பொய் !!!???

பொய் என்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா. எப்போவாவது நீங்கள் பொய் கூறியதுண்டா? அல்லது நீங்கள்தான் உண்மை பேசுபவரா? என்ன நடக்கின்றது எமக்குள்? எம்மத்தியில். அத்தனையும் பொய்தானா? அல்லது நாம்தான் அவற்றை உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கின்றோமா? அப்படியென்றால் எதுதான் பொய்? ஏப்போவாவது நாம் சிந்தித்ததுண்டா? மண்டை குழம்பிப்போயிருக்கின்றது. இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டால் பொய் ஒன்று உண்மையொன்றாக ஆகிடுமா என்ன. இன்னும் இல்லாத ஒன்றை தேடினால் கிடைத்திடுமா? இத்தனைக்கும் மத்தியில் இருப்பது எதுவும் இல்லாததாகாது, இல்லா எதுவும் இருப்பதாகாது என்று தத்துவம் வேறு எமக்கு.

உண்மையும் அதுதான். பொய் என்று ஒன்றை நாம் தேடினால் கிடைக்காதுதான். ஆனால் பொய்யினை காட்ட முடியும், எம்மால் அனுபவிக்க முடியும். அது ஒரு அனுபவப் பொருள். நீங்கள் ஒன்றை பொய் என்று காட்ட முனைந்தால் அதனை உண்மைக்கு மாறானது என்று மறுத்துவிட்டால் போதும். எல்லாம் தவிடு பொடியாகிவிடும். சிலர் கூறுவார்கள் இவனிடம் கதைக்க முடியாது, தத்துவம் பேசுகின்றான் என்று. நீங்களும் இப்படி அனுபவித்திருப்பீர்கள். காரணம், நீங்கள் அறிந்தோ அறியாமலோ குறித்த விடயம் தொடர்பில் அனுபவத்தினை அறிவுடன் பொருத்தி நிகழ்வினை மறுத்துவிடுபவராக இருக்கின்றீர்கள். அதாவது, இப்படியொன்றும் நடக்காது, நடந்திருக்கவில்லை அதனால் அவன் கூறுவது பொய் என்று இலகுவாக கூறிவிடலாம். ஆக இருப்பது எல்லாம் உண்மைதான். இந்த உலகத்தில் எல்லாம் உண்மையாய்த்தான் கிடக்கின்றன. ஆனால் நாம்தான் அவற்றிற்கு பொய் என்று பிரிவினை யொன்றை ஏற்படுத்திக் கொண்டு எம்மை நாமே சிலவேளை முட்டாளாக கருதிக்கொள்கின்றோம், ஏமாற்றிக் கொள்கின்றோம்.

இந்த உலகத்தில் கிடைக்கின்ற எதுவானாலும் அவை உண்மைதான். உண்மையை கூறினால் பொய் என்று ஒன்று கிடையாது. அது எனக்கு பழக்கமானதுமல்ல. இது எதனைப் போன்றது என்றால்.... உங்களுக்கு இலகுவாக விளக்கப்படுத்த வேண்டுமானால்... நாம் அன்றாடம் பயன்படுத்தும் சூடு-குளிர், ஒளி - இருள் என்கின்ற பதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவையிரண்டும் எதிர்பதங்கள் என்று நாம் கூறுகின்றோம், உண்மைதான். ஆனால் நீங்கள் எதனை குளிர் என்று நம்பிக் கொண்டிருக்கின்றீர்களோ அதுவும் சூடுதான். எதனை நீங்கள் இருள் என்று நம்பிக்கொண்டிருக்கின்றீர்களோ அதுவும் ஒளிதான். என்னடா இது புதுக்கதை என்று மிரள வேண்டாம். நீங்கள் விஞ்ஞானம் படித்திருக்கின்றீர்களா? அவ்வாறென்றால் மீண்டும் சற்று ஆழமாக செல்வோம். சூட்டினை அளக்கும் கருவி எது? எத்தகைய அளவீட்டில் நாம் அதனை அளக்கின்றோம்? அதனை நாம் பரணைட் அல்லது செல்சியஸ் என்று அழைக்கின்றோம். இப்போது இன்று இரவு தொலைக்காட்சிப் பெட்டியினை திறந்து செய்தியறிக்கையினை நோட்டமிடுங்கள். அங்கு வானிலை அறிக்கையில் கூறுவார்கள் இலங்iயில் இத்தனை பாகை செல்சியஸ் வெப்நிலை இருந்தது, சுவிசுலாந்தில் இத்தை பாகை செல்சியஸ் வெப்நிலை இருந்தது என்று. 

தொலைக்காட்சி பெட்டியினை மூடிவிட்டு மீண்டும் இங்கு வாருங்கள். வெப்பத்தினை அளக்கும் அதே கருவியால், அதே அலகினால்தான் நாம் குளிரினையும் அளவிடுகின்றோம் என்று சிந்திக்க வேண்டாம். இங்க விடயப் பொருள் அதுவல்ல. மாறாக, வெப்பம் குறைய குறைய நாம் அதனை குளிராக உணர்கின்றோம் என்பதுதான் உண்மை. அப்படியென்றால், வெப்பம் இல்லாது போனால் அதனை நாம் குளிர் என்கின்றோமே ஒழிய குளிர் என்று உண்மையில் ஒன்றும் கிடையாது. இதனை மறைப் பொருள் என்று அழைப்பது சற்று பொருத்தமாயிருக்கும் அல்லது இன்மையினைக் குறிக்கப்பயன்படும் பொருள் எனலாம். அதாவது வெப்ப நிலையின் இன்மையினை நாம் குளிர் என்கின்றோம். இப்படித்தான், ஒளி என்கின்ற பண்பியின் இன்மையினை நாம் இருள் என்று கூறுகின்றோம். ஆனால் அங்கு ஒளி கிடையாது என்று எம்மால் கூறமுடியாது. ஆங்கு ஒளி இருக்கின்றது என்றாலும் எம்மால் உணர முடியாது என்பதுதான் உண்மை. ஆனாலும் உண்மையில் இருள் அல்லது இரவு என்று உன்று கிடையவே கிடையாது.

இப்படித்தான் பொய் என்பதுவும். உண்மை என்பதன் இன்மையினைக் காட்டப் பயன்படும் ஒன்றுதான் இந்த படுபாவிப்பயல் பொய்யும். இந்த உலகத்தில் உண்மைக்கு பாரிய சக்தியிருக்கின்றதனால் இந்த பொய்யும் கூடவே தன்னுடைய பிளைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது. உண்மைக்கு மதிப்பில்லாது இருக்குமானால் பொய் என்பதனை நாம் கணக்கில் எடுக்கவேமாட்டோம். உண்மையினை உருமாறச் செய்வது இந்த உலகத்தில் நாம் வாழும் சூழலும், கூடவே நாமும் இருக்கின்றோமே!.

உண்மையொன்றினை பொய்யாக்குவதில் பெருந்தெண்டாற்றுவது இந்த வாழும் சூழல்தான். அதற்கு பல்வேறு பரிமாணங்கள் இருக்கின்றன. படுபயங்கரமான தன்மையும் அதற்கு காணப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் காலம் வேண்டும் என்று சொல்வார்களே! அது இதனைத்தான் என்று நினைக்கின்றேன். என்னை அவதானியுங்கள்.....

நான் கூறுகின்ற ஒரு விடயம் தற்போது உங்களுக்கு உண்மையாக இருக்கும். 

ஒரு விடயம் தற்போது உண்மையாகவிருக்கும் ஆனால் நேற்று (உண்மையல்லததாக) பொய்யாக இருந்திருக்கும்.

ஒரு விடயம் தற்போது உண்மையாகவிருக்கும், ஆனால் நாளை (உண்மையல்லததாக) பொய்யாக இருக்கும்.   

ஒரு விடயம் தற்போது (பொய்யாக) உண்மையல்லாததாக இருக்கும்.

ஒரு விடயம் தற்போது (பொய்யாக) உண்மையல்லாததாக இருக்கும், ஆனால் நேற்று உண்மையாக இருந்திருக்கும்.

ஒரு விடயம் தற்போது (பொய்யாக) உண்மையல்லாததாக இருக்கும், ஆனால் நாளை உண்மையாக இருக்கும்.

இவை அத்தனைக்கும் காரண கர்த்தா எமக்கிருக்கின்ற இயக்கத்துடன் கூடவே இயங்கும் இந்த உலகமும்தான். மிகவும் தெளிவாக, இலகுவாக கூறுவதானால் எல்லாம் நேரம் படுத்துகின்ற அரிய தொண்டுதான் எம்மை சில வேளை பொய்யனாக்கி விடுகின்றது.

மேலும், நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்....

அதாவது, எனக்கு உண்மையென்று தென்படுகின்ற ஒன்று உங்களுக்கு உண்மையல்லாததாக இருக்கலாம். எனக்கு உண்மையல்லாத ஒன்று உங்களுக்கு உண்மையாக இருக்க முடியும். இதுதான் அடிப்படை விதி. நாம் கருத்து வேறுபாடுகள் என்று கூறுவது இதனைத்தான். ஆனால் உண்மை என்பது நிச்சயத்தன்மை வாய்ந்தது என்று கூறுகின்றார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அவ்வாறு கிடையாது. மேற்கூறிய நிகழ்வுகள் அடிப்படையில் அது நிச்சயதன்மையற்றது. ஆனால் நானும், அடிப்படையில் எல்லாம் உண்மை என்பதனை ஏற்றுக்கொள்ளவதனால் மாத்திரம் உண்மை நிச்சத்தன்மை வாயந்ததுதான் என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். 

இப்படித்தான் பாருங்கள் அன்று ஆடையொன்றினை வாங்குவதாற்காக எல்லயைற்ற ஒரு இடத்திற்கு சென்றேன். அங்கு எனக்கு குறித்த ஆடை பிடித்திருந்தது ஆனால் அதன் நிறம் அவ்வளவு விருப்பமாக இல்லாததனால் அதே அடையில் வேறு ஒரு நிறத்தினை சுட்டிக்காட்டி கேட்டேன். அங்கு வேலை புரிகின்ற நபர் தேடிப்பார்ப்பதற்காக அங்குள்ள களஞ்சிய பகுதிக்கு சென்று ஒரு நிறத்தினை எடுத்து வந்தார். ஆனால் அது எனக்கு பிடிக்காததனால் குறித்த நிறம் இல்லiயா? என்று கேட்டேன். அதற்கு அந்நபர் அங்கு அவர் காட்டிய நிறம்தான் இருப்பதாக கூறிவிட்டார். எனவே அவர் கூறியது உண்மையாக இருந்தது. சற்று நேரத்தில் அங்கு சேவை புரிகின்ற என்னுடைய நண்பர் வந்ததும் அவரிடம் எனது தேவையினை கூறினேன். அப்போது அவர் களஞ்சிய பகுதிக்கு சென்று நான் கேட்ட நிறத்தினை எடுத்து வந்தார். இப்போது முதல் நபர் கூறிய வார்த்தைகள் பொய்யாக மாறிவிட்டது.

உண்மையிலேயே முதல் நபர் அதனை காணவில்லையோ என்னவோ எனக்குத் தெரியாது. அவர் களஞ்சிய அறைக்கு மீண்டும் செல்ல விரும்பாது அந்த பொருள் இல்லையென்று கூறியிருந்தால் அவர் கூறியது பொய் என்று அவருக்குத்தான் தெரியும், எனக்கு அது பொய்யல்ல. உண்மையிலேயே அவர் அந்த பொருளை களஞ்சியத்தில் தேடி களைத்து வந்து இல்லை என்று கூறியிருந்தால் அது அவருக்கும் எனக்கும் உண்மைதான். அடுத்தது, அவர் அங்கு குறித்த நிறத்தினை காணாது வந்து கூறியிருந்தாலும் அது உண்மைதான் என்பதனை மனத்தில் பதிந்து கொள்ளுங்கள். இங்கு நாம் அவருக்கு சாதகமாக அவர் களஞ்சியத்தில் தேடிக் களைத்து வந்துதான் என்னிடம் குறித்த பொருள் இல்லை என்று கூறினார் என ஒரு கருதுகோளை எடுத்துக் கொள்வோம். எனவே அது உண்மையானதாகும். அந்த உண்மை சில நிமிட நேரங்களுக்கு நீடித்தது. அங்கு வேலை புரிகின்ற எனது நண்பர் வந்து அதனை எனக்காக கொண்டு வந்ததும் அந்த உண்மை நிகழ்வு உண்மைத்தன்மை அற்றதாக மாறிவிட்டது. ஆனால் இங்கு நிதர்சனத்தில் எனது நண்பருக்கு முதல் நபருடைய கூற்றை பொய்ப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கம் இருக்கவே இல்லை. ஏனென்றால் நான் முதல் சம்பவத்தினை கூறியிருக்கவில்லை.
      
