காதலின் பெயரால் காதல்கள்

"கொலமா மத யானையை நம்பலாம்,
கொன்று போச்சே புலியையும் நம்பலாம்,
ஆனால் சேலை கட்டிய மாதரை நம்பினால்...
தந்தனா பாட்டு பாடனும், துந்தனா தாளம் போடனும்."


என்னடா எடுத்த எடுப்பிலேயே (பழைய) பாடல் வருகிறது என்று சிந்திக்க வேண்டாம். எல்லாவற்றுக்கும் ஒரு அறிமுகம் அவசியமல்லவா.

இன்று காதலர்கள் இருவரை சந்திக்க நேர்ந்தது. அவர்களையும் வழமை போன்று நல்ல பிள்ளைகள்தான் என நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் இப்போது காதலிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடிந்தது. அப்படியா என்று வாயை பிளந்த நான் அவர்களிடம் சில வினாக்களை கேட்டுக் கொண்டேன். என்ன வினாக்களை அவர்களிடம் கேட்டீர்கள் என்று நீங்கள் என்னை வினவலாம். வேறு ஒன்றுமில்லை சாதாரண கேள்விகள்தான். வழமை போன்று நான் எல்லா காதலர்களிடமும் கேட்கின்ற கேள்விகள்தான். அது சரி காதலிக்கின்ற உங்களுக்கு காதல் என்றால் என்னவென்ற தெரியுமா? என்று கேட்டேன். உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

அவர்கள் சற்று நேரம் தாமதித்து, வெட்கித்து, கூனிக் குறுகிப்போய் பதில் சொல்ல முடிந்தும் முடியாதவர்ளாய் இருந்தார்கள். அப்போது நான் என்னை பிழையாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் பாடசலையில் கணிதப் பாடத்தில் சந்தேகம் என்றால் யாரிடம் அதனை கேட்டறிந்து கொள்வீர்கள்? கணிதப் பாடத்தில் உள்ள சந்தேகத்தை தமிழ் பாட  ஆசிரியரிடம் கேட்க முடியாதல்லவா. அதே போன்று காதலிப்பவர்களிடம்தானே காதல் என்றால் என்னவென்று கேட்டக முடியும். காதல் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை வேறு நபர்களைவிட காதலிப்பவர்கள் நன்றாக கூற முடியுமல்லவா என்று கேட்டேன். அப்போது அவர்கள் தம்மை சுதாகரித்துக் கொண்டு பதில் தர முற்பட்டார்கள். காதல் என்பதற்கு அவர்கள் கூறிய பதில்  என்னைப் பொறுத்தவரை எல்லாரும் வழமையில் கூறும் உப்புச் சப்பில்லாத ஒன்றுதான். வேறொன்றும் கிடையாது அவர்கள் இத்தனைக்கும் கூறியதை அவர்கள் பாணியிலேயே கூறுவதானால் 'காதல் என்பது ஒரு பீலிங் (உணர்வு)'. நானும் சிரித்துக் கொண்டே இவ்வளவுதானா என்று கேட்டேன். வேறு ஏதும் இல்லயா? என்று கேட்ட போது அவர்கள் மீண்டும் காதல் என்பது ஒரு பீலிங்தான் ஆனால் அதைவிட கூடுதலானது. அதனை வார்த்தைகளால் கூறிவிட முடியாது என்றார்கள்.

இவை வழமையான காதலர்களின் உச்சரிப்புத்தானே. இப்படி பலர் என்னிடம் முன்னதாகவே கூறியிருக்கிறார்கள். நீங்கள் ஒன்றும் புதிதாக உங்கள் காதலை மேற்கொள்ளவில்லை, அப்படித்தானே? என்று வினவினேன். அவர்களால் ஒன்றுமே கூற முடியவில்லை. காதல் என்பதற்கு நாம் கூறுகின்ற விளக்கம் வித்தியாசமாக இல்லை என்றால், அது ஏனையவர்கள் கூறுகின்ற அதே வடிவத்தைத்தான் சுமந்திருக்கிறது என்றால், நாம் எதனையும் இந்த காதலினால் புதிதாக உணரவில்லை என்றுதானே அர்த்தம். அத்துடன் புதிதாக நாம் எதனையும் புதிதாக உணரவில்லை என்றால் நாம் எதனையும் புதிதாக அனுபவிக்கவில்லை என்றுதானே அர்த்தம். ஆக மொத்தத்தில் அந்த காதல் எல்லோராலும் பயனில்லாத ஒன்று என முடிவாக்கப்பட்டதுதானே என்ற ஆச்சர்ய குறியும் எனக்குள் இருக்கிறது. ஏனையவர்கள் போன்றுதான் நாமும் ஒன்றை செய்கிறோம் என்றால் அது நாம் பரீட்சையில் பார்த்து எழுதுவது போன்றதுதான்.

செய்கின்ற செயலில் எந்தவொரு புதுமையும் இல்லாவிடில் இந்தக் காதல் என்பது வெற்றுக் கோப்பையாகத்தான் இருக்க முடியும். இந்நிலமையில் காதல் என்பது அர்த்தமே இல்லாத ஒரு சம்பவம். பலர் அதனை வைத்து கொண்டாடலாம், பாவம் அவர்கள். காதல் அப்படியானது, இப்படியானது என்றெல்லாம் கூறி கூப்பாடு போடலாம். ஆனால் அதனால் யாருக்கும் எந்தப் பலனும் கிடைப்பதில்லை. ஏவ்வாறோ தெரியாது அந்த காதலர்கள் மாத்திரம் அதனால் திருப்பதிப்பட்டுக் கொள்ள முடிகிறது என்பதனை ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில், அவர்கள் தமது அறிவில் தெரிந்து வைத்திருக்கின்ற காதல் என்பதன் அர்த்தம் அவர்களால் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. அவர்களின் காதல் அனுபவம், அறிவு எனபனவற்றை கொண்டு அவர்கள் அதனை வரையறுத்துக் கொள்கின்றனர். அதனை அவர்களே போற்றவும் புகழவும் செய்கின்றனர். உங்கள் நண்பர்கள் கூட்டத்துள் நீங்கள்தான் படித்தவர் என்று வைத்துக்கொண்டால் நீங்கள் கூறுவதுதானே அங்கு வேதமா இருக்கும். உங்களுடைய குடும்பத்தில் நீங்கள்தான் மூத்தவர் அல்ல நன்கு கற்ற ஒருத்தர் என்றால் வருகின்ற விடயங்களை உங்கள் பொறுப்பில்தானே அலோசனைக்காக விடப்படும். இதே போன்றுதான் இவர்களுடைய காதலும். காதலர்களை அவதானித்து பாருங்கள் புரியும். தாங்கள் நினைப்பதை பெரிதாக கருதிக்கொள்கின்றனர்.

பொதுவாக இந்தக் காதல் குறித்து இருவகையான கருத்துக்கள் காணப்படுகின்றன. அவை பற்றி அலசுவதற்கு முன்னதாக  காதலின் எதிரும் புதிருமான விடயங்களை மிகவும் எளிய நடையில் உணர்த்துகின்ற பழைய பாடல் ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. அதனை தருகிறேன் நீங்களும் அனுபவித்து பாருங்கள். இல்லை நீங்கள் விரும்பினால் அனுபவித்து பாடவும் முடியும்.

ஆத்துக்கு பாலம் அவசியம்
அது போல் ஆம்பிளக்கி பொம்பளயும் அவசியம்.
அப்படி இப்படி இல்லாவிட்டால் நடக்குமா?
மனிசன் செப்படி வித்தையில் குவா வந்து பொறக்குமா?


காதல் வெறி பிடுச்ச பைத்தியம்
உனக்கு கட்டாயமா செய்ய வேண்டும் வைத்தியம்.
காள வயச பறிகொடுக்க கூடாது
பெண்கள் காந்தம் போல பிடிச்சிக்கிட்டா விடாது.
தம்பி, ஐயா சொல்லுற புத்திய கேட்பது அவசியம்
அங்கேதானே இருக்குதடா ரகசியம்.


உலகத்தையே புருஞ்சிக்காம அளக்கிறே
நீ ஒவ்வொன்றுக்கும் கட்டுப் போட்டு மறுக்கிறே.
ஓஞ்சி போன ஞானி போல பேசுற,
எங்கப்பா ஞானி போல பேசுற,
மீறி ஒடப்பெடுத்தா அக்கரைக்கும் இக்கரைக்கும் தாண்டிப்போக...
ஆத்துக்கு பாலம் அவசியம்
அது போல் ஆம்பளக்கி பொம்பளயும் அவசியம்.
அப்படி இப்படி இல்லாவிட்டால் நடக்குமா?
மனிசன் செப்படி வித்தையில் குவா வந்து பொறக்குமா?


வாலிபக் கோளாறு வாட்டுது,
அந்த வயசுக்கேத்த திமிறும்கூட காட்டுது.
நாடி சொன்னா உடம்புகூட இளக்கிது,
கடந்த ஞானி சொன்ன கதையும் கூட இருக்குது.
மேலும் ஐயா சொல்லுற புத்திய கேளு அவசியம்,
எப்பா அங்கேதானே இருக்குதடா ரகசியம்.


பாறைக்குள்ளே தேரை எப்படி நுளஞ்சது?
சமயம் பார்த்து உள்ளே கண்ண வெச்சி புகுந்தது.
நீருக்குள்ளே மீனு எப்படி நுளஞ்சது?
அது நீச்சடிக்க பழகிட்டுதே புகுந்தது.
தேரு கெளிய சக்கரம் எப்படி உருளுது?
தேய்வ சக்தியாலே அது பொரளுது.
அதைப்போல் குடும்பம் இன்றி வாழ்க்கை நடத்த முடியுமா?
பெட்டைக் கோழி வந்து கூவினாலும் விடியுமா,
பொழுது விடியுமா?


பொழுது விடிஞ்சு பார்துக்கலாம் கிளம்பிடு,
இனி போகப் போக புரிஞ்சிக்கலாம் பொறப்படு.


இந்தக் காதலர்களிடம் நீங்கள் கூறுகின்ற எதுவும் வேலைக்காவாது. நீஙகள் எதனைப்பற்றி எடுத்துச் சொன்னாலும் கணக்கில் எடுக்கவும் மாட்டார்கள். நீங்கள் எதனைப்பற்றி பேச எடுத்தாலும் தங்களுடைய விடயத்துக்கு மாத்திரம்தான் (அந்த காதலுக்கு) அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு தடவைக்கு பத்து தடைவ அழைத்தால்தான் உங்கள் அழைப்புக்கு பதிலும் கிடைக்கும். இப்படி அவர்களுடைய நாளாந்த செயற்பாடுகளில் அதிக தொய்வும் சோர்வும் காணப்படும். ஆனால் அது எவையும் அவர்களுடைய கண்களுக்கு புலப்படாது. அத்தனை குருட்டுத்தனம் அந்தக் காதலில் இருக்கும். பரிதாபம்!

இந்த காதலர்களுக்கு உலகமே ஏதோவொரு தூசி போன்றுதான் இருக்கும். எந்த விடயத்திலும் அவர்களுக்கு ஈடுபாடு இருக்காது. அப்படி அவர்கள் ஈடுபாடு காட்டுவதென்றால் அது அந்தக் காதலினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வேண்டும். காதலனால் காதலிக்கோ அல்லது காதலியால் காதலனுக்கு அனுமதி கிடைத்தாலே இந்தக் கருமங்கள் நிகழும். சுருங்கச் சொன்னால் காதலனோ அல்லது காதலியோ அனுமதித்த விடயாமாக இருக்க வேண்டும் என்பது தலை எழுத்து. இதற்கு நான் வைத்த பெயர்தான் கருமம் பிடிச்ச காதல். இவர்கள் சுதந்திரமாக இருப்பதனை தமக்குத் தாமே குழி தோண்டி புதைத்துக் கொண்டவர்கள். அதற்கு அவர்களே அன்பு, பாசம், இரக்கம், சுவாரசியம் என்றெல்லாம் பல பெயர்களை சூட்டிக்கொண்டார்கள். எல்லா விடயங்களும் தங்கள் முன் நிலையில்தான் நடந்தேற வேண்டும் என்று தாமே விதியமைத்துக் கொண்டு வாழ்வியலை இரசனையின்றி கழிக்க முற்படுவதால் பிரச்சினைகளை இந்த கருமம் பிடிச்ச நிலையில்தான் அதிகம் இவர்கள் முகம்கொடுக்க நேரிடுகிறது.  

எந்த விடயத்துக்கும் அவர்களிடம் பொறுமை இருக்காது. அதிகம் கோபப்படுவார்கள். அதுவும் தமக்கு தெரியாமல் எதையாவது காதலனோ அல்லது காதலியோ செய்து விட்டால் போதும். என்மேல் உனக்கு பாசம் கிடையாது, அன்பு கிடையாது என்றெல்லாம் காரணம் சூட்டி காதலுக்கே உலை வைக்க புறப்பட்டுவிடுவார்கள். புரிந்து கொள்ளல் அல்லது புரிந்துணர்வு என்பது இவர்களிடம் கடுகளவிலும் இருப்பது கிடையாது. ஆனால் இருவரும் புரிந்து தெளிந்துதான் காதல் செய்வதாக வெளிக்காட்டிக் கொள்வார்கள். கேட்டால் அவருக்கு சிவப்பு நிறம்தான் பிடிக்கும். அவருக்கு என்னைப் போன்று ரோசா மலர்தான் பிடிக்கும், எனக்கு விருப்பமான ஐஸ் கிறீம்தான் அவருக்கும் பிடிக்கும், எனக்கு பிடிக்காத சாப்பாட்டை அவரும் சாப்பிடுவது கிடையாது, இப்போதெல்லாம் எனக்கு பிடித்த ஆடையினைத்தான் அவரும் விரும்பி அணிகின்றார், நான் எதனைக் கேட்டாலும் செய்துவிடுகிறார் என்று அங்கலாய்ப்பார்களே இவர்களைத்தான் நான் கல்லலெறிந்து கொல்ல ஆசைப்படுகின்றேன்.  இவர்கள்தான் காதலை கொன்று தின்றவர்கள். கொலை செய்தவனுக்கு மரணம்தானே தண்டனையாக வேண்டும். புரிந்து கொள்ளல் என்பதற்கும் அறியாமைக்கும் இடையில் வேறுபாட்டினை உணராதவர்கள் இவர்கள்.  

