எனக்கு நண்பியில்லாத ஒருத்தி

எனது நண்பி (எனக்கு அவள் நண்பியில்லை) ஒருத்தி அவளது முஞ்சிப்புத்தக பக்கத்தில் எழுதியிருந்த ஒரு கூற்றினை நான் இன்று வாசிக்க முடிந்தது. இது முடிந்ததற்கு காரணம் எனது தலைவிதியா என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் நான் இன்று அவள் கூறியதனை என்னால் அறிய முடிந்து ஒரளவுக்கு அவளுடைய எண்ணங்கள் எவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டு திரும்ப ஒட்ட வைக்கப்பட்டுள்ளது....இல்லை மன்னிக்கவும், ஒட்டி வைக்கப்பட்டுள்ளது என்பதனை என்னால் உணர முடியுமானதாக இருந்தது எனலாம்.


இந்தக் கூற்றில் பொதிந்து கிடந்தவைகள் என் மனக் கிளர்ச்சியினை வேகவாக பிய்த்து இழுத்திருந்தது. காரணம் அவள் எனது நண்பியில்லை என்ற பொது நலனாகவும் இருக்கலாம். இல்லையானால் சிலவேளை, சுயநலமாகவும் இருக்கலாம். அது எப்படி சுயநலம்? என்று தயவு செய்து கேட்காதீர்கள். ஏனென்றால் சிலர்கள் ஒரு விடயம் பொதுநலம் இல்லாத காரணத்தினால், அல்லது பொது நலன் என்பது உறுதிப்படுத்தப்படாத காரணம் ஒன்றினால் மாத்திரம் அது சுயநலம் என்று கணித்துவிடுகின்றனர். இது நிச்சயமாக அவர்களுடைய பிழையல்ல, இறைவன் அவர்களுக்கு வழங்கிய விளக்கத்திலும், நிகழ்வுகளிலும்தான் பிழையிருக்கின்றது என்ற முடிவுக்கு நாம் வந்தால்தான் எமக்கு அதனால் எதுவித பிரச்சினைகளும் ஏற்படாது.

'நீ உனது கண்களை மூடிக்கொண்டு எதையாவது காண முயல்வாயானால்....உனது இதயத்தின் அடித்தளத்தினை பற்றிக் கொள்வது உண்மையாக இருக்காது. மாறாக அது ஒரு அலங்கரிக்கப்பட்ட பொய்யாகவே இருக்கும். கண்களைத் திறந்து கொண்டு யதார்த்தத்தின் வரவை எதிர்பார்ப்பாயானால் அது ஒரு நாள் உன்னை உதறித்தள்ளும், ஜீரணிக்க முடியாததாக இருக்கும் நீ அதனை எதிர்கொள்ள தயார் இல்லையென்றிருந்தால்.....இவ்வுலக வாழ்வு முழுவதும் கன்னி வைத்தாற்போன்று இருக்கின்றது.'(சு)

இதுதான் அந்தக் கூற்று. மிகவும் வேதனைக்குரியது ஆனால் உண்மையானது.
இங்கு விடயம் என்னவென்றால்... நாம் கண்களை மூடிக்கொண்டு அதேநேரம் நாம் கண்களை திறந்துகொண்டுதான் இருக்கின்றோம் என கூற முடியாது. இந்தக் கூற்றில் இருக்கின்ற தத்துவார்த்த உண்மை என்னவென்றால்...எப்பொழுதும் ஒரு மனிதனுக்கு இரு பார்வைகள் இருக்கின்றன. சாதாரணமாகவே அவை அமையப்பெற்றுள்ளன. என்றாலும் நாம் அவைகளை உபயோகிக்கின்றோமா என்பதில்தான், எம் முனைவரை நாம் அவைகளை உபயோகிக்கின்றோம் என்பதில்தான் சிக்கலே உருவாகின்றது. அவைதான் அகக் கண் மற்றும் புறக் கண் என்பன. இதைத்தான் உனக்கு அந்த நண்பியல்லாதவள் குறிப்பிடுகின்றாள் என்று நினைக்கின்றேன்.


அப்படியென்றால், நாம் நிஜத்தில் பொய் அல்லது அலங்கரிக்கப்பட்ட பொய் என்று முடிவு எடுத்துக்கொள்கின்றோமே சட்டென, அது எந்தக்கண்களினால் காண்கின்றவற்றினை? இதுதான் முதன்மைக்குரிய வினா?