எனவே, உண்மைத்தன்மையில் நேரம் காலம் எனவற்றுடன் மனித குலம் எப்படி போட்டி போட்டுக்கொண்டு வாழந்து கிடக்கின்றது என்று பாருங்கள். இப்படித்தான் எமது வாழ்வின் ஒவ்வொரு நொடிகளும் உண்மையென்றும், உண்மையல்லாதது என்றும் மாறி மாறி எம்மை இயக்கமாகிக் கொள்கின்றது. அதே நேரத்தில், உலகத்தில் எமக்கு இந்த மறைப்பொருள் இல்லாவிட்டால் சக்தி நிச்சயம் பிறக்காது. சக்தி பிறக்காது போனால் எம்மால் இயக்கமுற இயலாது என்பதனை நாம் சற்று சிந்திக்கத்தான் வேண்டும்.

உண்மைக்கும் உண்மை

அறிவாளி, ஞானி
யாரும் கண்டிருக்க முடியாது,
உண்மைக்கும் உண்மை.

அவர்கள் உண்மை என்றது
வெறும் உண்மைதான்,
அது உண்மையல்ல.
உண்மைக்கும் உண்மை.

உண்மை தெரியாதது,
அறியாதது,
நாம் அப்படி முதிர்ச்சியானவர்களல்ல -
உண்மைக்கும் உண்மை.

நாம் உண்மையின் ஒரு பகுதி,
அதனை காண எமக்கு ஆவலுண்டு,
எமது தலைவிதி – 
உண்மைக்கும் உண்மை.

எம்மால் ஆன வலிகள்
கடினமானது, 
உயர்ந்தது என்றாலும்,
வாழ்வினை வெறுக்க முடியாது,
உண்மைக்கும் உண்மை.

உனக்கு எது உண்மையோ
அது எனக்கு சமமல்ல,
எமது மாற்று நொடிகள்,
உண்மைக்கும் உண்மை.

அவனுக்கு எது உண்மையோ,
எல்லோருக்கும் அது உண்மையல்ல.
அதைத்தான் நான் -
உண்மைக்கும் உண்மை என்கின்றேன்.

இவை அனைத்தும், 
நான் கூறியன - எனக்கு உண்மை,
எனக்கு மட்டும்,
உண்மைக்கும் உண்மை.

தனிமை

காற்று வலியினால் துடிக்கின்ற போது...
மண்ணோடு மண்ணாய்  என்னை
தூற்றியெறிகின்ற போதும்...
சந்திரன் வருகை மாயமாகிறது...
காரிருளில் என்முகத்தை குறிபாக்கின்றது...


நான் கைதியாய் கிடக்கிறேன் - ஆனால்
நான் தனிமையில் இருப்பதனால்...
யாருக்கும் தெரியாது...
நடுங்கும் அச்சத்தினால் ஆரம்பிக்கின்றது...
நான் கண்ணீர் மழை பொழிகிறதனால்...
இதயத்தின் துடிப்பு சடுதியாகிறது...



அப்போது உனது அரவணைப்பின் கனதி
எனக்கு புரிகிறது...
என்னை சுற்றியுள்ளனவெல்லாம்...
வசீகாரமாய் கிடக்கிறது...
நான் உன்னில் பற்றிக் கிடக்கிறேன்...
அதனால் அழைக்கும் எத்தணிப்பு...
பற்றியிருக்கிறாய் என்பதனை அழுத்திக்கூற...
நான் விழவில்லை என்பதனை தெரிந்துகொள்ள...



தீடீரென எல்லாம் முன்புபோல் மாறுகின்றன...
சந்திரனை வழியில் வைத்து பூட்டிவிட்டான்
அந்தக் கதிரவன்...
ஒளிக்கீற்றுக்களால் கண்கள் ததும்புகின்றன...
நான் அமைதியாக இருகிக்றேன்...
உன்னுடைய அரவணைப்பு என்றும் இருக்கட்டும்!

தூரம் - தொலைவு

இது என்ன புதுக்கதை இன்று? இவையிரண்டும் ஒன்றுதானே என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? ஆம் நாம் இவற்றை வேறுபாடின்றித்தான் சாதாரணமாக உபயோகிக்கின்றோம். நாம் எதனைத்தான் சொந்த அறிவுடன் செய்திருக்கின்றோம். யாராவது அல்லது எமது உற்றார் உறவினர்கள் அல்லது பெற்றோர்கள் எமக்கு கூறித் தந்தனவும், நாம் உண்மையென்று கற்றுக் கொண்டவையும்தானே எமக்கு இன்றும் சோறு போட்டுக் கொண்டிருப்பதாக நாம் நம்புகின்றோமே! இவற்றைத் தாண்டியதாக நாம் எப்போவாவது எதையும் பற்றி சற்று சிந்தித்துப் பார்த்திருப்போமா? அல்லது நாம் உண்மை என்று ஏற்று நடந்த ஒரு விடயத்தை அல்லது நடக்கின்ற ஒரு விடயத்தைதான் ஒரு சில வினாடிகளுக்காவது பொய்யாக இருக்க வாய்ப்பிருக்கின்றதா என்றாவது கிஞ்சிற்றேனும் சிந்தித்ததுண்டா? இல்லைதானே! இவைகளும் எமக்கு, எமது அன்றாட வாழ் நாட்களில் தூரமும் தொலைவும்தான்.

இவையிரண்டும் காலத்தால் கட்டுண்ட ஒன்று என்பதனை நீங்கள் அடிப்படையில் கருத்திற் கொள்ள வேண்டும். காலத்தினால் கட்டுண்ணுதல் என்றால் என்ன? இந்த உலகத்தில் காலம் படைக்கப்பட்டிராது போனால் உலகத்தின் இயக்கமே இருந்திராது. இந்த உலகத்தினை படைக்க முன்பு இறைவன் காலத்தைத்தான் படைத்தான். காலம் என்பது பொன்னானதும் பொல்லாததும் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். காலத்தினால் கட்டுண்ட இந்த வஷ்துக்களினால்தான் இந்த உலகத்தில் ஜீவிக்க முடிகிறது. அல்லாது போனால் நீங்கள் இந்த உலகத்தில் வாழவும் முடியாது, மீளவும் முடியாது. ஏனெனில் இவற்றுக் கெல்லாம் காரணம் காலம்தான். எமது விஞ்ஞானம் அதனை நேரம் என்று அழைக்கின்றது ஒரு ஆய்வுக்காக. நேரங்களினது படிமங்களைத்தான் நாம் காலம் என்கின்றோம். ஆனாலும் இங்கு ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நேரம் என்று நாம் கூறுகின்ற வேளை தற்போது இடம் பெறுகின்ற நிலைகளையும், இடம்பெறயிருக்கின்ற நிலைகளையும்தான் நாம் கருத்திற் கொண்டு நோக்குகின்றோம். இத தவறான நிலைப்பாடு. காலம் என்கின்ற சொற்பதம் அப்படியல்ல அது முக்காலங்களுக்குமான தொகுப்பாக விளங்குகின்றது. 
படைப்பினங்கள் யாவும் காலத்திற்கு கட்டுண்டு கிடப்பதனால் நாமும் இயல்பால் காலத்திற்கு கட்டுப்பட்டவர்கள். இறைவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன், கட்டுண்ணாதவன். நாம் தற்போது இருக்கின்ற இயல்பில் இருக்கும் வரை காலத்திற்கு கட்டுண்டவர்களாகவே இருப்போம். இருக்கின்ற இயல்பு மாற்றம் பெறுகின்ற போது நாம் காலத்தை கடந்து, வஷ்துவாயிருப்பதனை விட்டும் காலத்திற்கு அப்பால் பிரசன்னமாயிருப்போம் என்பதுதான் உண்மை. நான் கூறுவது உங்களுக்கு விளங்கவில்லை எனில் அது உங்களுக்கு இருக்கின்ற அறிவின் தன்மையில் இருக்கின்ற குறை. அதற்காக நான் உங்கைள அறிவில்லாத ஒருத்தர் என்று கூறவில்லை. நான் எனது முதற்பந்தியில் கூறியதனை சற்று சந்தியுங்கள்.

ஒருவர் மரணித்துவிட்டால் நாம் அவரை சிலவேளை, இறந்துவிட்டார் என்றும், மரணமடைந்துவிட்டார் என்றும் கூறுகின்Nறூம். இன்றும் சில வேளை, காலமானார் அல்லது ஆகாலமானார் என்று கூறுகின்றோமே, இதன் விளக்கங்களை எப்போவாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? நீங்கள் இவ்வுலகத்தில் வாழ்ந்து நற்பெயர் கண்டு இறந்துவிடுகின்றீர்கள். அப்போது உங்களை இந்தச் சனங்கள் காலமாகிவிட்டார் என்று கூறுவார்களானால் மகிழ்ச்சி அடையுங்கள். காலமானார் என்றால் நீங்கள் காலத்தால் அழியாத இடத்தினை பெற்றுக் கொண்டீர்கள் என்பதுதான் அர்த்தம். நீங்கள் மரணித்த பின்னரும் உங்களை இந்த சமூகம் அன்றாடம் நினைவுகூருகின்றது என்பதுதான் பொருள். இது நான் மேலே கூறியதனைப் போன்று இருப்பினும், மகவும் குறுகியது.

தற்போது விடயத்திற்கு செல்வோம். தூரம் என்றால் என்ன? நீங்கள் கணிதம் அல்லது விஞ்ஞானம் படித்தவராயின் வேகம்  நேரம் என்று இலகுவாக கூறிவிடலாம். அது உண்மைதான். ஆனாலும் நாம் பல தடவைகளில் நேரத்தினையும் வேகத்தினையும் மறந்துவிட்டுத்தான் தூரம் என்பதனை கணக்கிடுகின்றோம். 532 கிலோ மீற்றர்கள் என்பது எவ்வளவு தூரம் என்று நீங்கள் கற்பனை செய்கின்றீர்கள். எனக்கு சுமார் 250 கிலோ மீற்றர்கள் பயணிக்கவே 11 மணித்தியாலங்கள் தேவையாகின்றது. அப்படியென்றால் இது எவ்வளவு தூரமாயிருக்கிறது. இப்படித்தான் நாம் சிந்திக்கின்றோமல்லவா. எனது நண்பன் ஒருவன் ரஷ்யாவில் படிக்கின்றான். அவன் நாடு வந்தபோது ரஷ்யாவிலிருக்கும் எமது பிறிதொரு நண்பனைப்பற்றி விசாரித்து அறிந்து கொண்டேன். அப்போது அவனிடம் உன்னுடைய இடத்திலிருந்து தூரமான இடத்திலா அவன் இருக்கின்றாhன் என்று கேட்டேன். அதற்கு அவன் இல்லை, மிகவும் கிட்டத்தில்தான் இருக்கின்றான் என்றான். ஆப்போது நானும் எவ்வளவு நேரம் எடுக்கும் என்று கேட்டேன் சுமார் 20-25 நிமிடங்களில் எனது இடத்திலிருந்து சென்றிட முடியும் என அவனும் மிகவும் சாதாரணமாக பதிலளித்தான். பின்னர் தொடர்ந்து உரையாடுகின்ற வேளையில்தான் புரிந்தது அவனிருப்பது 532 கிலோ மீற்றர்கள் தொலைவில் என்று. இருந்தவர்கள் அனைவரும் வாயைப் பிளந்து நின்றனர். அவ்வளவு தூரமா என்று. இது வேகத்தினால் வருகின்ற வினை. ஆனாலும் இதனைத்தான் தூரம் என்று கூறுவது.

ஆனால் தொலைவு என்பது எனது கருத்தில் வேறானது. அதாவது தொலைவு அல்லது தொலைதல் என்பது ஒரு பொருள் எனது கட்டுப்பாட்டிலிருந்து தூரமாவது அல்லது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்படுவது எனக் கூறலாம். எனது பேனை தொலைந்துவிட்டது என்றால் என்ன? அதன் அர்த்தம் எதுவோ அதுதான் தொலைதல் என்பதன் மிக எளிமையான விளக்கம். அதாவது, நான் கட்டுண்டு கிடக்கின்ற காலத்தினை விட்டும் அது அப்பாற் சென்றுவிட்டது என்பதுதான் பொருள். ஆனால் அது வேறு நபர்களுக்கு தொலைதலாக இருக்காது. அவர்களிலிருந்து எப்போது அது காலத்தினை விட்டும் அகன்று விடுகின்றதோ அப்போதுதூன் அவர்களுக்கு தொலைவு. ஆனாலும், பாருங்கள் அந்த பொருள் (பேனை) காலத்திற்கு கட்டுண்டதாகத்தான் இருக்கின்றது.

நான் எனது குடும்பத்தினை விட்டு தொலைந்துவிட்டேன் என்றால், அவர்களின் காலக்கணக்கில் இருந்து நான் விடை பெற்றுவிட்டேன். ஆனால் எனது சுயம் காலத்திற்கு கட்டுப்பட்டதாகவே இன்னும் இருக்கின்றது. அங்கு எனக்கென்று காலம் ஒன்று இருக்கின்றது. நான் வாழ்வேன். எங்கேயாவது எனது இருப்பு கிடக்கும். என் பெற்றோர்களுக்கோ அது அப்பாற்பட்டதாக இருக்கும். பிள்ளை சென்ற இடம் தெரியாது பரிதவிக்கும்  தாயின் நிலமை இதுதான். இதனை தூரம் என்று கூற முடியும்தானே என்று நீங்கள் கேட்கலாம். அப்டியென்றால் அங்கு வேகமும் நேரமும் இருக்க வேண்டுமல்லவா? அங்குதான் அவை இருக்காதே.

