காதலின் பெயரால் காதல்கள்

"கொலமா மத யானையை நம்பலாம்,
கொன்று போச்சே புலியையும் நம்பலாம்,
ஆனால் சேலை கட்டிய மாதரை நம்பினால்...
தந்தனா பாட்டு பாடனும், துந்தனா தாளம் போடனும்."


என்னடா எடுத்த எடுப்பிலேயே (பழைய) பாடல் வருகிறது என்று சிந்திக்க வேண்டாம். எல்லாவற்றுக்கும் ஒரு அறிமுகம் அவசியமல்லவா.

இன்று காதலர்கள் இருவரை சந்திக்க நேர்ந்தது. அவர்களையும் வழமை போன்று நல்ல பிள்ளைகள்தான் என நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் இப்போது காதலிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடிந்தது. அப்படியா என்று வாயை பிளந்த நான் அவர்களிடம் சில வினாக்களை கேட்டுக் கொண்டேன். என்ன வினாக்களை அவர்களிடம் கேட்டீர்கள் என்று நீங்கள் என்னை வினவலாம். வேறு ஒன்றுமில்லை சாதாரண கேள்விகள்தான். வழமை போன்று நான் எல்லா காதலர்களிடமும் கேட்கின்ற கேள்விகள்தான். அது சரி காதலிக்கின்ற உங்களுக்கு காதல் என்றால் என்னவென்ற தெரியுமா? என்று கேட்டேன். உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

அவர்கள் சற்று நேரம் தாமதித்து, வெட்கித்து, கூனிக் குறுகிப்போய் பதில் சொல்ல முடிந்தும் முடியாதவர்ளாய் இருந்தார்கள். அப்போது நான் என்னை பிழையாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் பாடசலையில் கணிதப் பாடத்தில் சந்தேகம் என்றால் யாரிடம் அதனை கேட்டறிந்து கொள்வீர்கள்? கணிதப் பாடத்தில் உள்ள சந்தேகத்தை தமிழ் பாட  ஆசிரியரிடம் கேட்க முடியாதல்லவா. அதே போன்று காதலிப்பவர்களிடம்தானே காதல் என்றால் என்னவென்று கேட்டக முடியும். காதல் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை வேறு நபர்களைவிட காதலிப்பவர்கள் நன்றாக கூற முடியுமல்லவா என்று கேட்டேன். அப்போது அவர்கள் தம்மை சுதாகரித்துக் கொண்டு பதில் தர முற்பட்டார்கள். காதல் என்பதற்கு அவர்கள் கூறிய பதில்  என்னைப் பொறுத்தவரை எல்லாரும் வழமையில் கூறும் உப்புச் சப்பில்லாத ஒன்றுதான். வேறொன்றும் கிடையாது அவர்கள் இத்தனைக்கும் கூறியதை அவர்கள் பாணியிலேயே கூறுவதானால் 'காதல் என்பது ஒரு பீலிங் (உணர்வு)'. நானும் சிரித்துக் கொண்டே இவ்வளவுதானா என்று கேட்டேன். வேறு ஏதும் இல்லயா? என்று கேட்ட போது அவர்கள் மீண்டும் காதல் என்பது ஒரு பீலிங்தான் ஆனால் அதைவிட கூடுதலானது. அதனை வார்த்தைகளால் கூறிவிட முடியாது என்றார்கள்.

இவை வழமையான காதலர்களின் உச்சரிப்புத்தானே. இப்படி பலர் என்னிடம் முன்னதாகவே கூறியிருக்கிறார்கள். நீங்கள் ஒன்றும் புதிதாக உங்கள் காதலை மேற்கொள்ளவில்லை, அப்படித்தானே? என்று வினவினேன். அவர்களால் ஒன்றுமே கூற முடியவில்லை. காதல் என்பதற்கு நாம் கூறுகின்ற விளக்கம் வித்தியாசமாக இல்லை என்றால், அது ஏனையவர்கள் கூறுகின்ற அதே வடிவத்தைத்தான் சுமந்திருக்கிறது என்றால், நாம் எதனையும் இந்த காதலினால் புதிதாக உணரவில்லை என்றுதானே அர்த்தம். அத்துடன் புதிதாக நாம் எதனையும் புதிதாக உணரவில்லை என்றால் நாம் எதனையும் புதிதாக அனுபவிக்கவில்லை என்றுதானே அர்த்தம். ஆக மொத்தத்தில் அந்த காதல் எல்லோராலும் பயனில்லாத ஒன்று என முடிவாக்கப்பட்டதுதானே என்ற ஆச்சர்ய குறியும் எனக்குள் இருக்கிறது. ஏனையவர்கள் போன்றுதான் நாமும் ஒன்றை செய்கிறோம் என்றால் அது நாம் பரீட்சையில் பார்த்து எழுதுவது போன்றதுதான்.