மற்றறொரு சாதி இருக்கிறது. சாதாரணமாக பஸ்சுக்கு கூட அப்படி காத்திருக்கமாட்டார்கள். ஆனால் அவளுக்காக அல்லது அவனுக்காக நாள் கணக்கில், ஏன் வருடக்கணக்கில் காத்திருப்பார்கள். யாருக்காக காத்திருப்பு நடந்தேறுகிறதோ அவர்களும் இவர்களை கணக்கில் எடுப்பதே கிடையாது. ஆனால் அவர்களை விட்டு காத்திருந்த அவனோ அல்லது அவளோ விட்டு சென்றுவிட்டால் அவனுடைய காதலை கேள்விக்குட்படுத்தி விடுவார்கள். அவன் உண்மையாக அவளை காதலித்திருந்தால்  அவளுக்காக காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பஞ்சாங்கத்தினை ஒதத் தொடங்கிவிடுவார்கள். அவனோ அல்லது அவளோ காத்திருந்த நாட்களில் இதனைப் பற்றி கணக்கிலும் எடுத்திருக்க மாட்டார்கள். இவர்கள் நினைக்கின்ற இக்காதல் என்பது காலில் அறுந்து இழுபபட்டு வருகின்ற செருப்புமாதிரி. தேவைப்படும் வரை இழுபட வேண்டும். ஆனால் அதுவோ வேண்டாத  போது இதெல்லாம் ஒரு செருப்பா? என்றும் தூற்றிக் கொள்வார்கள். பரிதாபம் யாதெனில் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள்தான் என்பது எனது கணக்கெடுப்பில் தெரியவருகிறது. இவர்கள் இதற்கும் காதல் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். நாசமாய்ப் போகட்டும், நமக்கென்ன கடமை முடிந்தது.

இது மட்டுமா இரவு முழுக்க என்னதான் அப்படி பேச்சு என்று வியக்கும் அளவுக்கு அவர்கள் பேசுவார்கள், பேசுவார்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். காலையில் எழுந்ததும் மீண்டும் பேச ஆரம்பித்து விடுவார்கள். என்னதான் அப்படி பேச்சு என்று தெரியாது. நல்ல வேளை நான் தப்பினேன்.


இதுவோ காதலித்தருந்தால் கற்பனையே பண்ண முடியாது. ஒரு நாளைக்கு ஐம்பது அழைப்பும் கூடவே இருநூறு முந்நூறு மேசேஜ்களும்; வந்திருக்கும். சாப்பிட்டியா, தூங்கினயா, குளிச்சயா, பல் தேச்சயா, என்ன கலர் டிறஸ், என்ன கலர் நெய்ல் பொலிஸ், என்ன கலர் தூக்கு என குப்பையா கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். கைகுட்டைக்கும், செருப்புக்கும் கூட கலர் சொல்ல வேண்டியிருக்கும்;. நேய் பொலிஸ் கூட சொல்லிட்டுத்தான் போட வேண்டியிருக்கும். நுளம்பு கடிச்சா சொல்லணும், நகம் வெட்டினா சொல்லணும், விக்கினால் சொல்லணும், தும்மல் வந்தாலும் சொல்லணும், செருப்பு வாங்கினாலும் சொல்லணும், வாங்கிய செருப்பு அறுந்தாலும் அவர்களுக்கு செய்தி அனுப்பணும். இன்னும் டார்ளிங், டியர், கியுட்டி, பியுட்டி, ஸ்மார்ட் என்றுதான் மெசேஜுக்கும் போட்டு அனுப்பணும்.

அதிலும், ஒரு மெசேஜுக்கு பதில் அனுப்பவில்லை என்றால் அல்லது பதில் அனுப்ப தாமதமாகிவிட்டால் எல்லாம் போச்சு. என்ன நடந்தது?, என்னை மறந்துவிட்டாயா? என்னை ஏன் பிடிக்கவில்லையா?, என்னிடம் என்ன குறைச்சல்?, என் மேல் கோபமா? என்று மறுபடியும் நூற்றுக்கணக்கில் மெசேஜ் வரும். உருப்படியா சொல்ல வேண்டும் என்றால் காதல் என்பது காலில் மலையை கட்டி இழுப்பது மாதிரி. நிம்மதியே இருக்காது ஆனால் சந்தோசமாக இருப்பதாக நாமே கருதிக்கோள்வோம். சந்தோசமே இருக்காது ஆனால் நிம்மதியாய் இருப்பதாக நாமே கருதிக்கொள்வோம். இரண்டில் ஒன்றுதான் கிடைக்கும் ஆனால் இரண்டும் இருப்பதாக நாம் திருப்திப்பட்டுக்கொள்வோம். கேட்டால் இதற்கு ஒரு பதில் கூறுவார்கள். அதுதான் "அந்த வலியிலும் சந்தோசமும் இருக்கிறதே! உலகில் வேறெந்த இடத்திலும் அனுபவிக்க முடியாது" என்று. இதுவும் அவர்களுடைய அறியாமையால் எழுந்த போலி வார்த்தைகள்தான். உலகில் வேறேங்கும் அனுபவிக்க முடியாது என்று கூறுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். கூறுபவர் உலகத்தை முழுமையாக அனுபவித்து விட்டு கூற வேண்டும்.

எப்படி இருந்தாலும், இந்த விடயத்தில் நம்மில் பலபேர் கண்தெரியாத குருடர்கள் போலத்தான் இருக்கிறோம். என்னையும் குருடன் என்று நீங்கள் கூற முடியாது. வேண்டுமானால் எனக்கு மூன்று கண்கள் என்று கூறிக்கொள்ளுங்கள், பெருமைப்படுகிறேன். காதலைப் பற்றி பல விசயங்களை நாம் தெரிந்து அறிந்து வைத்திருக்கிறோம்.   ஆனால், அதனை அனுபவித்துச் சொன்னவர்கள் குறைவுதான். அதாவது, காதலை நாம் அறிவு பூர்வமாக உணர்ந்து வைத்திருக்கிறோமே ஒழிய அனுபவத்தில் உணர்ந்தது கிடையாது.

அது ஒரு உணர்வுதான் என்று பலர் கூறுகிறார்கள் ஆனால் அந்த உணர்வே காதல் எனக் கொள்ள முடியாது. உணர்வின் வடிவமொன்றாக அல்லது அதன் முடிவுப் பொருளாக காதல் அமைந்திருக்கலாம். அந்த இடத்தில் பேய் இருக்கிறது என்று சொன்னால் நாம் பயப்படுகிறோமல்லாவா. இந்த பேய், பிசாசு, சூனியம், காதல் எல்லாம் ஒன்றுதான். உங்களுக்கு எப்படி விளங்குகிறதோ அப்படி எடுத்துக் கொள்ளுங்கள். நாம் அதனை உணராத வரைக்கும் புரியாத விடயம் இவை. அதுவரை நாம் அதனை இல்லை என்றுதான் கூறுவோம். உணர்கின்றவர்களுக்கு காதல் ஒரு சுகமான விடயம். ஆனால் அதனை உணர்தல் என்பதில் உங்களுக்கும் எனக்கும் இடையில் கருத்து பேதம் நிச்சயமாக இருக்கிறது. அதனைப் பற்றி பின்னர் ஒரு தலைப்பில் பேசுவோம்.  

குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால், அல்லது குடும்பத்தில் உங்களுக்கு பிடித்த, நெருக்கமான ஒருவர் இறந்துவிட்டால் நீங்கள் அழுவீர்கள். நீங்கள் தற்கொலை செய்துகொண்டெல்லாம் சாகமாட்டீர்கள். இந்த சோக நிகழ்வு கூட அதி கூடியது ஒரு வாரநாட்களுக்கு தொடரும். பின்னர் அது அப்படியே காலப்போக்கில் மறந்து அழிந்து போகும்.

ஆனால், காதலன் இறந்ததுக்காக காதலியும், காதலி இறந்ததுக்காக காதலனும் தற்கொலை செய்துகொண்டதாக எத்தனை செய்திகளை நாம் படித்திருக்கிறோம். இந்த சம்பவம் எப்போதாவது அல்ல, நாள்தோறும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஏன் இன்று, இப்போதே நீங்களும் வலைத்தளத்தில் தேடிப்பாருங்கள் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் ஒருவர் இப்படி இறந்திருப்பார். இந்த உலகத்தில் எமக்கு உயிரைவிட பெரிய விடயம் இருக்க முடியாதல்லவா. அதையே காதலுக்காக இவர்கள் இழக்க துணிகின்றனர் என்றால் இந்த கதலில் ஏதொவொன்று இருக்கின்றது என கூறுவது ஒரு கண்டுபிடிப்புத்தானே. இன்னும் எத்தனையோ பேர் காதலின் பெயரால் திருமணமே செய்துகொள்ளாது வாழ்கின்றனர். செத்தாலும் சாவார்களே தவிர வேறு திருமணமே இவர்கள் செய்துகொள்ள விரும்புவது கிடையாது. ஏன்? அவர்களுக்கு இந்த மயக்கம். அவனுக்கு வாழ்வினதும், இந்த உலகத்தினதும் இயல்பூக்கங்களையும், குணாதிசயங்களையும் கற்றுக் கொடுத்த குடும்பம், சமூகம் முதலிய அலகுகளை விட்டு இலகுவாக அவன் ஒதுங்கிக் கொள்ள ஒருவன் அல்லது ஒருத்தி துணிகறான்/ள் என்றால் இந்த மாயை உண்டுபண்ணியது எது?

காதலில் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் வரலாம். அது நிரந்தரமானதல்ல. ஆனால் ஆசைப்பட்ட காதலர்கள் திருமணத்தின் போது ஒன்று சேர்கிறார்களே அது ஒரு கண்கொள்ளா காட்சி. அந்த மகிழ்ச்சியையும், அனந்தத்தையம் நீங்கள் அவர்களில் வேறு எப்போதும் கண்டுகொள்ள முடியாது என்று கண்டவர்கள் கூறுகிறார்கள். இது உண்மையா? எனக்கும் தெரியாது. பல வருடங்கள் காதலித்து அவர்களுடைய பாணியிலேயே நான்றாய் புரிந்து தெளிந்து கொண்ட காதலர்களுக்கு திருமணத்தின் பின்னர் பந்தத்தில் ஆயுள் முழுக்க சேர்ந்து வழ முடிவது கிடையாது, ஏன்? காதலிக்கும் போதிருந்த புரிந்துணர்வு திருமணத்தில் இல்லையென்றால் ஒன்றில் செய்த காதல் பொய்யாக இருக்க வேண்டும் அல்லது திருமணம் பொய்யாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?      

காதல் கிட்டத்தட்ட வீதியில் இருக்கும் சமிக்கை விளக்கு மாதிரியானது. சந்தோசமும் கோபமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். ஆனால் எப்போவதாவது ஒரு நாளைக்கு நாம் வாகனக் கெடுபிடிக்குள் அகப்பட்டுக் கொள்கிறோமே! அது போலத்தான் காதலும் எப்போதாவது நெரிசலுக்கு ஆட்பட்டுவிடும். இன்னும் சொல்லப் போனால், மஞ்சல் கோட்டில் தாமதித்து நிற்பவர்கள் இலகுவாக அதனை கடந்துவிடுகிறார்கள். அவசரப்பட்டு நடப்பவர்கள் அடிபட்டு விழுந்து விடுகிறார்கள். சேருவதும் பிரிவதும் காதலின் இயல்பு. ஆனால் யார் எப்போது சேருவார்கள் எப்போது பிரிவார்கள் என்பதனை யாரால் உறுதிப்பட கூறமுடியும். இதுதான் காதலின் அடிப்படை.

இருக்கும் வரை காதலர்களாக இருந்துவிட்டு நேரம் வந்ததும் பிரிந்து 
செல்வதும் காதல்தானாம். அதற்காக அவர்கள் வைத்துக் கொண்ட பெயர் தெய்வீக காதல். மடத்தனமான காதலுக்கு பெயர் தெய்வீகக் காதல். நாம்தான் 'நச்சுப் பாம்புக்கு' நல்ல பாம்பு என்று பெயர் வைத்தவர்களாயிற்றே!

காதல் என்பதே ஆயுள் முழுக்க சேர்ந்து வாழ்வதற்காக இருவர் தம்மைத்தாமே அறிந்து, புரிந்து  ஏற்றுக் கொண்ட விடயம். ஆனால் இறுதியில் அந்தக் காதலனோ அல்லது காதலியோ பிரிந்துவிடுவதற்கு கூறுகின்ற சாக்காகவும் இந்தக் காதல்தான் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 'நீர் உண்மையில் என்னை காதலிக்கிறாய் என்றால் நாம் பிரியவேண்டும்' என்றும், அல்லது 'நாம் இருவரும் இனிமேல் நல்ல நண்பர்களாக இருப்போம்' என்றெல்லாம் பசப்பு வார்த்தைகள் கூறுவார்கள். பல்வேறு சம்பவங்களை நானும் அவதானித்திருக்கிறேன். நல்ல அனுபவமும் இருக்கிறது. இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எனக்கு தெரிந்தது இவர்கள் காதலை அறிந்த மட்டிற்கு புரிந்து கொள்ளவில்லை என்பதுதான்.

எமக்கு பிடித்த ஒருவர் எம்மை விட்டுப் போவதுதான் இந்த உலகத்தில் மிகவும் கொடுமையான விசயம். நீங்களும் அதனை ஒருதடவை அனுபவித்திருப்பீர்கள். எமக்கு பிடித்த எல்லாவற்றையும் இந்த உலகத்தில் அவ்வளவு எளிதாக பெற்றுவிட முடிவதில்லை. ஆனால் எம்மால் முடிந்தவரை அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பில் நாம் அதற்காக எவ்வளவு பாடுபட்டு உழைக்கிறோம். அந்த கனத்திற்காக நாம் படுகின்ற கஷ்டங்களும் நஷ்டங்களும் எமக்கு மட்டும்தானே உணர்ந்துகொள்ள முடிகிறது. அப்படி எமக்கு ஒரு பொருள் கிடைத்தால் அது எவ்வளவு பெறுமதியாக இருக்கும் என்று சற்று உங்களால் அளவிட முடியுமா? அப்படி கிடைக்கின்ற பொருளுக்கு நீங்கள் ஒரு பெறுமதியினை குறிக்க முற்படுவீர்களா? இல்லை, அதனை ஒரு பொக்கிசம் போன்று பாதுகாக்க முயற்சிப்பீர்களா?  அதுவும் நாம் காதலித்த ஒருத்தி அல்லது ஒருவன் "நீ எனக்கு வேண்டாம், என்னை மறந்துவிடு" என்று கூறிவிட்டு செல்வது இருக்கிறதே அது சாவை விட கொடுமையானதாக மாறிவிடுகின்றதே அதற்கு காரணம் உங்களுக்கு என்வென்று தெரியுமா? எனக்குத் தெரியும். அதன் பெறுமதி அளவிடமுடியாது. இந்த நியாத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் அந்த பொருளுக்கு நாம் மதிப்பளிக்கிறோமா? இல்லையா? என்பது இரண்டாவது விடயம். ஆனால் அந்த உழைப்புக்கு நாம் பெரிதும் மதிப்பளிக்க வேண்டியிருக்கிறதே!  