நேற்று இரவு நான் ஒரு செய்தியினை படிக்க நேர்ந்தது. அந்தச் செய்தியில் "தூரமானது மிக விரைவில் தொலைந்து போகும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை படித்த பின்புதான் மேற்கூறிய நினைவுகள் எனக்குள் தோன்றின. இன்னும் பல வகை எண்ணங்கள் எனக்குள் மீட்பு செய்தன.

ஒரு பொருள் உண்மையில் தனது சுயத்தினை காலத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து கடந்து சென்றுவிடுமானால் அதனைத்தான் நாம் இறப்பு அல்லது மரணம் அல்லது சாவு என்று கூறுவது. நான் இறந்துவிட்டேன் என்றால் காலக்கணக்கில் கட்டுண்டு கிடக்கும் உங்களுக்கு நான் பிரிந்து சென்றுவிட்டதாக தோன்றும்.(தோற்றம் பற்றி ஏற்கனவே கூறியிருக்கின்றேன்)அல்லது இல்லாமல் போய்விட்டதாக தோன்றும். ஆனால் எனது கருத்தில் அர்த்தம் அவ்வாறல்ல. மாறாக , நான் இந்த காலத்தால் கட்டுண்டு கிடப்பதனை விட்டும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றேன் அல்லது விடுதலையடைந்துவிட்டேன் என்றுதான் பொருள். இங்கு நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். ஏற்கனவே நான் கூறியிருக்கின்றேன் இறைவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். அவன்தான் என்னையும் உங்களையும் கூடவே காலத்தை படைத்தான் என்று. ஆக நான் இருக்குமிடம் காலத்திற்கு அப்பாற்பட்ட இடம். ஆனால் நான் அங்கு இருப்பேன். ஆக தொலைவு என்பது காலத்தால் கட்டுண்டவர்களுக்கு கிடைப்பது. காலத்தாற் கட்டுண்ணாதவர்களுக்கல்ல.

இதனை நாம் மிக இலகுவில் புரிந்து கொள்ள முடியாததற்கு நியாயம் இருக்கின்றன. நாம் படைக்கப்பட்டுள்ள விதம், குறிப்பாக எமது உடல்தான்; மிகவும் முக்கிய பங்காற்றுகின்றன. நீங்கள் இருக்கின்ற அறையில் ஒளிர் விட்டுக் கொண்டிருக்கும் மின் குமிழ்களினை சற்று நோக்குங்கள். அதன் ஒளியினை பற்றி சந்தியுங்கள். அந்த மின் குமிழுக்கு சக்தி எங்கிருந்து கிடைத்தன? அதன் அவ்வளவு பிரகாசத்திற்கு காரணம் என்ன? இப்பொழுது உங்களுடைய அடுத்த அறையில் இருக்கும் வேறு ஒரு மின் விளக்கிலிருந்து வருகின்ற ஒளியினையும் சற்று கற்பனை செய்து பாருங்கள். இரு அறைகளிலும் சுடர்விடும் ஒளியில் உங்களுக்கு வேறுபாடு கிடைக்கின்றதல்லவா! ஆம் நிச்சயமாக வேறுபாடு இருக்கும். இப்பொழுது, அப்படியே இரு மின் குமிழ்களும் சுடர்விட அந்த அறைகள் இரண்டும் நீக்கப்பட்டுவிட்டால் என்ன நடக்கும் என்று  சற்று கற்பனை செய்து பாருங்கள். உங்களுக்கு ஒரே மாதிரியான ஒளி கிடைக்கின்றதல்லவா? அப்படியே உங்கள் வீட்டில் இருக்கின்ற அறைகளையெல்லாம் நீக்கி விட்டு மின்குமிழ்கள் மட்டும் எரிகிறது என்று கற்பனை செய்யுங்கள். தற்பொழுது உங்களால் இந்த உலகத்திலிருக்கின்ற ஒளியிலிருந்து உங்கள் வீட்டு மின்குமிள்களின் வெளிச்சத்தினை வேறுபடுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது.

நீங்கள் வேறாக கண்ட ஒளியின் தூலங்களெல்லாம் ஒருமிக்கும் நிலைதான் அது. இப்படித்தான் எமது ஆத்மாவும். இஸ்லாமிய அறிஞர் ஒருவருடைய கூற்று எனக்கு ஞாபகம் வருகின்றது.

"உனது ஆத்மாவினை நினை. ஆதன் மகாத்மியங்களை அறிந்து கொள்ள முயற்சி செய். நீ உடலாலல்ல ஆத்மாவினால்தான் மனிதன்" - இமாம் றூமி (றஹ்)

அத்தோடு பாரதியாரின் கவிதையொன்றும் எனக்கு நினைவுக்கு வருகின்றது...

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பணம்தானோ
பலத் தோற்ற மயக்கங்களோ

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ற மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ
போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ!

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ 
அந்த குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைவதெல்லாம் காண்பதன்றோ
நானும் ஓர் கனவோ!
இந்த ஞாலமும் பொய்தானோ! 

தொடரும் எமாற்றங்கள்

என்னடா இது தலைப்பே 'தொடரும் ஏமாற்றங்கள்' என்று துவங்குகின்றது என்று ஆச்சரியப்பட வேண்டாம். எல்லாம் தொடர்வதனால்தான் இன்று முனக வேண்டியிருக்கின்றது. இன்று எதனைப்பற்றி எழுதலாம் என்று சற்று சிந்தித்து விட்டு, தலைப்பை சரியாக அழுத்தம் திருத்தமாக போட்டுவிடுவோம் என்ற எண்ணத்துடன் சுமார் பத்து நிமிடங்களை ஓட்டிவிட்டேன். அப்படி நேரம் சென்று கொண்டிருக்கையில்தான் இப்படியொரு தலைப்பு சடுதியாக மனத்தில் தோன்றியது. தோற்றத்தினைப் பற்றி கூறுகின்ற போதுதான் ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது 'இந்த வாழ்வில் தோற்றம் அல்லது தோன்றுதல் என்பதுதான் பெரும் அவதியும் கூடவே மகிழ்ச்சியும்'. ஆனாலும் இந்த தோற்றத்திற்கும் மனத்தின் அலைகளுக்குமிடையில் எப்போதும் உறவொன்று இருந்ததே கிடையாது. இதன் காரணமாகத்தான் வாழ்வியலின் அனைத்து பகுதிகளும் அடிக்கடி மாற்றம் பெறுகின்றன அல்லது நிலமைகளைப் பொறுத்து விசுவரூபமெடுக்கின்றன.

பாருங்கள் இந்த தலைப்பு சடுதியாக என் மனத்தில் தோன்றுவதற்கும் ஒரு காரணம் இருக்கின்றது. என்னால் நாளாந்தம் ஏமாறுகின்ற ஒருத்தி இருக்கின்றாள் என்னுடைய அலுவலகத்தில். மன்னிக்கவும்...அவர் வயதில் மூத்த ஒருவராக இருந்தாலும் இங்கு ஒருத்தி என்றுதான் கூறுகின்றேன். இப்படித்தான் என்னுடைய பாடசாலைக் காலத்தில் நான் சற்று புரட்சிகரமான நியாயங்களை முன்வைக்கின்ற தன்மை என்னிடம் இருந்ததாம். இப்படித்தான் ஒரு நாள் பாடசாலை ஆசிரியர்கள் ஓய்வெடுக்கும் அறையிலிருந்த கதிரையொன்றில் சற்று அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தேன். இந்த நேரம் அங்கு ஆசிரியர்கள் எவரும் இருந்திருக்கவில்லை. ஆனாலும், சற்று நேரத்தில் அங்கு வந்த ஒரு ஆசிரியர் நான் ஆசிரியர்கள் அமரும் கதிரையில் மிகவும் உல்லாசமாக அமர்ந்து கொண்டிருப்பதனை கண்டுவிட்டு இன்னும் சில ஆசரியர்களை அங்கு வரவழைத்து விட்டு எனக்கு திட்டிக் தீர்த்துக் கொண்டிருந்தார். நானும் பொறுமையாக கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். இறுதியில் என்மனத்தில் பட்டதனை அப்படியே கூறிவிட்டேன். அப்படியென்ன கூறியிருப்பேன் என்று ஆழமாக சிந்திப்பதற்கு அங்கு ஒன்றும் கிடையாது. அந்த ஆசியரியரை பார்த்து நான் கூறியது 'மரியாதை என்பது மனத்திலிருக்க வேண்டியது' என்பதுதான்.

விடயத்திற்குச் செல்வோம்.... அவள் வேறொருத்தியுமல்ல எனது அலுவலகத்தில் வேலை புரிபவர்களுக்கு தேநீர் தயாரித்து கொடுக்கின்றவள்தான். வழமை போன்று இன்றும் அவள் எனக்காக காலையில் பால் கலந்து கொண்டுவந்து வைத்திருந்தாள். ஆனால் எனக்கு இந்த தேநீர், பால் என்பவற்றிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. அது என்னுடைய நாளாந்த செயல்பாட்டில் இல்லாத மேலதிக விடயமாக இருப்பதனால் அவற்றை நான் கவனிப்பதும் கிடையாது. வழமையாக அவளும் எனக்காக இவற்றை மேசையில் வைத்து விட்டுச் சென்று மீண்டும் வெறும் கோப்பையினை எடுப்பதற்காக வருவாள். இந்த நேரத்தில்தான் நானும், அதன் ஞாபகம் வந்து அதனை குடிப்பதற்று முயற்சிப்பேன். பின்பு அவளும் சற்று புன்னகையுடன் சென்றுவிட்டு, மேலும் சில மணித்தியாலங்களில் வந்து வெறும் கோப்பையினை எடுத்துச் செல்வாள். இப்படி தொடர்ந்து அவளுக்கும் என்னால் ஏற்படுவது காத்திருப்பும் ஏமாற்றமும்தான். இன்றும் நான் எதனைப் பற்றி எழுதுவது என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவள்தான் வந்து கதவினை திறந்தாள். ஆனால் வைத்த தேனீர் அப்படியே இருந்ததனால் மீண்டும், வழமையான விடயம்தான் என புன்னகையினால் கூறிவிட்டு சென்றுவிட்டாள். இந்த ஏமாற்றம் அவளுக்கு தொடர்ந்து கிடைப்பதினால் இங்கு தலைப்பும் 'தொடரும் ஏமாற்றங்கள்' என்று வந்துவிட்டது. 

நாம் ஏன் ஏமாந்துவிடுகின்றோம் என்ற வினாவுக்கு முன் சென்ற கீறலில் நம்பிக்கையினால்தான் என்று கூறினேன். இன்று இந்த நம்பிக்கை பற்றி சற்று கூற வேண்டியிருக்கின்றது. நம்பிக்கை என்றால் என்ன? அதன் அபாரம் எவ்வாறானது? அதனை எவ்வாறு உபயோகிப்பது? அதனை எவ்வாறு உபயோகிப்பது என்பதனைவிட எவ்வாறு கையாள்வது என்று அவதானிப்பது மிகவும் பொருத்தமான ஒன்று என்று நினைக்கின்றேன். நிச்சயமாக நாம் ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது அதிக நம்பிக்கை வைத்தால் அதில் ஏமாற்றம்தான் விஞ்சும் என்பதில் எனக்கும் எந்தவித சந்தேகமும் கிடையாது. சிலர் என்னிடம் கேட்கின்றனர். ஆவ்வாறெனில், ஏமாறாத அளவுக்கு நாம் ஒன்றின் மீதோ அல்லது ஒருவரின் மீதோ நம்பிக்கையினை வைத்துவிட முடியாதா? என்று. 

மிகவும் சிறப்பான ஆலோசனைதான். ஆனாலும், இந்த உலகத்தில் அது முடியாத காரியம். ஏனென்றால் நம்பிக்கை என்பது யதார்த்தத்தில் ஒரு பொதுமைப் பெயர். அதனை நாம் என்னவென்று அறியாமலேயே உபயோகிக்கின்றோம், இன்னும் ஏன் அதுவாக பலதை கற்பனை செய்துகொண்டு முடிவெடுத்துக் கொள்கின்றோம். அப்துர் றஹீம் அவருடைய நூலொன்றுக்கு வைத்திருக்கும் பெயர் 'எண்ணமே வாழ்வு' என்பது. ஆனால் அதனை வாசித்த எனக்கு விளங்குவது நம்பிக்கை என்பதனை நாம் இதுதான் என சுட்டிக்காட்ட முடியாது என்பதனைத்தான். ஆனாலும் அவர் பல்வேறு விடயங்களை அந்த புத்தகத்தில் அடுக்கிச் செல்கின்றார். வாஸ்தவம்தான். என்றாலும், அதில் கூறப்படுகின்ற விடயங்கள் மனித வாழ்வில் இடம்பெறுகின்ற சில கால கட்டங்கள் மாத்திரமே. அதன் போது எம்மை நாம் எவ்வாறு மாற்றீடாக பயன்படுத்திக் கொள்கின்றோம் அல்லது எவ்வாறு மாற்றீடாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதனைத்தான் அவைகள் கூறுகின்றன. சுருக்கமாக கூறினால் அவ்வளவும் நாம் இந்த உலகத்தில் வாழ்கின்ற நேரங்களின் தொகுப்பு. இந்த நேரங்களை நாம் சரியாக பயன்படுத்தாத வேளை அவை எமக்கு எமாற்றங்களைத்தான் தருகின்றன. இந்த நேரங்கள் எம்மோடு தொடர்ந்தும் விளையாட முனையுமானால் அவைதான் எமக்கு தொடரான ஏமாற்றங்களை கொண்டுவந்து குவித்துவிடுகின்றன. இந்த நேரத்தினை பற்றி பிறிதொரு சந்தர்பத்தில் மிக ஆழமாக தருகின்றேன்.