பொதுவாக இவ்வுலகில் நிகழ்கின்ற யாவும் தன்னாலேயே நடப்பவை அல்ல. இறைவன் வகுத்த விதியென்றாலும் அவை மனிதனின் அக மற்றும் புறக் காரணிகளாலேயே தாக்கத்திற்கு உள்ளாகின்றன. எனவே, ஒருவருக்கு சரியாக படுகின்ற விடயம் வேறு ஒருவருக்கு பிழையாக இருக்கலாம். ஒருவருக்கு பிழையாக படுகின்ற விடயம் வேறு நபருக்கி சரியாக இருக்கலாம். ஒருவருக்கு உண்மை என்ற பொருள் மற்றவருக்கு பொய் எனப்படுகின்றதும், ஒருவருக்கு பொய் என்று பட்டது மற்றவருக்கு உண்மை என்று படுவதும் இப்படித்தான். இது இந்த அகக் கண் படுத்துகின்ற பாடு. அகக்கண் எப்பொழுதும் காரண கரிய அடிப்டை, அவறிவார்த்தம், நிகழ்வின் பின்புலம், அதன் எதிர்காலம் என்பனவற்றை அதிகம் கருத்திற்கொண்டு நிச்சயமான முடிவுகளை எடுக்க தூண்டும். ஆனால் அது எவ்வளவு தூரம் நிச்சயமாக அமையும் என்பது அவைகளின் மேற்கூறிய விடயங்களை கையாள்கின்ற விதத்தில்தான் இருக்கின்றது. ஆனால் பொதுவாக உறதியானது, நிச்சயமானது.

புறக்கண் எப்போதும் இவைகளை கருத்திற் கொள்ளாது அசட்டுத்தனமாக அல்லது மேலெழுந்தவாரியக முடிவுகளை அமைத்துக் கொள்ளும். ஆனால் அவை ஒப்பீட்டளவில் அகக்கண்ணின் முடிவினை காட்டிலும் நிச்சயதன்மையில் முதன்மையானதாக தோன்றினாலும், அதன் முடிவுகளின் மதிப்பு அகக்கண்ணினால் மேற்கொள்ளப்பட்ட முடிவிலும் பார்க்க மடத்தனமாக அமைந்துவிடுகின்றது என்பதுதான் உண்மை.

சுருங்கக் கூறினால் அகக்கண் தனது அனுபவ முக்தியையும், தனது நிலையினையும் உச்சமாக பயன்படுத்தி தனது செயல்களை எப்பொழுதும் தயாரித்துக்கொள்ளும். இங்கு உயரிய இலக்கும், மற்றவர்களை இடைஞ்சலுக்குள்ளாக்காது சாந்தமான போக்கினையும் முடிவுப்பொருளாக நாம் அவதானிக்கலாம். ஆனால் இவற்றினை நாம் புறக்கண் எய்தும் முடிவில் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், புறக்கண்ணானது அகக்கண் ஒன்று எமக்கு இருப்பதனை மறக்கடித்துவிட்டு தனது செயற்பாடுகளை படுதந்திரமாக முடித்துவிடும். ஆனால் அகக்கண் அப்படியல்ல, அதனிடத்தில் புறக்கண்ணுக்கென ஒரு தனியான மதிப்பும் மரியதையும் இருக்கின்றது.

இதனால், புறக்கண் காண்பதனை பகுத்து, ஆராய்ந்து, விளக்கமாக வினாக்களை தனது பதிவிலுள்ள அனுபவங்களுடன் போட்டு குழப்பியடித்து ஒரு முடிவினை கண்டு கொள்ளும் இந்த அகக்கண். பொதுவாக, இத்தகைய இயக்கம் ஒன்று இல்லாது புறக்கண்ணை அகக்கண் ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால், பனை மரத்தின் கீழ் இருந்துகொண்டு பால் அருந்துபவன் மீது பழி சுமத்தும் பக்குவமும், தந்திரமும் அகக்கண்ணுக்கு அறவே தெரியாது. அது புறக்கண்ணின் கூடாத செயல். தற்போது விளங்கியிருக்கும்.

ஏதோவொரு பிரச்சினையிலிருந்து ஈடுகொடுக்க முடியாமல், அல்லது அதில் நம்பி ஏமாந்தது போன்று இந்தக் கூற்றின் வார்த்தை பிரயோகங்கள் தொணிக்கின்றன. 'அலங்கரிக்கப்பட்ட பொய்' எனும் பதமும் அப்படித்தான் கூறுகின்றது. உண்மையில் அப்படியொரு அலங்கரிக்கப்பட்ட பொய் என்று ஒன்று இல்லை. பொய் எப்போதும் பொய்தான். உண்மை எப்போதும் உண்மைதான். இதனைத்தான் நாம் தத்துவத்தில் 'இருப்பது எதுவும் இல்லாததாகாது, இல்லாதது எதுவும் இருப்பதாகாது' எனக் கூறுவது.