ஒன்றை மட்டும் உறுதியாக கூறிவிடுகிறேன். காதலுக்கு அடிப்படையாக எதவும் இருந்துவிடக் கூடாது. அழகைப் பார்த்து வருகிற காதல் அழகு இல்லாத போது அதுவும் கூடவே இல்லாமல் போய்விடுகிறது. அறிவைப் பார்த்து வருகின்ற காதல் அந்த அறிவின் அளவோடு நின்றுவிடுகிறது. அல்லது அறிவு பெருகுகின்ற போது தானும் பிரச்சினையிலும், சச்சரவுகளிலும் மாட்டிக்கொள்கிறது. பட்டங்களையும், பதவிகளையம் பார்த்து வருகிற காதல் அத்தோடு மடிந்துவிடுகிறது. பணத்தையும், செல்வத்தையும் எதிர்பார்த்து வருகிற காதல் அவை முடிந்தவுடன் தானும் எங்கோ சென்றுவிடுகிறது. குடும்பம் கோத்திரம் பார்த்து வருகிற காதல் அவை குலைந்தவுடன் தானும் அழிந்துவிடுகிறது. ஆனால் இவை எதனையும் எதிர்பார்க்காது வருகிறதே காதல் அது ஒன்று மட்டும்தான் நாள் முழுக்க அழியாது இருக்கும். இதனை நான் உண்மையில் அனுபவித்துத்தான் கூறுகிறேன்.

எல்லா காதலும் சந்தோசமாகத்தான் ஆரம்பிக்கின்றன. காதலுக்கு எதிரி காதலிக்கின்ற இருவருடைய மனசும்தான். பிரச்சினை என்னவென்று புரிந்து கொள்ளாமல் நூறு வருடம் வாழ்வதை விட பிரச்சினை என்னவென்று புரிந்துகொண்டு வாழ்கின்ற ஒரு நாள் இருக்கின்றதே அது ஆயிரம் வருடங்கள் வாழ்ந்ததற்கு சமமானது. வேதனை என்னவென்றால் பிரச்சினை என்னவென்று புரிந்து கொள்ளாது பிரிந்து செல்கின்ற நிலமை இருக்கிறதே அதற்கு நாம் காதல் என்றுதான் கூறிக்கொள்கிறோம். இது வெட்கக் கேடானது. இது கோழைத்தனமானவர்கள் தமது நலனுக்காக காதலை திருவுபடுத்திக் கொண்ட விடயம். காதலித்து திருமணம் ஆனவர்களுக்கு இந்த காதல் எப்போதும் நினைவுக்கு வருகின்ற சந்தோசம். ஆனால் காதலித்து பிரிந்து போகிறார்களே அவர்களுக்கு காதல் எப்போதும் நிலைத்திருக்கும் வலி. மன்னிக்கவும் முடியாது... மறக்கவும் முடியாது.

இதோ பார்,
எனது நாட் குறிப்புக்கள் இதோ இருக்கிறது.
நீ வரும் முன்பதாக
எல்லா நாட்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் உருண்டோடின.
பின்பு ஒவ்வாரு நாட்களும் அதிசயிக்கும்படி மாறின.
ஓவ்வொரு நாட்களும் ஏதோ புதிதாய் எனக்கு கூறிற்று.
அருமையான நினைவுகளை அள்ளித் தந்தன.
அனுபவிக்கவும் ஆனந்தமாய் இருந்தன.
சில சம்பவங்களை நான் கோப முகத்தோடுதான் எழுத முடிந்தது,
பல விசயங்களை மகிழ்ச்சியோடு எழுதத் தொடங்கினேன்.
ஆனால் வசனங்கள் யாவும் உனைப் பற்றியதுதான்.
ஏனெனில், ஒரு நாளின் கடைசி நினைவாகவும், மறுநாளின் ஆரம்பமாகவும் இருப்பதும் நீதான்.
இப்போது நான்தான் உன்னோடு இல்லையே!
இவற்றை வாசி.   

உன்னுடன் காதல் பெருகுமெனில் கூடவே அழகும் பெருகும். இந்த காதல், நேசம் என்பதெல்லாம் உயிரின் அழகுதான். உன்னுடைய உயிர் எதனை செய்கிறதோ, எதனை கட்டளையிடுகிறதோ அவற்றைத்தான் இந்தக் காதலும் புரிகிறது. ஆக எல்லா கருமங்களையும் காதலித்து புரிவதில் சுகமிருக்கிறது.

ஒருவன் ஒருத்தி மீது காதல் கொள்வது அவள் ஆவலை கிளறச் செய்கிற அல்லது அப்படியான ஒரு மின்னூட்டத்திற்கு துணையாய் இருந்துவிடுவாள் என்பதற்காக அல்ல. ஆனால் எவள் ஒருத்தியின் துணையால் அவன் சோம்பேறித்தனத்தையும், மென்மையையும் உணர்கிறானோ அதன் காரணமாகத்தான்.

எல்லா காதலும் மாற்றம் பெறுகிறது, பரிணமிக்கிறது. ஆனால் நீ எல்லா நேரத்திலும் முழு மனத்தோடு காதலிக்கிறாயா என்பதுதான் எனக்கு புரியாத விடயம்.

முதிர்ச்சியடையாத காதல் கூறுகிறது: "நான் உன்னைக் காதலிக்கிறேன், காரணம் நீ எனக்கு வேண்டும்". முதிர்ந்த காதல் கூறுகிறது: "நீ எனக்கு வேண்டும், காரணம் நான் உன்னைக் காதலிக்கிறேன". இது எதுவுமே எனக்கு தெரியாது அதனை அளவிடவும் என்னிடம் கருவி ஏதுமில்லை. ஆனால் நீ எனக்கு வேண்டும்.

காதல் எப்போது ஆரம்பிக்கிறது என்பதை அறிந்து கொள்வது கடினமானது. மிகவும் கடினமானது காதல் அரம்பித்திருக்கிறதா என அறிந்து கொள்வதுதான்.
காதலிக்காமல் இருப்பது என்னவோ சிலருக்கு குறையாகத் தோன்றும். பெருங் குறை காதலிக்க முடியாமல் இருப்பதுதான்.

நான் அவளை ஏன் காதலித்தேன் என நீங்கள் கேட்டால் அதற்கு பதில் இதனைத் தவிர வேறொன்றும் கிடையாது. காதலுக்கு காரணம், அவள் அவளாக இருந்தாள். நான் நானாக இருந்தேன்.  நீர் அதிக நேசத்திற்கு ஆட்பட வேண்டுமெனில், இயல்பாக இருப்பது முக்கியம். அதைவிட முக்கியம் நீ நேசிக்கப்பட கூடியதாக இருக்க வேண்டும்.

முதலில் காதல் என்பது பைத்தியமாக அல்லது மடத்தனமாகத்தான் தெரியும். ஆனால் ஒருவருக்கு செயலூக்கமும், உந்துதலும் அங்குதான் நிறையவே கிடைக்கின்றன.  இவை வாழ்தலுக்கு இன்றிமையாதவை. காதல், நேசம் என்பன வாழ்வில் அவசியமானவை. அவற்றை அனுபவித்தே ஆகவேண்டும் என்கின்ற அவலும் உனக்குள் எழலாம். அப்போது காதல், நேசம் இவையே வாழ்வாக மாறும். நீ காதலை இழப்பாயானால், வாழ்வை இழந்தவன் போலாவாய்.

எனக்கு காதலும் போரும் ஒன்றுதான். இலகுவாக ஆரம்பித்துவிடலாம். காரணம் எதுவும் தேவையுமில்லை, இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. ஆனால் நிறுத்துவது என்பது மிகவும் கடினமாக தெரிகிறது.

மடத்தனங்கள் இல்லாத காதலை காதல் என்று வர்ணிப்பது முறையல்ல. காதலில் மடத்தனங்கள் இல்லாத போது அது காதல் என்ற வட்டத்தினுள் நோக்கப்படுவதும் கிடையாது. அதேவேளை மடத்தனங்கள் நிறைந்தவற்றை காதல் என்றும் கருதிக்கொள்ள முடிவதில்லை. இவைதான் இந்த நேசத்தின் பின்னால் மறைந்து கிடக்கின்றன. அவை மகிழ்ச்சி கரமானது. அறிவினை அதிசயிக்க செய்கின்றது. இதுதான் தன்னைப் பற்றி அதிகம் சிந்திக்க வைக்கின்றது.

காதலுக்க காரணம் தேவையில்லை. ஒருத்தர் காதலிக்கப்படுகிறார் காரணம் ஒருத்தர் காதிலிக்கப்படுகிறார்.

நட்பு என்பது அனுதாபத்தினால் உருவாக்கப்டுகிறது. ஆனால், காதலில் அவ்வப்போது கோபமும் அல்லது அதிக விருப்பினால் எழும் முரண் நிலையும் ஏற்படுகிறது. ஒருவரைப் போல் மற்றொருவர் இருக்க வேண்டும் என்பதற்காக கடும் போராட்டமே நிகழும். இறுதியில் இருவரும் புதிதாக ஒன்றை ஏற்படுத்திக் கொள்வர்.

காதல் என்பது இரு வகையானது. ஓன்று 'கட்டாயப்படுத்துவது'. மற்றொன்று 'கட்டுப்படுவது'. எனக்கு தெரிந்த வரையில் இந்த இரண்டிற்கும் இடையில் சிறு வேறுபாடுதான் இருக்கிறது. ஒருவருக்கு எது பிடிக்கின்றதோ அது மற்றவருக்கு விருப்பமின்றி இருப்பதுதான்.

இதனை உனக்கு கூறும் போதுதான் எனக்கு அண்ணை தெரேசா கூறிய வார்த்தை ஒன்று நினைவுக்கு வருகிறது. அதையும் எனது நாட்குறிப்பில் பதிந்திருக்கிறோன் நன்றாக பார். "உணவுக்காக ஏற்படும் பசியினை போக்குவதிலும் பார்க்க காதல் மீது ஏற்படும் பசி இருக்கிறதே அது இலகுவில் போக்க முடியாதது". நீ புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன்.

'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று நீ கூறுவதற்கு முதலில் "நான்" என்று கூறுவதற்கு இயலுமாக இருக்க வேண்டும். அப்படி உன்னால் முடியாதென்றால் "நான்" என்பதை கூற இயலுமாகும் வரை காத்திருப்பது அவசியம். இதனை "உனக்காக" மாற்றிக்கொள்வது "எனக்காக" உள்ளவர்களை அதிருப்தியடையச் செய்துவிடும் என்பதனை நீ ஏன் உணர மறுக்கிறாய்.

பேர்டன் ரசல் கூறினார் "காதல் பயம் உள்ளவர்களுக்கு உயிர் பயம் உள்ளது. வாழ்வைப்பற்றி எவர் பயப்படுகிறாரோ அவரின் மூன்று பங்கு ஏற்கனவே இறந்துவிட்டன." நான் 'வாழவேண்டுமே'  என்று அஞ்சுகிறேன். நீ வாழ்வை பற்றி அஞ்சுகிறாய்.   

காதல் என்பது பேய் பிசாசை போன்றதுதான். அதனைப் பற்றி பேசிக்கொள்பவர்கள் மிக அதிகம். கண்டவர்கள் மிக குறை. இது எல்லோருக்கும் பொதுவான ஒன்று.

நாம் காதலிக்கிறோம் என்றால் அசாத்தியமானவற்றை நம்ப வேண்டும். காதல் என்பது அப்படித்தான் அதற்கு சாத்தியமாகின்றவற்றிலும் பார்க்க அசாத்தியமானவற்றில் ஈடுபாடு அதிகம். நீயும் நானும் அப்படித்தான். நீ அசாத்தியமானது என கூறுபவற்றை நான் நம்புகிறேன். நான் சாத்தியம் என்று கூறவனவற்றை நீயோ அசாத்தியம் என்று ஒதுக்குகிறாய். ஆனால் காதலுக்கு இரண்டும் ஒன்றுதான்.   

நீ காதலில் முழ்கியிருக்கிற போது உன்னைச் சுற்றியதாக ஊடுருவும் ஒளியும், குணங்களும், பண்புகளும் உமக்கு கிடைப்பது நீங்கள் இருவரும் சந்திக்கின்ற போது எழுகின்ற ஒரு வகை விளைவு என்பதனை நீ ஒரு போதும் அறிவது கிடையாது.

எங்கு காதல் உன்னதமாக பயணிக்கிறதோ அங்கு எப்போதும் வாழ்த்துக்கள் நிறையவே இருக்கும் என்பதனை நீ புரிந்துகொள்ள வேண்டும். நானும் வாழ்த்துக்களை அதிகம் விரும்புகிறேன்! எனக்கு தெரியும் உன்னுடைய விருப்பமும் அதுதான்.

நீங்கள் கேட்கலாம் இவ்வளவு கூறுகிறாயே அது எப்படி என்று. நான் பரீட்சையில் பார்த்து எழுதியது  கிடையாது.   

கழுகின் கதை

இது கழுகின் கதையா இல்லை, கழுகுக் கதையா என்று நீங்கள் நினைக்க வேண்டாம். கழுகைப் பற்றி சொன்னால் என்ன, இல்லை இந்த கழுதையைப் பற்றி சொன்னால்தான் என்ன? அழகாய் இருந்தால் அல்லது இரசிப்பதாக இருந்தால் ஏற்றுக்கொள்வதுதானே என்றெல்லாம் உங்களைப்போன்று என்னால் திருப்பதிப்பட முடியாது. எமது வாழ்வில் அல்லது இந்த உலகில் எமக்கு கிடைக்கப் பெறுகின்ற விடயங்கள் அனைத்தும் எத்தனை இன்பமாக அல்லது இரசனைக்கு விருந்தாக இருந்தாலும் அதனை எம் அறிவுடன் அனுபவத்துடன் பொருத்திப் பார்க்க நேர்கிற போதுதான் நிஜத்தில் இன்பம் பிறக்கிறது. நீங்களும் பரீட்சித்துப் பார்க்கலாம். ஏதாவது இருந்தால்...!


இப்படித்தான் ஒரு செய்தி இன்று காலை எனக்கு கிடைத்தது. அனுப்பியவர்கள் மிகவும் அரிதானவர்கள் அனுப்பும் செய்தியும் வழமை போன்று பொருத்தமாகத்தான் இருந்தது. உலகத்துக்கு ஏற்ற சொற்றொடர்கள் ஆனால் எனக்கென்னவோ திருப்பதியாக படவில்லை. முதலில் வந்த செய்தி என்ன என்று பார்த்துவிடலாம்;. வந்த செய்தி என்ன? என்பதனைவிட அது சொல்ல வந்த விடயம் என்ன என்பதுதான் அதி முக்கியமானது. ஆனால் அனுப்பியவர்களை விட அனுப்பப்பட்டவர்கள் பாவம். ஏனெனில் எமக்கு வந்த செய்தி தெரியும் என்றாலும், அது சொல்ல வந்த செய்தி என்ன என்று புரிவது கடினம். இப்படி நான் சொல்ல வந்த செய்திதான் என்ன என்று நீங்கள் கேட்கலாம். 'அது ஒரு கழுதையின் கதை...' ஐயோ மன்னித்துவிடுங்கள் எழுத்தில் பிழை ஏற்பட்டுவிட்டது. 'அது ஒரு கழுகின் கதை...' மீண்டும் குழப்பம். இங்கு ஏற்பட்டது எழுத்துப் பிழையா? இல்லை எழுத்தில் பிழையா? என்று நீங்கள்தான் தீர்க்க வேண்டும்.

பறவைகளுள் கழுகிற்கு ஆயுட்காலம் மிக கெட்டியானது.
அதனால் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்த உலகத்தில் சீவிக்க இயலும்.
ஆனாலும், இந்த வயதை அடைந்து கொள்ள அது கடும் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டியிருக்கிறது.