எம்மால் அடிப்படையில் வாழ்க்கையினை பூர்த்தி செய்ய முடியாது. அப்படி பூர்த்தி செய்ய முடியாத போது எம்மால் அந்த வாழ்வின் அம்சங்களை அடைய முடியாது போகிறது. இதனால் எமக்கு கிடைப்பன எல்லாம் ஏமாற்றங்கள்தான். நீங்கள் என்னதான் வெற்றி பெற்றதாக ஆராவாரம் செய்தாலும் உங்களிடத்தில் உண்மையில்  ஒன்றும் கிடையாது என்பதனை என்னால் உறுதியாக கூற இயலும். ஏனென்றால் நீங்கள் நேரத்தினை விட அவ்வளவு கெட்டிக்காரர் இல்லை. நீங்கள் இன்று வைத்திருக்கின்ற நம்பிக்கையினை நாளையும் அவ்வாறே வைத்துக் கொள்வீர்கள் அல்லது உறுதியாக பற்றிக் கொள்வீர்கள் என்று நீங்கள் கூறுவீர்களானால் இதனைப் போல ஒரு மடத்தனம் உலகத்தில் கிடையாது. மனிதனின் மனத்தின் அடிப்படை தன்மையே அடிக்கடி மாறுவதுதான். சிலவேளை, காரணம் இல்லாமலேயே மாற்றங்கள் மனத்தில் ஏற்படலாம். அதற்காக நாம் மனத்தினை அதன் தன்மையினை பூரணமாக ஒதுக்கிவிட முடியாது. இப்படி மனம் என்பது விபரிக்க முடியாததாயும், நம்பிக்கை என்பது எமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டதாயும் இருப்பதனால் ஏமாற்றுவதும், ஏமாறுவதும் நாமாய், எமது மனமாயிருக்கின்றோம்.

வாழ்வென்பது தொடருமானால் ஏமாற்றமும் தொரும். அது பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் கூட தொடர்ந்தாலும், எமாற்றமும் அடுத்து பின்வந்தே தீரும். இதற்காக நாம் இருக்கின்றவற்றை வைத்து திருப்திப்பட்டுக் கொள்ளவோ அல்லது கிடைத்தவைகளை வைத்துக் கொண்டு வெற்றி வாகை சூடியதாகவோ கற்பனை செய்தால் அதுவும் ஒரு ஏமாற்றம்தான். ஆனால் எமது புறம்பான நம்பிக்கை அதனை ஏற்றுக் கொள்ளும் படி எமது மனத்தினை வற்புறுத்துகின்றது என்பதுதான் அர்த்தம். 

இப்படித்தான் என்னைவிட்டும் தொலைவானவர்களில் ஒருத்தி அவளுடைய முஞ்சிப் புத்தகத்தில் விட்டிருந்த வாக்கிமொன்று தன்னைத்தானே வலிந்து ஏற்கச் செய்கின்ற வகையான கூற்றொன்றாக எனக்குத் தோன்றியது. தோற்றத்தினை பற்றி நான் ஏற்கனவே பேசிவிட்டேன். ஏமாற்றங்களையும், ஏமாறல்களையும் கிஞ்சிற்றேனும் மதியாது, இன்னும் மறக்கடித்துவிட்டு அறிவிற்கும் புத்திக்கும் அப்பாற்பட்டதொரு வாழ்வினை வாழுமாறு அந்த கூற்று எம்மை பணிக்கின்றது.  மறுபுறத்தில் என்னதான் நடந்தாலும் நான் ஏமாறப் பிறந்தவனென்றால் ஏமாந்தே செல்வோம் என்று அது ரீங்காரம் செய்கின்றது.

"மனமகிழ்வின் இரகசியம் என்ன விரும்புகின்றோமோ அதைச் செய்வதில் இல்லை: எதனைச் செய்ய நேரிடுகிறதோ அதனை விரும்புவதில் உள்ளது." (று)

இந்தக் கூற்று உங்களுக்கு நன்றாக தோன்றுவன போன்று எனக்கு புரியவில்லை. எனக்குப் புரிவன உங்களுக்கும் புரியலாம் அல்லது புரியாமல் போகலாம். அது அவரவரின் நேரம் படுத்தும் பாடு. இங்கு விருப்பம் என்றால் என்ன? பரந்த நோக்கில் அவதானித்தால், வாழ்வியலின் நோக்கில் அவதானித்தால் அதுவும் நீங்கள் வழமையாக கொள்கின்ற நம்பிக்கையில் ஒரு பகுதிதான் அது. விருப்பு வெறுப்பு என்பன அவரவர் புத்திக்கு பட்டதொரு விடயம். அது அனுபவததினதும் ஆற்றலினதும் அடித்தளத்திலிருந்து தோன்றுவது. நான் விரும்புகின்ற அதே மலரைத்தான், அதே நிறத்தைத்தான் மனிதனாக பிறந்த நீங்களும் விரும்ப வேண்டும் என்ற ஒன்றும் கிடையாது. இப்படியாக, மகிழ்ச்சி என்பதும் தனக்கு விருப்பமான ஒரு விடயத்தினை நிறைவேற்றிக்கொள்வதில் கிடையாது. மாறாக எதனைச் செய்ய நேரிடுகின்றதோ அதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கின்றது என்பது இதன் கருத்து. அறவே மெய்யியலுக்கு ஒத்துவராத கருத்து. எந்தவித உண்மையும் புலப்படாத கருத்து. எந்தவொரு தத்துவமோ அல்லது மத போதனைகளோ ஏற்றுக் கொள்ளாத மடத்தனமான கருத்து.

ஏனெனில், மனிதனின் எந்தவொரு நடவடிக்கையும் அடிப்படையில் நியாயத்துடன் பிறக்க வேண்டும். ஆவ்வாறெனில், ஒருவன் ஒரு பொருளை விரும்புவானாயின் அதற்கான நியாயம் இருத்தல் அவசியம். அவ்வாறு நியாயாம் இருக்குமாயின் அது இடம்பெறல் வேண்டும். மாறாக பிறிதொரு நியாயம் நடந்து அதனால் அவனுடைய விருப்பம் நடவாமல் போனாலும், இதனை விரும்பிக் கொள்ள வேண்டும்' அதில்தான் உண்மையான மகிழ்ச்சி பொங்கும் என்று எப்படிக் கூறுவது?

உதாரணத்திற்காக, எனக்கு வெள்ளை நிற ரோசா மலர் என்றால் நிறைய விருப்பம். காரணம், எனக்கு வெள்ளை நிறத்தினை பிடிக்கும், அதன் இதழ்களில் காணப்படும் மென்மையினை பிடிக்கும் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் எனது தோட்டத்தில் ஒரு வெள்ளை நிற ரோசா செடியினை நட்டு வைப்பதற்காக விரும்பிய போதும் எனக்கு அதன் கன்றுச் செடி கிடைக்கவில்லை. இறுதியில் எனக்கு நன்பர் ஒருவரின் மூலம் ஒரு சிவபப்பு ரோசா செடி, முட்களுடன் கிடைக்கின்றது. நானும் அதனை எனது தோட்டத்தில் நட்டு வைத்திருக்கின்றேன். இதற்காக நான் அந்ந சிவப்பு ரோசா செடியில் பூக்கும் மலர்களை எனக்கு விருப்பமானதாக மாற்றிக் கொள்ள வேண்டுமா? அல்லது இதற்காக நான் மகிழ்ச்சிப்படத்தான் முடியுமா? அவ்வாறு எனது தோட்டத்தில் சிவப்பு நிற ரோசா செடியிருப்பதற்காக நான் அகம் மகிழ்ந்தாலும், அந்த மகிழ்ச்சி இதே எனது தோட்டத்தில் வெள்ளை நிற ரோசா செடியிருப்பதனால் ஏற்படுகின்ற மகிழ்ச்சிககு; நிகராகுமா? கூறுங்களேன்....!

நீங்கள்  இந்த வினாக்களுக்கெல்லாம் ஆம் என பதில் தந்துவிடலாம். பதில் தருவது எளிதுதான். ஆவ்வாறெனில், நான் எனது விருப்பத்திற்கான நியாயத்தினையும் மாற்றிக் கொள்ள வேண்டியேற்படுமல்லவா? அதாவது, எனக்கு வெள்ளை ரோசாவின் நிறம் பிடித்திருந்தது. அதன் இதழ்களின் மென்மை என்னை ஆர்ப்பரித்திருந்தது என்பதனையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, தற்போது எனக்கு சிவப்பு ரோசா பிடிக்கிறது, அதன் அழகு மிருதுவானது என்று கூறுவது எப்படி? அப்படிக் கூறுவது எனக்கென படைக்கப்பட்டுள்ள மனித இயல்பினை உங்களைப் போன்று அல்லது யாரைப் போலவும் மாற்றிக் கொள்வதற்கு சமமானதல்லவா! நான் நானாக இருப்பதனை விட்டு விட்டு வேறு யாராகவும் இருக்க முற்படுவேனேயானால் என்னில் இத்தனை சிறப்புகள் எதற்கு?

வாழ்வியலில் ஏற்படுகிக்;ற விடயங்களை ஏற்றுக் கொள்வதிலும், விரும்பி ஆசை கொள்வதிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.  வாழ்வில் இடம்பெறுகின்ற விடயங்களை ஏற்றுக்கொண்டு அனுசரித்து செல்லது வேறு. அதனை விரும்புவதென்பது வேறு. இதனால்தான் நான் முன்பு கூறியிருக்கின்றேன்...ஏமாற்றத்தினை உங்களால் தவிர்ந்து கொள்ளவோ அல்லது அதிலிருந்தும் தப்பிக் கொள்ளவோ உங்களால் முடியாது. இருப்பினும், அதனை எதிர்பாhத்து காத்திருக்க முடியும். ஆதனை தனக்கென போதுமாக்கிக் கொண்டு வாழ முடியும். ஆனாலும், மேற்குறித்த கூற்றினை அவதானித்தால் .....ஏமாற்றங்களை மறந்துவிட்டு நடந்ததனை தமக்கென ஆக்கிக் கொண்டு செல்லுங்கள் என்று கூறுகின்றது. அப்படி சென்றால்.... நாம் எமக்கு நடந்தவைகள் ஏமாற்றங்களதான்; என்பதனை மறந்துவிட்டு இந்த வாழ்வியலில் நொடிந்து நொறுங்கிப் போக வேண்டியதுதான்.

அப்படியே சென்றால், எனக்கு தேநீர் தரும் அவளைப் போன்று தொடர்ந்து ஏமாற்றங்களைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். ஏனெனில், அவள் ஒவ்வொரு நாளும் நான் நேரத்திற்கு அதனைப் பருகியிருப்பேன் என்று நம்புகின்றாளல்லவா! அதேபோன்று, தொடர்ந்தும் இவ்வாறு நடப்பதனை விரும்பி ஏற்றுக் கொண்டு செல்கிறாளல்லவா! இதே வேளை, அவளுடைய மனத்தில் தான் ஒவ்வொரு நாளும் ஏமாந்து செல்வதாக அவள் இன்னும் கற்பனை செய்து கொள்ளவில்லை என்பதனை உங்களால் கூற முடியாது. ஆனால் எனக்குத் தெரியும், அவளும் இந்த ஏமாற்றங்களை நாளாந்தம் எதிர்பாhத்துக் காத்திருப்பதாக அவளுடைய புன்னகை இன்று எனக்கு தெரியப்படுத்தியது.... நாளைக்கும்தான் அது நடக்கும்.....

சில மனிதர்கள் அப்படியொரு சுயநலவாதிகள்???



இவைககள் யாவுவும் உன்னைப் பற்றியனவென்று
நீ நினைக்கின்றாயா?
புதர்களுக்குள்ளால் எழும்
காலையிளம் கதிரின் சுட்டெரிப்புக்காக
இரா முழுதும் காத்திருக்கின்றேன்.
கனவுகளில் அப்படியொரு நம்பிக்கை,
ஆனால் நான் காண்பதெல்லாம், 
மிச்சம் வெறுமை,
நிலாவின் தூலங்கள்.
ஒரு தடைவ நான் மகிழ்வாகவும்
களிப்பாகவும் இருந்தேன்.
தற்போது தனிமையும் கவலையும்தான்.


