நல்லவனுக்கு காலமில்லை

இது என்னடா புதுக்கதை என்று நினைக்க வேண்டாம். இது எல்லோரும் கூறுகின்ற பொதுக்கதைதான். இந்த உலக வாழ்வில் பல அம்சங்கள் விதி என்ற நிர்ப்பந்தத்தினால் சூழப்பட்டிருக்கின்றது என்று கூறுவர். அவற்றை நாம் நம் தலைவிதி என்று கூறிக்கொள்கிறோம். இன்னும் பலவற்றை அவ்வாறு நாம் கூறுவதில்லை. ஏனெனில், நாம்தான் அவற்றிற்கு எல்லாம் காரணம் என்று நாமாக சித்தரித்துக்கொள்கின்றோம். ஆனால் சற்று ஆழமாக சிந்தித்தால் அதுவும் ஏதோவொரு நியதிப்படிதான் அல்லது விதிப்படிதான் நடந்தேறுகின்றன என்பது நமக்குப் புரியும். ஆனாலும், நமது சொ(ம)ந்தப் புத்தி இதனை இரண்டு கூறுகளாக பிரித்து வைத்துக்கொண்டு நம்மை சூதாடிவிடுறது. இதோ பாருங்கள், நம் செயலால் வந்த இடர்பாட்டால் நமக்கு ஏதாவது நடந்துவிட்டால் அதனை 'அது எமது தலைவிதி' என்று கூறி முடித்துவிடுகின்றோம். சிலவேளை, 'நடந்தது நடந்தது விட்டுவிடுவொம்' என்று எம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கின்றோம். ஆனால் வேறு ஒரு காரணியாலோ அல்லது வேறு நபரால் எமக்கு ஏதாவது தாறுமாறாக நடந்துவிட்டால் அதனை நாம் எமது தலைவிதி நடந்தது நடந்துவிட்டது என்று விட்டு விடுவது கிடையாது. புரிகிறதா?

இதுதான் வாழ்வில் அதிகப்படியாக நிகழ்கின்ற குழப்பம். எமது சூழலில் இடம்பெறுகின்ற செயல்கள் யாவற்றையும் யாரோ மனிதன் கூறுபோட்டு வைத்ததன் விளைவுதான் இன்னும் எம்மை அந்த வலைக்குள் வாட்டி வதைக்கின்றது. நல்லது நடந்தால் நாம்தான் அது என்றும், கெட்டது நடந்துவிட்டால் அது நமக்குப் புறப்பாக நடந்தது என்றும் கூறிக்கொள்வதுதான் மனிதன் பண்டுதொட்டு வாழ்ந்து வரும் நடைமுறை. பொதுவாக இந்த உலகில் நிகழ்கின்ற செயல்கள் யாவும் தானகவோ நடப்பது கிடையாது. மனிதனுக்கும் அவனுடைய சூழலுக்கும் ஒத்தாற்போல் நிகழ்கின்ற கருமங்கள் யாவும் அவனுடைய தொடர்பு ஏதும் இன்றி அணுவளவும் நிகழாது. ஏதோவொரு வகையில் அவனுக்கும் அந்த செயலில் தொர்பு இருந்துதான் ஆகும். ஆனாலும், தமக்கு நிகழும் இன்னோரன்ன சம்பவங்களில் இயற்கையை மறக்க நினைத்த மனிதனுக்கு நனது சகோதர மனிதனை மறக்க முடிவதில்லை. ஏனோ தெரியவில்லை. ஏதோவொரு காரணத்துக்காக 'அது எமது விதி'  என்று விட்டுவிடுகின்ற எம்மால் மற்றய சகோதர மனிதனால் இடம்பெறுகின்ற செயல்களின் பாரதூரத்தை மன்னித்துவிட முடிவதில்லை. இவை எல்லாவற்றிற்கும் காரணம் நாம் எதையும் நல்லது என்றும், கெட்டது என்றும் பிரித்துவைத்திருக்கின்றமைதான்.

ஆமாம், அது என்ன நல்லது என்றால்? கெட்டது என்றால் என்ன?