அதன் 40வது வயதில், இரை பிடுங்க உசிதமாக இருக்கும் கூரிய நகங்கள் சிதையத் தொடங்குகின்றன. அதன் நீண்ட கூரிய அலகுகள் வளைய ஆரம்பிக்கிறது.

அதன் அடர்த்தியான இறகுகள் சேர்ந்து அதன் கிழட்டு இறக்கைகளின் பாரத்தினை அதிகரிக்கிறது. இதனால் அவை நெஞ்சுப் பகுதியுடன் முட்டுண்டு பறப்பதனை கடினமானதாக்கிவிடுகிறது.

இதன்போது கழுகிற்கு இரண்டு தேர்வுகள்தான் எஞ்சியிருக்கிறது: ஒன்றில் இறக்க வேண்டும் அல்லது கடுமையான வலியுடன் கூடிய மாற்றத்தினை நோக்கிய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அதுவும் 150 நாட்களுக்கு அந்த வலி தவிர்க்க முடியாதது.

இந்த வலியுடன் கூடிய அந்த மாற்றத்தினை கழுகு ஆரம்பிப்பது மலை உச்சியில் இருக்கும் அதன் கூட்டில் இருந்துதான். அங்கு அதன் வளைந்த அலகு ஒடிந்துவிடும் வரை அலகினை மலைப்பாறையுடன் சிராய்க்கிறது.

அப்படி அலகினை சிராய்த்த பின்பு, அதன் அலகு மீண்டும் புதிதாய் வளரும் வரை அது காத்திருக்கிறது. பின்னர், அதன் கூரிய நகங்களை பிடுங்க ஆரம்பிக்கிறது.

அதற்கு கூரிய புதிய நகங்கள் முளைத்த பின்பு, கழுகு அதன் வயதுமுதிர்ந்த அதன் இறகுகளை பிடுங்க ஆரம்பிக்கிறது.

5 மாதங்கள் கடந்த பின், கழுகு தனக்கே உரித்தான வகையில் மீண்டும் பறப்பதற்கு சக்தி பெற்றுவிடுவதுடன் வாழவும் ஆரம்பிக்கிறது... மேலும் 30 வருடங்கள்.

இப்படியான மாற்றமொன்று எதற்காக?

நாம் பிழைத்து வாழ்வதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் மாற்றம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

பல வேளைகளில் நாம் எமது பழைய ஞாபகங்களையும், பழக்க வழக்கங்களையும், இன்னோரன்ன நடைமுறைகளையும் அழித்துவிட வேண்டிய தேவை ஏற்படுகின்றது. 

கடந்த கால துயரங்களில் இருந்து விடுதலை பெற்றால் மாத்திரமே, நாம் நிகழ்காலத்தின் உன்னதம் மிக்க நலன்களை அனுபவித்துக்கொள்ள முடியும்.

எமக்கு என்ன நடக்கிறது என்பதனால் எமது வாழ்வு தீர்மானிக்கப்படுவது கிடையாது. மாறாக எது நடந்தாலும் அதற்கு நாம் என்ன செய்வோம் என்பதில்தான் அது தீர்மானிக்கப்படுகிறது. வாழ்வு எமக்கு எதனைக் உணர்த்துகிறது என்பதனைவிட எமது அணுகுமுறைகளால் வாழ்க்கைக்கு நாம் எதனை கொண்டுவருகிறோம் என்பதுதான் முக்கியமானது.

ஒரு நேர்மறையான அணுகுமுறையானது நேர்மறை எண்ணங்கள், நிகழ்வுகள், மற்றும் விளைவுள் முதலியனவுக்கான சங்கிலி எதிர்வினையினை தோற்றுவிக்கிறது.   
 இது ஒரு வினையூக்கி. அசாதாரண விளைவுகளை பெற்றுத்தருகின்ற ஒரு தீப்பொறி.
ஒரு மாற்றத்தினை உண்டு பண்ண உதவுகிறது.

இவைதான் அது சொன்ன செய்தி. அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது என்றாலும் நான் முடிந்தவரை இங்கு தமிழ்படுத்தி தந்திருக்கிறேன். விடயத்துக்குள் நுளைவோம்.

கூற்றுக்கள் யாவும் மாற்றம் குறித்த கருத்துக்களையே தெரிவிக்கின்றன. முதலில் 'மாற்றம்' என்றால் என்ன? இன்று இந்த மாற்றம் என்ற ஒன்றிற்குள்தானே எல்லோரும் மயங்கிக் கிடக்கிறார்கள். அது உண்மையில் இன்று ஒரு போகப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது என்பது எனது கருத்து. இது மாற்றத்திற்கு ஒரு மாற்றமாகவும் மனித உலகுக்கு உருமாற்றமாகவும் அமைந்துவிடுகிறது. அது சரி 'மாற்றம்' என்றால் என்ன? எங்கிருந்து நாம் அதனை எதிர்பார்க்கிறோம். சாத்தியமானதை விடுத்து அசாத்தியமாக சிந்திப்பதுதானே மனிதனின் வேலை அதனால்.

மாற்றம் என்பது அவசியமானதுதான். அது மனிதனுக்கும் இந்த மனித உலகுக்கும் எப்போதும் தேவையான ஒன்றுதான். அப்படியென்றால் அது எத்தகைய மாற்றம். அல்லது இப்படி நாம் பேசுகின்ற மாற்றம் என்பது எது? இந்த உலகம் வீணானதல்ல, உலகத்தில் வாழ்கின்ற யாவும், அல்லது இப்பபிரபஞ்சமே ஒரு முனைப்போடுதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் என்பது ஒரு மாற்றம்தான். அதனை வேறுவடிவில் விளக்கப்போனால், இயல்பாகவே உலகம் மாற்றம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. யார் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி அது மாறும், மாறிக்கொண்டே இருக்கும். அது இறைவனின் இரகசியம். இந்த உலகம் தோன்றிய நோக்கம் எதுவோ அந்நோக்கினை ஈட்டுதற்கு தேவையான விடயங்கள் இருக்கின்றன. அவை காலத்திற்கும், நேரத்திற்கும் ஏற்ப மாற்றம் பெற்றுத்தான் வருகின்றன. அப்படி மாற்றம் ஏற்படாவிட்டால் அங்கு உலகம் என்பதற்குள் நாம் அர்த்தங்களை அல்லது யதார்த்த நிகழ்வுகளை கண்டு கொள்ள முடியாது. எல்லாம் நாம் கண்ட, அனுபவித்த அல்லது அறிந்த விடயங்களாகவே இருக்கும். மொத்தத்தில் எமக்கு தெரியாத எதுவும் இருக்க முடியாது. இவ்வாறான ஒரு மாற்றம் நிகழ்ந்து வருவதனால்தான் உலகம் என்பது முன்னோக்கிச் செல்கின்றது. அல்லாவிடில், அது அப்படியே இருந்திருக்க வேண்டும், அல்லது முன்பே அழிந்திருக்க வேண்டும். இதுதான் உண்மையில் மாற்றம் என்று எம்மத்தியில் நிகழ்வது. இந்த மாற்றம் ஒன்றுக்கு மாத்திரம்தான் அர்த்தபுஷ்டி இருக்கிறது. அது மிகவும் இயல்பானது, யாராலும், எதனாலும் தடுக்க முடியாதது, மாற்றவும் முடியாதது. இறைவனும் அதனை தற்போதைக்கு, இந்த நொடிவரை மாற்ற விரும்பியது கிடையாது. என்னடா இறைவனுடன் விருந்து சாப்பிட்டவர் போன்று பேசுகிறானே என்று நீங்கள் முனுமுனுப்பது எனக்கு கேட்கிறது. ஒருத்தரிடமும் கூறிவிடாதீர்கள். பின்பு நீங்கள் சுவர்க்கம் செல்ல நான்தான் பரிந்துரை செய்யவேண்டியிருக்கும். அவ்வாறு கூறியது ஏனென்றால், இந்த நொடிப் பொழுது வரை உலகம் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. நீங்களும் நானும் எதையாவது புதிதாக செய்துகொண்டுதான் இருக்கிறோம். இந்த இயல்பான மாற்றத்தினைப் பற்றி நாம் ஒருபோதும் பேசுவதோ அல்லது கவலைப்படுவதோ கிடையாது. ஏனெனில் அது நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதனை நாம் எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறோம்.

அப்படியென்றால், நாம் பொதுவில்; பேசுகின்ற 'மாற்றம்' என்பது எதனை? எதற்காக நாம் அது குறித்து பேசுகின்றோம்? உண்மையில் இரண்டாவது கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை. ஏனெனில் இந்த மாற்றம் குறித்த நம்பிக்கையோ, இதன் மீதான அர்தத்தினையோ என்னால் இன்னும் கண்டுகொள்ள முடியவில்லை.

நாம் பொதுவில் பேசுகின்ற மாற்றம் என்பது முற்று முழுதாக தம்முள் நடந்தேறுவது. அதாவது நாம் முன்பு பார்த்தோமே இயல்பில் அல்லது இயற்கையாக நடந்தேறுகின்ற மாற்றம் என்று. அதனைவிடுத்தும் வேறானது. அது ஒரு மனிதன் தனது சூழலுக்குள் ஏற்படுத்த முனைகின்ற விடயமாக நான் கருதுகின்றேன். அல்லது இவ்வாறும் கூறலாம். அதாவது, மனித சூழலுக்குள் மனிதன் ஏற்படுத்திக்கொள்ள போராடுகின்ற மாற்றம். இம்மாற்றத்திற்கு காரணமாகவும், காரியமாகவும் இருப்பது மனிதன்தான் என்பதனை நீங்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் ஆரம்பத்தில் நான் விளக்கிய உலகில் ஏற்படுகின்ற இயல்பான மாற்றத்தில் காரணம், காரியம் என்பன இறைவன் மற்றும் உலகம் என்பதாகும். விளங்காவிட்டால் இப்படி எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் கூறிய இயல்பான மாற்றம் என்பது கடவுளால் உலகில் ஏற்படுத்தப்படுகின்றது. இரண்டாவது வகை மனிதனால் அவனுக்குள் ஏற்படுத்த நினைக்கின்ற மாற்றும் முயற்சி. இப்பொழுது மனிதன் கடவுளாக விரும்புகிறானா? என்ற கேள்வியும் எனக்குள் தோன்றலாம். ஏனெனில் இறைவனை மீறி அவனால் தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறானே! அல்லது மனிதன் கடவுளை மறந்திருக்க வேண்டும். இது நியாயம்தானே...! இன்றெல்லாம் நியாயாம் எது என்பது பற்றி நாம் முடிவு எடுக்க முடிவது கிடையாது. அது யாரோ வேறொருவர்தான் கூறவேண்டும் என்று நாம் ஆக்கி வைத்திருக்கின்றோம்.

மனிதன் என்பவன் தனித்தன்மை வாய்ந்தவன். அவனுடைய எண்ணங்களும், அபிலாசைகளும் முற்றிலும் வேறுபட்டன.  ஏனைய படைப்பினங்கள் யாவும் அவனைவிடுத்தும் வேறானவை. வேறுபிரித்து அறிய முடிவன. அவனுக்குள் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களும் உணர்வுகளும் புதிது புதிதாய் தோன்றுவதனால் இந்த உலகில் ஏனைய ஜீவராசிகளைப் போன்று அவனால் வாழ்ந்துவிட முடியாது. அது சுலபமான காரியமும் அல்ல. அவனுடைய வாழ்க்கையின் ஒவ்வவொரு அசைவுகளும் அவனுக்குள் இருக்கும் இரகசியங்களையும் வெளிக்கொணர்வதாகத்தான் அமைகின்றன. அவனுக்கென்று குணநலன்களும் பண்புகளும் உண்டு. அவை அவனுடைய வாழ்வியல் செயற்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன. இவ்வாறு வாழ்கின்ற மனிதன்தான் 'மாற்றம்' தேவை என்கின்றான்.

காரணம், அவனுக்கு மாற்றம் தேவைப்படுகிறது. ஏனெனில் அவனுடைய வாழ்வில் துன்ப துயரங்களை அனுபவிக்கும் போதும், வேண்டாத ஒன்று நேருகின்ற போதும், வேண்டுகின்ற ஒன்று அவனுடைய சக்கதிக்கு அப்பால் என்று கற்பனை பண்ணுகிற போதும், அல்லது மேலும் மேலும் ஏதாவது ஒரு காரியத்தினை அல்லது வேறு ஏதாவதினை எதிர்பார்த்து காத்திருக்கின்ற போதும், காத்திருந்து காத்திருந்து களைத்துவிடுகின்ற நிலையின்போதும் அவன் தன்னைத் தானே திருப்பதிப்படுத்திக் கொள்ள ஏதாவது பொறிமுறை ஒன்று தேவைப்டுகின்றது. இதற்கான பொறிமுறை ஒன்றாக மனிதன் கண்டுபிடித்ததுதான் இந்த 'மாற்றம்' என்ற ஒன்று. இது அவனுடைய வாழ்வில் வெறும் போலியாக சித்தரிக்கப்பட்ட ஒன்று என்பதனை அவன் எந்தவொரு கனமும் சிந்திக்க முயற்சித்தது கிடையாது. அதற்கு அவனால் நியாயமும் கற்பிக்கப்படுகின்றது. அதாவது, பொறிமுறை பொய்யாக இருந்தாலும், போலியானது என்றாலும் அதனால் அணுகூலம் இருப்பதாக கூறிக்கொள்கிறான்.

'மாற்றம்' என்பது வெறும் போலியானது என்தனால் அதனால் நாம் நன்மை என்று கூறிக்கொள்கின்றதும் போலியானது என்பதனை மறந்துவிடுகின்றான். ஓன்றினை அடையும் வழி பிழையானதாக இருப்பின் அடையப்பட்ட பொருளும் பிழையாகத்தான் இருக்கும் என்பது தெளிவு. பிற்காலத்தில் இந்த நன்மை என்று கருதிய விடயத்திற்கே அவன் மாற்றத்தினை வேண்டி நிற்பான் என்பது உறுதி. அதனால்தான் மனிதன் தான் வாழும் வரையும் மாற்றம் தேவை என்றுதான் கூறிக்கொண்டிருப்பான் என்பதனை உறுதிப்பட நான் கூறமுடியும். ஆனால் அவன் வேண்டுவது உலகில் நேருகின்ற இயல்பான மாற்றத்தை அல்ல என்பதுதான் இங்கே இருக்கின்ற சிக்கல். மாற்றத்தினை உண்டுபண்ணுவது ஒரு பொருட்டல்ல. அதனை எத்தனை காலம் அழியாது பாதுகாத்துக்கொள்ள முடியும் அல்லது அதன் பயன் எவ்வளவு என்பதில்தான் பிரச்சினையே இருக்கின்றது. மாற்றத்திற்கு ஒரு மறுமாற்றம் தேவைப்படுமாயின் அம்மாற்றத்தினால் எந்தப் பயனும் கிடையாது. கூடவே அதனை ஒரு பொருளுணர்ந்த மாற்றமாகவும் கொள்ள முடியாதல்லவா.