உன்னில்தான் அத்தனை 
பளிகளையும் சுமத்த வேண்டும்.
நீயும் உண்மைக்கு மாற்றமாய்த்தான் இருந்தாய்.
என்னுடைய முயற்சிகள் யாவும்
உந்தன் பரீட்சைகளில் தோற்றுப்போயின.
கோடைக் காலம்,
மாரிக் காலம்,
வசந்த காலம் அத்தனையும்
வந்து போயின.
யாவும் உன்னுடைய விளையாட்டுக்கள்,
நான் தவறிவிட்டேன்.
  
நீ எனது வாழ்வை எடுத்துக் கொண்டாய்.
கூரிய கத்தியினால்,
எனது இதயத்தினை துண்டமாக்கினாய்.
நான் கண்ணீரால் கிடத்தப்பட்டேன்,
குருதி பெருகவில்லை.
ஓடைப்பக்கமாக அவர்கள் வந்தார்கள்,
அப்போது வெள்ளம் பெருகியிருந்தது,
என்னை எச்சரித்தனர்.
நான் அதனை அவதானிக்க முடியவில்லை.

நான் குருடனாயிருந்தேன்.
நான் அப்படித்தான்.
இதுவெல்லாம் உன்னைப் பற்றி என
நீ நினைக்கின்றாய்.
நீயும் அப்படியொரு
உண்மைக்கு மாற்றமானவள்.
ஆனால், நான் உன்னை அழைப்பதற்காக
காத்துக் கிடக்கின்றேன்.
உலகமெங்கும் உனது விம்பந்தான்
சுற்றிக் கிடக்கின்றன.

நீ வரும் வரை 
நான் காத்திருப்பேன்.
நீதான் அதனை காண முடியும்.
நீ எனக்கு தவறு செய்தாய்,
இது பழைய பிலாக்கணம்தான்.
சில நாட்கள் உனக்கு தெரியும்,
நீ போக முடிந்த இடம்
ஒன்றுமில்லை.
  
உனது பாலங்களை
நீ தகர்த்தெறிந்தாய்.
அப்பொழுது, உனக்கு புரிந்திருக்கும், 
வாழ்க்கை விளையாட்டல்ல என்று,
இப்படித்தான் சிலரும் உன்னை நடாத்துவார்கள்.
ஆண்டுகள் கடந்து போகும்,
பொய்மை வாழ்வது கடினம் என்று
நீ கண்டு கொள்வாய்.



(இது வேறு யாருக்கும் எழுதப்பட்டது என்று நினைத்தால் அது அவர்களின் தீர்மானமேயன்றி, நான்; அப்படி நினைக்கவில்லை)

எது சுயநலம்??? யார் சுயநலவாதி???

எம்மத்தியில் பரவலாக பேசப்படும் ஒரு விடயம். ஆனால் இதுவரையில் அதன் ஆளம் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றனவா என்றால் தெரியாது. சுயத்தைப் பற்றி சரியாக புரிந்துகொண்டால்தானே யார் சுயநலவாதி என்ற வினாவுக்கு விடைகாண முடியும். இப்படித்தான் எம்மில் பலர் முக்கியமான விடயங்களை விட்டு முக்கியமல்லாத விடயங்களுக்கு அதிக முக்கியத்துவத்தினை அளித்துவிடுகின்றோம். காரணம், எமக்கு புரிதலில் ஓட்டை ஒடிசல்கள் நிறையவே இருக்கின்றன என்பதனை நாம் அதிக நேரங்களில் மறந்துவிடுகின்றோம். எமது ஓட்டை ஒடிசல்களை நாம் புரிந்து கொண்டாலும் சுயநலவாதி யார் என்ற வினாவுக்கு சரியாக அல்லது அச்சொட்டாக விடையளிக்க முடியாதுதான் என்பது வேறுவிடயம். இங்குதான் பிரச்சினையே எழுகின்றது.

அதாவது, மனிதனாக பிறந்துவிட்டால் அங்கு சுயநலம் இருந்தே தீரும். இதில் எந்தவொரு சந்தேகமும் எனக்கில்லை. நான் நன்மையான காரியம் ஒன்றினைச் செய்தாலும,; தீயன பலவற்றுக்கு தர்மகர்த்தா வேலை செய்தாலும் அதன் பின்னால் சுயநலம் இருந்தே தீரும். ஆனால் நான் மற்றவர்களிடம் இருந்து எப்படி பொதுநலத்தை மட்டும் எதிர்பார்க்க முடியம். இதுதான் பிரச்சினைக்குரிய வினா? இவை இரண்டிற்கும் மத்தியில் ஒரு தெளிவான கோட்டை உங்களால் தெளிவாக காட்ட முடியுமானால் நீங்கள் உண்மையில் சுயநலவாதியில்லை என்று என்னால் கூறமுடியும்.

நீங்கள் மற்றவர்களுக்கு கிடைப்பதனையெல்லாம் வாரி வழங்குகின்றீர்கள், கேட்டவர்களுக்கெல்லாம் உதவுகின்றீர்கள், இரவுபகலாக உதவுகின்றீர்கள், கவலையில் அவர்கள் வாடுகின்ற போது அவர்களுக்கு ஆறுதல் தருகின்றீர்கள், துன்பங்கள் துயரங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்ற வேளை அவர்களை உங்களுடைய குடும்பத்தினரை போன்று அரவணைக்கின்றீர்கள், மேலும் இப்படியெல்லாம் உங்களுடைய உதவிகள் நீண்டுகொண்டே செல்கின்றதென்றால் இதற்கு காரணம் என்ன? என்னைப் பொறுத்தவரை சுயநலம்தான். ஏனெனில் அவற்றிலிருந்து நீங்கள் பிரதிபலன்கள் அல்லது பலாபலன்கள் எதனையும் எவரிடமிருந்தும் எதிர்பார்த்திருக்கவில்லை என உங்களால் உறுதியாக கூறமுடியுமா?

இதேவேளை, நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவது கிடையாது, மற்றவர்களை சந்திந்தால் உங்களுடைய வாயிலிருந்து வருகின்ற அனைத்தும் பொய்கள்தான், உங்களுடைய பிழைப்பே மற்றவர்களை ஏமாற்றுவதும், அவர்களை ஓட்டாண்டியாக நடுத்தெருவில் விட்டுவிடுவதும்தான், மற்றவர்கள் சந்தோசத்தில் இருக்கின்ற வேளை அவர்களுடன் ஒட்டி உறவாடுகின்றீர்கள், அவர்களுக்கு ஒரு கஷ்டம் வருகின்ற போது சூசகமாக விட்டும் விலகி விடுகின்றீர்கள், அவர்களுடன் உறவாயிருக்கின்றீர்கள், நீங்கள் ஒரு உயர் இடத்தை அடைகின்றபோது அவர்களை விட்டும் தூர ஓடிவிடுகின்றீகள் அல்லது உங்களுடைய தேவைகள் நிறைவேறிவிடுகின்ற வேளையில் அவர்களை கைகழுவி விட எத்தணிக்கின்றீர்கள் என்றால் இதெற்கெல்லாம் காரணம் நான் முன்பு கூறியதைப் போன்றே சுயநலம்தான்.

இவைதான் மனிதனில் பொதுவான இயல்பு. இவைகளுக்கு மத்தியில் சிலர் அவதியுறுவதற்கு காரணம் அவர்கள் இதனால் ஏமாந்துவிடுகின்றனர். மறுபுறத்தில், இவைகளை இந்த உலக வாழ்வில் நாம் முற்றாக அழித்தொழித்துவிட்டு வாழ முடிவெடுப்போமானால் எம் ஆயுள் காலத்தை முற்றாக வீணடித்த பெருமை எமக்கு மட்டும்தான் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. நாம் நொந்து நோய்வாய்ப்பட்டு இருக்கின்ற வேளைகளில் மற்றவர்களை நாம் சுயநலவாதி என்று பச்சை குத்தி விடுகின்றோம். இதன் போது நாம் மற்றவர்களுடைய தேவைகள், உணர்வுகள், அவர்களுடைய சூழ்நிலைகள் எவ்வாறிருந்தன என்பதனைப் பற்றி சற்றேனும் கவலைப் பட்டதே கிடையாது. எனவே, இந்த மாத்திரத்தில், நாமும் சுயநலவாதிகள்தான். நாம் மற்றவர்களை பற்றி கவனத்தில் கொள்ளவில்லையே! 

மறுபுறம் நாம் அதிக சந்தோசமாக, குதூகலமாக எமது பொழுதுகளை கொண்டிருக்கின்ற வேளை மற்ற எல்லோரையும் எமது சொந்தங்களாக, நண்பர்கள் கூட்டங்களாக தீர்ப்பிட்டுக் கொள்கின்றோம். ஆனால் அவை நெடுநாளைக்கு நிலைப்பது கிடையாது. ஏனெனில் எமக்கு சந்தோசம், குதூகலம் என்பன அதிக நாளைக்கு நீடிப்பது கிடையாதே!

வாழ்க்கையில் எமாற்றம் என்பதுதான் பலரை நோந்து நோகடிக்கச் செய்கின்றது. மனிதருக்கு இருக்கின்ற நியாயத்திற்கு அப்பால் தீர்ப்பிடும் இயல்பினைத் தோற்றுவிப்பதும் இந்த மோசமான ஏமாற்றங்கள்தான். சிலர் கூறுவார்கள் 'இந்த உலகில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்' என்று. இது ஒரு குறுகிய சிந்தனை என்பதனால் நான் அதனை ஆழமாக சென்று நோக்க கருதவில்லை. இங்கு ஏமாற்றுபவர்கள் ஏமாறுபவர்கள் என்று உண்மையில் இரு வகுப்பார்கள் கிடையாது. உலகில் அவ்வாறு இறைவன் படைத்திருப்பதற்கோ அல்லது உலக இயக்கத்திற்கு அவ்வாறான வகுப்புக்களின் அவசியமோ என்னைப் பொறத்தவரையில் சாத்தியமே கிடையாது. எனது கருத்தில் இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் யாவரும் ஒன்றில் எமாற்றுபவர்களாக அல்லது ஏமாறுபவர்களாக இருக்க வேண்டும். 

எனது விரிவுரையாளர் ஒருவர் இருக்கின்றார். அவரிடம் நான் பல கருத்துக்களை கற்றுக்கொள்ள வாயப்பு கிடைத்தது. 'நாம் நம்பினால்தான் ஏமாறுவோம்' என்று அவர் அடிக்கடி கூறுவார். ஆக, நாம் எதனையும் நம்பினால் ஏமாறத்தான் வேண்டும், அத்துடன் ஏமாற்றத்திற்கு தயாராக இருப்பது எமக்கு அவசியமான ஒன்று.' அப்படி நாம் தயாராக இருப்போமானால் அது எமக்கு எந்தவொரு தீங்கினையும் இழைக்காகது என்பதுடன் யதார்த்ததத்தில் அது எமக்கு கிடைத்த ஒரு ஏமாற்றமாகவும் இருக்காது. அனுபவித்துப் பாருங்கள் புரியும்.  நாம் எதிலும் நம்பிக்கை வைப்பது தவறல்ல. ஆனாலும், நாம்தான் அதில் ஏமாறமாட்டோமே என்று எமக்குள்ளேயே எம்மைப்பற்றி தீர்ப்பிட்டுக் கொள்கின்றோமே அதுதான் தவறு. மாறாக நீங்கள் குறித்த விடயத்தில் அதிக நம்பிக்கையுடன் அல்லது குறித்த நபரில் அதிக ஆழ்ந்த நம்பிக்கை வைத்து கொண்டாடினீர்களாயின் இறுதியில் துன்பத்தை சுவைக்க நேரிடும். ஆனால் ஏமாறாமலிருக்க எந்த அளவு உங்களுடைய நம்பிக்கை குறித்த விடயதானத்தில் இருக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு எனக்கு அனுபவம் பத்தாது. அதனைப் பற்றி நான் கூற நீங்கள் கேட்க வேண்டுமானால் சில காலம் பொறுத்திருங்கள், நானும் ஏமாறவேண்டிய விடயங்கள் இன்னும் பல இருக்கின்றன.

இப்படி நீங்கள் வாழக் கற்றுக் கொண்டாலும் உங்களுக்கு பிரச்சினை முடிந்திடவில்லை. மனிதர்களிடத்தில் பொதுவான இயல்பொன்றிருக்கின்றது. அதாவது மனிதர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படி நடந்தால் இப்படித்தான் இருப்பார்கள், இப்படி அவர்கள் இருக்கவில்லை அதனால் அவன் முன்பு இப்படி இருந்தது பொய் என்றெல்லாம் ஊகித்தவைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்கும் பழக்க தோசம்தான் அவை. இவைகளினால் அவர்கள் எமக்கும் ஏதாவது பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள் என்பது தவிர்க்க முடியாதது. அதாவது, உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை நீங்கள் அவ்வளவு கருத்தில் கொள்ளாது விட்டு விட்டு, பட்ட கவலைகளை துடைத்தெறிந்துவிட்டு நீங்கள் கவலையேதும் இல்லாமலிருந்தால் அது இவர்களுக்கெல்லாம் அசாதாரணமாக தோன்றும். இதன் போது, இவன் என்னடா இவ்வளவு நடந்தும் ஒன்றுமே நடக்காதவன் போன்று இருக்கிறான், நடிக்கிறான், இவன் இவ்வளவு காலமும் நடந்து கொண்டது வெறும் பசப்புடா. என்றெல்லாம் இவர்கள் கூறலாம். கவலையே இல்லை. ஊங்களுக்கு தெரியும்தானே இவர்கள் இப்படித்தான் கூறவார்கள் என்று.