பொதுவாக இந்த உலகத்தில் உள்ளன எல்லாம் நல்லதுக்குத்தான் என்று கூறுவதனை நான் பலமுறை கேட்டிருக்கின்றேன். அப்படி என்றால் அது ஏன் எமக்கு சிலநேரம் நல்லவை அல்லாமல் திகழ்கிறது. அப்படியென்றால் கெட்டது என்றால் என்ன? யார் இதனை கண்டுபிடித்தது? கெட்டது என்று உலகில் எதுவும் கிடையாது. உண்மையிலேயே இந்த உலகில் நாம் அனுபவிக்கின்ற யாவும் நல்லவைதான். அது எதுவாக இருப்பினும் அது நல்லதுதான். நல்லது எதுவும் கெட்டதாக முடியாது. கெட்டது  இருப்பின் அது நல்லதாக ஆகாது. எனவே எல்லாம் நல்லதுதான். அப்படியென்றால் கெட்டது எங்கிருந்து வந்தது? அது வேறொன்றும் கிடையாது, மனிதனால் சமைத்தெடுக்கப்பட்ட வெறும் மாயைதான் இது. ஒரு வேளை, நல்லவர்கள் யாவரும் சேர்ந்து தமக்கு கீழாக சிலரை அடிமைப்படுத்த எடுத்த ஒரு முயற்சியாக கூட இது இருக்கலாம். அல்லது நல்லவர்கள் தமக்கு கீழான ஒரு இனம் இருக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக கூட இதன் உருவாக்கம் இடம்பெற்றிருக்கலாம்.  மறுவாறாக, நல்லவர்கள் தம்மை தாமே உயர்த்திக்கொள்ள தேவையாக இப்படி ஒரு ஏற்பாட்டை முடுக்கி விட்டிருக்கலாம்.

எவ்வாறாயினும், நல்லது – கெட்டது என்ற இரு சொற்களையும் துணைச் சொற்கள் என்றுதான் இலக்கணங்கள் விபரிக்கின்றன.  ஒன்றை விளக்க மற்றயதின் துணை அவசியப்படுகிறது. 'நல்லது' என்பதனை விளங்கிக் கொள்வதானால் நீங்கள்  கெட்டது என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லது கெட்டது எது? என்பதனை விளங்கிக் கொள்ள நல்லது எது? என்பதனை விளங்க வேண்டும் என பொதுவாக கூறப்படுகிறது. என்றாலும், நீங்கள் கெட்டது எது? என்பதனை மூல விளக்கத்துடன் புரிந்துகொண்டால் நல்லது எது? என்பதனை புரிந்துகொள்ள இயலும். ஆரம்பத்தில், இந்த உலகில் உள்ள யாவும் நலவுக்குத்தான் என்றால் அங்கு கெட்டது எதுவும் கிடையாது. என்றாலும், காலம்தான் அதனை தீர்மானித்து விடுகின்றது. மனித வாழ்வில் காலத்திற்கு இருக்கும் பங்கின் விசாலம் இந்த நல்லது கெட்டதுக்குள்ளும் காணப்படுகிறது. நல்லது எது? என்பதனை காலம்தான் தீர்மானிக்கிறது. இதனால் காலம்தான் சிலவற்றை தேர்ந்தெடுத்து கெட்டது இதுவென மனிதனை வரையறுக்க கட்டாயப்படுத்தி விடுகிறது. உதாரணமாக, ஒரு தாய் தனது ஒரு வயது குழந்தைக்கு சப்பாட்டை ஊட்டிவிடுகிறாள். மற்றொரு தாய் தனது ஒன்பது வயது பிள்ளைக்கு சப்பாட்டை ஊட்டிவிடுகின்றாள். இங்கு எது நல்ல விடயம்? எது கெட்ட அல்லது கூடாத செயல்? எனவே, மனிதன் தன் வாழ்வில் சிலவற்றுக்கு தாமாகவே வரையறைகளையும், மட்டுப்பாடுகளையும் காலத்தின் சூழ்ச்சியால் இட்டுக்கொண்டதன் விளைவாகத்தான் கெட்டது எது? என்று அவன் சிநந்திக்க முடிந்தது என்ற முடிவுக்கு வரலாம். இதற்கு மறு காரணிகளும் ஊக்கப்படுத்தின. அதாவது, மனிதனுக்கு மாத்திரம்தான் இந்த உலக வாழ்வில் காலத்துடன் கூடவே ஒத்து பிரயாணிக்க வேண்டிய தேவையும், கட்டயாமும் இருக்கின்றது. அதுவும் மனிதன் தனக்காக வலிந்து ஏற்படுத்திக்கொண்ட சவால்தான்.