நாம் வாழும் வரை 'மாற்றம்' தேவை என்று கூறுவோமானால் அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு வாழ்வில் மாற்றம் தேவை என்று கூறுவோமானால் அது வாழத்தெரியாதவனின் கோரிக்கை என்பதுததான் என்னுடைய கருத்து. வாழ்வினை பற்றி திருப்திப்பட்டுக்கொள்ள முடியாத ஒருவருக்கே இப்படி ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. வாழ்வினை இரசித்து வாழக்கற்றுக் கொண்டவனுக்கு மாற்றம் என்பது உலக வாழ்வில் இயல்பாக கிடைக்கின்றதே அது போதும். அவனுக்கு துன்பம் இன்பம் என்ற இரண்டு வேறுபட்ட அனுபவங்கள் கிடையாது. அவனுக்கு எப்போதும் நேர்ப் பொருளே தென்படும். அப்படியென்றால் அவனுக்கு இன்பம் மட்டும்தான் தெரிந்திருக்கும். துன்பம் என்ற ஒன்று அவனுடைய அகராதியிலும் கிடைக்காது. மாறாக, மனிதன் இலகுவில் திருப்பதிப்படாத அல்லது திருப்திப்படுத்த இயலாத பிறவி என்பதனால் அவனுக்கு எப்போதும் மாற்றம் பற்றிய எண்ணம் தொண்டைக் குழியில்தான் இருக்கும்.

சற்று சிந்தித்து பாருங்கள். இல்லாதவனுக்கு ஒன்றைப் பற்றிய கவவலையிருக்கும். அதே வேளை, இருப்பவனுக்கு இன்னும் ஒன்றை எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்கின்ற கவலை. அப்படிப்பெற்றுக் கொண்டாலும், அடுத்து மற்றொன்றினை பெற வழி என்ன என்ற கவலை. இப்படித்தான் மனித குணம். இதனால்தான் இத்தகைய மாற்றம் என்பது மனிதனை எப்போதும் திருப்திப்படுத்தாது. இன்னுமொன்று எனக்கு நினைவுக்கு வருகின்றது. இருட்டில் தொலைத்ததை வெளிச்சத்தில் தேடுவது முட்டாள்தனம். அதேபோன்றுதான், நாம் எல்லோரும் மாற்றத்தினை வேறு எங்கோ தேடிக்கொண்டிருக்கிறோம். அது தொலைந்த இடம் நாமாகத்தானே இருக்கிறாம் என்பதனை உணர்ந்து நடந்தவர்கள் எம்மில் மிகவும் அரிதானவர்கள். எம்மவர்கள் யாவரும் அறிந்தோ அறியாமலோ மாற்றம் பற்றித்தான் எப்போதும் சிலாகிக்கின்றோமே தவிர அது எங்கிருந்து வரவேண்டும் என்று சிறிது கற்பனை கூட பண்ணுவது கிடையாது. அது உண்மையில் நாம் கற்பனை பண்ணுவது போன்றுதான் நிகழவேண்டுமா என்றெல்லாம் சிறிதளவும் சிந்தித்து பார்ப்பது கிடையாது.

நேற்று நண்பகல் ஒரு மணியிருக்கும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று கொண்டிருந்தேன். சமிக்கை விளக்கினை பின்பற்றி சைக்கிளை நிறுத்தி வைத்திருந்த நான் அனுமதி கிடைத்ததும் மீண்டும் புறப்பட்ட போது தவறுதலாக என் முன்னால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த ஒருவர் என்னுள் சிக்குண்ணப் பார்த்தார். இதன் போது ஹேய்....என்று நான் சற்று குரல் கொடுத்ததுடன் சற்று விலத்தி எனது மோட்டார் சைக்கிளை ஓட்ட முயற்சித்தேன். இதன் போது துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் தனது பாதையினை விலத்திக் கொண்டு என்னைப் பார்த்து "சோறி...அண்ணன்" என்ற போது நானும் "பரவாயில்லை" என்று கூறி எனது கையினால் சமிக்கை காட்டியபோது ஏற்பட்ட திருப்தி என்பது உண்மையில் உள்ளுர மகிழ்ச்சியால் அளவிட முடியாதது.

இப்படி எத்தனையோ விடயங்களில் நாம் எம்மை மறந்துவிடுகின்றோம். மேலும் எத்தனையோ விடயங்கள் எம் வாழ்வில் என்றும் மறக்க இயலாதவையாக குவிந்து கிடக்கின்றன. என்றாலும் எமது கோசங்களும் கருத்துக்களுக்கும் எப்போதும் பஞ்சம் நிலவியதே கிடையாது. எங்கு பார்த்தாலும் மாற்றத்திற்கான குரல்கள்தான் ஒலிக்கின்றன. இங்கு நாம் இதனை நாம் மறக்க கூடாது, இவற்றை நாம் மறந்துவிட வேண்டும் என்று எதனையும் செய்வதும் கிடையாது. அத்தகைய முடிவுகளை எடுத்து நாம் செயற்படுவதும் கிடையவே கிடையாது. இயல்பாகவே எவற்றை மறந்துவிட வேண்டும், எவை மறக்க முடியாதது என்று எமக்கிருக்கின்ற சிறப்பியல்புகள்தான் முடிவெடுக்கின்றன. இத்தீர்மானத்தினை மேற்கொள்ளவென எமக்குள் இருக்கின்ற சிறப்பான இயல்பு என்தனால் அது நபருக்கு நபர் வேறுபடுகின்றதனை நாம் அவதானிக்கலாம். இவற்றில் ஒருவர் மாற்றத்தினை வேண்டுவாராயின் அது அவருக்கிருக்கின்ற சிறப்பியல்பில் மாற்றத்தினை வேண்டுவதாக அமைந்துவிடுகிறது. மறுவாறாக கூறினால், அந்நபர் தனக்கிருக்கின்ற அத்தகைய சிறப்பியல்பில் குறைதகுதி காண்கிறார் என்பதுதான் அர்த்தம்.

குறிப்பாக, நேர்ப்பொருளை அனுபவிப்பவர்களோ மாற்றம் குறித்த பேச்சுக்களில் ஈடுபடுவது கிடையாது. மாற்றம் பற்றி அதிகம் சிந்திப்பவர்கள் ஒன்றில் ஏதாவது விடயத்தினால் பாதிக்கப்பட்டவராக இருப்பார்கள். அல்லாது போனால் அத்தகைய மாற்றம் பற்றிய ஆலோசனைகளை வழங்குபவர்களாக இருப்பார்கள். இவ்விருதரப்பினரும் ஒரே குழுவின் இரு பங்குதாரர்களாவர். இவ்விரு அங்கத்தவர்களும் நேர்ப்பொருளை பார்ப்பதனை விடுத்தும் நேர்எதிர் கருத்துக்களின் பால் அதிகம் கவனம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் அர்த்தம். ஒரு பழமொழி சொல்வார்கள் தெரியுமா? "உப்பைத் திண்டவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்". இன்னுமொன்று இருக்கிறது கூடவே சிந்தியுங்கள். "வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்". அவரவர் ஈட்டிய வினைகள் அவர்களுடைய கருமங்களின் விளைவு என்பதனை நாம் மனத்தில் நிறுத்திக்கொண்டுதான் செயற்பட வேண்டியிருக்கிறது.

ஒருவர் தான் செய்த செயல் வெற்றி பெறவில்லை என்பதற்காக கவலைப்படுகிறான் எனில் அது யாராலும் தவிர்க்க முடியாத ஒன்று. அதனை யாராலும் மாற்றவும் முடியாது. ஏனெனில் அது புரியப்பட்ட காலம் என்பது கடந்து சென்ற ஒன்று. நாம் நினைக்கின்ற போது சில விடயங்கள் நடந்து விடுவது கிடையாது. நாம் நினைக்காத விடயங்களும் பலவேளைகளில் நடந்துவிடுவதும் உண்டு. இதனைத்தான் விதி நாம் கூறுவது. விதியினால் ஏற்பட்ட வலியினை நாம் மாற்ற முயற்சிப்பது என்பது முற்றிலும் முட்டாள்தனம். அதாவது அந்த நபரை அது குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், மகிழ்ச்சியாக இருக்கும் படியும் அறிவறுத்துவோமானால் அது அறிவுக்கு ஒவ்வாத செயல் என்றுதான் நான் கூறுவேன். ஏனெனில் சாவு நடந்த வீட்டிற்கு சென்று புதுவருட வாழ்த்து தெரிவிக்க முடியுமா? இது உங்கள் அறிவுக்கண்களுக்கு அவ்வளவு நியாயமாக படாது என்பது எனது நம்பிக்கை. 
இப்படி ஆறுதல் கூறுவதாக, அறிவுறுத்துவதாக அன்றாடம் எத்தனையோ விடயங்களை, எம்மால் கேட்கவும், பார்க்கவும், வாசிக்கவும் முடிகிறது. அவை எல்லாம் ஏதோ வகையில் மாற்றம் குறித்த வேண்டு கோள்களாகத்தான் இருக்கின்றன.
.
வாழக் கற்றுக்கொள், சாகக் கற்றுக்கொள்ளதே.
புன்னகை என்பது அமைதியின் இருப்பிடம்.
இப்பாதையை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
ஏதிர்காலம் உங்கள் கையில்.
ஆழகு என்பது இதயத்தில் உண்டு.
வேகம் திகிலானது, ஆனால் கொலையும் செய்யும்.
கோபம் என்பது நோயில் ஒரு வகை.
நின்று போன கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டு தடவை நேரம் காட்டும்.
பிறரை அறிந்தவன் கெட்டிக்காரன், தன்னை அறிந்தவன் ஞானி.
வாயைத் திறவாத மீpன்கள் தூண்டிலில் அகப்படுவதில்லை.
பேசிச் சாதிப்பதைவிட நிதானித்து சாதிப்பதுதான் புத்திசாலித்தனம்.
கல்வி என்பது ஒரு பணியோ அல்லது சிக்கலோ அல்ல. அது உலகில் வாழ ஒரு வழி.
துன்பம் வரும்போதுதான் ஒருவனுக்கு தன்னை அடையாளம் தெரிகிறது.
உள்ளே நுளைய முன்பு வெளியே வருவது பற்றி யோசிக்க வேண்டும்.
சேற்றில் புதைந்த யானையை காக்கையும் குட்டும்.
நேரத்தை சேமிக்க கடிகாரத்தை நிறுத்தி வைக்க முடியுமா.
சுத்தமான குடிநீரையே பருகுங்கள்.
நல்லது செய்யுங்கள்.
சூழலைப் பாதுகாப்போம்.


இப்படி எத்தனை வாக்கியங்கள் எம்முன்னால் குவிந்து கிடக்கின்றன. இவை எல்லாம் எம்மை மாற்றம் குறித்துத்தானே வேண்டுகின்றன. இவை யாவும் நாம் கண்டு பிடித்தவைதான். அவை ஒவ்வொன்றிற்கு பின்னாலும் உங்களுக்கு என்ன புரிகிறது. ஊங்களிடம் கேட்டால் நாம் மாறவேண்டும், அல்லது இந்த உலகில் 'மாற்றம்' வர வேண்டும். அது நிகழ்ந்தால்தான் எல்லாம் சரி வரும். இதைத்தானே கூறுவீர்கள். அன்று எனது வீட்டில் இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது. அம்மா எனது தம்பியினை அழைத்து "இங்கே வா, அந்தக் கடையில் மாவு இடிக்க கொடுத்தன். போய் வாங்கிகொண்டு வா" என்று சொன்னார். அவனும் 'உம்" என்று கூறிவிட்டு வரும் வழியில், நான் அவனிடம் எங்கு போகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவன் "மாவு இடிக்க கொடுத்ததாம், அத வாங்க போறன்" என்று கூறினான். எனக்கு ஒரு சந்தேகம். மாவை ஏன் இடிக்க கொடுக்க வேண்டும்?

இத்தகைய வாக்கியங்களின் பின்னால் எமது பலயீனம்தான் எனக்கு தெரிகின்றது. மனிதனாய் வாழும் நாம் எமது பண்புகளை உடனுக்குடன் பிரயோகிப்போமாயின் அல்லது எமது பண்புகள் தமக்கே உரித்தான வகையில் வெளிக்கொணரப்படுகையில் இத்தகைய அறிவுறுத்தல்கள் தேவைப்படுமா? நான் இங்கு கூறுவது மனிதனுக்கென தனித்துவம் இருக்கின்றதே அதனை. ஆக எமக்கு தேவை இந்த மாற்றமல்ல. அதைவிட முக்கியமானவை பல இருக்கின்றன. அவற்றை ஒரே வார்த்தையில் கூறுவதானால் வாழ்வியல் நுணுக்கங்கள் என்று கூறலாம் அவற்றைத்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவை இந்த உலகில் நாம் அனுபவிக்கின்ற அல்லது எமக்கு தென்படுகின்ற எதுவாகவும் இருக்கலாம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அவை மதிக்கப்படல் வேண்டும் என்பதனை நாம் மறந்துவிடமுடியாது. மனிதனாய் இருக்கலாம், மிருகமாய் இருக்கலாம், தாவரமாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். யாவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. இந்த நுண்ணறிவு வினைத்திறனுடன் பயன்படுத்தப்படுகின்ற வேளையில் மாத்திரம்தான் இயல்பான மாற்றத்திற்கு கூட சிறப்பு நேர்கிறது. மற்றெல்லாம் நாம் எம்மை நாமே சொற்ப காலத்திற்கு திருப்திப்டுத்திக்கொள்ள கண்டுபிடித்த வெறும் மாயைகள். 
மாயைகள் எனும் போதுதான் எனக்கு பாரதி கூறிய சில வரிகள் நினைவுக்கு வருகிறது, கேழுங்கள்.

"காலமென்றே ஒரு நினைவும்
காட்சியன்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ! இந்த குணங்களும் பொய்களோ!

காண்பதெல்லாம் மறைவதென்றால்
மறைவதெல்லாம் காண்பதன்றோ
நானும் ஓர் கனவோ! இந்த ஞாலமும் பொய்தானோ!"


மற்றொரு இடத்தில்...

"தோற்றங்கள் மாறிப்போகும்
தோல் நிறம் மாறிப்போகும்
மாற்றங்கள் வந்து மீண்டும் மறுபடியும் மாறிப்போகும்
ஆற்றிலே வெள்ளம் வந்தால் அனுதினமும் மாறிப்போகும்..."