செய்கின்ற செயலில் எந்தவொரு புதுமையும் இல்லாவிடில் இந்தக் காதல் என்பது வெற்றுக் கோப்பையாகத்தான் இருக்க முடியும். இந்நிலமையில் காதல் என்பது அர்த்தமே இல்லாத ஒரு சம்பவம். பலர் அதனை வைத்து கொண்டாடலாம், பாவம் அவர்கள். காதல் அப்படியானது, இப்படியானது என்றெல்லாம் கூறி கூப்பாடு போடலாம். ஆனால் அதனால் யாருக்கும் எந்தப் பலனும் கிடைப்பதில்லை. ஏவ்வாறோ தெரியாது அந்த காதலர்கள் மாத்திரம் அதனால் திருப்பதிப்பட்டுக் கொள்ள முடிகிறது என்பதனை ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில், அவர்கள் தமது அறிவில் தெரிந்து வைத்திருக்கின்ற காதல் என்பதன் அர்த்தம் அவர்களால் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. அவர்களின் காதல் அனுபவம், அறிவு எனபனவற்றை கொண்டு அவர்கள் அதனை வரையறுத்துக் கொள்கின்றனர். அதனை அவர்களே போற்றவும் புகழவும் செய்கின்றனர். உங்கள் நண்பர்கள் கூட்டத்துள் நீங்கள்தான் படித்தவர் என்று வைத்துக்கொண்டால் நீங்கள் கூறுவதுதானே அங்கு வேதமா இருக்கும். உங்களுடைய குடும்பத்தில் நீங்கள்தான் மூத்தவர் அல்ல நன்கு கற்ற ஒருத்தர் என்றால் வருகின்ற விடயங்களை உங்கள் பொறுப்பில்தானே அலோசனைக்காக விடப்படும். இதே போன்றுதான் இவர்களுடைய காதலும். காதலர்களை அவதானித்து பாருங்கள் புரியும். தாங்கள் நினைப்பதை பெரிதாக கருதிக்கொள்கின்றனர்.

பொதுவாக இந்தக் காதல் குறித்து இருவகையான கருத்துக்கள் காணப்படுகின்றன. அவை பற்றி அலசுவதற்கு முன்னதாக  காதலின் எதிரும் புதிருமான விடயங்களை மிகவும் எளிய நடையில் உணர்த்துகின்ற பழைய பாடல் ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. அதனை தருகிறேன் நீங்களும் அனுபவித்து பாருங்கள். இல்லை நீங்கள் விரும்பினால் அனுபவித்து பாடவும் முடியும்.

ஆத்துக்கு பாலம் அவசியம்
அது போல் ஆம்பிளக்கி பொம்பளயும் அவசியம்.
அப்படி இப்படி இல்லாவிட்டால் நடக்குமா?
மனிசன் செப்படி வித்தையில் குவா வந்து பொறக்குமா?


காதல் வெறி பிடுச்ச பைத்தியம்
உனக்கு கட்டாயமா செய்ய வேண்டும் வைத்தியம்.
காள வயச பறிகொடுக்க கூடாது
பெண்கள் காந்தம் போல பிடிச்சிக்கிட்டா விடாது.
தம்பி, ஐயா சொல்லுற புத்திய கேட்பது அவசியம்
அங்கேதானே இருக்குதடா ரகசியம்.


உலகத்தையே புருஞ்சிக்காம அளக்கிறே
நீ ஒவ்வொன்றுக்கும் கட்டுப் போட்டு மறுக்கிறே.
ஓஞ்சி போன ஞானி போல பேசுற,
எங்கப்பா ஞானி போல பேசுற,
மீறி ஒடப்பெடுத்தா அக்கரைக்கும் இக்கரைக்கும் தாண்டிப்போக...
ஆத்துக்கு பாலம் அவசியம்
அது போல் ஆம்பளக்கி பொம்பளயும் அவசியம்.
அப்படி இப்படி இல்லாவிட்டால் நடக்குமா?
மனிசன் செப்படி வித்தையில் குவா வந்து பொறக்குமா?


வாலிபக் கோளாறு வாட்டுது,
அந்த வயசுக்கேத்த திமிறும்கூட காட்டுது.
நாடி சொன்னா உடம்புகூட இளக்கிது,
கடந்த ஞானி சொன்ன கதையும் கூட இருக்குது.
மேலும் ஐயா சொல்லுற புத்திய கேளு அவசியம்,
எப்பா அங்கேதானே இருக்குதடா ரகசியம்.


பாறைக்குள்ளே தேரை எப்படி நுளஞ்சது?
சமயம் பார்த்து உள்ளே கண்ண வெச்சி புகுந்தது.
நீருக்குள்ளே மீனு எப்படி நுளஞ்சது?
அது நீச்சடிக்க பழகிட்டுதே புகுந்தது.
தேரு கெளிய சக்கரம் எப்படி உருளுது?
தேய்வ சக்தியாலே அது பொரளுது.
அதைப்போல் குடும்பம் இன்றி வாழ்க்கை நடத்த முடியுமா?
பெட்டைக் கோழி வந்து கூவினாலும் விடியுமா,
பொழுது விடியுமா?


பொழுது விடிஞ்சு பார்துக்கலாம் கிளம்பிடு,
இனி போகப் போக புரிஞ்சிக்கலாம் பொறப்படு.


இந்தக் காதலர்களிடம் நீங்கள் கூறுகின்ற எதுவும் வேலைக்காவாது. நீஙகள் எதனைப்பற்றி எடுத்துச் சொன்னாலும் கணக்கில் எடுக்கவும் மாட்டார்கள். நீங்கள் எதனைப்பற்றி பேச எடுத்தாலும் தங்களுடைய விடயத்துக்கு மாத்திரம்தான் (அந்த காதலுக்கு) அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு தடவைக்கு பத்து தடைவ அழைத்தால்தான் உங்கள் அழைப்புக்கு பதிலும் கிடைக்கும். இப்படி அவர்களுடைய நாளாந்த செயற்பாடுகளில் அதிக தொய்வும் சோர்வும் காணப்படும். ஆனால் அது எவையும் அவர்களுடைய கண்களுக்கு புலப்படாது. அத்தனை குருட்டுத்தனம் அந்தக் காதலில் இருக்கும். பரிதாபம்!

