ந்து அவளுக்கும் என்னால் ஏற்படுவது காத்திருப்பும் ஏமாற்றமும்தான். இன்றும் நான் எதனைப் பற்றி எழுதுவது என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவள்தான் வந்து கதவினை திறந்தாள். ஆனால் வைத்த தேனீர் அப்படியே இருந்ததனால் மீண்டும், வழமையான விடயம்தான் என புன்னகையினால் கூறிவிட்டு சென்றுவிட்டாள். இந்த ஏமாற்றம் அவளுக்கு தொடர்ந்து கிடைப்பதினால் இங்கு தலைப்பும் 'தொடரும் ஏமாற்றங்கள்' என்று வந்துவிட்டது. 

நாம் ஏன் ஏமாந்துவிடுகின்றோம் என்ற வினாவுக்கு முன் சென்ற கீறலில் நம்பிக்கையினால்தான் என்று கூறினேன். இன்று இந்த நம்பிக்கை பற்றி சற்று கூற வேண்டியிருக்கின்றது. நம்பிக்கை என்றால் என்ன? அதன் அபாரம் எவ்வாறானது? அதனை எவ்வாறு உபயோகிப்பது? அதனை எவ்வாறு உபயோகிப்பது என்பதனைவிட எவ்வாறு கையாள்வது என்று அவதானிப்பது மிகவும் பொருத்தமான ஒன்று என்று நினைக்கின்றேன். நிச்சயமாக நாம் ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது அதிக நம்பிக்கை வைத்தால் அதில் ஏமாற்றம்தான் விஞ்சும் என்பதில் எனக்கும் எந்தவித சந்தேகமும் கிடையாது. சிலர் என்னிடம் கேட்கின்றனர். ஆவ்வாறெனில், ஏமாறாத அளவுக்கு நாம் ஒன்றின் மீதோ அல்லது ஒருவரின் மீதோ நம்பிக்கையினை வைத்துவிட முடியாதா? என்று. 

மிகவும் சிறப்பான ஆலோசனைதான். ஆனாலும், இந்த உலகத்தில் அது முடியாத காரியம். ஏனென்றால் நம்பிக்கை என்பது யதார்த்தத்தில் ஒரு பொதுமைப் பெயர். அதனை நாம் என்னவென்று அறியாமலேயே உபயோகிக்கின்றோம், இன்னும் ஏன் அதுவாக பலதை கற்பனை செய்துகொண்டு முடிவெடுத்துக் கொள்கின்றோம். அப்துர் றஹீம் அவருடைய நூலொன்றுக்கு வைத்திருக்கும் பெயர் 'எண்ணமே வாழ்வு' என்பது. ஆனால் அதனை வாசித்த எனக்கு விளங்குவது நம்பிக்கை என்பதனை நாம் இதுதான் என சுட்டிக்காட்ட முடியாது என்பதனைத்தான். ஆனாலும் அவர் பல்வேறு விடயங்களை அந்த புத்தகத்தில் அடுக்கிச் செல்கின்றார். வாஸ்தவம்தான். என்றாலும், அதில் கூறப்படுகின்ற விடயங்கள் மனித வாழ்வில் இடம்பெறுகின்ற சில கால கட்டங்கள் மாத்திரமே. அதன் போது எம்மை நாம் எவ்வாறு மாற்றீடாக பயன்படுத்திக் கொள்கின்றோம் அல்லது எவ்வாறு மாற்றீடாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதனைத்தான் அவைகள் கூறுகின்றன. சுருக்கமாக கூறினால் அவ்வளவும் நாம் இந்த உலகத்தில் வாழ்கின்ற நேரங்களின் தொகுப்பு. இந்த நேரங்களை நாம் சரியாக பயன்படுத்தாத வேளை அவை எமக்கு எமாற்றங்களைத்தான் தருகின்றன. இந்த நேரங்கள் எம்மோடு தொடர்ந்தும் விளையாட முனையுமானால் அவைதான் எமக்கு தொடரான ஏமாற்றங்களை கொண்டுவந்து குவித்துவிடுகின்றன. இந்த நேரத்தினை பற்றி பிறிதொரு சந்தர்பத்தில் மிக ஆழமாக தருகின்றேன்.

