வாழ்வது

அவரவர் ஒவ்வொன்று சொல்கிறார்கள். கேட்பதும் கேட்காமல் விடுவதும் அவரவர் விருப்பம். வாழ்க்கை இனிமையானது. ஆனால் வாழும் மனிதர்களில்தான் புனிதம் இல்லை. வாழ்க்கை அமானிதமானது ஆனால் நாம்தான் அதனை பலமுறை தொலைத்து விடுகின்றோமே என்ற ஆதங்கமும் இருக்கின்றது.


நாம் பொறுமைசாலிகள் இல்லை. வாழ்வில் எதற்காகவும் காத்திருந்தது கிடையாது. எல்லாம் உடனே கிட்ட வேண்டும் என்று சிலர். எதுவுமே எமக்கு கிட்டாது என்று சிலர். இருவருமே வாழ்வில் தவறிழைத்து விடுகின்றார்கள். கிடைக்கின்ற நிமிடங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் நியாயம். அதற்காக எமக்கு கிடைக்கின்ற சொற்ப நிமிடங்களையாவது எம்மை நாமே குதூகலித்துக் கொள்ளவும் மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொள்ளவும் ஏன் பயன்படுத்திக் கொள்ள கூடாது? இருப்பன அனைத்தும் நன்றாகவே உள்ளன. அவற்றை பயன்படுத்துகின்ற நாம்தான் பழுதாக்கி விடுகின்றோம்.

இப்படித்தான் எனக்கு நெருக்கமான ஒருவர் கூறினார். எதற்காகவும் காத்திருக்க வேண்டாம். சந்தர்ப்பங்களை பற்றியெடுத்துக் கொண்டு உனக்கு தகுந்தாற் போன்று இலட்சணமாக அதனைப் பயன்படுத்திக் கொள் என்று. அற்கு நான் 'சந்தர்ப்பங்கள் எமக்கு அனுமதியளிக்காவிட்டால் என்ன செய்வது?' என்று கேட்;டேன். அவர் எதையாவது செய்து கொள் என்றார். அதற்கு இன்னொரு நண்பர் 'பொறுமையாக இருந்து கொள்ளுங்கள்' என்று என்னைப் பார்த்து பதில் அளித்தார். நானும்> அந்த நண்பரிடம் 'பொறுமையாக இருக்க வேண்டும் என்றால் காத்திருக்கவும் வேண்டுமே" என்றேன். மேலும்> 'நீங்கள் காத்திருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக பொறுமை அவசியம்> நீங்கள் பொறுமைசாலியாக இருந்தால் நிச்சயம் காத்திருப்பது அவசியம்" என்றேன். கருத்துக் கூறியவர்களை காணவில்லை.

உண்மையில் வாழ்வது என்பது வேறு வாழ்ந்து காட்டுவது என்பது வேறு. வாழ்ந்து காட்டுபவர்கள் சுயநலவாதிகள்> வாழ்பவர்கள் மற்றயவர்களையும் தம்மோடு இணைத்துக் கொண்டே வாழ்கின்றார்கள். இதனால் வாழ்பவர்கள் மத்தியில் அமைதியும்> ஒரு வகையான சாந்தமும் காணப்படுகின்றது. வாழ்ந்து காட்டுபவர்கள் எப்போதும் அமைதியற்றதும்> குழப்பமானதுமான சூழ்நிலையிலேயே சிக்கித் தவிப்பவர். ல்லது வாழ்பவர்கள் இருக்கின்ற நிம்மதியின் அளவை விட வாழ்ந்து காட்டுபவர்களின் நிம்மதியின் அளவு சொற்பமாகவே இருக்கும். ஏனெனில் அவர்கள் மற்றயவர்கள் நமது வாழ்வை அவதானிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தமது முழு நேரத்தையும் சலவு செய்கின்றனர்.

வாழ்க்கையை நாம் ஒவ்வொருவரும் வாழப் பழக வேண்டும். எமது வாழ்வு சுதந்திரமானதல்ல மாறாக நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இந்நிபந்தனைகள் சிலவேளை மற்றயவர்களாலும்> ஏன் சமூகத்தினாலும் எம்மீது சுமத்தப்பட்டதாக இருக்கலாம். அவற்றை விட்டுவிட்டு உமது வாழ்வை நீர் அனுபவிக்க முடியாது. உனது வாழ்வை நிர்ணயிக்கின்ற அத்தனை உரிமையும் உனக்கு உள்ளது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் நீர் மட்டும் இந்த உலகில் வாழ்பவனாக இருந்தால் நான் அதைப் பற்றி ஒன்றும் பேச முடியாது. உனது வாழ்வு உன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் பின்னிப் பிணைந்தது. வாழ்க்கையில் நீர் அனுபவிக்கின்றதாக கூறுகின்ற அன்பு, பாசம்> நேசம், கருணை> காதல் என்பன அனைத்தும் உனக்குள் நீர் மட்டும் அனுபவித்துக் கொள்ள முடிவதல்ல. இவற்றை நீர் அனுபவிப்பதும்> அள்ளிக் கொடுப்பதும்> அவற்றையே நீர் அளந்து எடை போடுவதும் எனையவர்களின் மூலமாக மாத்தரமே முடியுமானது.