இந்த காதலர்களுக்கு உலகமே ஏதோவொரு தூசி போன்றுதான் இருக்கும். எந்த விடயத்திலும் அவர்களுக்கு ஈடுபாடு இருக்காது. அப்படி அவர்கள் ஈடுபாடு காட்டுவதென்றால் அது அந்தக் காதலினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வேண்டும். காதலனால் காதலிக்கோ அல்லது காதலியால் காதலனுக்கு அனுமதி கிடைத்தாலே இந்தக் கருமங்கள் நிகழும். சுருங்கச் சொன்னால் காதலனோ அல்லது காதலியோ அனுமதித்த விடயாமாக இருக்க வேண்டும் என்பது தலை எழுத்து. இதற்கு நான் வைத்த பெயர்தான் கருமம் பிடிச்ச காதல். இவர்கள் சுதந்திரமாக இருப்பதனை தமக்குத் தாமே குழி தோண்டி புதைத்துக் கொண்டவர்கள். அதற்கு அவர்களே அன்பு, பாசம், இரக்கம், சுவாரசியம் என்றெல்லாம் பல பெயர்களை சூட்டிக்கொண்டார்கள். எல்லா விடயங்களும் தங்கள் முன் நிலையில்தான் நடந்தேற வேண்டும் என்று தாமே விதியமைத்துக் கொண்டு வாழ்வியலை இரசனையின்றி கழிக்க முற்படுவதால் பிரச்சினைகளை இந்த கருமம் பிடிச்ச நிலையில்தான் அதிகம் இவர்கள் முகம்கொடுக்க நேரிடுகிறது.  

எந்த விடயத்துக்கும் அவர்களிடம் பொறுமை இருக்காது. அதிகம் கோபப்படுவார்கள். அதுவும் தமக்கு தெரியாமல் எதையாவது காதலனோ அல்லது காதலியோ செய்து விட்டால் போதும். என்மேல் உனக்கு பாசம் கிடையாது, அன்பு கிடையாது என்றெல்லாம் காரணம் சூட்டி காதலுக்கே உலை வைக்க புறப்பட்டுவிடுவார்கள். புரிந்து கொள்ளல் அல்லது புரிந்துணர்வு என்பது இவர்களிடம் கடுகளவிலும் இருப்பது கிடையாது. ஆனால் இருவரும் புரிந்து தெளிந்துதான் காதல் செய்வதாக வெளிக்காட்டிக் கொள்வார்கள். கேட்டால் அவருக்கு சிவப்பு நிறம்தான் பிடிக்கும். அவருக்கு என்னைப் போன்று ரோசா மலர்தான் பிடிக்கும், எனக்கு விருப்பமான ஐஸ் கிறீம்தான் அவருக்கும் பிடிக்கும், எனக்கு பிடிக்காத சாப்பாட்டை அவரும் சாப்பிடுவது கிடையாது, இப்போதெல்லாம் எனக்கு பிடித்த ஆடையினைத்தான் அவரும் விரும்பி அணிகின்றார், நான் எதனைக் கேட்டாலும் செய்துவிடுகிறார் என்று அங்கலாய்ப்பார்களே இவர்களைத்தான் நான் கல்லலெறிந்து கொல்ல ஆசைப்படுகின்றேன்.  இவர்கள்தான் காதலை கொன்று தின்றவர்கள். கொலை செய்தவனுக்கு மரணம்தானே தண்டனையாக வேண்டும். புரிந்து கொள்ளல் என்பதற்கும் அறியாமைக்கும் இடையில் வேறுபாட்டினை உணராதவர்கள் இவர்கள்.  

மற்றறொரு சாதி இருக்கிறது. சாதாரணமாக பஸ்சுக்கு கூட அப்படி காத்திருக்கமாட்டார்கள். ஆனால் அவளுக்காக அல்லது அவனுக்காக நாள் கணக்கில், ஏன் வருடக்கணக்கில் காத்திருப்பார்கள். யாருக்காக காத்திருப்பு நடந்தேறுகிறதோ அவர்களும் இவர்களை கணக்கில் எடுப்பதே கிடையாது. ஆனால் அவர்களை விட்டு காத்திருந்த அவனோ அல்லது அவளோ விட்டு சென்றுவிட்டால் அவனுடைய காதலை கேள்விக்குட்படுத்தி விடுவார்கள். அவன் உண்மையாக அவளை காதலித்திருந்தால்  அவளுக்காக காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பஞ்சாங்கத்தினை ஒதத் தொடங்கிவிடுவார்கள். அவனோ அல்லது அவளோ காத்திருந்த நாட்களில் இதனைப் பற்றி கணக்கிலும் எடுத்திருக்க மாட்டார்கள். இவர்கள் நினைக்கின்ற இக்காதல் என்பது காலில் அறுந்து இழுபபட்டு வருகின்ற செருப்புமாதிரி. தேவைப்படும் வரை இழுபட வேண்டும். ஆனால் அதுவோ வேண்டாத  போது இதெல்லாம் ஒரு செருப்பா? என்றும் தூற்றிக் கொள்வார்கள். பரிதாபம் யாதெனில் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள்தான் என்பது எனது கணக்கெடுப்பில் தெரியவருகிறது. இவர்கள் இதற்கும் காதல் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். நாசமாய்ப் போகட்டும், நமக்கென்ன கடமை முடிந்தது.