எம்மால் அடிப்படையில் வாழ்க்கையினை பூர்த்தி செய்ய முடியாது. அப்படி பூர்த்தி செய்ய முடியாத போது எம்மால் அந்த வாழ்வின் அம்சங்களை அடைய முடியாது போகிறது. இதனால் எமக்கு கிடைப்பன எல்லாம் ஏமாற்றங்கள்தான். நீங்கள் என்னதான் வெற்றி பெற்றதாக ஆராவாரம் செய்தாலும் உங்களிடத்தில் உண்மையில்  ஒன்றும் கிடையாது என்பதனை என்னால் உறுதியாக கூற இயலும். ஏனென்றால் நீங்கள் நேரத்தினை விட அவ்வளவு கெட்டிக்காரர் இல்லை. நீங்கள் இன்று வைத்திருக்கின்ற நம்பிக்கையினை நாளையும் அவ்வாறே வைத்துக் கொள்வீர்கள் அல்லது உறுதியாக பற்றிக் கொள்வீர்கள் என்று நீங்கள் கூறுவீர்களானால் இதனைப் போல ஒரு மடத்தனம் உலகத்தில் கிடையாது. மனிதனின் மனத்தின் அடிப்படை தன்மையே அடிக்கடி மாறுவதுதான். சிலவேளை, காரணம் இல்லாமலேயே மாற்றங்கள் மனத்தில் ஏற்படலாம். அதற்காக நாம் மனத்தினை அதன் தன்மையினை பூரணமாக ஒதுக்கிவிட முடியாது. இப்படி மனம் என்பது விபரிக்க முடியாததாயும், நம்பிக்கை என்பது எமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டதாயும் இருப்பதனால் ஏமாற்றுவதும், ஏமாறுவதும் நாமாய், எமது மனமாயிருக்கின்றோம்.

வாழ்வென்பது தொடருமானால் ஏமாற்றமும் தொரும். அது பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் கூட தொடர்ந்தாலும், எமாற்றமும் அடுத்து பின்வந்தே தீரும். இதற்காக நாம் இருக்கின்றவற்றை வைத்து திருப்திப்பட்டுக் கொள்ளவோ அல்லது கிடைத்தவைகளை வைத்துக் கொண்டு வெற்றி வாகை சூடியதாகவோ கற்பனை செய்தால் அதுவும் ஒரு ஏமாற்றம்தான். ஆனால் எமது புறம்பான நம்பிக்கை அதனை ஏற்றுக் கொள்ளும் படி எமது மனத்தினை வற்புறுத்துகின்றது என்பதுதான் அர்த்தம். 

இப்படித்தான் என்னைவிட்டும் தொலைவானவர்களில் ஒருத்தி அவளுடைய முஞ்சிப் புத்தகத்தில் விட்டிருந்த வாக்கிமொன்று தன்னைத்தானே வலிந்து ஏற்கச் செய்கின்ற வகையான கூற்றொன்றாக எனக்குத் தோன்றியது. தோற்றத்தினை பற்றி நான் ஏற்கனவே பேசிவிட்டேன். ஏமாற்றங்களையும், ஏமாறல்களையும் கிஞ்சிற்றேனும் மதியாது, இன்னும் மறக்கடித்துவிட்டு அறிவிற்கும் புத்திக்கும் அப்பாற்பட்டதொரு வாழ்வினை வாழுமாறு அந்த கூற்று எம்மை பணிக்கின்றது.  மறுபுறத்தில் என்னதான் நடந்தாலும் நான் ஏமாறப் பிறந்தவனென்றால் ஏமாந்தே செல்வோம் என்று அது ரீங்காரம் செய்கின்றது.