எனது கருத்தில், இவ்வாறு முடிவுக்கு எனது நண்பியல்லாதவள் வருவதற்கு காரணம், ஏற்கனவே அதே விடயத்தில் அவள் நம்பிக்கை வைத்து இருந்திருக்க வேண்டும். அதனை இவ்வாறு அலங்கரிக்கபட்ட பொய் என்று கூறியிருக்க தேவை ஏதுமில்லை. அதாவது குறித்த விடயத்தினை அவள் ஒரு காலத்தில் நியாயம் அல்லது உண்மை என ஏற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும். அவ்வாறில்லையெனில், சாதாரணமாக பொய் என்றே குறிப்பிட்டிருக்கலாம். அப்படியானால், அவளுக்கு ஏற்கனவே சரியாக, உண்மையாக, யதார்த்தமாக தோன்றிய விடயமொன்று தற்போது பிழையான, பொய்யன, யதார்த்தத்திற்கு முறணான ஒன்றாக மாறியிருக்கின்றது என்பதுதானே அர்த்தம். இதனால், தாங்க முடியாதுதான் அவள் அதனை தற்போது அவளது கூற்றில் 'அலங்கரிக்கப்பட்ட பொய்' கூற்றென கூறுகின்றாள். ஏனென்றால், அவள் தற்போது அதனை பிழை காண்பதனால் அவளுடைய இயக்கம் இசைவாக அதன் மீது பெரும் பழியினை சுமத்த எத்தணிக்கின்றது. அப்படி பெரும் பழியாக அல்லது கூறுகின்ற குற்றச்சாட்டினை பாரதூரமாக வைத்தால்தானே, தனது பக்கம் மற்றவர்கள் பார்வையினை திசை திருப்பலாம்.

அவ்வாறில்லை என்று நீங்கள் கூறுவீர்களானால்...காரணம் என்ன கூறுங்கள்?

இதற்கு காரணம், தெளிவாக அந்த படுமோசமான புறக்கண்தான். முன்பு அகக்கண்ணினால் மேற்கொள்ளப்பட்ட நியாயத்தினைக் கூட காலப்போக்கில் புறக்கண் தன்னை மதிக்கவில்லை என்ற தப்பான எண்ணத்தில் பழிவாங்கி விடுகின்றது. இதன் போது மனிதனுக்கு வெறுமனே எற்படுவது கஷ்டங்களும் துயரங்களும்தான். ஒரு மனிதன் புறக்கண்ணில் தங்கி வாழ்வான் என்றால் அவனுடைய வாழ் நாள் முழுவதும் நிராசையில்தான் முடியுமே தவிர அவ்வாசைகளை எப்பெழுதும் பிரதிபலிக்காது. ஆனால், நாம் ஆசை வைப்பதும், அதனை நோக்கி நகர்வதும் அகக்கண்ணின் உதவியுடனாக இருக்க வேண்டும். அல்லாமல், பறக்கண்ணின் உதவியால் அதனை எட்ட முடிந்தால் பனை மரத்தின் கீழ் பால் அருந்துகின்ற அனைவரையும் நாம் கள்ளு அருந்துபவர்கள் என தவறாக பழி சுமத்த வேண்டியிருக்கும். நீங்கள் கேட்கலாம் பனை மரத்தின் கீழ் இருந்து கள்ளு அருந்த முடியாதா? ஏன்று. அதுதான் புறக்கண்ணின் வேலை.

இந்த கன்னி வைத்தாற் போன்று இருக்கின்ற இந்த உலகின் நிலைகளை விட்டு நாம் விலக வேண்டுமானால், எம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் அல்லது யதார்த்த நிலைக்கு திரும்ப வேண்டுமானால் நாம் எமது அகக்கண்ணின் தொழிற்பாட்டை பலப்படுத்திக் கொள்ள வேண்டும், வேறு வழியில்லை. அப்படியென்றால், நாம் புறக்கண்ணை புறக்கணிக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. அது தானகவே எமது அகக்கண்ணால் மதிக்கப்படும். நாம் எமது புறக்கண்ணான தேச துரோகிக்கு சார்பாக இயங்கினால் கழுதை கெட்டால் குட்டிச் சுவர்தான்.

மேலதிகமாக இன்னும் சில விடயங்கள் இருக்கின்றன கூறுகின்றேன் கேளுங்கள். உங்களுடைய வாழ்க்கைக்கு அதுவும் உதவும். எம் மத்தியில் இடம் பெறுகின்ற பிரச்சினைகளை நாம் கருத்திற்கொள்ளவென நான் கற்றுக்கொண்டவைகள் அவை. ஒரு பிரச்சினையை அணுகும் போதோ, துக்கபபடுகின்ற போது, முடிவெடுக்க இயலாமல் துடிக்கின்ற போது நீங்கள் பின்வரும் சிந்தனைகளை மனத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள். ஓரளவாவது இந்த படுபாவியின் கருத்து உங்களுக்கு உதவும்.
அடிப்டைபயில் இந்த உலகத்தில் வாழகின்ற, காண்கின்ற யாவும் மகத்துவமானவையும், சிறந்தவையுமாகும்.