இது மட்டுமா இரவு முழுக்க என்னதான் அப்படி பேச்சு என்று வியக்கும் அளவுக்கு அவர்கள் பேசுவார்கள், பேசுவார்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். காலையில் எழுந்ததும் மீண்டும் பேச ஆரம்பித்து விடுவார்கள். என்னதான் அப்படி பேச்சு என்று தெரியாது. நல்ல வேளை நான் தப்பினேன்.


இதுவோ காதலித்தருந்தால் கற்பனையே பண்ண முடியாது. ஒரு நாளைக்கு ஐம்பது அழைப்பும் கூடவே இருநூறு முந்நூறு மேசேஜ்களும்; வந்திருக்கும். சாப்பிட்டியா, தூங்கினயா, குளிச்சயா, பல் தேச்சயா, என்ன கலர் டிறஸ், என்ன கலர் நெய்ல் பொலிஸ், என்ன கலர் தூக்கு என குப்பையா கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். கைகுட்டைக்கும், செருப்புக்கும் கூட கலர் சொல்ல வேண்டியிருக்கும்;. நேய் பொலிஸ் கூட சொல்லிட்டுத்தான் போட வேண்டியிருக்கும். நுளம்பு கடிச்சா சொல்லணும், நகம் வெட்டினா சொல்லணும், விக்கினால் சொல்லணும், தும்மல் வந்தாலும் சொல்லணும், செருப்பு வாங்கினாலும் சொல்லணும், வாங்கிய செருப்பு அறுந்தாலும் அவர்களுக்கு செய்தி அனுப்பணும். இன்னும் டார்ளிங், டியர், கியுட்டி, பியுட்டி, ஸ்மார்ட் என்றுதான் மெசேஜுக்கும் போட்டு அனுப்பணும்.

அதிலும், ஒரு மெசேஜுக்கு பதில் அனுப்பவில்லை என்றால் அல்லது பதில் அனுப்ப தாமதமாகிவிட்டால் எல்லாம் போச்சு. என்ன நடந்தது?, என்னை மறந்துவிட்டாயா? என்னை ஏன் பிடிக்கவில்லையா?, என்னிடம் என்ன குறைச்சல்?, என் மேல் கோபமா? என்று மறுபடியும் நூற்றுக்கணக்கில் மெசேஜ் வரும். உருப்படியா சொல்ல வேண்டும் என்றால் காதல் என்பது காலில் மலையை கட்டி இழுப்பது மாதிரி. நிம்மதியே இருக்காது ஆனால் சந்தோசமாக இருப்பதாக நாமே கருதிக்கோள்வோம். சந்தோசமே இருக்காது ஆனால் நிம்மதியாய் இருப்பதாக நாமே கருதிக்கொள்வோம். இரண்டில் ஒன்றுதான் கிடைக்கும் ஆனால் இரண்டும் இருப்பதாக நாம் திருப்திப்பட்டுக்கொள்வோம். கேட்டால் இதற்கு ஒரு பதில் கூறுவார்கள். அதுதான் "அந்த வலியிலும் சந்தோசமும் இருக்கிறதே! உலகில் வேறெந்த இடத்திலும் அனுபவிக்க முடியாது" என்று. இதுவும் அவர்களுடைய அறியாமையால் எழுந்த போலி வார்த்தைகள்தான். உலகில் வேறேங்கும் அனுபவிக்க முடியாது என்று கூறுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். கூறுபவர் உலகத்தை முழுமையாக அனுபவித்து விட்டு கூற வேண்டும்.

எப்படி இருந்தாலும், இந்த விடயத்தில் நம்மில் பலபேர் கண்தெரியாத குருடர்கள் போலத்தான் இருக்கிறோம். என்னையும் குருடன் என்று நீங்கள் கூற முடியாது. வேண்டுமானால் எனக்கு மூன்று கண்கள் என்று கூறிக்கொள்ளுங்கள், பெருமைப்படுகிறேன். காதலைப் பற்றி பல விசயங்களை நாம் தெரிந்து அறிந்து வைத்திருக்கிறோம்.   ஆனால், அதனை அனுபவித்துச் சொன்னவர்கள் குறைவுதான். அதாவது, காதலை நாம் அறிவு பூர்வமாக உணர்ந்து வைத்திருக்கிறோமே ஒழிய அனுபவத்தில் உணர்ந்தது கிடையாது.

அது ஒரு உணர்வுதான் என்று பலர் கூறுகிறார்கள் ஆனால் அந்த உணர்வே காதல் எனக் கொள்ள முடியாது. உணர்வின் வடிவமொன்றாக அல்லது அதன் முடிவுப் பொருளாக காதல் அமைந்திருக்கலாம். அந்த இடத்தில் பேய் இருக்கிறது என்று சொன்னால் நாம் பயப்படுகிறோமல்லாவா. இந்த பேய், பிசாசு, சூனியம், காதல் எல்லாம் ஒன்றுதான். உங்களுக்கு எப்படி விளங்குகிறதோ அப்படி எடுத்துக் கொள்ளுங்கள். நாம் அதனை உணராத வரைக்கும் புரியாத விடயம் இவை. அதுவரை நாம் அதனை இல்லை என்றுதான் கூறுவோம். உணர்கின்றவர்களுக்கு காதல் ஒரு சுகமான விடயம். ஆனால் அதனை உணர்தல் என்பதில் உங்களுக்கும் எனக்கும் இடையில் கருத்து பேதம் நிச்சயமாக இருக்கிறது. அதனைப் பற்றி பின்னர் ஒரு தலைப்பில் பேசுவோம்.  

குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால், அல்லது குடும்பத்தில் உங்களுக்கு பிடித்த, நெருக்கமான ஒருவர் இறந்துவிட்டால் நீங்கள் அழுவீர்கள். நீங்கள் தற்கொலை செய்துகொண்டெல்லாம் சாகமாட்டீர்கள். இந்த சோக நிகழ்வு கூட அதி கூடியது ஒரு வாரநாட்களுக்கு தொடரும். பின்னர் அது அப்படியே காலப்போக்கில் மறந்து அழிந்து போகும்.

ஆனால், காதலன் இறந்ததுக்காக காதலியும், காதலி இறந்ததுக்காக காதலனும் தற்கொலை செய்துகொண்டதாக எத்தனை செய்திகளை நாம் படித்திருக்கிறோம். இந்த சம்பவம் எப்போதாவது அல்ல, நாள்தோறும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஏன் இன்று, இப்போதே நீங்களும் வலைத்தளத்தில் தேடிப்பாருங்கள் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் ஒருவர் இப்படி இறந்திருப்பார். இந்த உலகத்தில் எமக்கு உயிரைவிட பெரிய விடயம் இருக்க முடியாதல்லவா. அதையே காதலுக்காக இவர்கள் இழக்க துணிகின்றனர் என்றால் இந்த கதலில் ஏதொவொன்று இருக்கின்றது என கூறுவது ஒரு கண்டுபிடிப்புத்தானே. இன்னும் எத்தனையோ பேர் காதலின் பெயரால் திருமணமே செய்துகொள்ளாது வாழ்கின்றனர். செத்தாலும் சாவார்களே தவிர வேறு திருமணமே இவர்கள் செய்துகொள்ள விரும்புவது கிடையாது. ஏன்? அவர்களுக்கு இந்த மயக்கம். அவனுக்கு வாழ்வினதும், இந்த உலகத்தினதும் இயல்பூக்கங்களையும், குணாதிசயங்களையும் கற்றுக் கொடுத்த குடும்பம், சமூகம் முதலிய அலகுகளை விட்டு இலகுவாக அவன் ஒதுங்கிக் கொள்ள ஒருவன் அல்லது ஒருத்தி துணிகறான்/ள் என்றால் இந்த மாயை உண்டுபண்ணியது எது?

காதலில் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் வரலாம். அது நிரந்தரமானதல்ல. ஆனால் ஆசைப்பட்ட காதலர்கள் திருமணத்தின் போது ஒன்று சேர்கிறார்களே அது ஒரு கண்கொள்ளா காட்சி. அந்த மகிழ்ச்சியையும், அனந்தத்தையம் நீங்கள் அவர்களில் வேறு எப்போதும் கண்டுகொள்ள முடியாது என்று கண்டவர்கள் கூறுகிறார்கள். இது உண்மையா? எனக்கும் தெரியாது. பல வருடங்கள் காதலித்து அவர்களுடைய பாணியிலேயே நான்றாய் புரிந்து தெளிந்து கொண்ட காதலர்களுக்கு திருமணத்தின் பின்னர் பந்தத்தில் ஆயுள் முழுக்க சேர்ந்து வழ முடிவது கிடையாது, ஏன்? காதலிக்கும் போதிருந்த புரிந்துணர்வு திருமணத்தில் இல்லையென்றால் ஒன்றில் செய்த காதல் பொய்யாக இருக்க வேண்டும் அல்லது திருமணம் பொய்யாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?      

காதல் கிட்டத்தட்ட வீதியில் இருக்கும் சமிக்கை விளக்கு மாதிரியானது. சந்தோசமும் கோபமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். ஆனால் எப்போவதாவது ஒரு நாளைக்கு நாம் வாகனக் கெடுபிடிக்குள் அகப்பட்டுக் கொள்கிறோமே! அது போலத்தான் காதலும் எப்போதாவது நெரிசலுக்கு ஆட்பட்டுவிடும். இன்னும் சொல்லப் போனால், மஞ்சல் கோட்டில் தாமதித்து நிற்பவர்கள் இலகுவாக அதனை கடந்துவிடுகிறார்கள். அவசரப்பட்டு நடப்பவர்கள் அடிபட்டு விழுந்து விடுகிறார்கள். சேருவதும் பிரிவதும் காதலின் இயல்பு. ஆனால் யார் எப்போது சேருவார்கள் எப்போது பிரிவார்கள் என்பதனை யாரால் உறுதிப்பட கூறமுடியும். இதுதான் காதலின் அடிப்படை.

இருக்கும் வரை காதலர்களாக இருந்துவிட்டு நேரம் வந்ததும் பிரிந்து 
செல்வதும் காதல்தானாம். அதற்காக அவர்கள் வைத்துக் கொண்ட பெயர் தெய்வீக காதல். மடத்தனமான காதலுக்கு பெயர் தெய்வீகக் காதல். நாம்தான் 'நச்சுப் பாம்புக்கு' நல்ல பாம்பு என்று பெயர் வைத்தவர்களாயிற்றே!