இன்னும் விளக்க வேண்டுமானால்... மனிதன் தனக்கென்று வரையறைகளை இட்டுக்கொண்டு இப்படி இருந்தால்தான் நல்லம், இப்படி நடந்தால்தான் நல்லது என்று பொதுவிதிகளை ஆக்கிக் கொண்டான். அவ்விதிகள் அவனுடைய சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையாகத்தான் உருவாகியது. அப்படி உருவான விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையான விதிமுறைகள் ஏனையவர்களாலும் பின்பற்றப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் மனித சமுகத்தில் தோன்றியிருக்க வேண்டும். அல்லாவிடில், கூட்டமாக வாழ்வதும், குதூகலிப்பதும் அந்த சமூகத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கும். ஏனெனில், விதிகள் விருப்பு வெறுப்பு அடிப்படையானது என்பதனால் நல்லது எது? கேட்டது எது? என்பதுவும் நபருக்கு நபர் வேறுபட்டிருக்கும். இதனால் அச்சமுகத்தில் சண்டைகளும் சச்சரவுகளும் தோன்றுவதற்கு அவ்விதிகளே காரணமாயிருக்கும். இதனால், கூடியிருந்த மனித கூட்டம் யாரோ தனிப்பட்ட பலம்பொருந்திய ஒருவருடைய சிந்தனைக்கும், விருப்பு வெறுப்புக்கும் விரும்பியோ விரும்பாமலோ செவிசாய்த்ததன் விளைவாக நல்லது எது? கெட்டது எது? என்பது வரையறுக்கப்பட்டிருக்கும்.

எனவே, இத்தகைய தனிப்பட்ட ஒருவருடைய விருப்பு வெறுப்பிற்கு எதிராக செயல்பட்ட நபர்கள் கெட்டவர்களாக கருதப்படுவர். ஏனெனில் விதி, அங்கு எதிர்ப்பவர்களினால் மீறப்பட்டதாக சமுதாயம் கூறியிருக்கும். அதாவது, நாம் இவர் ஊரோடு ஒத்து வாழத்தெரியாதவர் என்று கூறுகின்றோமே அவர்களைத்தான் கூறுகின்றேன். ஆயிரத்தில் ஒருவன் என்று கூறுவதும் இவர்களைத்தான். இவர்களுக்காகவேதான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கும். காரணம், அவர்கள்தான் உலகின் யதார்த்த நிலையினை புரிந்தவர்கள். அவர்கள் எதிர்ப்பதன் காரணம் காலத்திற்குள் கட்டுப்பட்ட விருப்பு வெறுப்பின் வதிமுறைக்குள் தமது செயல்பாடுகளை மனிதன் தாமாகவே அடிமைப்படுத்திக் கொள்வது கூடாது என்தபனால்தான். மேலும் விளக்கப்போனால், இவ்விதிமுறைகள் எல்லாம் மனிதனின் விருப்பு வெறுப்பின் அடியாக பிறந்தது என்பதனால் அது பொதுவானதாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அவர்கள் கூறுவர். ஏனெனில் மனித விருப்பு வெறுப்பு என்பது இடத்துக்கிடம், ஆளுக்கு ஆள் வேறுபட்டது. எனவே, பின்பற்றப்படுகின்ற விதிகளும் பொதுவிதியாக கொள்ள முடியாது. ஏனெனில் அவை ஆளுக்கு ஆள் வேறுபட்டது. இதனால் நல்லது எது என்பதனை தீர்மானிப்பது நாமாக இருக்க வேண்டுமே தவிர, நமக்கு அதனை வேறுநபர் விபரிக்கக் கூடாது. அவ்வாறு விபரிப்பதென்பது அவருடைய விருப்பு வெறுப்புக்களை நம்மீது திணிப்பதாகும். மறுவாறாக, அவ்வாறு வேறு ஒரு நபரினால் விபரிக்கப்படுகின்ற விடயங்களை நாம் ஏற்றுக்கொள்வது நமக்கு காணப்படுகின்ற மனிதனின் அடிப்படை பண்பான விருப்பு வெறுப்புக்களை இல்லை என்று மறுப்பதாக, அல்லாது போனால் நாம் மனிதன் என்பதன் யதார்த்த நிலையில் இருந்தும் விடுபட்ட பிராணி என ஏற்றுக்கொள்வதாக அமைந்துவிடும். இவர்கள் நல்லன பற்றி பெருமைப்படுகின்றார்களோ இல்லையோ கெட்டது எது? என்பது குறித்து கவலைப்படுவதோ கிடையாது.  

