கற்பனை காதல்கள்:((

நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி. என்ன செய்வது காலமும் நேரமும் சிலவேளைகளில் எம் மீதுதான் அதன் அப்பட்டமான புத்தியை காட்டிவிடுகிறது. பிரிந்து இருப்பதும், சேர்ந்து இருப்பதும், பிரித்து வைப்பதும், சேர்த்து வைப்பதும் அதன் மிக உன்னதமான பக்கங்கள். அந்த புத்தகத்தில் எமது பெயர்களும் இருக்கின்றதே! என்று சில வேளை மகிழ்ச்சியாய் இருக்கிறது. ஆனால் பலவேளைகளில் துக்கம் தலைக்கு மேலேறிவிடுகிறது. எல்லாம் நாம் எமக்கு செய்துகொண்ட கெடுதிகள்தான். 
 

வழமைக்கு மாறாக நேற்றைக்கு முன்தினம் வானொலியின் பக்கமாக எனது செவிகளை தாழ்த்தினேன். சென்றகாலத்தில் வெளியான பல்வேறு பாடல்கள் அங்கு ஒலித்துக்கொண்டிருந்ததனால் என் செவிகள் அங்கு திரும்பியிருக்கலாம். நேரம் செல்லும் போதுதான் புரிந்தது அது மிகவும் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி என்று. ஆம் அது வாழ்க்கையில் சோகங்களை சுமந்து கொண்டு வாழ்கின்றவர்கள் அல்லது பல வகையான ஏக்கங்களையும், பாரங்களையும் இறக்கி வைக்க முடியாதவர்கள் இது போல் வேறு எவருக்கும் நடந்து விடக்கூடாது என்று எண்ணுகிறவர்கள் தம்முடைய சோக மூட்டைகளை இறக்கி வைத்துக்கொள்ளும் பொதுநலமிக்க வானொலி நிகழ்ச்சி அது. இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கலாம் எந்த வானொலியில் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது என்று.
 
ஆண்கள் பெண்கள் வித்தியாசமின்றி பல்வேறு நபர்கள் அழைப்பினை ஏற்படுத்திக்கொண்டு நிகழ்ச்சி ஒலிபரப்பாளருடன் தமது சோகக்கதைகளையும் தமக்கே உண்டான கெடுதிகளையும் அவர்கள் கூறிச்சென்றனர். சிலர் கூறும்போதே சேகத்தின் விழிம்புக்கு சென்று அழத் தொடங்கினர். சிலர் சோக மூட்டைக்குள் அழுகைளை இறுக கட்டி வைத்துக்கொண்டனர். அப்பாவிகள் சிலர் அவற்றை அழுதுகொண்டே கூறினர். இப்படி அதிலும் பலவகை. நடாத்தப்பட்ட நிகழ்ச்சியோ எல்லா சம்பவங்களுக்கும் பொதுவாகத்தான் இருந்தன. ஆனாலும் நான் வானொலியயை செவியேற்கத் தொடங்கியதிலிருந்து பங்கேற்றவர்கள் யாவரும் (சுமார் 11 பேர்) ஏதோவொரு வகையில் காதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாகத்தான் இருந்தனர். அவர்கள் அத்தனைபேரும் காதலால்தான் உருக்குலைந்திருக்கிறாhர்கள் எனக் கேட்கம் போது மிகவும் பெருமையாக இருந்தது. அவர்கள் கூறிய கதைகள் எல்லாம் நாம் எற்கனவே கேள்விப்பட்ட கதைகள் அல்லது எமக்கு நிகழ்ந்த கதைகள் மாதிரியானவைதான். அது என்ன நீர் எம்மையும் இந்த வம்புக்குள் இழுக்கிறாய் என்று என்னை நீங்கள் கேட்கலாம். நான் யதார்த்தமாக பேச விரும்பகிறேன். உண்மையை கூறும்போது நீர் நான் என்று வேற்றுமையாக பேச முடியாதல்லவா.
 