எனவே, நாம் ஏமாற்றத்திற்கு எப்போதும் தயாரக இருக்க வேண்டும். மறுகோணத்தில் ஒன்றை நீங்கள் மனத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு விடயத்தில் ஏமாறாமல் தப்பித்து விட்டீர்கள் என்று தெரிந்து கொண்டால், அதே நேரத்தில், அதே விடயம் தொடர்பாக உங்களுடைய உறவுச் சங்கிலியில் ஏதோவொரு மூலையில் மற்றொருவர் ஏமாந்துவிட்டார் என்பது உறுதி. நீங்கள் ஏமாந்துவிட்டால் உங்களில் மற்றொருவர் தப்பித்துக் கொண்டார் என்பது உறுதி. இங்குதான் வாழ்க்கை என்பதன் தத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனை நீங்கள் மனத்தில் பதித்து வைத்துக் கொண்டால் நீங்களும் குட்டையில் இருக்கின்ற மீனும் ஒன்றுதான். திமிங்கிலமாக இருந்தாலும் அல்லது சின்னக் குறுமினி பொட்டியான் குஞ்சாக இருந்தாலும் ஒரு நாள் தூண்டிலுக்கு இரையாகத்தான் வேண்டும். குட்டையென்று நான் கூறியது இந்த வாழ்வைத்தான்.

இதில் நான் திமிங்கிலமா அல்லது பொட்டியான குஞ்சுவா என்று எனக்கு தெரியாது. ஆனால் தூண்டிலில் இரையாக குத்தப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு புரிகின்றது.

இன்னும் என்னால் செல்ல முடியாது,
இப்படி என்னால் வாழவும் முடியாது,
நித்தமும் நான் அழுகிறேன்,
என்ன செய்வது? எனக்குத் தெரியாது,
எப்படி மாறுவது? எனக்குத் தெரியாது.

மற்றவர்களுக்கு நான் உதவுகிறேன், ஏன்?
அவர்களால் நான் ஏன் நாறடிக்கப்பட வேண்டும்?
இந்த சுயநலவாதிகளுக்கு மத்தியில் நான் திண்டாடுகின்றேன்.
அவர்கள் என்னை உதைக்கும் வரை,
உதறித் தள்ளும் வரை,
கொன்று தின்னும் வரை,
காத்துக் கிடக்கின்றேன்.

நான் மாறவேண்டும்,
இவர்களுக்கு உதவக் கூடாதெனும்
தீர்மானம் மட்டும் தினமும் எஞ்சிக்கிடக்கின்றன.
அவர்கள் என்னை வேண்டும் வேளை,
என்னால் முடியாமல் போகிறது.
நான் எப்போதும் அவர்களுக்காகத்தான்.

எனக்குத் தெரியும்
அவர்கள் எனது சாவுக்கும் வரமாட்டார்கள்.
அவர்கள் என்னை உபயோகித்துக் கொள்கின்றனர்,
என் மீது அவர்களுக்கு கிஞ்சிற்றேனும் கவலை கிடையாது,
இவையெல்லாம் எனக்குத் தெரியும்.
ஆனாலும் நான் எனக்கு உதவிக்கொள்ள வழியேயில்லை.
நான் எனக்காக வாழ முடியாது,
அது நியாயமும் அல்ல,
நீதியுமல்ல.
எவராவது உதவுபவர்கள் இருந்தால்
நான் அவர்களை இரஞ்சுகின்றேன்,
யாரவது எனக்கு உதவுங்கள்...
இவ்வாறே எனக்குச் செல்ல முடியாது,
நான் மாறவேண்டும்!!!
இவர்கள் ஏன் சுயநலவாதிகளாய் கிடக்கின்றனர்???
அவர்களை மற்றும் சிந்திக்கின்றனர், ஏன்;?
மற்றவர்களின் தேவை அவர்களுக்கு புரிவதில்லை, ஏன்???
இன்னும் அவர்கள் நண்பர்களை வீசி விடுவதென்றாலும்
மற்றவர்களின் கண்களுக்கு நல்லதாக மட்டும் காட்டிக்கொள்கின்றனரே!
அவர்களுக்கு உதவாத,
மோசக்காரர்களை ஆரத்தழுவுகின்றனரே! 
இவர்களால் அவர்களுக்கு எந்த அக்கரையும் இல்லை,
அவர்களின் சாவுக்கு கூட இவர்கள் வரமாட்டார்கள்.
என்ன செய்வதென்று எனக்கு புரியவில்லை.....:'((((

மிகவும் மடத்தனமான கவிதை இது... எனக்குத் தெரியும்:(  
இவைகள் அனைத்தும் எனது வாழ்வின் யதார்த்த நிலை. இவை யாவுக்காகவும் நான் மிகவம் களைத்துப் போய்விட்டதனால் தூக்கி வீசிட எத்தணிக்கின்றேன்.

மலிவு விற்பனை

இன்று நான் பொழும்பிலுள்ள மலிவு விற்பனை செய்யப்படும் இடமொன்றிற்கு செல்ல கூடியதாக இருந்தது. போகும் போது நானும் எனக்கு என்ன வகையான பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்கின்ற அவசரத்தில் பல பொருட்களை மனத்துள் கற்பனை செய்து கொண்டு புறப்பட்டேன். அது எனக்கு முற்றிலும் புதியதொரு இடம் என்பதனால் எனது கற்பனைகள் ஆசைகள் எல்லாம் எல்லை தாண்டிச் சென்றிருக்கும் என்று நான் எண்ணவில்லை. அதற்கு எனக்கு மனம் இடம் தந்திருக்கவுமில்லை. காரணம் நான் போகின்ற போக்கில் மனம் போகாமல், மனம் போன போக்கில் நான் போவதாக கூட இருக்கலாம் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். ஆனாலும், சிலவேளை நாங்கள் இருவரும் போகின்ற போக்கிற்கு அப்பால் உலகம் சென்று கொண்டிருப்பதனை நாம் காலம் கடந்துதான் படிப்பினை பெறவேண்டியிருக்கின்றது என்பதனை நினைக்கையில் வாழ்வில் சற்று வெறுப்பும் ஏற்பட்டுவிடுகின்றது. உலகத்தின் ஒவ்வொரு நொடிகளையும் நாம் சரியாக, அச்சொட்டாக முன்னறிந்துகொள்ள அல்லது ஊகித்துச் செயற்பட முடிந்தால் எமக்கு இந்த பாழாய்ப் போன வாழ்வில் எந்தவொரு துயரத்திற்கும் இடமிருக்காதுதானே!

நானும் விற்பனை நடக்கும் இடத்தினை நெருங்கிவிட்டேன். மன்னிக்கவும் மலிவு விற்பனை என்று கூற மறந்துவிட்டது. வீதியோரங்களில் வாகனங்கள் சாரை சாரையாக அடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. மனிதனின் இயங்குதலுக்கு ஊதியைக் கொண்டு விதிகள் செய்யவேண்டிய தலை எழுத்தில் அங்கும் இங்குமாக பல பாதுகாப்பு உத்தியோகத்தர்கள். மக்களைப் பாதுகாப்பது இருக்கட்டும்....ஆனால் அவர்களுக்கு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வழி தெரிந்திருக்கின்றது. அதனால்தான் வார்த்தைகளைவிட அவர்கள் தமது ஊதிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இக்காலத்தில் எவரிடம்தான் பேசி தப்பிக்க முடிகின்றது. வீணான சண்டைகளும் சச்சரவுகளும்தானே வாய்ப் பேச்சுக்களினால் அள்ளிக் கட்டிக்கொள்கின்றோம். இதற்கு காரணம் நாம் மற்றயவர்களை தாழ்வாக கருதிக் கொள்வதுதான். 
தற்போது எனக்கு கதே என்கின்ற தத்துவ பேராசிரியரின் கூற்றொன்று நினைவுக்கு வருகின்றது:

'ஒரு மனிதன் புரிந்து கொள்ளாத போதும், பொறாமைப்படும் போதும் மற்றயவரை முட்டாளாக கருதிவிடுகின்றான்'.

எத்தனை அர்த்தமுடைய கூற்று. சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.


நானும் என்ன விதிவிலக்கா என்ன? என்னையும் ஒரு பாதுகாப்பு உத்தியோத்தர் வழிப்படுத்தி என்னுடைய வாகனத்தினையும் பத்தோடு பதினொன்றாக அடுக்கி விட்டார். தற்போது நான் மலிவுவிற்பனை நடக்கின்ற இடத்தின் நுளைவாயிலை அண்மித்த போது எனக்குள் ஏதோ ஒன்று நிறுத்திக் கொண்டது. ஏன்மனம் அங்கொன்று இங்கொன்றாக ஆண்கள் இருக்குமிடம் தேடி அலைந்தது. ஆனால் அது மிகவம் சிரமமான காரியம் என்பது அப்போது எனது முடிவாக இருந்தது. உங்களுக்கு விளங்கியிருக்கும். இன்று ஆண்களில் எவருக்குத்தான் பெண்களை முகாமைப்படுத்தும் முதுகெலும்பு இருக்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ பெண்களின் அடிமைகளாகத்தான் இவர்கள் கிடக்கின்றனர். பலத்த சன நெரிசல்களுக்கும் வேகின்ற வெப்பத்திற்குமுள்ளால் நான் உள்ளே நுளைந்தேன். மலிவு விற்பனை பெண்கள் பட்டாளத்தினால் முறியடிக்கப்பட்டிருந்தது. ஆண்கள் பகுதிக்கு செல்வதென்றாலும் பெண்களின் அனுமதி அவசியம் என்கின்ற நிலமையில் விலைவாசி மிகவும் மலிவாக இருந்தது. இப்படியொரு நிலமை இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்திருந்தால் நானும் என் மனைவியுடன் சென்றிருக்கலாம். ஆனால் அப்போதும் அது மிகவும் மலிவாக இருந்திருக்கும்.
இதன்போது இன்று பெண்களின் தலமைத்துவம் எவ்வளவு ஒங்கியிருக்கின்றுது, நிகழ்கின்ற நிலநடுக்கம், சுணாமி என்பன எதற்காக என்பதற்கு முழுமையான அர்த்தமும் எனக்குள் பதியப்பட்டுக் கொண்டிருந்தன. என்ன செய்வது வந்துவிட்டோமே என்கின்ற காரணத்தினால் மலிவு விற்பனையில் நானும் பங்கேற்க வேண்டியிருந்தது. அதாவது, நடக்கவிருக்கின்ற நிலநடுக்கததிற்கும், சுணாமிக்கும் எனது ஒப்பமும் இறைவனுக்கு தேவைப்பட்டிருக்கின்றது போல. ஆனாலும் மனம் ஏதோ செய்வதறியது பொருட்களை தேடிக்கொண்டிருந்தன. பல்வேறு திசை திருப்பல்கள்களுக்கும், தவறான வழிகாட்டல்களுக்கும் மத்தியில் பலர் தமக்குரிய பொருட்களை தேடிக்கொண்டிருந்தனர். சிலர் குடும்பம் குடும்பமாய் வந்திருந்தனர், சிலர் அங்கேயே குடித்தனம் நடாத்த வந்திருந்தனர், சிலர் அழைப்பினை ஏற்று வந்திருந்தனர், இன்னும் பலர் என்னைப் போன்று விளம்பரத்துக்காக வந்திருந்தனர். மேலும் பலர் அங்கேயே முழுநாளும் தஞ்சம் புகுந்திருந்தனர் என்பது எனது அவதானிப்பு. 

இத்தனையிலும் மிக...மிக....மிக...மிக முக்கியமான விடயம் யாதெனில் வருகை தந்திருந்தவர்களில் பெரும்பான்மையானோர் எவர்கள் என்றால் 'அழிந்து போகும் அபாயாக்களும் கிழிந்து போன ஹிஜாபுக்களும்தான்' எனக் கூறுவதில் எனக்கு மிக்க ......... இப்படி கூறுகையில் எனக்கொரு கவிதை நினைவுக்கு வருகின்றது:

நாகரீகம்,
மேலேறிக்கொண்டு செல்கிறது
குட்டைப் பாவாடையில்
அவிழ்த்துக் காட்டுவதுதான்
அழகென்றால் - அது
அழிந்து போகட்டும்.

இத்தனைக்கும் மத்தியில் ஒன்று மட்டும் உறுதி. அங்கு எல்லாம் மலிவு விலையில்தான் கிடைத்தன என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. எனக்கும் எதிர்பாராத பல பொருட்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு மலிவு விலையில் சாதாரணமாக கிடைத்தன. இறுதியில் எனது கற்பனைகளுக்குள் நான் சேமித்திருந்த பொருட்களை அங்கு காண முடியாததனால் ஏமாற்றத்துடன் திரும்பவேண்டியிருந்தது.