"மனமகிழ்வின் இரகசியம் என்ன விரும்புகின்றோமோ அதைச் செய்வதில் இல்லை: எதனைச் செய்ய நேரிடுகிறதோ அதனை விரும்புவதில் உள்ளது." (று)

இந்தக் கூற்று உங்களுக்கு நன்றாக தோன்றுவன போன்று எனக்கு புரியவில்லை. எனக்குப் புரிவன உங்களுக்கும் புரியலாம் அல்லது புரியாமல் போகலாம். அது அவரவரின் நேரம் படுத்தும் பாடு. இங்கு விருப்பம் என்றால் என்ன? பரந்த நோக்கில் அவதானித்தால், வாழ்வியலின் நோக்கில் அவதானித்தால் அதுவும் நீங்கள் வழமையாக கொள்கின்ற நம்பிக்கையில் ஒரு பகுதிதான் அது. விருப்பு வெறுப்பு என்பன அவரவர் புத்திக்கு பட்டதொரு விடயம். அது அனுபவததினதும் ஆற்றலினதும் அடித்தளத்திலிருந்து தோன்றுவது. நான் விரும்புகின்ற அதே மலரைத்தான், அதே நிறத்தைத்தான் மனிதனாக பிறந்த நீங்களும் விரும்ப வேண்டும் என்ற ஒன்றும் கிடையாது. இப்படியாக, மகிழ்ச்சி என்பதும் தனக்கு விருப்பமான ஒரு விடயத்தினை நிறைவேற்றிக்கொள்வதில் கிடையாது. மாறாக எதனைச் செய்ய நேரிடுகின்றதோ அதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கின்றது என்பது இதன் கருத்து. அறவே மெய்யியலுக்கு ஒத்துவராத கருத்து. எந்தவித உண்மையும் புலப்படாத கருத்து. எந்தவொரு தத்துவமோ அல்லது மத போதனைகளோ ஏற்றுக் கொள்ளாத மடத்தனமான கருத்து.

ஏனெனில், மனிதனின் எந்தவொரு நடவடிக்கையும் அடிப்படையில் நியாயத்துடன் பிறக்க வேண்டும். ஆவ்வாறெனில், ஒருவன் ஒரு பொருளை விரும்புவானாயின் அதற்கான நியாயம் இருத்தல் அவசியம். அவ்வாறு நியாயாம் இருக்குமாயின் அது இடம்பெறல் வேண்டும். மாறாக பிறிதொரு நியாயம் நடந்து அதனால் அவனுடைய விருப்பம் நடவாமல் போனாலும், இதனை விரும்பிக் கொள்ள வேண்டும்' அதில்தான் உண்மையான மகிழ்ச்சி பொங்கும் என்று எப்படிக் கூறுவது?

உதாரணத்திற்காக, எனக்கு வெள்ளை நிற ரோசா மலர் என்றால் நிறைய விருப்பம். காரணம், எனக்கு வெள்ளை நிறத்தினை பிடிக்கும், அதன் இதழ்களில் காணப்படும் மென்மையினை பிடிக்கும் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் எனது தோட்டத்தில் ஒரு வெள்ளை நிற ரோசா செடியினை நட்டு வைப்பதற்காக விரும்பிய போதும் எனக்கு அதன் கன்றுச் செடி கிடைக்கவில்லை. இறுதியில் எனக்கு நன்பர் ஒருவரின் மூலம் ஒரு சிவபப்பு ரோசா செடி, முட்களுடன் கிடைக்கின்றது. நானும் அதனை எனது தோட்டத்தில் நட்டு வைத்திருக்கின்றேன். இதற்காக நான் அந்ந சிவப்பு ரோசா செடியில் பூக்கும் மலர்களை எனக்கு விருப்பமானதாக மாற்றிக் கொள்ள வேண்டுமா? அல்லது இதற்காக நான் மகிழ்ச்சிப்படத்தான் முடியுமா? அவ்வாறு எனது தோட்டத்தில் சிவப்பு நிற ரோசா செடியிருப்பதற்காக நான் அகம் மகிழ்ந்தாலும், அந்த மகிழ்ச்சி இதே எனது தோட்டத்தில் வெள்ளை நிற ரோசா செடியிருப்பதனால் ஏற்படுகின்ற மகிழ்ச்சிககு; நிகராகுமா? கூறுங்களேன்....!

