நாகரீக மனிதன்

மனிதனுக்கு இயல்பாகவே தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளுணர்வில் பதிந்து இருக்கிறதாம். இந்த உணர்வுதான் பல வேளை அவன் வாழ்வில் களைப்புற்று சோர்கின்ற போது அவனை தற்கொலை எண்ணத்தறிகு இட்டுச் செல்கின்றது. அல்லாதபோது, போட்டியில் தான் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதற்காக அடுத்தவனை கொன்றுவிட மனிதன் முயற்சிக்கின்றான். பல முறை தன் உள்ளுணர்வினை கட்டுப்படுத்திக்கொண்ட மனிதன் ஈற்றில் தான் உயிர் வாழ வேண்டும் எனில் மற்றய மனிதனை கொன்று அழித்து விடுவதுதான் வழி என்று சிந்திக்கின்றான். பெரும்பாலான சந்தர்பங்களில் தான் எண்ணியபடி அதுதான் வழியென்றும் அதனை நிறைவேற்றியும் விடுகிறான்.

வாழ்வினை வாழ்வதற்கு அனுபவம் தேவை என்பார்கள். உண்மையான அனுபவம் என்பது வயது முதிர்ச்சியினாலோ அல்லது இவ்வுலகை ஆண்டு அனுபவிப்பதிலோ வருவது கிடையாது. உண்மையான அனுபவம் என்பது நாம் எமது சூழ்நிலைகளுடன் எவ்வாறு பரிணமிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. (இப்படி எழுதிக்கொண்டிருக்கையில் நல்லது சொல்வது பிடிக்காத நுளம்பு ஒன்று என் கழுத்தில் பதம் பார்க்க முற்பட்ட போது என்னால் அடித்துக் கொலை செய்யப்படுகிறது) நாம் எமக்கு கிடைத்திருக்கிற புறச் சூழ்நிலைகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதல்ல அதன் அர்த்தம். மாறாக, யதார்த்தத்தில் அனுபவம் என்பது நாம் புறநிலைகளுக்கு எதுவித துன்பமும் ஏறபடாத வண்ணம் எவ்வாறு எம்மை வாழப் பழக்கிக் கொள்கின்றோம் என்பதுதான். அவ்வாறு வாழ்கின்ற போது எமக்கும் சூழலுக்கும் இடையில் ஒரு இனம் தெரியாத ஒரு உறவு ஏற்பட்டுவிடுகிறது. இதனால் எமக்க கிடைப்பவை அனைத்தும் நன்மை பயப்பதாகவே அமைகிறது. மனதில் மகழ்ச்சி கொந்தளிக்கிறது. எமக்கு நேரெதிரில் தோன்றுபவர்கள் அனைவரும் எமக்கு நண்பர்களாகவே தோன்றுகிறார்கள். மாறுபட்ட எண்ணங்கள் எமது மனதை ஆட்கொள்வது கிடையாது. பிறரிடம் இருந்து வரும் அத்தகைய எண்ணங்கள் கூட எம்மை எதுவும் செய்துவிடுவதும் கிடையாது.

இதனால்தான் எம் முன்னோர்கள் இயற்கையின் சூழல்களை அதிகம் நேசித்தார்கள். அவர்களுக்கும் இயற்கைக்கும் இடையில் இருந்த நெருக்கம் நீண்ட வரலாற்றினை கொண்டது. குடும்பம் அல்லது சமூகம், சமயம் மற்றும் இயற்கை எழில் நிறைந்த இடங்கள் என்பன அவர்களின் இருப்பிடத்தில் நீங்காத இடத்தை பிடித்திருந்தன. அவர்கள் தம் குடிகளை அமைக்கும் போதே நீர்நிலைகளும், அழகு நிறைந்த வனபிரதேசங்களையும், மலைக்குன்றுகளையும் கொண்ட இடங்களோடு நெருங்கியதாகவே தமது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டனர். அத்தோடு மட்டுமல்லாமல், சமயத்திற்கும் அவர்களிடத்தில் ஒரு முக்கிய ஸ்தானம் இருந்தது. விகாரைகளையும், கோவில்களையும், பள்ளிவாயல்களையும் தமது இருப்பிடத்திற்கு மிக நெருக்கமாகவே அமைத்துக் கொண்டார்கள். அத்தோடு நின்றுவிடாமல் சமயங்களுக்கும் அதன் போதனைகளுக்கும் ஒரு அதி விசேட கௌரவத்தினையும் அளித்து வந்தார்கள். இவ்வாறு இயற்கையின் சூழ்நிலைகளுடனும், சமயங்களின் போதனைகளுடனும் அவர்களுடைய வாழ்க்கை பின்னிப் பிணைந்ததாக அமைந்ததனால் அவர்கள் ஏiனைய உயிர்களுக்கு அணுவளவும் கெடுதி நினைத்தது கிடையாது. பாதிப்பின்றி அமைதியாக வாழ்ந்தார்கள். இதனால் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மகிழ்ச்சி என்பது பசுமையானதாயும் அர்த்தமுடையதாகவும் அமைந்திருந்தது.