இப்படி அவர்கள் சோகச் சமைகளோடு எடுத்து வைத்த காதல் கதைகளுக்கு நான் வைத்துக் கொண்ட பெயர்தான் கற்பனைக் காதல்கள். எதற்காக காதல் செய்கிறோம், ஏன் காதல் செய்கிறோம், காதல் என்றால் என்ன, எப்படி செய்வது, எப்படி செய்யக் கூடாது என்னவெல்லாம் இருந்தால் அது காதல், காதலில் எதுவெல்லாம் இருக்க கூடாது என்பன பற்றி தெளிவில்லாமல் புரிகின்ற காதல்தான் இந்த கற்பனைக் காதல்கள். இன்று காத்திரமான காதல்களை விட கற்பனைக் காதல்கள்தான் அதிகம். காரணம், நாம் எம் சூழலில் வெறும் கற்பனை உலகத்தில் வாழ்பவர்களைத்தான் அதிகம் காண முடிகிறது.
 
எதிர்பார்ப்புக்கள், அன்பின் பரிமாற்றம், காத்திருப்பு இவை மூன்றையும் தக்கவைத்துக் கொள்கிற காதல்தான் அதிகம் நீடிக்கின்றது, வாழ்கின்றது. அதற்கும் காரணம் இருக்கின்றது. இவை மூன்றும் வாழவேண்டும் என்பதற்காக உருவானவை. தோற்கடிக்கப்படுகிற கற்பனைக் காதல்கள் எப்போதும் இவற்றைக் கொண்டிருப்பதில்லை. மறுவாறாக கூறப்போனால் இவற்றை கொண்டிருக்காத காதல்தான் கற்பனைக் காதலாக மறைந்துவிடுகின்றன. குறுகிய எதிர்பார்ப்பானது முறையற்ற காதலுக்கு வழியாகிப் போகிறது. காதலில் அன்பின் பரிமாற்றம் சிலவேளைகளில் உருமாற்றம் நிகழ்ந்து உருக்குலைந்து போகிறது. மறுபறத்தில் காதல் வெறும் கற்பனையால் கருத்தரித்தது என்பதனால் காத்திருப்பு என்பதும் கனப் பொழுதில் மறைந்துவிடுகிறது. இவ்வாறான உறவில் அல்லது சூழலில் உங்களால் காதலை தேட முடியுமா?
 
காதலிக்கும் முன்னர் இருந்த அவசரத்தை விட காதலுக்கு பின்பு வருகின்ற அவசரம்தான் காதலருக்கு முதல் எதிரி என்பதனை காதலர்கள் புரிந்துகொள்வது கிடையாது. இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கும், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதற்கும் இடையில் இருக்கின்ற இடைவெளிதான் இங்கு அவசரம் எனக் குறிப்பிடுகிறேன். காத்திரமான காதலுக்கும் கற்பனைக் காதலுக்கு இடையில் உள்ள வேறுபாடும் இந்த அவசரம்தான். இப்படித்தான் வழவேண்டும் என்று வாழ்கிற போது அது ஒரு இலட்சியப் பயணம். இந்தப் பயணத்திற்கு நான்கு திசைகளும் தெரிந்திருக்கும், இங்கு பாதை முடிந்தாலும் பயணம் என்பது தொடரும். இந்த நிலை தவறி எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று செல்கின்றபோது அது கோணல் நிறைந்த பயணமாக இருக்கும். திசைகள் இருக்காது, பயணம் பற்றிய தெளிவும் இருக்காது, இடைநடுவில் முறிந்துவிடும்.
 
நேற்று வழியில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரப் பலகைளை சடுதியாக கண்ணுற்றேன். வாகனத்தில் வேகமாக சென்றதனால் பாருங்கள் அதனைக் கூட தெளிவாக எதைப்பற்றிய விளம்பரம் என்று அவதானிக்க முடியவில்லை. ஆனால் எப்படியோ தேவையானது கிடைத்தது. 