என்று செல்கிறது அந்தக் கவிதை... இந்த உலகம் பற்றியும், நாம் ஜெபிக்கின்ற மாற்றம் குறித்தும் பாரதி கூறிய விதம் மிகவும் அப்பட்டமானது. நீஜத்தில் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டியன. இன்னும் நான் முடிக்கவில்லை. இவை இரண்டிற்கும் பொதுவில் ஒன்று உண்டு. அதுதான் நாம் வாழும் வாழ்க்கை. ஆந்த வழியில்தானே நாம் மாற்றத்தினை தேடுகிறோம். அதனை பற்றியும் ஒரு வித்தியாசமான மனிதர், இந்த உலத்தில் எல்லோராலும் வியந்து கூறப்படுகின் அசகாயமான ஒருத்தரின் ஆக்கத்தில் ஒரு சில பக்கங்களை அன்று என்னால் வாசிக்க முடிந்தது. அதில் சில வசனங்களில் "வாழ்க்கை' என்பது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

"வேறுபட்ட விளைவினை பெற்றுகொள்ளவென ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் செய்வதுதான் மிக மடத்தனமான ஒன்று. உன்னுடைய வாழ்வினை நீ வாழ்ந்து காட்டுவதற்கு இரண்டு வழிகள் மாத்திரம்தான் உண்டு. ஒன்று "அதிசயமாக எதுவும் இல்லை" என்பது மற்றொன்று "எல்லாம் அதிசயமாக உள்ளது" என்பதுதான். வாழ்க்கை என்பது துவிச்சக்கர வண்டியினை செலுத்துவதற்கு ஒப்பானது. நீர் சமநிலையை பேண வேண்டுமெனில் முன்னகர்ந்து செல்ல வேண்டும். சாக்கடை மனிதன் என்றாலும் சரி, சனாதிபதி என்றாலும் சரி நான் அதே வகையில்தான் பேசுகிறேன்." – ஐன்ஸ்டைன்

இப்போதாவது புரிகிறதா?

நல்லவனுக்கு காலமில்லை

இது என்னடா புதுக்கதை என்று நினைக்க வேண்டாம். இது எல்லோரும் கூறுகின்ற பொதுக்கதைதான். இந்த உலக வாழ்வில் பல அம்சங்கள் விதி என்ற நிர்ப்பந்தத்தினால் சூழப்பட்டிருக்கின்றது என்று கூறுவர். அவற்றை நாம் நம் தலைவிதி என்று கூறிக்கொள்கிறோம். இன்னும் பலவற்றை அவ்வாறு நாம் கூறுவதில்லை. ஏனெனில், நாம்தான் அவற்றிற்கு எல்லாம் காரணம் என்று நாமாக சித்தரித்துக்கொள்கின்றோம். ஆனால் சற்று ஆழமாக சிந்தித்தால் அதுவும் ஏதோவொரு நியதிப்படிதான் அல்லது விதிப்படிதான் நடந்தேறுகின்றன என்பது நமக்குப் புரியும். ஆனாலும், நமது சொ(ம)ந்தப் புத்தி இதனை இரண்டு கூறுகளாக பிரித்து வைத்துக்கொண்டு நம்மை சூதாடிவிடுறது. இதோ பாருங்கள், நம் செயலால் வந்த இடர்பாட்டால் நமக்கு ஏதாவது நடந்துவிட்டால் அதனை 'அது எமது தலைவிதி' என்று கூறி முடித்துவிடுகின்றோம். சிலவேளை, 'நடந்தது நடந்தது விட்டுவிடுவொம்' என்று எம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கின்றோம். ஆனால் வேறு ஒரு காரணியாலோ அல்லது வேறு நபரால் எமக்கு ஏதாவது தாறுமாறாக நடந்துவிட்டால் அதனை நாம் எமது தலைவிதி நடந்தது நடந்துவிட்டது என்று விட்டு விடுவது கிடையாது. புரிகிறதா?

இதுதான் வாழ்வில் அதிகப்படியாக நிகழ்கின்ற குழப்பம். எமது சூழலில் இடம்பெறுகின்ற செயல்கள் யாவற்றையும் யாரோ மனிதன் கூறுபோட்டு வைத்ததன் விளைவுதான் இன்னும் எம்மை அந்த வலைக்குள் வாட்டி வதைக்கின்றது. நல்லது நடந்தால் நாம்தான் அது என்றும், கெட்டது நடந்துவிட்டால் அது நமக்குப் புறப்பாக நடந்தது என்றும் கூறிக்கொள்வதுதான் மனிதன் பண்டுதொட்டு வாழ்ந்து வரும் நடைமுறை. பொதுவாக இந்த உலகில் நிகழ்கின்ற செயல்கள் யாவும் தானகவோ நடப்பது கிடையாது. மனிதனுக்கும் அவனுடைய சூழலுக்கும் ஒத்தாற்போல் நிகழ்கின்ற கருமங்கள் யாவும் அவனுடைய தொடர்பு ஏதும் இன்றி அணுவளவும் நிகழாது. ஏதோவொரு வகையில் அவனுக்கும் அந்த செயலில் தொர்பு இருந்துதான் ஆகும். ஆனாலும், தமக்கு நிகழும் இன்னோரன்ன சம்பவங்களில் இயற்கையை மறக்க நினைத்த மனிதனுக்கு நனது சகோதர மனிதனை மறக்க முடிவதில்லை. ஏனோ தெரியவில்லை. ஏதோவொரு காரணத்துக்காக 'அது எமது விதி'  என்று விட்டுவிடுகின்ற எம்மால் மற்றய சகோதர மனிதனால் இடம்பெறுகின்ற செயல்களின் பாரதூரத்தை மன்னித்துவிட முடிவதில்லை. இவை எல்லாவற்றிற்கும் காரணம் நாம் எதையும் நல்லது என்றும், கெட்டது என்றும் பிரித்துவைத்திருக்கின்றமைதான்.

ஆமாம், அது என்ன நல்லது என்றால்? கெட்டது என்றால் என்ன?

பொதுவாக இந்த உலகத்தில் உள்ளன எல்லாம் நல்லதுக்குத்தான் என்று கூறுவதனை நான் பலமுறை கேட்டிருக்கின்றேன். அப்படி என்றால் அது ஏன் எமக்கு சிலநேரம் நல்லவை அல்லாமல் திகழ்கிறது. அப்படியென்றால் கெட்டது என்றால் என்ன? யார் இதனை கண்டுபிடித்தது? கெட்டது என்று உலகில் எதுவும் கிடையாது. உண்மையிலேயே இந்த உலகில் நாம் அனுபவிக்கின்ற யாவும் நல்லவைதான். அது எதுவாக இருப்பினும் அது நல்லதுதான். நல்லது எதுவும் கெட்டதாக முடியாது. கெட்டது  இருப்பின் அது நல்லதாக ஆகாது. எனவே எல்லாம் நல்லதுதான். அப்படியென்றால் கெட்டது எங்கிருந்து வந்தது? அது வேறொன்றும் கிடையாது, மனிதனால் சமைத்தெடுக்கப்பட்ட வெறும் மாயைதான் இது. ஒரு வேளை, நல்லவர்கள் யாவரும் சேர்ந்து தமக்கு கீழாக சிலரை அடிமைப்படுத்த எடுத்த ஒரு முயற்சியாக கூட இது இருக்கலாம். அல்லது நல்லவர்கள் தமக்கு கீழான ஒரு இனம் இருக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக கூட இதன் உருவாக்கம் இடம்பெற்றிருக்கலாம்.  மறுவாறாக, நல்லவர்கள் தம்மை தாமே உயர்த்திக்கொள்ள தேவையாக இப்படி ஒரு ஏற்பாட்டை முடுக்கி விட்டிருக்கலாம்.

எவ்வாறாயினும், நல்லது – கெட்டது என்ற இரு சொற்களையும் துணைச் சொற்கள் என்றுதான் இலக்கணங்கள் விபரிக்கின்றன.  ஒன்றை விளக்க மற்றயதின் துணை அவசியப்படுகிறது. 'நல்லது' என்பதனை விளங்கிக் கொள்வதானால் நீங்கள்  கெட்டது என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லது கெட்டது எது? என்பதனை விளங்கிக் கொள்ள நல்லது எது? என்பதனை விளங்க வேண்டும் என பொதுவாக கூறப்படுகிறது. என்றாலும், நீங்கள் கெட்டது எது? என்பதனை மூல விளக்கத்துடன் புரிந்துகொண்டால் நல்லது எது? என்பதனை புரிந்துகொள்ள இயலும். ஆரம்பத்தில், இந்த உலகில் உள்ள யாவும் நலவுக்குத்தான் என்றால் அங்கு கெட்டது எதுவும் கிடையாது. என்றாலும், காலம்தான் அதனை தீர்மானித்து விடுகின்றது. மனித வாழ்வில் காலத்திற்கு இருக்கும் பங்கின் விசாலம் இந்த நல்லது கெட்டதுக்குள்ளும் காணப்படுகிறது. நல்லது எது? என்பதனை காலம்தான் தீர்மானிக்கிறது. இதனால் காலம்தான் சிலவற்றை தேர்ந்தெடுத்து கெட்டது இதுவென மனிதனை வரையறுக்க கட்டாயப்படுத்தி விடுகிறது. உதாரணமாக, ஒரு தாய் தனது ஒரு வயது குழந்தைக்கு சப்பாட்டை ஊட்டிவிடுகிறாள். மற்றொரு தாய் தனது ஒன்பது வயது பிள்ளைக்கு சப்பாட்டை ஊட்டிவிடுகின்றாள். இங்கு எது நல்ல விடயம்? எது கெட்ட அல்லது கூடாத செயல்? எனவே, மனிதன் தன் வாழ்வில் சிலவற்றுக்கு தாமாகவே வரையறைகளையும், மட்டுப்பாடுகளையும் காலத்தின் சூழ்ச்சியால் இட்டுக்கொண்டதன் விளைவாகத்தான் கெட்டது எது? என்று அவன் சிநந்திக்க முடிந்தது என்ற முடிவுக்கு வரலாம். இதற்கு மறு காரணிகளும் ஊக்கப்படுத்தின. அதாவது, மனிதனுக்கு மாத்திரம்தான் இந்த உலக வாழ்வில் காலத்துடன் கூடவே ஒத்து பிரயாணிக்க வேண்டிய தேவையும், கட்டயாமும் இருக்கின்றது. அதுவும் மனிதன் தனக்காக வலிந்து ஏற்படுத்திக்கொண்ட சவால்தான்.

இன்னும் விளக்க வேண்டுமானால்... மனிதன் தனக்கென்று வரையறைகளை இட்டுக்கொண்டு இப்படி இருந்தால்தான் நல்லம், இப்படி நடந்தால்தான் நல்லது என்று பொதுவிதிகளை ஆக்கிக் கொண்டான். அவ்விதிகள் அவனுடைய சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையாகத்தான் உருவாகியது. அப்படி உருவான விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையான விதிமுறைகள் ஏனையவர்களாலும் பின்பற்றப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் மனித சமுகத்தில் தோன்றியிருக்க வேண்டும். அல்லாவிடில், கூட்டமாக வாழ்வதும், குதூகலிப்பதும் அந்த சமூகத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கும். ஏனெனில், விதிகள் விருப்பு வெறுப்பு அடிப்படையானது என்பதனால் நல்லது எது? கேட்டது எது? என்பதுவும் நபருக்கு நபர் வேறுபட்டிருக்கும். இதனால் அச்சமுகத்தில் சண்டைகளும் சச்சரவுகளும் தோன்றுவதற்கு அவ்விதிகளே காரணமாயிருக்கும். இதனால், கூடியிருந்த மனித கூட்டம் யாரோ தனிப்பட்ட பலம்பொருந்திய ஒருவருடைய சிந்தனைக்கும், விருப்பு வெறுப்புக்கும் விரும்பியோ விரும்பாமலோ செவிசாய்த்ததன் விளைவாக நல்லது எது? கெட்டது எது? என்பது வரையறுக்கப்பட்டிருக்கும்.

எனவே, இத்தகைய தனிப்பட்ட ஒருவருடைய விருப்பு வெறுப்பிற்கு எதிராக செயல்பட்ட நபர்கள் கெட்டவர்களாக கருதப்படுவர். ஏனெனில் விதி, அங்கு எதிர்ப்பவர்களினால் மீறப்பட்டதாக சமுதாயம் கூறியிருக்கும். அதாவது, நாம் இவர் ஊரோடு ஒத்து வாழத்தெரியாதவர் என்று கூறுகின்றோமே அவர்களைத்தான் கூறுகின்றேன். ஆயிரத்தில் ஒருவன் என்று கூறுவதும் இவர்களைத்தான். இவர்களுக்காகவேதான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கும். காரணம், அவர்கள்தான் உலகின் யதார்த்த நிலையினை புரிந்தவர்கள். அவர்கள் எதிர்ப்பதன் காரணம் காலத்திற்குள் கட்டுப்பட்ட விருப்பு வெறுப்பின் வதிமுறைக்குள் தமது செயல்பாடுகளை மனிதன் தாமாகவே அடிமைப்படுத்திக் கொள்வது கூடாது என்தபனால்தான். மேலும் விளக்கப்போனால், இவ்விதிமுறைகள் எல்லாம் மனிதனின் விருப்பு வெறுப்பின் அடியாக பிறந்தது என்பதனால் அது பொதுவானதாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அவர்கள் கூறுவர். ஏனெனில் மனித விருப்பு வெறுப்பு என்பது இடத்துக்கிடம், ஆளுக்கு ஆள் வேறுபட்டது. எனவே, பின்பற்றப்படுகின்ற விதிகளும் பொதுவிதியாக கொள்ள முடியாது. ஏனெனில் அவை ஆளுக்கு ஆள் வேறுபட்டது. இதனால் நல்லது எது என்பதனை தீர்மானிப்பது நாமாக இருக்க வேண்டுமே தவிர, நமக்கு அதனை வேறுநபர் விபரிக்கக் கூடாது. அவ்வாறு விபரிப்பதென்பது அவருடைய விருப்பு வெறுப்புக்களை நம்மீது திணிப்பதாகும். மறுவாறாக, அவ்வாறு வேறு ஒரு நபரினால் விபரிக்கப்படுகின்ற விடயங்களை நாம் ஏற்றுக்கொள்வது நமக்கு காணப்படுகின்ற மனிதனின் அடிப்படை பண்பான விருப்பு வெறுப்புக்களை இல்லை என்று மறுப்பதாக, அல்லாது போனால் நாம் மனிதன் என்பதன் யதார்த்த நிலையில் இருந்தும் விடுபட்ட பிராணி என ஏற்றுக்கொள்வதாக அமைந்துவிடும். இவர்கள் நல்லன பற்றி பெருமைப்படுகின்றார்களோ இல்லையோ கெட்டது எது? என்பது குறித்து கவலைப்படுவதோ கிடையாது.  

ஏனெனில், இவர்களுடைய விதிமுறைகள் யாவும் காலத்திற்குள் கட்டுப்பட்டிருப்பது கிடையாது. அவர்கள் மனிதன் தனது நலத்திற்காக உருவாக்கிய விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையான விதிமுறைகளை தாண்டிய சிந்தனையில் கிடப்பதனால், இவர்கள் பேசுகின்ற விடயங்களுக்கும் அச்சமுதாயத்தில் நடைமுறையில் இருக்கும் பொதுவான கருத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி தோன்றும். சமுதாயம் அவர்களை கெட்டவன் என்றுதான் கூறும். காரணம், அவர்களின் விதிமுறை விசித்திரமாக தோன்றும். ஆனால் அவர்களோ தம்மை கெட்டவன் என்று கூறுவதனை பொருட்படுத்தமாட்டார்கள். அதற்கும் நியாயம் உண்டு. அதாவது, இவர்கள் கெட்டவன் என்று கூறுவது அ(கூறுப)வர்களின் சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் உருவான விதியினால்தானே. இதனால்தான அவற்றை இத்தகையவர்கள் கருத்திலெடுப்பது கிடையாது. இதனால் நல்வர்களுடைய செயல்களும் சரி, அவர்களுடைய சிந்தனைகளும் சரி காலத்துள் கட்டுண்டு கிடப்பது கிடையாது. எனவேதான் நல்லவனுக்கு காலமில்லை.