நீங்கள்  இந்த வினாக்களுக்கெல்லாம் ஆம் என பதில் தந்துவிடலாம். பதில் தருவது எளிதுதான். ஆவ்வாறெனில், நான் எனது விருப்பத்திற்கான நியாயத்தினையும் மாற்றிக் கொள்ள வேண்டியேற்படுமல்லவா? அதாவது, எனக்கு வெள்ளை ரோசாவின் நிறம் பிடித்திருந்தது. அதன் இதழ்களின் மென்மை என்னை ஆர்ப்பரித்திருந்தது என்பதனையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, தற்போது எனக்கு சிவப்பு ரோசா பிடிக்கிறது, அதன் அழகு மிருதுவானது என்று கூறுவது எப்படி? அப்படிக் கூறுவது எனக்கென படைக்கப்பட்டுள்ள மனித இயல்பினை உங்களைப் போன்று அல்லது யாரைப் போலவும் மாற்றிக் கொள்வதற்கு சமமானதல்லவா! நான் நானாக இருப்பதனை விட்டு விட்டு வேறு யாராகவும் இருக்க முற்படுவேனேயானால் என்னில் இத்தனை சிறப்புகள் எதற்கு?

வாழ்வியலில் ஏற்படுகிக்;ற விடயங்களை ஏற்றுக் கொள்வதிலும், விரும்பி ஆசை கொள்வதிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.  வாழ்வில் இடம்பெறுகின்ற விடயங்களை ஏற்றுக்கொண்டு அனுசரித்து செல்லது வேறு. அதனை விரும்புவதென்பது வேறு. இதனால்தான் நான் முன்பு கூறியிருக்கின்றேன்...ஏமாற்றத்தினை உங்களால் தவிர்ந்து கொள்ளவோ அல்லது அதிலிருந்தும் தப்பிக் கொள்ளவோ உங்களால் முடியாது. இருப்பினும், அதனை எதிர்பாhத்து காத்திருக்க முடியும். ஆதனை தனக்கென போதுமாக்கிக் கொண்டு வாழ முடியும். ஆனாலும், மேற்குறித்த கூற்றினை அவதானித்தால் .....ஏமாற்றங்களை மறந்துவிட்டு நடந்ததனை தமக்கென ஆக்கிக் கொண்டு செல்லுங்கள் என்று கூறுகின்றது. அப்படி சென்றால்.... நாம் எமக்கு நடந்தவைகள் ஏமாற்றங்களதான்; என்பதனை மறந்துவிட்டு இந்த வாழ்வியலில் நொடிந்து நொறுங்கிப் போக வேண்டியதுதான்.

அப்படியே சென்றால், எனக்கு தேநீர் தரும் அவளைப் போன்று தொடர்ந்து ஏமாற்றங்களைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். ஏனெனில், அவள் ஒவ்வொரு நாளும் நான் நேரத்திற்கு அதனைப் பருகியிருப்பேன் என்று நம்புகின்றாளல்லவா! அதேபோன்று, தொடர்ந்தும் இவ்வாறு நடப்பதனை விரும்பி ஏற்றுக் கொண்டு செல்கிறாளல்லவா! இதே வேளை, அவளுடைய மனத்தில் தான் ஒவ்வொரு நாளும் ஏமாந்து செல்வதாக அவள் இன்னும் கற்பனை செய்து கொள்ளவில்லை என்பதனை உங்களால் கூற முடியாது. ஆனால் எனக்குத் தெரியும், அவளும் இந்த ஏமாற்றங்களை நாளாந்தம் எதிர்பாhத்துக் காத்திருப்பதாக அவளுடைய புன்னகை இன்று எனக்கு தெரியப்படுத்தியது.... நாளைக்கும்தான் அது நடக்கும்.....