உனக்கு சக்தியிருக்கின்றது
சகோதரியே!
உலகத்தை சஞ்சரியாதே...
அது மிகவும் கொடூரமானது,
அதன் கால் நகங்கள் விசமம் நிறைந்தன,
அழுக்கும் அனர்த்தமும் நிறைந்தது.


உனக்கென்று கனவுகள் இருக்கின்றன,
தூய்மையுடனும்
நம்பிக்கையுடனும் செல்,
அவைகள் உன்னை துண்டந்துண்டமாக
உருப்பெருக்கும்.


உன்னிடம் இருக்கின்றது சக்தி,
மிகவும் விசித்திரம் பல வாய்ந்தது,
பாதைகளை பரவசமாக்கு,
உனக்கு அற்புதங்கள் மீது நம்பிக்கையில்லையா?


எதிரியின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காதே,
நீ மிகவும் அழகானவள்,
மிகவும் அழகான ஒருத்தி,
அதனால் மிகவும் தூய்மையானவள்,
அதனால் நீ அழகானவள்.

இதயம் திறந்து உரையாடு

நாம் மற்றவர்களுக்கு கொடுக்கின்றவைகளும் அவர்களிடமிருந்து பெறுகின்றவைகளும் தாட்சண்யம் உடையதாகவும் இரக்கமுடையதாகவும் அமையப் பெற வேண்டும் என்பது எனக்குள் இருக்கின்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கையினால் நான் என்னுடைய வாழ்வில் பல தடவைகள் எனது சிந்தனைகளை சிதறவிட்டிருக்கின்றேன். எமக்குள் பொதிந்து கிடக்கின்ற தாட்சண்யமான இயல்பினை எம்மிடமிருந்து அறுத்துவிடுகின்றவைகள்தான் என்ன? எம்மை ஒரு வன்முறை மனிதனாக கடடவிழ்த்துவிடுகின்ற விடயங்கள்தன் என்ன? மாறாக, சில மனிதர்களை அவர்களுடைய இக்கட்டான சூம்நிலைகளிலும் தாட்சண்யமான இயல்பிலிருந்தும் மாறாமல் காக்கின்ற நிலமைகள்தான் என்ன? இத்தகைய சிந்தனைகள் எனக்குள் சுடர்விடத் துவங்கியது இன்று நேற்றல்ல. எனது சிறுபராயத்திலிருந்தே இப்படித்தான் நிகழ்கின்றன.

பள்ளிக்கூடத்தில் எனது சகபாடிகள் சிலவேளைகளில் என்னை கேலி புரிகின்ற போது, ஆசிரியர் என்னை எப்போதாவது நடாத்துகின்ற விதம் என்பன இன்னும் என் மனங்களை ஊடறுத்த வண்ணம்தான் இருக்கின்றன. இதனை நான் அவதானிக்கின்ற போது எனக்குள் எழுகின்ற முடிவு யாதென்றால், தாட்சண்யத்தில் எமது இதயத்தினை தங்கியிருக்க செய்கின்ற இயல்பினை தக்கவைத்துக் கொள்வது என்பதுதான். இதனைத்தான் தாட்சண்யம் நிறைந்த தொடர்பாடல் எனக் குறிப்பிடலாம். இதனைத்தான் மாகாத்மா காந்தியும் குறித்துக் கூறினார். அதாவது எமக்குள் எழுகின்ற வன்முறைக் கிளர்சியினை தூக்கியெறிந்துவிட்டு, இயல்பாக எமக்குள் புதைந்து கிடக்கின்ற தாட்சண்யத்தினையே இப்பதம் விபரிக்கின்றது. ஏம்மையறியாமலேயே அல்லது நாம் உரையாடுகின்ற வேளை, எமக்கு வன்முறையினை கையாளவேண்டும் என்கின்ற எந்தவொரு முன்னாயத்தமும் இல்லாமலேயே நாம் உபயோகிக்கின்ற சொற்கள் மற்றவர்களையோ அல்லது எம்மையோ புண்படுத்திவிடுகின்றன அல்லது வெறுப்படையச் செய்துவிடுகின்றன.

இத்தாட்சண்யம் நிறைந்த தொடர்பாடல் எமது மொழி வண்மையினை அதிகரிக்கச் செய்வதுடன், தொடர்பாடல் திறனையும் எமக்கு ஊட்டிவிடுகின்றன எனலாம். அதாவது, சுருங்கக் கூறினால் எம்மை மனிதனாக தொடர்ந்தும் நிலைக்கச் செய்வது இந்த தொடர்பாடல்தான். பெரிதாக இதனால் வேறுபடாக எதுவும் கூறப்படவில்லை. இவை சாதாரணமான விடயங்கள்தான். ஆனால் நாம் மறந்துவிடுகின்றமையினால் மீண்டும் கூறப்படுன்றது அவ்வளவுதான். எங்களை நாங்களே சுயபரிசோதனை நடாத்திக் கொள்வது, எமக்கிடையில் மனிதத் தன்மையுடன் எவ்வாறு உறவுகளை வளர்த்துக் கொள்வது, இவ்வாறு எமக்கிடையில் புரிந்துணர்வுடன் எப்படி வாழ்க்கையினை வாழக் கற்றுக் கொள்வது என்பனவற்றினைத்தான் இங்கு கூறப்படுகின்றன.

இந்த தொடர்பாடல் வழிகாட்டல் யாதெனில் அல்லது அதன் அத்திவாரம் யாதெனில், எமது கருத்துக்களை நாம் எவ்வாறு தெரிவிக்கினறோம் அத்துடன் மற்றவர்களின் கருத்துக்களை எவ்வாறு செவியேற்கின்றோம் என்பதுதான். சாதாரணமாக நாம் பேசுவது போன்றல்லாது, தன்னியல்பான பதிலளிப்பு செயற்பாடுகளுடன் அல்லது இங்கு எமது வார்த்தைகள் எமது கருத்துக்களை ஒட்டியதாக, எமது உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக, எமது தேவைகளை வெளிப்படுத்துவனவாக இதயத்திலிருந்து வெளிப்படுவனவாக இருக்கும். இங்கு நாம் எமது கருத்துக்களை தெளிவாகவும், கௌரவமாகவும் வெளிப்படுத்துவதுடன் மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவர்களாகவும், அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்பவர்களாகவும் நாம் எம்மை தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இந்நடவடிக்கை எமது வழமையான தீர்மானிக்கும மற்றும் விமர்சிக்கும்; இயல்பினால் எழும் சுயநல மனப்பாங்கை, பின்வாங்குகின்ற குணாதிசயத்தினை, தாக்குதல் செய்யும் பழக்கத்தினையும் விட்டும் எம்மை தூரப்படுத்தி எமது உறவுகளையும், குணநலன்களையும் புதியதொரு வெளிச்சத்திற்கு இட்டுச்செல்ல முயல்கின்றது. இதனால், தடை, சுயநலம் மற்றும் வன்முறை என்ப தூர வீசப்படுகின்றன. நாம் அவதானித்தவை தொடர்பாக தீர்மானமெடுப்பதனை அல்லது விமர்சிப்பதனை விட்டுவிட்டு தெளிவாக்கிக்கொள்ள முயற்சிக்கின்ற வேளை எம்மால் தாட்சண்யத்தின் ஆழத்தினை வெகுவாக புரிந்துகொள்ள இயலும். இதற்காக எம்மில் நாம் ஆழமான செவியேற்றல் - நாம் தொடர்பாகவும் மற்றவர்கள் தொடர்பாகவும், மதிப்பு, கவனிப்பு தன்னிலை உணர்தல், ஒருவருக்கொருவர் தமது ஆசைகளை பகிர்ந்து கொள்ளுதல் எனும் ஆளுமைகளை வலுப்படுத்திக் கொள்ளல் அவசியம்.

இதனை நாம் சற்று உச்சமாக சென்று சிந்தித்தால், எமது எதிர்பார்ப்புக்களை நோக்கி நாம் எங்கெல்லாம் நகருகின்றோமோ அங்கெல்லாம் எம்முடைய மனத்தினை தொடர்ந்தும் தயார் நிலையில் வைத்திருக்கின்ற முயற்சியென்றும் இதனைக் குறிப்பிட முடியும். இது மிகவும் ஆழமான ஒரு விடயம்.

என்னிடம் ஒரு சம்பவம் இருக்கின்றது. 'எனது நண்பன் ஒருவன் மோட்டர் சைக்கிளில் செல்வதற்காக தலைக்கவசம் வேண்டும், இருக்கிறதா என்று என்னிடம் கேட்டான். அப்போது நான், தலைக்கவசம் தலையிருப்பவர்களுக்குத்தானே தேவை, உனக்கு எதற்கு என்றுதான் என்னிடமிருந்து பதில் சென்றது.'

இவாவாறாக பல்வேறு சம்பவங்கள் எம்மத்தியில் இவ்வாறுதான எதேச்சையாக நிகழ்ந்துவிடுகின்றன. காலம் கடந்த ஞானம் பெறுவதனை விட கொரூரமானதுதான் காலம் கடந்து வருந்துவது என்பது. இத்தகைய வருத்தம் நமக்கா மட்டுமல்ல மற்றவர்களுக்காகவும் சில வேளை நிகழும். இதனை அனுபவிப்பதென்பது மிக மிக கொரூரமானது. இதற்கெல்லாம் காரணம் எதுவென நாம் நோக்கினால் அவை இறுதியில் நாம் மற்றவர்களைப் பற்றி, அவர்களுடைய தேவைகளையும் உணர்வுகளையும் பற்றி அதிக கரிசனை காட்டுவதில்லை என்பதுதான் மிக பிரதான ஒன்றாக இருக்கும். இத்தகைய ஒரு நிகழ்வினால் நானும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதனால் இவற்றையெல்லாம் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

இவை போன்ற நிகழ்வுகளினால் எனக்குள் புலப்படுகின்ற வாசிப்பு யாதெனில், எமது கலாச்சாரமும் எம்முடைய அடித்தளங்களும் எமது தேவைகளைவிட உணர்வுகளைவிட மிகவும் பலயீனமாகத்தான் காணப்படுகின்றன. இத்தகைய தாட்சண்யமான தெடர்புகள் வாயிலாகத்தான் நாம் எமது மனத்தினை செம்மைப்படுத்திக் கொள்ள முடியும். அத்தகைய மனம்தான் எனது தேடல்களுக்கு உள்ளார்ந்த அர்த்தத்தினை வெளிப்படுத்தவல்லது. எனது வாழ்வில் நான் வேண்டுவது தாட்சண்யம். அது எனக்கும் உனக்கும் இடையில் இதயத்திலிருந்து இதயத்திற்கு பீறிட்டுத் தாவ வேண்டும்.





என்னிலிருந்து நீ எடுத்துக் கொண்டவைகளை விட
நான் அதிகமாக தருவதற்கு நினைக்கவில்லை.
நான் அனுபவிக்கின்ற இன்பங்களை
நீ புரிந்துகொள்கின்ற போது
நான் உனக்கு தருகின்றேன்.


உன்னை நான் கடனாளியாக்க கருதி,
உனக்குத் தெரியும் - எனது
கொடுக்கல் வாங்கல்கள் இன்னும் முடியவில்லை என்று.
காரணம், நான் -  உனக்காக 
அன்புடன் வாழவேண்டும்.

அருளுடன் பெற்றுக்கொள்வதுதான்
மிகச் சிறந்த கொடுப்பனவாக இருக்கலாம்.
இவையிரண்டையும் பிரித்துக் காட்ட என்னால் முடியாது.

என்னிடம் நீ தருகின்ற போது
நான் அதற்காக எனது ஒப்புதலை அளித்தேன்.
நீ என்னிடமிருந்து எடுத்துக்கொண்ட வேளை,
அவ்வாறுதான் நானும் உனக்கு தருவதாக உணர்ந்தேன்.

அமைதி - சந்தோசம்- வாழ்க்கை

அமைதி, சந்தோசம் என்றால் என்ன? இவற்றை நாம் ஏன் வாழ்கையுடன் எப்போதும் குழப்பிக் கொள்கின்றோம்? இவைதான் இன்று எனக்குள் எழுகின்றா வினா. இவ்வமைதி சந்தோசம் என்கின்ற இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தனவா? அல்லது இரண்டும் வேறு வேறானவையா என்கின்ற கேள்விக்கு அவ்வளவு சுலபமாக உங்களால் விடையளிக்க முடியமானால் நீங்கள் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் இவையிரண்டும் நீங்கள் உங்களுடைய வாழ்நாளை எவ்வளவு நேசிக்கின்றீர்கள் என்பதில்தான் தங்கியிருக்கின்றன. அதாவது, இதனை மறுவாறாக கூறுவதானால் உங்களுடைய வாழ்க்கையினை எவ்வாறு வாழப்பழகிக் கொண்டீர்கள் அல்லது வாழக் கற்றுக் கொண்டீர்கள் என்பதில்தான் எல்லாமே அடங்கியிருக்கின்றது.