காதல் என்பதே ஆயுள் முழுக்க சேர்ந்து வாழ்வதற்காக இருவர் தம்மைத்தாமே அறிந்து, புரிந்து  ஏற்றுக் கொண்ட விடயம். ஆனால் இறுதியில் அந்தக் காதலனோ அல்லது காதலியோ பிரிந்துவிடுவதற்கு கூறுகின்ற சாக்காகவும் இந்தக் காதல்தான் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 'நீர் உண்மையில் என்னை காதலிக்கிறாய் என்றால் நாம் பிரியவேண்டும்' என்றும், அல்லது 'நாம் இருவரும் இனிமேல் நல்ல நண்பர்களாக இருப்போம்' என்றெல்லாம் பசப்பு வார்த்தைகள் கூறுவார்கள். பல்வேறு சம்பவங்களை நானும் அவதானித்திருக்கிறேன். நல்ல அனுபவமும் இருக்கிறது. இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எனக்கு தெரிந்தது இவர்கள் காதலை அறிந்த மட்டிற்கு புரிந்து கொள்ளவில்லை என்பதுதான்.

எமக்கு பிடித்த ஒருவர் எம்மை விட்டுப் போவதுதான் இந்த உலகத்தில் மிகவும் கொடுமையான விசயம். நீங்களும் அதனை ஒருதடவை அனுபவித்திருப்பீர்கள். எமக்கு பிடித்த எல்லாவற்றையும் இந்த உலகத்தில் அவ்வளவு எளிதாக பெற்றுவிட முடிவதில்லை. ஆனால் எம்மால் முடிந்தவரை அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பில் நாம் அதற்காக எவ்வளவு பாடுபட்டு உழைக்கிறோம். அந்த கனத்திற்காக நாம் படுகின்ற கஷ்டங்களும் நஷ்டங்களும் எமக்கு மட்டும்தானே உணர்ந்துகொள்ள முடிகிறது. அப்படி எமக்கு ஒரு பொருள் கிடைத்தால் அது எவ்வளவு பெறுமதியாக இருக்கும் என்று சற்று உங்களால் அளவிட முடியுமா? அப்படி கிடைக்கின்ற பொருளுக்கு நீங்கள் ஒரு பெறுமதியினை குறிக்க முற்படுவீர்களா? இல்லை, அதனை ஒரு பொக்கிசம் போன்று பாதுகாக்க முயற்சிப்பீர்களா?  அதுவும் நாம் காதலித்த ஒருத்தி அல்லது ஒருவன் "நீ எனக்கு வேண்டாம், என்னை மறந்துவிடு" என்று கூறிவிட்டு செல்வது இருக்கிறதே அது சாவை விட கொடுமையானதாக மாறிவிடுகின்றதே அதற்கு காரணம் உங்களுக்கு என்வென்று தெரியுமா? எனக்குத் தெரியும். அதன் பெறுமதி அளவிடமுடியாது. இந்த நியாத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் அந்த பொருளுக்கு நாம் மதிப்பளிக்கிறோமா? இல்லையா? என்பது இரண்டாவது விடயம். ஆனால் அந்த உழைப்புக்கு நாம் பெரிதும் மதிப்பளிக்க வேண்டியிருக்கிறதே!  

ஒன்றை மட்டும் உறுதியாக கூறிவிடுகிறேன். காதலுக்கு அடிப்படையாக எதவும் இருந்துவிடக் கூடாது. அழகைப் பார்த்து வருகிற காதல் அழகு இல்லாத போது அதுவும் கூடவே இல்லாமல் போய்விடுகிறது. அறிவைப் பார்த்து வருகின்ற காதல் அந்த அறிவின் அளவோடு நின்றுவிடுகிறது. அல்லது அறிவு பெருகுகின்ற போது தானும் பிரச்சினையிலும், சச்சரவுகளிலும் மாட்டிக்கொள்கிறது. பட்டங்களையும், பதவிகளையம் பார்த்து வருகிற காதல் அத்தோடு மடிந்துவிடுகிறது. பணத்தையும், செல்வத்தையும் எதிர்பார்த்து வருகிற காதல் அவை முடிந்தவுடன் தானும் எங்கோ சென்றுவிடுகிறது. குடும்பம் கோத்திரம் பார்த்து வருகிற காதல் அவை குலைந்தவுடன் தானும் அழிந்துவிடுகிறது. ஆனால் இவை எதனையும் எதிர்பார்க்காது வருகிறதே காதல் அது ஒன்று மட்டும்தான் நாள் முழுக்க அழியாது இருக்கும். இதனை நான் உண்மையில் அனுபவித்துத்தான் கூறுகிறேன்.

எல்லா காதலும் சந்தோசமாகத்தான் ஆரம்பிக்கின்றன. காதலுக்கு எதிரி காதலிக்கின்ற இருவருடைய மனசும்தான். பிரச்சினை என்னவென்று புரிந்து கொள்ளாமல் நூறு வருடம் வாழ்வதை விட பிரச்சினை என்னவென்று புரிந்துகொண்டு வாழ்கின்ற ஒரு நாள் இருக்கின்றதே அது ஆயிரம் வருடங்கள் வாழ்ந்ததற்கு சமமானது. வேதனை என்னவென்றால் பிரச்சினை என்னவென்று புரிந்து கொள்ளாது பிரிந்து செல்கின்ற நிலமை இருக்கிறதே அதற்கு நாம் காதல் என்றுதான் கூறிக்கொள்கிறோம். இது வெட்கக் கேடானது. இது கோழைத்தனமானவர்கள் தமது நலனுக்காக காதலை திருவுபடுத்திக் கொண்ட விடயம். காதலித்து திருமணம் ஆனவர்களுக்கு இந்த காதல் எப்போதும் நினைவுக்கு வருகின்ற சந்தோசம். ஆனால் காதலித்து பிரிந்து போகிறார்களே அவர்களுக்கு காதல் எப்போதும் நிலைத்திருக்கும் வலி. மன்னிக்கவும் முடியாது... மறக்கவும் முடியாது.