விரும்பியோ விரும்பாமலோ மனிதன் தான் புதிதா கண்டுபிடித்த ஒன்றுக்கு நாகரீகம் என்ற பெயரை சூட்டினான். அது காலம் செல்ல செல்ல புதிது புதிதாக கிளைவிட தொடங்கியது. மனிதன் நாகரீகத்தோடு ஒட்டிச் செல்ல தொடங்கிய காலம் தொட்டு மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான நெருக்கம் குறைவடைய தொடங்கியது. நாகரீகம் மனிதனுக்கு புதியன பலவற்றினையும் கற்றுக் கொடுத்தது. நாகரீகம் விரிவடைந்த அதே அளவிற்கு மனிதனுக்கும் இயற்கை சூழல் மற்றும் சமயத்திற்கும் இடையேயான தொடர்பு நலிவடைந்தது. இதனால் மனிதனின் வாழ்வில் இருந்து சிறிது சிறிதாக மகிழ்ச்சியும் நிம்மதியும் குறைவடையத் தொடங்கிற்று. வாழ்வில் மகிழ்ச்சியையும், அனந்தத்தினையும் விரும்பிய மனிதன் தான் வலிந்து கட்டிக்கொண்ட நாகரீகத்தின் பெயரால் வாழ்வில் அவற்றை அளிக்கும் படியாக பலவற்றை அறிமுகப்படுத்திக் கொண்டான். ஆனால் அவற்றினால் நிம்மதியினை பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் அனுடைய மகிழ்ச்சியையும், ஆனந்தத்தினையும், நிமம்மதியான வாழ்வினையும் நோக்கிச் செல்லும் தேடலும் நாகரீகத்தின் பாதையில் நீண்டு கொண்டே செல்கின்றன.

நாகரீகத்தின் பெயரால் கிடைக்கின்ற சின்ன சின்ன விடயங்களையெல்லாம் வாழ்வில் மகிழ்ச்சியை தேடித் தரும் சொத்தாக இந்த நாகரீகம் மனிதனுக்கு காட்டியது. வீட்டில் உண்கின்ற சாதாராண உணவைக் கூட நெடுந்தூரம் பயணம் செய்து ஒரு ஆற்றங்கரை நிழலில் இருந்து சாப்பிட்டால் அதில் மகிழ்ச்சி கிடைக்கிறதாம் என்று மனிதன் தன்னை தானே ஏமாற்றிக் கொள்கின்றான். இதுதான் நாகரீகம் எமக்கு கற்றுத் தந்தது. சமைத்த உணவை எங்கு சென்று உண்பதாலும் அதன் சுவையோ மாறிடப் போவது கிடையாது. ஆனால் இந்த மனிதன் எதற்காக இப்படியெல்லாம் நடந்து கொள்கிறான் என்று சிந்தித்தால் ஒரு விடயம் புலப்படுகிறது. அதாவது மனிதன் தான் இழந்தவற்றை எங்கோ தேடுகிறான் அல்லது கண்டுகொள்ள முயற்சிக்கிறான்? நல்லதுதான். ஆனால் இருட்டில் தொலைத்த ஒன்றினை வெளிச்சத்தில் தேட முடியாது என்பதனை இந்த மனிதன் எப்போது உணர்வான்?   

நாகரீகத்தில் தத்தளிக்கின் மனிதனுக்கு இந்த உலகத்தின் விசாலம் புரிவது கிடையாது. மாறாக, நாகரீகமும் உலகத்தின் விசாலத்தினை அவனுக்கு கற்றுக் கொடுப்பதும் கிடையாது. நாகரீக மனிதனை பொறுத்த வரையில் உலகம் என்பது தற்போது கடுகளவை விட சிறியது. இதனால் அவனுடைய எண்ணங்களும் உலகையோ அதில் நாம் வாழ்கின்ற வாழ்வைப் பற்றியோ பெரிதாக அலட்டிக் கொள்ளவது கிடையாது. இயந்திரத்தின் உதவியை கொண்டு மனிதன் வாழப்பழகிக் கொண்டதனால் அவனுக்கு கடவுளின் உதவி பெரிதாக படுவது கிடையாது. கடவுளின் அருமை கூட சிலவேளைகளில் புரிவது கிடையாது. நம் முன்னோர்கள் இந்த உலகம் என்பது மனிதன் வாழ்வதற்காக இறைவன் படைத்தது என்று நம்பியதனால் அதனை உலக வாழ்வு என்று அர்த்தம் கொண்டனர். ஆனால் இன்று நாகரீக மனிதன் இயந்தியங்களின் உதவியினால் வாழப்பழகி விட்டதனால் இவ்வுலகத்தினை இயந்திர உலகம் என்று அர்த்தப்படுத்திக் கொண்டனர். படைத்த கடவுளின் நிலையும் மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடைப்பட்டது என்றாகிவிட்டது. இதனால் இந்த நாகரீகத்தில் சமயங்களும் தனித்துவம் இழந்து சமூக சச்சரவுகளுக்கும், கோளாறுகளுக்கும், சரித்திர சிக்கல்களுக்கும் ஈடுகொடுக்க தவியாய் தவிக்கின்றன.

நாகரீக மனிதனுக்கு உலகின் யதார்த்தம் புரிவதில்லை. இதனால் தன்னை விட பலசாலி எவருமில்லை என்ற கற்பனையும், கனவும் அவனுள்ளே இயல்பாகவே கிடக்கின்றது. ஆனால் நம் முன்னோர்கள் அவ்வாறல்ல. அவர்கள் இவ்வுலகின் யதார்த்தத்தினை தெளிவாக புரிந்தும், அறிந்தும் வைத்திருந்தனர். உண்மையில் மனிதன் இவ்வுலகின் விசாலத்தினை அறிந்து கொள்வானாயின் அவன் எவ்வளவு அற்பமானவன் என்பதனை உணர்ந்து கொள்வான்.

0 comments:

Post a Comment