இதனாலேயே மற்றயவர்கள் விரும்பாத செயலொன்றை அல்லது சமூகத்திற்கு மாற்றமாக செயலொன்றை புரிய முன்பதாக நீர் ஒன்றுக்கு நூறு தடைவ சிந்திக்க வேண்டியுள்ளது. புரிகின்றதா? நான் புரிகிறதா என்று கேட்பது மற்றொரு ஆலோசனை கூறியவரிடம். அவர் வாழ்வு என்பது நிபந்தனைகளற்றது, சுதந்திரமானது, மகிழ்ச்சியாக மற்றயவர்களுடன் குதூகலமாக வாழ்ந்து கொள்ளுங்கள் என்றார். உனது ஆலோசனை நியாயமானதுதான். ஆனால் வாழப்பழகியவர்கள் இதனை மேற்கொள்ள முன்பு பல தடைவ சிந்திப்பார்கள். ஏனெனில் அவர்கள் வாழ்ந்த காலத்தின் ஒவ்வொரு வினாடியினையும் இரசித்து சுவைத்து பக்குமாக கையாண்டிருப்பார்கள். சின்னதொரு உதாரணம் கூறுகின்றேன். சிலர் கூறுவார்கள் 'நீர் நல்லது செய்யாவிட்டாலும், ஏனையோருக்கு கெடுதிகள் எதனையும் செய்து விடாதே' என்று.

வாழ்வில் இன்பம் துன்பம் என்பது நாம் மட்டும் அனுபவிப்பது அல்ல. மாறாக நாம் அவற்றை அனுபவிப்பதுடன் மற்றயவர்களுக்கு பாய்ச்சி விடுகின்றோம். இதனால்தான் கலியான வீடு என்றால் முழுக் குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது. இறந்த வீடு என்றால் எல்லோரும் சோகத்தில் முழ்கிக் கிடக்கிறார்கள். எனவே> நீர் மகிழ்வாயானால் உமது ஏனைய உறவினர்ளும் மகிழ்வார்கள். நீர் சோகத்தில் முழ்கியிருந்தால் உனது குடும்பமும் அதனை ஏதோவொரு வழியில் பங்கிட்டுக் கொள்ளும். நீர் அமைதியாக இருந்தால் அது முழுக் குடும்பத்திற்கும் நன்மை தரும். ஆனால் எம்மில் பலர் இவற்றுக்கிடையில் சமமான ;நிலையில் இருப்பது கிடையாது. ஏனெனில் அவர்கள் வாழ்ந்து காட்டுபவர்கள், சுயநலவாதிகள் 
சிரிக்கும் எம்முடன் ஒட்டிக்கொள்கின்ற அவர்களை நாம் அழும் போது காணமுடியாது. நீர் சிரிக்கும் போது உன்னுடன் எனக்கு இருக்கின்ற உறவின் நெருக்கம் நீர் அழுகின்ற போதும் அழுத்தமாக இருக்க வேண்டும். இதுதான் வாழ்பவர்களின் இயல்பு.

வாழ்வில் நாம் செய்கின்ற சிறிய சிறிய விடயங்கள் ஏனையவர்களை பாதித்து விடுமா எனக் கவனத்திற் கொண்டு செயற்படுவது பற்றி நீர் குற்றம் காண முடியாது. ஆனால் நீர் புரிகின்ற சிறிய சிறிய விடயங்கள் எவரையாவது புண்படுத்தியிருக்குமானால் அது பாரியதொரு வடுவாகவே மாறிவிடக் கூடும். எதற்கும் இனியாவது கவனமாக இருந்து கொள்.

இப்படிக் காத்துக் கொண்டிருக்கையில் பஸ் வண்டியும் வந்து சேர்ந்தது. இத்தனை சிந்தனைக்கும் காரணம் இந்த பஸ் வண்டிதான் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா? அப்பாடா என்று ஏறி எனக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டேன். சில நிமிடங்களில் ஒரு அவலக் குரல் எழும்புகிறது. 'கை கால் வளமில்லை> இரவுச் சாப்பாட்டிற்கு ஏதாவது உதவி செய்யுங்கள்". எனது பாவமும்தானே இதில் அடங்கியிருக்கின்றது என்று எண்ணி, எனது முகத்தினை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த உருவத்தினை வெட்கத்‌த்தில் பார்க்காமலேயே சில ரூபாய்களை அந்த பக்கமாய் கொடுத்தேன். வாங்கிய அந்தக் கைகள் என்னிடம் கூறிய வார்த்தைகள் இதுதான்.

'நீங்கள் நல்லாய் போய்ச் சேர வேண்டும்';
சட்டென எனது மனதுக்குள் தோன்றிய கேள்வி 'எங்கு?"