நீங்கள் உங்கள் நன்பர்களுடன் அளவளாவுவதாக இருப்பினும் சரி, உங்கள் தாய் தந்தையர் சொற்படி நடப்பதாக இருந்தாலும் சரி, உங்களுக்குத் தேவையான உடு புடவைகளை வாங்குவதாக இருந்தாலும் சரி, ஏன் உங்களின் காலில் ஒரு முள் குத்திவிட்டாலும் சரி. இவை எதுவாக இருப்பினும் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையினை எவ்வளவு நேசிக்கின்றீர்கள் என்பதில்தான் தங்கியிருக்கின்றன.

பாருங்கள், எமக்கு தெரிந்த எத்தனையோ செல்வந்தர்கள் பணமிருந்தும் அதனை செலவு செய்ய முடியாமல், திருப்பதிகரமாக அல்லது விரும்பிய உணவுகளை கூட உட்கொள்ள முடியாமல் திக்கு முக்காடுகின்றனர் அல்லவா? வருடமொன்றிற்கு கோடி ரூபாய் பணம் சம்பாதித்தும் நிம்மதியை தேடி அலைகின்ற எத்தனையோ பேர் வாழ்கின்றார்கள் அல்லவா? இரவு பகலாக குடும்பத்திற்காக உழைத்துக் கஷ்டப்பட்டவர்கள் அத்தனை சொத்துக்களையும் ஒரே தடவையில் தொலைத்துவிட்டு ஓட்டாண்டியாகி நடுத் தெருவில் நின்ற கதைகளும் எமக்கு தெரியும்தானே!. அதைவிடுங்கள், குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைத்த பெற்றார்களை கடைசிக்காலத்தில் கைவிட்ட எத்தனை பிள்ளைகள் இவ்வுலகத்தில் வாழ்கின்றார்கள். இப்படித்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கின்றது என்றால் இந்த அமைதி சந்தோசம் என்பன வாழ்க்கையில் எப்போது? யாருக்கு கிடைக்கும்? 

நாளென்றுக்கு நூறு ரூபாய் உழைப்பவனுக்கு பத்து ரூபாய் கடன் என்றால் கோடி ரூபாய் உழைப்பவனுக்கு பத்து இலட்சம் ரூபாய் கடன் இருந்துதான் ஆகும். ஆனால் எமக்கு பத்து ரூபாய் பெரிதாக படுகின்ற அளவுக்கு அவனுக்கு பத்து இலட்சம் கடனாக இருப்பது பெரிதாக படுவது கிடையாது. அதற்கு எமது மூளையும் வேலை செய்வதும் கிடையாது. இதற்கு காரணம் எம்மில் எமக்கு நேசம் இருந்தால்தானே தன்னைப்பற்றி ஒரு நம்பிக்கை வரும். தன்னம்பிக்கையும் சுயதிருப்பதியும் இல்லாவிட்டால் எம்மை நாமே எவ்வாறு நேசிக்க முடியும். என்னை நானே நேசம் செய்து கொண்டால் மற்றவர்கள் கூறுபவைகளுக்கெல்லாம் செவி சாய்க்க வேண்டிய தேவை வருமா? 

வீதியோரத்தில் பெட்டிக்கடை வைத்து சீவியம் நடாத்துகின்ற ஒருவனின் நிலமையினை சற்று கற்பனை செய்து பாhத்திருக்கின்றீர்களா? அவனுடைய கடையிலிருக்கின்ற பொருட்கள் அனைத்தையும், பொருட்களை ஏன்? அவனுடைய கடையினையே எமது காசுப்பையினுள் இருக்கின்ற பணத்தினை வைத்து வாங்கிட இயலுமா இல்லையா? பெரிதாகப் போனால் அவனுடைய கடையிலிருக்கின்ற பொருட்களுடைய மொத்த மதிப்பு இரண்டாயிரம் தொடக்கம் மூவாயிரம் ரூபாவினை தாண்டாது. இதற்கிடையில் அவனுக்கு தனியே வீடு வாசல் கிடையாது. ஆனால் குடும்பம் குட்டி, கிடா எல்லாம் இருக்கின்றது. என்றாலும், அவன் அந்த வீதியில் அனுபவிக்கின்ற அமைதியினையும் சந்தோசத்தினையும் நீங்கள் உங்களுடைய வீட்டில் அனுபவிக்க முடிகின்றதா? 

எனக்குத் தெரிய கொழும்பில் லிப்டன் சதுக்கத்தில் சிலான் வங்கிக்கருகில் இருகுடும்பங்கள் சுமார் இரண்டு வருடங்களாக சீவியம் நடாத்தியது. அவ்விரு குடும்பங்களுக்கும் இருந்த வாழ்க்கை என்பது சற்று வித்தியாசமானதுதான். என்றாலும், அங்கு அமைதியிருந்ததே என்று நினைக்கும் போதுதான் எனக்கு பொறாமையாக இருக்கிறது. அவர்கள் தமது காலைக்கடன்களை முடித்துக்கொள்வது, றஹுமானியா பள்ளிவாயலிலும், அருகிலிருக்கும் ஆலயத்திலும்தான். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் குளிக்குமிடமும் சற்று வித்தியாசமானதும், அது மிக அலாதியானதும் மகிழ்ச்சிகரமானதுமான இடம். சில வேளை நானும் அவ்விடத்தில் குளித்தால் எவ்வளவு அலாதியாக இருக்கும் என்று பல தடைவ சிந்தித்திருக்கின்றேன்.  லிப்டன் சதுக்கத்தின் சுற்றுவட்டத்தில் மலச் செடிகளுக்கு நீர் விசிறுவதற்காக ஒரு நீர் வினியோக குளாயினை கொழும்பு மாநகர சபை அந்த சற்றுவட்டத்தினுள்ளேயே ஏற்படுத்தி வைத்துள்ளது. அந்த இடத்தில்தான் அவர்கள் மாலை ஆறு அல்லது ஏழு மணியளவில் குளிப்பார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் இரவுப் பொழுதானதும் அவ்விடத்தில் குளிப்பார்கள். இதுவும் சந்தோசமான வாழ்ககைதான். ஆனால் அது வித்தியாசமான வாழ்க்கை எமக்கு. ஏனென்றால் நம்முடைய வாழ்க்கை வேறுபட்டதாக இருப்பதனால், நாம் வாழ்க்கையினை வேறுபட்டதாக சித்தரித்து வைத்திருப்பதனால் அவர்களை குறைகாணத் துடிக்கிறது எமது மனம். அத்தோடு நின்றுவிடாமல் அவர்களை இழிவாகவும் பச்சை குத்திவிடுகின்றது எமது புறக்கண். இதனையெல்லாம் நான் அவதானித்திருக்கின்றேனா? என்றெல்லாம் நீங்கள் சிந்திப்பது தவறு. ஏனென்றால் என்னைப் பொறுத்த வரை வாழ்வில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அனுபவம்தான். நான் அனுபவங்களைத் தேடி அலைகின்றவன்.

இதுமட்டுமல்ல இன்னும் இருக்கின்றது பாருங்கள். எனக்குத் தெரிந்த இன்னும் இருவர் இருக்கின்றனர். இவர்களும் வீதியில்தான் வசித்து வருகின்றனர். ஆனால் அதில் ஒருவர் பெண்மணி, உங்களுக்குத் தெரியுமா? அவர் வசிக்கின்ற இடமே மிகவும்....மிக மிகவும் வேறுபட்டது. அவர் தனக்காக தயார் படுத்தியிருக்கும் குடித்தனம் மிகவும் பழமையானது. அவருடைய புராதன இருப்பு அவருடைய குடித்தனத்தில் என்றும் அழியாதிருக்கும். இதனை நீங்கள் காணவேண்டுமானால் ஒரு நாள் தெகிவளை ஹில் வீதியால் சென்றுதான் பாருங்களேன். அவருக்கும் இவ்வுலகில் குடும்பங்கள் இருந்திருக்கத்தானே வேண்டும். இந்த வயதான பாட்டிம்மாவுக்கு என்ன நடந்திருக்கும், ஏன் இந்த இடத்தில் அவர் வசிக்கின்றார்; என்பது எனக்கு தெரியது. ஆனால் அவருக்கும் இறைவன் நாளாந்தம் உணவளித்துக் கொண்டுதான் இருக்கின்றான் என்பதனை நினைக்iகையில் எனக்க பெருமையாக இருக்கின்றது. மற்றயவர் கொலன்னவையில் இருக்கின்றார். விடயம் என்னவென்றால், இவ்விருவரும் நான் அந்த வீதியினால் செல்கின்ற போதெல்லாம்  மிகவம் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பதனை நான் அவதானித்திருக்கின்றேன். அவ்வேளைகளில், எமக்கு சிறிய சத்தமொன்று கேட்டாலே நித்திரையில் இருந்து அரண்டுவிடுகின்றோமே இவர்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சுகமாக நித்திரை கிடைக்கின்றது என்று, அதுவும் இத்தனை வாகனங்களின் இரைச்சல்களுக்க மத்தியில் என்று என்னுடைய மனம் என்னை எப்போதும் உறுத்திக்கொண்டுதான் இருக்கின்றது.

இதேபோன்றுதான், கடந்த ஞாயிற்றக் கிழமை ராஜகிரியவிலிருந்து பொரல்லை கனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் சிவப்பு சமிக்கையில் நிற்கவேண்டியதாயிற்று. அப்போது நான் என்னுடைய வாகனத்தினை ஒரு முச்சக்கரவண்டிக்கு பின்னால் நிறுத்திக்கொண்டு தயாராக இருந்தேன். அவ்வீதிப் பாதை மூன்று வழிப்பாதையாக இருந்ததனால் ஏனைய வழிகளிலும் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது பச்சை விளக்கு ஒளிர்ந்ததனால், எல்லா வாகனங்களும் மீண்டும் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தன. ஆனால், நான் தங்கி நின்ற வழிப்பாதையில் எனது வாகனத்திற்கு முன்னால் நின்ற முச்சக்கர வண்டி சிறிதேனும் நகர முடியாமல் சத்தத்தினை செய்து கொண்டு நின்று கொண்டிருந்தது. சற்று தாமத்தித்து பார்த்த நான் அந்த முச்சக்கர வண்டியினை தாண்டி செல்ல முற்பட்டு வாகனத்தினை மற்றய வழியினால் திருப்பிக்கொண்டு புறப்பட்டேன். அப்போதுதான் தெரிந்தது அந்த வழியப்பாதையில் முச்சக்கர வண்டிக்கு முன்னால் ஒரு பிச்சைக்காரர் அவருடைய வண்டியில் பச்சை விளக்கிற்காக காத்து நின்றவர், அதேகனத்தில் அப்படியே தூங்கிக் கொண்டிருந்தார். நாங்கள் எவ்வளவு ஒலி எழுப்பியும் அவரால் அரள முடியவில்லை என்றால் பாருங்கள் எவ்வளவு அமைதியான ஆழ்ந்த உறக்கம் அவருக்கு இறைவனால் கிடைத்துள்ளது என்று.

இதனைத்தான் அமைதி சந்தோசம் வாழ்க்கை என்று குறிப்பிட்டேன். எங்கு உன்னதமான வாழ்க்கை இருக்கின்றதோ அங்குதான் அமைதி பிறக்கும், அமைதி பிறந்துவிட்டாலே ஒரு சந்தோசம்தான்! ஆனால் இவை அவரவர் வாழ்க்கையில் மாற்றங்களினால் சிதைந்துவிடுகின்றன. இத்தனை சிதைவுகளுக்கும் காரண காரியம் நாம் வாழ்க்கையினை எவ்வாறு சித்தரித்துக் கொள்கின்றோம் என்பதுதானே தவிர வேறொன்றுமில்லை.

மாசற்ற மதிப்பு
உனக்கு முன்னால் நீ காண்பவைதான் என்ன?
இது எண்ணங்களின் உருத்தோற்றம்,
சிந்தனைகளில் எழுந்த ஆறாவடு,
செல்வத்திற்கும் இறைவனுக்குமிடையில்
வெறுமைகளின் கருவறை.

செல்வம் எங்கு ஈடேற்றமாகிறது
இறைவன் என்பது நம்பிக்கை
ஆனால் செல்வம் பேறாயிருக்க,
வேறுபட்ட கூட்டமிருக்கிறது.
நீ வேண்டிய எண்ணங்களுக்கு
இறைவனும் சொந்தக்காரன்.
இன்னும் - நீ 
ஒன்றுக்கும் பெறுமதியற்ற
இவர்களின் கண்களில் இருந்து பிரிந்து செல்.

இதுதான் எண்ணம்,
நிராசையின் ஊற்று,
நற்செய்தியாய்க் கிடைக்கப்பெற்ற
சோதனைகளின் சஞ்சல வெளிப்பாடு.
எல்லாவற்றையும் விட உன்னை மாசற வைத்திரு.

ஆனால் அதுதான் நீ காண்பது,
அதுதான் உருத்தோற்றம்,
இறைவன் மாற்றமேதுமில்லை என்றால்
அதுதான் உனது விதி.

ஆதலால் பேறாயிருக்க கற்றுக் கொள்.
உன்னுடைய தங்கம் இறைவனுடையதல்ல என்கும் வரை. 
தரம் எதுவாயிருப்பினும் பேறாயிரு,

அது உன்னுடைய விருப்பம்.
நிம்மதியினை சுவீகாரம் செய்.