இதோ பார்,
எனது நாட் குறிப்புக்கள் இதோ இருக்கிறது.
நீ வரும் முன்பதாக
எல்லா நாட்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் உருண்டோடின.
பின்பு ஒவ்வாரு நாட்களும் அதிசயிக்கும்படி மாறின.
ஓவ்வொரு நாட்களும் ஏதோ புதிதாய் எனக்கு கூறிற்று.
அருமையான நினைவுகளை அள்ளித் தந்தன.
அனுபவிக்கவும் ஆனந்தமாய் இருந்தன.
சில சம்பவங்களை நான் கோப முகத்தோடுதான் எழுத முடிந்தது,
பல விசயங்களை மகிழ்ச்சியோடு எழுதத் தொடங்கினேன்.
ஆனால் வசனங்கள் யாவும் உனைப் பற்றியதுதான்.
ஏனெனில், ஒரு நாளின் கடைசி நினைவாகவும், மறுநாளின் ஆரம்பமாகவும் இருப்பதும் நீதான்.
இப்போது நான்தான் உன்னோடு இல்லையே!
இவற்றை வாசி.   

உன்னுடன் காதல் பெருகுமெனில் கூடவே அழகும் பெருகும். இந்த காதல், நேசம் என்பதெல்லாம் உயிரின் அழகுதான். உன்னுடைய உயிர் எதனை செய்கிறதோ, எதனை கட்டளையிடுகிறதோ அவற்றைத்தான் இந்தக் காதலும் புரிகிறது. ஆக எல்லா கருமங்களையும் காதலித்து புரிவதில் சுகமிருக்கிறது.

ஒருவன் ஒருத்தி மீது காதல் கொள்வது அவள் ஆவலை கிளறச் செய்கிற அல்லது அப்படியான ஒரு மின்னூட்டத்திற்கு துணையாய் இருந்துவிடுவாள் என்பதற்காக அல்ல. ஆனால் எவள் ஒருத்தியின் துணையால் அவன் சோம்பேறித்தனத்தையும், மென்மையையும் உணர்கிறானோ அதன் காரணமாகத்தான்.

எல்லா காதலும் மாற்றம் பெறுகிறது, பரிணமிக்கிறது. ஆனால் நீ எல்லா நேரத்திலும் முழு மனத்தோடு காதலிக்கிறாயா என்பதுதான் எனக்கு புரியாத விடயம்.

முதிர்ச்சியடையாத காதல் கூறுகிறது: "நான் உன்னைக் காதலிக்கிறேன், காரணம் நீ எனக்கு வேண்டும்". முதிர்ந்த காதல் கூறுகிறது: "நீ எனக்கு வேண்டும், காரணம் நான் உன்னைக் காதலிக்கிறேன". இது எதுவுமே எனக்கு தெரியாது அதனை அளவிடவும் என்னிடம் கருவி ஏதுமில்லை. ஆனால் நீ எனக்கு வேண்டும்.

காதல் எப்போது ஆரம்பிக்கிறது என்பதை அறிந்து கொள்வது கடினமானது. மிகவும் கடினமானது காதல் அரம்பித்திருக்கிறதா என அறிந்து கொள்வதுதான்.
காதலிக்காமல் இருப்பது என்னவோ சிலருக்கு குறையாகத் தோன்றும். பெருங் குறை காதலிக்க முடியாமல் இருப்பதுதான்.

நான் அவளை ஏன் காதலித்தேன் என நீங்கள் கேட்டால் அதற்கு பதில் இதனைத் தவிர வேறொன்றும் கிடையாது. காதலுக்கு காரணம், அவள் அவளாக இருந்தாள். நான் நானாக இருந்தேன்.  நீர் அதிக நேசத்திற்கு ஆட்பட வேண்டுமெனில், இயல்பாக இருப்பது முக்கியம். அதைவிட முக்கியம் நீ நேசிக்கப்பட கூடியதாக இருக்க வேண்டும்.

முதலில் காதல் என்பது பைத்தியமாக அல்லது மடத்தனமாகத்தான் தெரியும். ஆனால் ஒருவருக்கு செயலூக்கமும், உந்துதலும் அங்குதான் நிறையவே கிடைக்கின்றன.  இவை வாழ்தலுக்கு இன்றிமையாதவை. காதல், நேசம் என்பன வாழ்வில் அவசியமானவை. அவற்றை அனுபவித்தே ஆகவேண்டும் என்கின்ற அவலும் உனக்குள் எழலாம். அப்போது காதல், நேசம் இவையே வாழ்வாக மாறும். நீ காதலை இழப்பாயானால், வாழ்வை இழந்தவன் போலாவாய்.

எனக்கு காதலும் போரும் ஒன்றுதான். இலகுவாக ஆரம்பித்துவிடலாம். காரணம் எதுவும் தேவையுமில்லை, இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. ஆனால் நிறுத்துவது என்பது மிகவும் கடினமாக தெரிகிறது.