நான் மனிதன் மட்டும்தான்
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

நான் மிதமிழந்து,
சினம் வெந்து குருடாகி,
இடர் சமைக்கிறேன்.
காரணம், நான் மனிதன் மட்டும்.
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

அகங்காரம் எனக்குள் ஆட்கொண்டிருக்கிறது,
கவனம், உனது நட்பைப் போல,
நான் விளங்கியது அவ்வளவில்லை.
நான் மனிதன் மட்டும்,
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

உதவாத ஆடம்பரங்கள்,
சல்லடை நிறைந்த சல்லாபங்கள்,
கேள்விகள் நிறைந்த காரியங்கள்,
காரணம், நான் மனிதன் மட்டும்,
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

அழகு அருவருப்பானது,
இருப்பதெல்லாம்
காமத்திற்கு குழிதோண்டுகிறது,
காரணம், நான் மனிதன் மட்டும்,
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

அதிகார ஆசை,
பசிக்கு புசிப்பனம்,
அறிவில் அசட்டுத்தனம்,
காரணம், நான் மனிதன் மட்டும்,
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

சபலம் ஆட்கொண்ட,
தீதால் வெறியேற்றப்பட்ட,
உள்ளுணர்வின் படபடப்பும்,
திணறடிப்பும்தான் நான்,
காரணம், நான் மனிதன் மட்டும்,
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

ஆனால்...,
நானும் தெரிவில் ஒன்று,
அன்பு,
கருணை என்பவற்றின் நியாயாம்,
இந்த அடிமை.

எனது அகங்காரத்தை அடித்து நொறுக்க முடியும்,
நல்லதுக்கு சண்டை இட முடியும்,
மண்டியிட்டு மன்றாடவும் இயலும்,
நேசமிக்க பெருமை,
இந்த அடிமைக்கு.

மன்றாடவே பிறந்தவன் இவன்,
இந்த அடிமை,
ஆதரவளிக்கும்,
மண்டியிடும்.

நான் பாவங்கள் நிறைந்த
மனிதனாக இருக்கலாம்,
ஆனால்,
நான் மட்டும்தான் பெருமைக்குரியவன்,
அது என்னை பலவானாக்கும்.
நான் ஒரு அடிமை.


கடவுள் இறந்துவிட்டார்

நானும் எனது நண்பனும் வழமைபோன்று காலிமுகத்திடலில் ஒருவரை ஒருவர் பேசிக்கொண்டிருந்தோம். சில நிமிடங்களாவது இந்தக் கொழும்பில் சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும், சந்றேனும் அமைதியினை உருசிப்பதென்றால் இப்படியாக காலிமுகத்திடலை நோக்கி புறப்பட்டு சென்றுவிடுவோம். சுமார் இரவு 9 மணியிருக்கும், நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென அவ்விடத்தில் வெளிப்பட்ட ஒரு சிறுவன் தன்னிடம் வடையும், கடலையும் இருப்பதாகவும் எங்களை வாங்கிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டான். அப்படியே நான் அவனை உற்று நோக்கினேன். இதனை அவதானித்த எனது நண்பனும் தலையை குனிந்து கொண்டு சகிக்க முடியாத உணர்வினை தன்னுள்ளே முழுங்க முயற்சிப்பது புரிந்தது. நானும் அந்த சிறுவனை அப்படியோ உற்று நோக்கி விட்டு உனது பெயர் என்ன என்று விசாரித்தேன். அதன் பின்னர் அவனை மேலும் விசாரிக்க தொடங்கினோம். அப்பொழுது அவனில் ஏதோ மாற்றம் உருப்படுவதனை நாங்கள் இருவரம் அவதானித்துக்கொண்டோம். 

அந்த தம்பியின் ஊரைப் பற்றி வினாவிய பொழுது அவன் கூறிய ஊர் என்னையும் எனது நண்பனையும் ஒரு வினாடி திடுக்கிடச் செய்தது. காரணம் அது எனது நண்பனுடைய ஊர்தான். அப்படியே சுதாகரித்துக் கொண்ட நாங்கள் அவனை அப்படியென்றால் அந்த ஊரில் எவ்விடத்தில் உங்களுடைய வீடு உள்ளது என்று கேட்டேன். அப்போது, அவன் வயதில் சுமார் 11 (அவன் ஆறாம் ஆண்டு படிக்கின்றானாம் என்றான்) வயதுதான் இருக்கும் எங்களை சமாளிக்க முடியாமல் தடுமாறுவது புரிந்தது. நானும், அதுவரையில் அவனை விசாரித்த அனைத்தையும் விட்டுவிட்டு "உன்னுடைய வாப்பா என்ன வேலை செய்கின்றார்" எனக் கேட்டேன். அவர் கொழும்பு பொது வைத்தியசாலையில் சிறுநீரகப் பிரிவில் சத்திர சிகிச்சை முடிந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறினான். அத்தோடு உன்னுடைய தாய் எங்கே என்று வினாவிய போது அவரும் காலி முகத்திடலின் மறுபக்கத்தில் வடையும் கடலையும் விற்றுக் கொண்டிருப்பதாக கூறினான். நீங்கள் கொழும்பில் எங்கு இருக்கின்றீர்கள் என்ற கேட்டதற்கு சிலேவ் ஜலண்டில் வசித்து வருவதாக கூறினான். அப்போது எனது நண்பன் 'அப்படியென்றால் நீ முன்பு கூறியவையெலல்லாம் பொய்தானே' என்று கேட்க அவன் தலையை குனிந்து நின்று கொண்டிருந்தான். சரி என்று கூறிவிட்டு என்ன செய்வது அவனிடம் இருந்த கடலைப் பையில் இரண்டையும் வடையில் சிறிதளவும் வாங்கிவிட்டு அவனை விட்டு விட்டோம்.

இப்படியோ சற்று நேரம் தாமதித்த நேரத்தில், நாங்கள் வாங்கியவற்றை உண்டு முடித்திருக்கவில்லை. அதேவேளை மற்றொரு பெண் அவளுடைய கையை ஏந்திய வண்ணம் எங்களை அணுகி வந்தாள். எனது நண்பன் வசாரணையினை ஆரம்பித்தான்.  சுமார் 15 நிமிடங்கள் வரை நாங்கள் இருவரும் சேர்ந்து அவளை நோக்கி வினாக்களை தொடுத்தோம். அவள் மட்டக் குளியில் வசித்து வருகின்றாள். அவளுடைய பிறந்த இடம் பதுளை. பிறப்பில் ஒரு தமிழ் பெண். அவளுடைய கணவன் அவளை இஸ்லாத்திற்கு மாற்றி திருமணம் செய்துதான் கொழும்பிற்கு கூட்டி வந்திருக்கிறான். தற்போது அவளை விவாகரத்து செய்துவிட்டான். ஆனால் அவளை எனது நண்பன் விசாரித்த போது அவளுக்கு இஸ்லாத்தினைப் பற்றி எதுவும் தெரியாது. அவளுக்கு கலிமா கூட தெரிந்திருக்கவில்லை.  காலிமுகத்திடலில் அவளுக்கு ஒருநாளைக்கு சாராசரியாக 1500 ரூபா தொடக்கம் 2000 ரூபா வரையில் வசூல் கிடைக்கின்றது. சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 2000 சூபா தொடக்கம் 2500 ருபா வரையில் , சில வேளை 3000 சூபா வரையில் கிடைப்பதாக கூறினாள். பிள்ளைகள் இரண்டு இருக்கின்றது. கணவனால் எந்த உதவியும் இல்லாததன் காரணமாக இந்நிலமையாம். இவளுடைய நிலையினை கேட்ட பின்பு நீங்கள் கூறலாம் இவள் பொய் கூறுகின்றாள் என்று. ஆனால் அதற்கும் அவள் ஒரு சான்றினை என்முன் வைத்தாள். நீங்களும் அதனை இங்கே காணலாம். இரவு வெளிச்சத்தில் மிகத் தெளிவாக அதனை படம் எடுக்க முடியவில்லை.











 





இம்மாதம் 15ம் திகதி, விடுமுறை நாள். தெஹிவளையில் வேலை ஒன்றினை முடித்துவிட்டு வழி திரும்புகையில் வெள்ளவத்தை காகில்ஸ் பூட்ஸ் சிட்டியின் அருகில் சிறிது நேரம் எனது நண்பனுக்காக காத்து நிற்க வேண்டி ஏற்பட்டது. நின்றதுதான் தாமதம், ஒருவர் என்னை அணுகி அவரிடம் உள்ள பொருளை காட்டி என்னை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். அவை வேறு ஒன்றுமில்லை, வீடுகளில் பீங்கான் கோப்பைகள் கழுவுகின்ற பஞ்சுத் துண்டங்களும், அவற்றை உராய்சி கழுவ உதவுகின்ற கம்பி இழைகளினால் தயாரிக்கப்பட்ட பொத்தியும்தான் அவரிடம் காணப்பட்டது. நான் அவற்றை வாங்கி என்ன செய்வது என்ற நோக்கில் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அவன் மீண்டும் இருதடவை 'வாங்கிக்கோங்க' என்று கூறினான். நானும் வேண்டாம் என்று கூறிவிட்டேன். சடுதியாக அவன் 'நான் முஸ்லிம்தான்'; என்று கூறினான். அப்போது அதிர்ந்து போன நானும், 'இல்லை வேண்டாம்' என்று கூறி சற்று கோபமாக பார்த்தேன், சென்றுவிட்டான்.  நான் அவனிடம் பொருட்களை வேண்டாம் என்று கூறியபோது அவன் ஏன் தன்னை முஸ்லிம்தான் என்று கூறி அதனை எனக்கு தெரியப்படுத்தினான் என்று இதுவரை எனக்கு சரியாக புரியவில்லை. சிலவேளை நான் அவனிடம் பொருட்களை வாங்கி அவனுக்கு உதவ முன்வராததன் விளைவாக நான் முஸ்லிம் என்பதனை அவண் அடையாளம் கண்டுடிருப்பானோ!

அப்படியே அவ்விடத்தில், 5-10 நிமிடங்கள் கடந்திருக்கும். 17 -21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தனது, பால்குடி மறவாத குழந்தையுடன் என் முன் வந்து வாசைன குச்சிகள் அடங்கிய மூன்று பெட்டிகளை காட்டி 'சேர் மூன்றுக்கும் 50 ரூபா சேர்' என்ற போது என்னால் என் மனத்தினை கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. அவளை நேரெதிரில் எதிர்கொள் எனக்கு இயலாமல் போனது. பின்பு அவ்விடத்தில் எனது நண்பனை சந்தித்த பின்பு அந்த பெண்ணிடம் சென்று நீங்கள் எந்த இடம் என்று கேட்டேன். அவள் கொலன்னாவை என்று பதிலளித்தாள். கணவன் கூலி வேலை செய்கிறானாம். ஆனால் அந்த சகோதரி அவளுடைய  பெயரை மட்டும் என்னிடத்தில் பொய்யாக கூறினாள் என்பது எனக்குத் தெரியும்.  அவளும் முஸ்லிம்தான் ஆனால் அவள் தன்னை ஒரு தமிழ் பெண் போன்று மறைத்துக் கொண்டாள். சில வேளை அவள் என்னை ஒரு இழிந்த சமூகத்தின் வெட்கம் கெட்ட ஒரு அங்கத்தவனாக நேக்கியிருக்கலாம். அல்லது அவளுக்கே அவள் முஸ்லிம் எனக் கூறுவது அவமானமாக இருந்திருக்கும்.

இன்று மருதானை வழியாக சென்று கொணடிருந்த நான் பள்ளிவாயலின் அருகில் ஒரு சகோதரியினை அவதானித்தேன். சுமார் 16-18 வரை வயது மதிக்கத்தக்கவள். இரு கைக்குழந்தைகளுடன் பள்ளிவாயலின் முன்றலில் இருந்து கொண்டு தனது குழந்தைகளை மடியில் போட்டுக் கிடப்பதனை காண்கையில் மீண்டும் நான் எதனைக் கூறுவது....???

சிலவேளை, தொழுகைக்கு போவது கூட எனக்கு கொரூரமாக இருக்கிறது. பிச்சை எடுக்கும் என் தாய், பிச்சை எடுக்கும் என் சகோதரிகள், அவர்களின் குழந்தைகள் முகங்களை எதிர்கொண்டுதானே பள்ளியை விட்டு வெளியில் வரவேண்டும் என்ற ஏக்கமும், வெட்கமும், கூடவே அவமானமும்தான்......... ஒன்றைக் கூற மறந்துவிட்டேன். மறுமையிலும்தான் அவர்களை எதிர் கொள்ள வேண்டும் ????????? 

"கடவுள் இறந்துவிட்டர். அவரை நாம்தான் கொண்றோம்" என  Nietzsche கூறியது உண்மைதான்.

நட்பு///!!!^^^???...


எனக்கு நட்பில் இருக்கின்ற நம்பிக்கை ஒரு போதும் நண்பர்கள் என்று கூறுபவர்களிடத்தில் இருப்பது கிடையாது. அவ்வாறு விபரிப்பவர்கள் கூட அதனை என்னிடத்தில் மெய்ப்படுத்தியதும் கிடையாது. வழமைபோன்று தற்போது கூட நண்பர்கள் என்று கூறி சிலர் என்னைக் கீறி விட்டு வெளிச் சென்றிருக்கின்றன. அவற்றில் ஒன்று இன்று வரை ஊகமாயிருந்து இன்றோடு ஊர்ஜிதமாயிருக்கின்றது. இதற்கு காரணம் நட்பின் உண்மை வடிவத்தினை நான் அறிந்திருப்பதாக கூட இருக்கலாம். சிலருக்கு பிறந்தோம் என்பதனை விட இறந்தோம் என்பதில் அதிக அக்கரை இயல்பாய் வந்து விடுகின்றது. இன்னும் சிலருக்கு இறந்தோம் என்பதனை விட ஏன் பிறந்தோம் என்பதில் கூடுதல் அக்கரை தோற்றம் பெற்று விடுகின்றது. இங்கு ஒன்று ஆரம்பத்தில் ஏற்படும் புரிதல். மற்றொன்று, இறுதியில் ஏற்படுகின்றது. நட்பிலும் இப்படித்தான் பிறப்பும் இறப்பும் உண்டு....எனக்குத் தெரியாது. இவர்கள்தான் அதனை மெய்ப்பிக்கின்றார்களே! தகுதியற்றவர்கள் பந்திகளை வாசிக்க வேண்டாம்.