ஏனெனில், இவர்களுடைய விதிமுறைகள் யாவும் காலத்திற்குள் கட்டுப்பட்டிருப்பது கிடையாது. அவர்கள் மனிதன் தனது நலத்திற்காக உருவாக்கிய விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையான விதிமுறைகளை தாண்டிய சிந்தனையில் கிடப்பதனால், இவர்கள் பேசுகின்ற விடயங்களுக்கும் அச்சமுதாயத்தில் நடைமுறையில் இருக்கும் பொதுவான கருத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி தோன்றும். சமுதாயம் அவர்களை கெட்டவன் என்றுதான் கூறும். காரணம், அவர்களின் விதிமுறை விசித்திரமாக தோன்றும். ஆனால் அவர்களோ தம்மை கெட்டவன் என்று கூறுவதனை பொருட்படுத்தமாட்டார்கள். அதற்கும் நியாயம் உண்டு. அதாவது, இவர்கள் கெட்டவன் என்று கூறுவது அ(கூறுப)வர்களின் சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் உருவான விதியினால்தானே. இதனால்தான அவற்றை இத்தகையவர்கள் கருத்திலெடுப்பது கிடையாது. இதனால் நல்வர்களுடைய செயல்களும் சரி, அவர்களுடைய சிந்தனைகளும் சரி காலத்துள் கட்டுண்டு கிடப்பது கிடையாது. எனவேதான் நல்லவனுக்கு காலமில்லை.

நான் மனிதன் மட்டும்தான்
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

நான் மிதமிழந்து,
சினம் வெந்து குருடாகி,
இடர் சமைக்கிறேன்.
காரணம், நான் மனிதன் மட்டும்.
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

அகங்காரம் எனக்குள் ஆட்கொண்டிருக்கிறது,
கவனம், உனது நட்பைப் போல,
நான் விளங்கியது அவ்வளவில்லை.
நான் மனிதன் மட்டும்,
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

உதவாத ஆடம்பரங்கள்,
சல்லடை நிறைந்த சல்லாபங்கள்,
கேள்விகள் நிறைந்த காரியங்கள்,
காரணம், நான் மனிதன் மட்டும்,
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

அழகு அருவருப்பானது,
இருப்பதெல்லாம்
காமத்திற்கு குழிதோண்டுகிறது,
காரணம், நான் மனிதன் மட்டும்,
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

அதிகார ஆசை,
பசிக்கு புசிப்பனம்,
அறிவில் அசட்டுத்தனம்,
காரணம், நான் மனிதன் மட்டும்,
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

சபலம் ஆட்கொண்ட,
தீதால் வெறியேற்றப்பட்ட,
உள்ளுணர்வின் படபடப்பும்,
திணறடிப்பும்தான் நான்,
காரணம், நான் மனிதன் மட்டும்,
பாவங்கள் நிறைந்த,
ஒரு அடிமை.

ஆனால்...,
நானும் தெரிவில் ஒன்று,
அன்பு,
கருணை என்பவற்றின் நியாயாம்,
இந்த அடிமை.

எனது அகங்காரத்தை அடித்து நொறுக்க முடியும்,
நல்லதுக்கு சண்டை இட முடியும்,
மண்டியிட்டு மன்றாடவும் இயலும்,
நேசமிக்க பெருமை,
இந்த அடிமைக்கு.

மன்றாடவே பிறந்தவன் இவன்,
இந்த அடிமை,
ஆதரவளிக்கும்,
மண்டியிடும்.

நான் பாவங்கள் நிறைந்த
மனிதனாக இருக்கலாம்,
ஆனால்,
நான் மட்டும்தான் பெருமைக்குரியவன்,
அது என்னை பலவானாக்கும்.
நான் ஒரு அடிமை.