மடத்தனங்கள் இல்லாத காதலை காதல் என்று வர்ணிப்பது முறையல்ல. காதலில் மடத்தனங்கள் இல்லாத போது அது காதல் என்ற வட்டத்தினுள் நோக்கப்படுவதும் கிடையாது. அதேவேளை மடத்தனங்கள் நிறைந்தவற்றை காதல் என்றும் கருதிக்கொள்ள முடிவதில்லை. இவைதான் இந்த நேசத்தின் பின்னால் மறைந்து கிடக்கின்றன. அவை மகிழ்ச்சி கரமானது. அறிவினை அதிசயிக்க செய்கின்றது. இதுதான் தன்னைப் பற்றி அதிகம் சிந்திக்க வைக்கின்றது.

காதலுக்க காரணம் தேவையில்லை. ஒருத்தர் காதலிக்கப்படுகிறார் காரணம் ஒருத்தர் காதிலிக்கப்படுகிறார்.

நட்பு என்பது அனுதாபத்தினால் உருவாக்கப்டுகிறது. ஆனால், காதலில் அவ்வப்போது கோபமும் அல்லது அதிக விருப்பினால் எழும் முரண் நிலையும் ஏற்படுகிறது. ஒருவரைப் போல் மற்றொருவர் இருக்க வேண்டும் என்பதற்காக கடும் போராட்டமே நிகழும். இறுதியில் இருவரும் புதிதாக ஒன்றை ஏற்படுத்திக் கொள்வர்.

காதல் என்பது இரு வகையானது. ஓன்று 'கட்டாயப்படுத்துவது'. மற்றொன்று 'கட்டுப்படுவது'. எனக்கு தெரிந்த வரையில் இந்த இரண்டிற்கும் இடையில் சிறு வேறுபாடுதான் இருக்கிறது. ஒருவருக்கு எது பிடிக்கின்றதோ அது மற்றவருக்கு விருப்பமின்றி இருப்பதுதான்.

இதனை உனக்கு கூறும் போதுதான் எனக்கு அண்ணை தெரேசா கூறிய வார்த்தை ஒன்று நினைவுக்கு வருகிறது. அதையும் எனது நாட்குறிப்பில் பதிந்திருக்கிறோன் நன்றாக பார். "உணவுக்காக ஏற்படும் பசியினை போக்குவதிலும் பார்க்க காதல் மீது ஏற்படும் பசி இருக்கிறதே அது இலகுவில் போக்க முடியாதது". நீ புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன்.

'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று நீ கூறுவதற்கு முதலில் "நான்" என்று கூறுவதற்கு இயலுமாக இருக்க வேண்டும். அப்படி உன்னால் முடியாதென்றால் "நான்" என்பதை கூற இயலுமாகும் வரை காத்திருப்பது அவசியம். இதனை "உனக்காக" மாற்றிக்கொள்வது "எனக்காக" உள்ளவர்களை அதிருப்தியடையச் செய்துவிடும் என்பதனை நீ ஏன் உணர மறுக்கிறாய்.

பேர்டன் ரசல் கூறினார் "காதல் பயம் உள்ளவர்களுக்கு உயிர் பயம் உள்ளது. வாழ்வைப்பற்றி எவர் பயப்படுகிறாரோ அவரின் மூன்று பங்கு ஏற்கனவே இறந்துவிட்டன." நான் 'வாழவேண்டுமே'  என்று அஞ்சுகிறேன். நீ வாழ்வை பற்றி அஞ்சுகிறாய்.   

காதல் என்பது பேய் பிசாசை போன்றதுதான். அதனைப் பற்றி பேசிக்கொள்பவர்கள் மிக அதிகம். கண்டவர்கள் மிக குறை. இது எல்லோருக்கும் பொதுவான ஒன்று.

நாம் காதலிக்கிறோம் என்றால் அசாத்தியமானவற்றை நம்ப வேண்டும். காதல் என்பது அப்படித்தான் அதற்கு சாத்தியமாகின்றவற்றிலும் பார்க்க அசாத்தியமானவற்றில் ஈடுபாடு அதிகம். நீயும் நானும் அப்படித்தான். நீ அசாத்தியமானது என கூறுபவற்றை நான் நம்புகிறேன். நான் சாத்தியம் என்று கூறவனவற்றை நீயோ அசாத்தியம் என்று ஒதுக்குகிறாய். ஆனால் காதலுக்கு இரண்டும் ஒன்றுதான்.   

நீ காதலில் முழ்கியிருக்கிற போது உன்னைச் சுற்றியதாக ஊடுருவும் ஒளியும், குணங்களும், பண்புகளும் உமக்கு கிடைப்பது நீங்கள் இருவரும் சந்திக்கின்ற போது எழுகின்ற ஒரு வகை விளைவு என்பதனை நீ ஒரு போதும் அறிவது கிடையாது.

எங்கு காதல் உன்னதமாக பயணிக்கிறதோ அங்கு எப்போதும் வாழ்த்துக்கள் நிறையவே இருக்கும் என்பதனை நீ புரிந்துகொள்ள வேண்டும். நானும் வாழ்த்துக்களை அதிகம் விரும்புகிறேன்! எனக்கு தெரியும் உன்னுடைய விருப்பமும் அதுதான்.

நீங்கள் கேட்கலாம் இவ்வளவு கூறுகிறாயே அது எப்படி என்று. நான் பரீட்சையில் பார்த்து எழுதியது  கிடையாது.   

0 comments:

Post a Comment