“Season for love and care”
“Season for give and share”

இங்கு நன்றாக கவனியுங்கள். நாம் எல்லோரும் நினைப்பது போன்று காதல் என்பது உண்மையில் எதையும் பகிர்ந்து கொள்வதற்கான தருணமல்ல. இவை அன்பாக, அரவணைப்பாக, நேசமாக, அக்கறையாக எதுவாக இருப்பினும் அவற்றை வெறுமனே பகிர்ந்து கொள்வதற்கான ஒரு இடமோ அல்லது பொருளோ அல்ல இந்த காதல். மாறாக அள்ளி வழங்குவதற்கான இடம்தான் இந்த காதல். வாழ்வியல் கருத்தில் பகிர்ந்து கொள்வதற்கும், அள்ளி வழங்குவதற்கம் இடையில் நிறையவே கருத்து வேறுபாடு உண்டு. காதல் என்பது எப்போதும் கவனிப்பு, அரவணைப்பு என்பதனைவிட மேலானது. எமக்குள் இடம்பெறுகின்ற அன்பையும், நேசத்தையும், அக்கறையையும் பகிர்ந்து கொள்வது என்பது நாம் முiiறாயக செலுத்துகின்ற வெளிப்பாடுதான் கவனம் என்றால் அது மிகையல்ல.
 
வெறுமையாக அல்லது வெளிப்பாடாக நிகழ்ந்த சம்பவங்களுக்காக நாம் பல தடவைகள் துக்கம் அனுஸ்டிக்க வேண்டியிருக்கிறது. துக்கித்து விட்டு தூர எறிந்துவிடுவதும் உங்களுக்கு அவ்வளவு சலபமான காரியமாக இருக்காது என்பது எனக்கு தெரியும். உலகில் காத்திரமான படைப்புகளுக்கு எப்போதும் தனிமரியாதையும், பாராட்டுக்களும் உண்டு. வாழிவியலிலும் அப்படித்தான் காத்திரமாகவும், தனித் தன்மையுடனும் வாழ்ந்து காட்டுபவர்களுக்கும் பாராட்டுக்களும், பட்டங்களும் வழங்குவதுண்டு. துன்பம் வருகின்ற போது துவண்டு விடுவதும், இன்பம் பெருகும் போது பொங்கி எழுவதும் மனித இயல்பு. மனித வாழ்க்கை இப்படியாகத்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. வாழ்வு என்பது முழுiமாக மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால் வாழ்வில் எந்த இரசனையும் இருக்காது. அதேவேளை, வாழ்வு முழுவதும் துன்பமும், துர்டமும் நிறைந்ததாக இருந்தால் அவ்வாழ்வில்  எமக்கு எதுவித ஈடுபாடும் இருக்காது. எனவே, வாழ்க்கையை இரசனையோடும், முழுமையான ஈடுபாட்டுடனும் கழிக்க வேண்டுமானால் எமக்கு துன்பமும் இன்பமும் கலந்த வாழ்க்கை ஒன்று மிக அவசியமாகிறது.
 
காலம் பொன்னானது என்று கூறுவதனை நான் பல தடவைகள் கேட்டிருக்கிறேன். ஆனால் அதனை உறுதியாக கூற உனக்கு முடியாது. ஆனால் நான் எனது அறிவுக்கு எட்டிய வகையில் ஒன்றை மட்டும் இங்கு கூறுகின்றேன். கடந்தகாலம் பற்றி சிந்திக்காதீர்கள். எதிர்காலம் பற்றியும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இன்று என்ன செய்வது என்று மட்டும் அதிகம் கவனம் செலுத்துங்கள். நேற்று என்பது பலருடன் அல்லது பலவற்றுடன் சேர்ந்து நிறைவடைந்திருக்கும், நாளை என்பதும் பலருடனும், பலவற்றுடன் சேர்ந்து நிறைவுபெற துடிக்கும். இன்று மட்டும்தான் என்னோடு மாத்திரம் தொடர்புற்றதாக கூடவேயிருக்கும்.
 
"அழும்போது தனிமையில் அழு
கூட்டத்தோடு நீ அழுதால் அதனை அவர்கள் நடிப்பு என்பார்கள்.
சிரிக்கும் போது கூட்டத்தோடு சிரி.
தனிமையில் நீ சிரித்தால் அதனை அவர்கள் பைத்தியம் என்பார்கள்."
என்பது கண்ணதாசன் எழுதிய வரிகள்.

இங்கு நானோ! தனிமையில் அழுகிறேன்.
நீயோ கூட்டத்தோடு சிரிக்கிறாய்.
வித்தியாசம் ஒன்றுமில்லை.

0 comments:

Post a Comment