சில மனிதர்கள் அப்படியொரு சுயநலவாதிகள்???



இவைககள் யாவுவும் உன்னைப் பற்றியனவென்று
நீ நினைக்கின்றாயா?
புதர்களுக்குள்ளால் எழும்
காலையிளம் கதிரின் சுட்டெரிப்புக்காக
இரா முழுதும் காத்திருக்கின்றேன்.
கனவுகளில் அப்படியொரு நம்பிக்கை,
ஆனால் நான் காண்பதெல்லாம், 
மிச்சம் வெறுமை,
நிலாவின் தூலங்கள்.
ஒரு தடைவ நான் மகிழ்வாகவும்
களிப்பாகவும் இருந்தேன்.
தற்போது தனிமையும் கவலையும்தான்.


உன்னில்தான் அத்தனை 
பளிகளையும் சுமத்த வேண்டும்.
நீயும் உண்மைக்கு மாற்றமாய்த்தான் இருந்தாய்.
என்னுடைய முயற்சிகள் யாவும்
உந்தன் பரீட்சைகளில் தோற்றுப்போயின.
கோடைக் காலம்,
மாரிக் காலம்,
வசந்த காலம் அத்தனையும்
வந்து போயின.
யாவும் உன்னுடைய விளையாட்டுக்கள்,
நான் தவறிவிட்டேன்.
  
நீ எனது வாழ்வை எடுத்துக் கொண்டாய்.
கூரிய கத்தியினால்,
எனது இதயத்தினை துண்டமாக்கினாய்.
நான் கண்ணீரால் கிடத்தப்பட்டேன்,
குருதி பெருகவில்லை.
ஓடைப்பக்கமாக அவர்கள் வந்தார்கள்,
அப்போது வெள்ளம் பெருகியிருந்தது,
என்னை எச்சரித்தனர்.
நான் அதனை அவதானிக்க முடியவில்லை.

நான் குருடனாயிருந்தேன்.
நான் அப்படித்தான்.
இதுவெல்லாம் உன்னைப் பற்றி என
நீ நினைக்கின்றாய்.
நீயும் அப்படியொரு
உண்மைக்கு மாற்றமானவள்.
ஆனால், நான் உன்னை அழைப்பதற்காக
காத்துக் கிடக்கின்றேன்.
உலகமெங்கும் உனது விம்பந்தான்
சுற்றிக் கிடக்கின்றன.

நீ வரும் வரை 
நான் காத்திருப்பேன்.
நீதான் அதனை காண முடியும்.
நீ எனக்கு தவறு செய்தாய்,
இது பழைய பிலாக்கணம்தான்.
சில நாட்கள் உனக்கு தெரியும்,
நீ போக முடிந்த இடம்
ஒன்றுமில்லை.
  
உனது பாலங்களை
நீ தகர்த்தெறிந்தாய்.
அப்பொழுது, உனக்கு புரிந்திருக்கும், 
வாழ்க்கை விளையாட்டல்ல என்று,
இப்படித்தான் சிலரும் உன்னை நடாத்துவார்கள்.
ஆண்டுகள் கடந்து போகும்,
பொய்மை வாழ்வது கடினம் என்று
நீ கண்டு கொள்வாய்.



(இது வேறு யாருக்கும் எழுதப்பட்டது என்று நினைத்தால் அது அவர்களின் தீர்மானமேயன்றி, நான்; அப்படி நினைக்கவில்லை)

0 comments:

Post a Comment