'நண்பர் யார்? இரு உடல்களுக்குள் குடித்தனம் கொண்ட ஒரே பிராணம்' - அரிஸ்டோட்டல்

நட்பு என்றால் என்ன? உறவு என்பதன் மெய் அர்த்தம்தான் என்ன?  நாம் இந்த வினாவினைத்தான் நாளாந்தம் கேட்டுக் கொண்டிருக்கிறோமே தவிர, அதற்கான திருப்தியான விடையினை ஒருபோதும் கொண்டு வந்தது கிடையாது. இதற்கும் காரணம் இருக்கின்றது. உறவு என்பது வார்த்தைகளிலோ அல்லது வர்ணனைகளிலோ உள்ளடக்கிட முடியாத உணர்வுகளின் கலவை. அது ஒரு அழகான படிவம் எனலாம். உறவானது மிகவும் தாங்கொணா துயரங்களையம் தன்னகத்தே கொண்டிருப்பதனால் அதனை விபரிப்பது என்பது மிகவும் கடினமானது.



இருப்பினும், நட்பு துன்பத்தின் போதும் இன்பத்தின் போதும் நிபந்தனை ஏதுமற்று சிலாகிக்கின்ற ஒன்றாக கருதப்படலாம். ஒரு தனித்தன்மையான கவர்ச்சியுணர்வு, விசுவாசம், நேசம், மரியாதை, நம்பிக்கை, மகிழ்ச்சியின் சிகரம் முதலியனவெல்லாம் நட்பிற்கு அர்த்தமாக கூறப்படுகின்றது. இதேபோன்று, ஆசை, இருவருமொத்த மரியாதை அத்தோடு இருவருக்குமிடையில் கெட்டியான நெருக்கம் என்பனவெல்லாம் நண்பர்கள் தமக்குள் பகிர்ந்து கொள்கின்ற விடயங்களாகின்றன. இவையெல்லாம் நட்பின் பொதுவான விடயங்கள். உண்மையான நட்பினை ஒருவர் அனுபவிக்க வேண்டுமாக இருந்தால் அவர் கட்டாயம் உண்மையான நண்பர்களை வைத்திருக்க வேண்டும். அப்போது அவர்கள்தான் பொக்கிசமாகவும் இருப்பார்கள்.

என்றாலும், நாம் நட்பின் அர்த்தத்தினை கண்டுகொள்ள இவ்வளவு வார்த்தைகளை வாரி இறைப்பதற்கு தேவை கிடையாது.

"நட்பு என்பது ஒருவருடன் பத்திரமாக வைத்திருக்கும் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளின் சௌகரிகம் என்பதுடன் அதனை வார்த்தையாலோ அல்லது எண்ணங்களினாலோ மதிப்பிடமுடியாது" என ஜார்ச் ஈலியட் குறிப்பிடுகின்றார்.

நட்பு என்பது உணர்வுகளின் மெய்யான இருப்பிடம். அதனை நீங்கள் உங்களுடைய நண்பர்களின் முன்னால் வெளிப்படுத்தும் போது வார்த்தைகளாலோ அல்லது எண்ணங்களினாலோ அளவிட்டுவிடக் கூடாது. இது எப்போது என்றால், யாராவது உங்களைப்பற்றி உங்களைவிட அதிகமாக தெரிந்து வைத்திருப்பாராக இருந்தால் நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுகின்போது உங்களுடன் அவர்கறளின் பிரசன்னத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இரவு முழுக்க நீங்கள் நித்திரையுடன் போராடியிருந்தாலும், காலை எழுந்ததும் அந்த பொழுது உங்களுக்கு மிகவும் புரிதல்கள் நிறைந்ததாக அமையும். சந்தோசங்களை பகிர்ந்து கொள்வதிலும், இருவரும் ஒன்றாக இருந்து அளவளாவுவதிலும் பார்க்க நட்பு என்பது மிகவும் அப்பாற்பட்டது. அது யாராகிலும் உன்னை வந்து, உனது வாழ்க்ககையின் சிரத்தையான நிலையில் இருந்து மீட்டெடுக்கும் போது ஆரம்பிக்கின்றது. நட்பு என்பது நிலையானது.

இருதயத்தில் இருந்து எழும் மெய்யான அன்பளிப்புகள்தான் நட்பின் அடையாளமாகும். நட்பினால் எழும் பிணைப்பானது காலத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது. எப்படி இருவருக்கிடையில் நம்பிக்கை வளருகின்றதோ அதே அளவு நெருக்கமும் அதிகரிக்கின்றது.

ஆனாலும், வேறுபட்ட மனிதர்கள் வேறுபட்ட நிலைகளில் நட்பு என்பதனை நோக்குகின்றனர். சிலருக்கு அது அவனோஃஅவளோ உன்னை வெறுத்திட முடியாது என்கின்ற நம்பிக்கை. இன்னும் சிலருக்கு, அது நிபந்தனை ஏதுமின்றிய நேசம்ஃகாதல். இன்னும் சிலர் அங்கு இருக்கின்றார்கள். அவர்கள் நட்பு என்பதனை தோழமையாக உணருகின்றார்கள். அவரவர் எத்தகைய அனுபவத்தினை கொண்டிருக்கின்றார்களோ அந்தளவில் அவர்களுடைய நட்பிற்கான வியாக்கியானமும் அமைந்துவிடுகின்றது. நட்பு என்பதன் நோக்கமும், அதன் அர்த்தமும் எமது வாழ்வின் நிலமைகளில் ஏற்படும் கஷ்டங்களில் சிறிதளவையேனும் எமது நண்பர்களுக்கும் அளிப்பதாகும். ஆனால் அது அவர்களை வருத்துவதற்காக இருக்க கூடாது. உரோம மெய்யியலாளர் சிசரோ "நட்பு என்பது அதன் எதிரிடைகளான துயரங்களையும், உளைச்சல்களையும் பகிர்ந்து கொண்டு தம்மை மிருதுவாக்கி கொள்வதன் வாயிலாக புத்தெழில் பெறுகின்றது" எனக் கூறுகின்றார்.

என்னைப் பொறுத்தவரை, இது ஒரு இயல்பான உறவு நிலை, எமது ஞாபக நிலைகளைக் கடந்த காலத்தில் அது ஆரம்பித்திருக்க வேண்டும். நட்பினைப் பற்றி பல்வேறு கட்டுக் கதைகளும், சமயம் சார்ந்த வரலாறுகளும் உலகத்தில் நிறையவே உள்ளன. எவர் நம்பிக்கையுள்ள நண்பர்களை பெற்றுக் கொள்கின்றாரோ அவர் மதிப்பிட இயலா கருவூலமொன்றை பெற்றுக் கொண்டதாக அவைகள் கூறுகின்றன.

உளவியல் ரீதியாக நோக்குவோமானால், நட்பு என்பது இருவருக்கிடையில் காணப்படும் காலத்தினால் கட்டுண்ட உறவு நிலை எனப்படுகின்றது. சிறு குழந்தைகள் இரண்டு நட்பு கொண்டாடுவதனைப் போன்று, அவர்கள் தமது நடவடிக்கைகளுக்கு ஏற்ப தமது வரம்பெல்லைகளையும் அமைத்துக் கொள்கின்றார்கள். அவர்கள் உறவுகள் தேவை என்றிருந்த போது எவ்வாறு எல்லைகளை வகுக்க கற்றுக் கொண்டார்களோ அதே போன்று இவை அவர்கள் வாழ்வில் மிகவும் ஆரோக்கியமான நண்பர்களாக செயல்படுவதாக காட்ட உதவும். இவை அவர்களுடைய உணர்வுகளை விருத்தியடையச் செய்ய வாய்ப்பாக அமையும். எவ்வாறாயினும், ஒருவருடன் கலந்துள்ள எவ்வித உறவும் இயல்பான ஊக்கத்தினையும், விருத்தியினையும் தருவதாக அமைதல் வேண்டும். ஏனையவர்களிடம் இருந்து எத்தகைய உதவிகளும் இன்றி ஒருவர் மட்டும் எல்லா முயற்சிகளையும் செய்து தாக்குப் பிடிப்பாராக இருந்தால் நட்பு என்பது வாழாது.

நட்பானது குழந்தை ஒன்று சமூகமயப்படுகையில் ஆரம்பிக்கின்றது என்றிருப்பினும், அவன்/அவள் சரி எது? பிழை எது? என்று பிரித்தறியும் நிலை அடையும் வரையிலும் கவனமாக நடப்பது அவசியம். பிழையான நட்பும், சமூகமயப்படுதலில் இருக்கின்ற குறை நிலையும் பல்வேறு உளவியல் காரணிகளுக்கும், கோளறுகளுக்கும் வழியேற்படுத்திவிடுகின்றன. இறுதியாக அவை தவறான சமூக நெகிழ்ச்சிப்படுத்தலுக்கு இட்டுவிடும். ஒரு குழந்தையின் ஆளுமை விருத்திக்கு தகுந்த நட்பு இன்றிமையாதது. உடன்பாடானதும், எதிர்மறையானதுமான இருவகை அனுபவங்களும் தனிநபரொருவருடைய ஆளுமையினை தூய்மையாக்குகின்றன. இதனால், நீ நட்பு ஒன்றினை தேர்வு செய்யும் போது அது உனது உளவியல் நிலைக்கும், உணர்வு நிலைக்கும் ஒத்திசைவதாக இருக்க வேண்டும் என்பது அடிப்படையாகும்.

நட்பு என்பதற்கு அர்த்தம் காண்பது மிகவும் சிரத்தையான விடயம். அது என்றும் பற்றியெரிகின்ற ஒரு வினா. இருப்பினும், நாம் எமது நண்பர்கள் என்று கூறிக் கொள்பவர்களை சந்திக்கின்ற போது தானாகவே அதற்கான விடையினை மிகவும் தெளிவாக புரிய முடியும். நட்பு என்பதன் பொருள் எமது இருதயத்துள் படிந்து கிடக்கின்றன. ஏனெனில் நட்பு என்பது உணர்வுகளால் மட்டும் இயலக்கூடியது, விபரிக்க முடியாதது. எது மிகவும் அழகானதோ, அவசியமானதோ அது புலக்கண்களுக்கு அகப்படாது. ஆனால் அவை அகத்தினால் உணரப்படும்.

நட்பினை புரிந்துகொள்ள வேண்டுமா? வாருங்கள், இந்த உலகத்தை உங்களது அகத்தினால் காணுங்கள்.

நட்பினை புரிந்து கொள்வதனை விட 
வேறு அருள் கிடையாது.
எவர் தொல்லைப்பட்டு கிடக்கிறாரோ...
எவரில் நாம் தாங்கிக் கிடக்கிறோமோ...

நண்பன்- என்னை நன்றான் அறிந்தவன்.
நன்றாய் உணர்ந்தவன்.
ஆசுவாசமான நாள் அது.
அவன் - கண்டிப்பதில் மிருதுவானவன்.
அனால் அரவணைப்பு பலமாயிருக்கும்.

நட்பினைத் தவிர வேறு அருள் இருக்க முடியாது...
எங்கு அக்கரை இருக்கிறதோ,
எவர் எம்மை நேசிக்கின்றாரோ!
ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு இரவும்,
ஒவ்வொரு வணக்கத்திலும்...
இருக்குமா?

உனது தொலைந்து போன நட்பிற்கு நன்றி.

நம்பிக்கையின் கரம்


ஜுலியா அர்மாஸ், அட்லாண்டாவில் தாய்சேய் நலத் துறையில் தாதியாக பணிபுரிந்த பெண். அவள் கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட சில உபாதைகள் காரணமாக ஸ்கேன் செய்தபோது, கருவிலிருந்த குழந்தை `ஸ்பைனா பிஃபிடா (spina bifida)என்ற தண்டுவட நோயால் பாதிக் பட்டிருப்பது கண்டறியப் பட்டது. இந்த நோயின் விளைவால் குழந்தை யின் இடுப்புக்கு கீழே செயலற்று போகும் நிலை ஏற்படலாம். கருத்தரித்து 21 வாரங்களே ஆகியிருந்த நிலையில், குழந்தையை பிறக்க வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது. குழந்தை உயிர் பிழைக்க தாயின் கருவறைக்குள் இருந்தேயாக வேண்டும். 

இந்நிலையில், ஜார்ஜியாவில், புகழ்பெற்ற மருத்துவர் ஜோசப் புருனர் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் சிகிச்சைக்கு சென்றாள். சகல பரிசோதனைகளும் மேற்கொண்ட பின், அவளுக்கு அறுவைசிகிச்சை செய்வதென தீர்மானிக்கப் பட்டது. அவளது கர்ப்பப் பையின் சிறுபகுதி வெட்டியெடுக்கப் பட்டு, அதன் வழி குழந்தைக்கு அறுவைசிகிச்சை மேற் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. டாக்டர் புருனர் தலைமையில் ஒரு மருத்துவக் குழு அறுவைசிகிச்சை மேற்கொண்டது. குழந்தைக்கு வெற்றி கரமாக அறுவைசிகிச்சை முடிந்த நிலையில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. 21 வாரங்களை, வயதாக கொண்ட அந்த சின்னஞ்சிறு சிசுவின் கரம், அறுவை சிகிச்சைக்காக போடப் பட்டிருந்த துவாரத்தின் வழியாக நீண்டு, தனக்கு சிகிச்சை செய்த மருத்துவரின் கைமேல் பட்டது. அந்த அதிசயக் காட்சி படமாக்கப்பட்டது. டாக்டர் புருனர், அந்த சம்ப வத்தை விவரிக்கையில், `குழந்தையின் கை என் கையை தொட்டநொடி நான் உறைந்து போனேன். நான் மெய்சிலிர்த்து போன தருணம் அது’, என்கிறார். இந்த படத்தைப் பார்க்கையில் நாமும் மெய்சிலிர்த்து தான் போகிறோம்.





தனக்கு உயிர் கொடுத்த கையை நம்பிக்கையோடு பற்றுவதாக அர்த்தப்படுத்தி, `நம்பிக்கையின் கரம் (hand of hope)' என்ற பெயரோடு, அந்த படம் உலகெங்கும் வலம் வந்தது. சம்பவம் நிகழ்ந்தது ஆகஸ்ட் 19, 1999 ம் ஆண்டு. அதே ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முழு ஆரோக்கியத் துடன் ஆண்குழந்தை பிறந்தது. சாமுவல் அலெக்ஸண்டர் அர்மாஸ் என்ற அந்த சி்றுவனின் பத்தாவது வயதில் எடுக்கப் பட்ட புகைப்படம் தான், கீழே நீங்கள் காண்பது. 25 yard backstroke நீச்சல் போட்டியில் முதல் பரிசாக வென்ற பதக்கங்களுடன் சிரிக்கும் அர்மாஸிடம் அவனது முதல் புகைப்படம் ( 21 வார) பற்றிக் கேட்டால், `அந்த கைகள் என்னு டையவை என்று உணரும் போது சந்தோஷமாகவும், பெருமையாகவும்’ இருப்பதாக கூறுகிறான். 





`இட்ஸ் எ மெடிக்கல் மிரக்கில்’ என்ற வசனத்தை அடிக்கடி தமிழ்படங்
 களில் கேட்டிருப்போம். நிஜமாகவே இது தான் மெடிக்கல் மிரக்கில்!!


சுல்தானுக்கு நன்றி.