பிரச்சினையினை ஒன்று ஏற்படுகின்றது என்றால் நாம் அதற்கான சரியான முடிவினை அல்லது பொறிமுறையினை இன்னும் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் கருத்து.

தீர்வொன்றினை எட்டுவதற்கு பல்வேறு முடிவு அல்லது பொறிமுறைகள் (strategies) காணப்படுகின்றன.


நீங்கள் தேர்வு செய்த ஒரு பொறிமுறை அல்லது முடிவு உங்களுடைய பிரச்சினையை தீர்க்க போதுமானதாக இல்லை அல்லது கையாலாகாததாக இருக்கின்றது என்றால் மற்றுமொரு பொறிமுறைக்கு தாவுங்கள்.


அவ்வாறு உங்களிடம் பொறிமுறை அல்லது முடிவொன்று இல்லை என்பதனால் மட்டும் நீங்கள் பிரச்சினை தீராது அல்லது பொறிமுறைகள் இனி இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாது.


ஏனெனில், பிரச்சினையில் பங்கு கொண்டுள்ள அடுத்த நபரிடம் அதற்கான பொறிமுறைகள் காணப்படும். அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். அது எப்படி? அவருடைய பொறிமுறையில் திருப்திப்படுவது, அதில் நியாயம் இல்லையே என்று நீங்கள் கூறலாம். ஏற்றுக்கொள்கின்றேன்.

அப்படியென்றால், நீங்கள் உங்களைப் பற்றி சிந்தியுங்கள், உங்களுடைய சிறப்புக்களை மீள நினையுங்கள், உங்களுடைய மதிப்பினை உணருங்கள், அதன் பெறுமதியினை ஏடை போடுங்கள், விலை மதிக்க முடியாத அந்த பெறுமதியின் மகத்துவத்தினை நினைவில் கொண்டு வாருங்கள்....

உங்கள் எதிரில் நீங்கள் எதிரியாக கொள்கின்ற அந்த அப்பாவி நபரை தற்போது கருத்திற் கொள்ளுங்கள்...உங்களைப் போன்றுதான் அவரும் இவ்வுலகில் பிறந்தார், உங்களைப் போன்றே அவரும் இவ்வுல வாழ்வை கற்றுக் கொண்டார்.

உங்களுக்கிருக்கின்ற தாய் தந்தையரைப் போன்றே அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கின்றது. அந்தக் குடும்பத்திற்காக அவரும்தான் கஷ்டப்படுகின்றார், அவருக்கும் இந்த உலகில் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று உங்களைப் போன்ற எண்ணம் உண்டு.

தனது சந்ததியினைப் பற்றிய கவலையும், அதனோடு இலட்சியமும் அவருக்குமுண்டு. அதற்காக அவரும் உங்களைப் போன்று இரவு பகலாக உழைக்கின்றார்.


அவரும் இவ்வுலகத்தை காணவே பிறந்தார். அவருக்கும் உங்களைப் போலவே துன்பங்கள், சொல்லொணா துயரங்கள், ஆற்றொணா வடுக்கள் என்பன இருக்கின்றன.

உங்களைப் போலவே அவரும் இந்த உலத்தில் இருக்கின்ற யாவுக்கும் சொந்தக்காரர்தான். அவருக்கும் ஆசைககள் இருக்கின்றன. அவருக்கும் உங்களைப் போன்று அதன் பெறுமதி தெரியும், நீங்கள் படும் அதே துயரத்தைத்தான் அவரும் தனது ஆசைகளை அடைவதற்காக முகம் கொடுக்கின்றார்.


இந்த உலகம் என்பது எம்மைப் போன்று யாவருக்கும் ஒரே அனுபவங்களைத்தான் தாங்கி வைத்துள்ளது என்பதனை சற்று சிந்தியுங்கள்.

தற்போது எம்மில் எவர் சிறந்தவர் என்று சற்று சிந்தியுங்கள்! இதனைத்தான் தன்னுணர்வு காண்தல் என்று கூறுவது.

பிரச்சினையில்லை.....

இப்பொழுது நீங்கள் அவ(ளை)(ர)ப் போன்று என்னை ஒரு உதவாக்கரை, அடி முட்டாள், ஓட்டாண்டி, தைரியம் இல்லாதவன் என எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.     


நீ வேறு உருவெடுத்தால்,
நான் ஏன் உன்னை வெறுக்க வேண்டும்.
எமது இலட்சியம் ஒன்றாக இல்லாத போது,
நான் ஏன் உன்னை வெறுக்க வேண்டும்.


நீ எங்கேயோ அடைக்கலம் தேடினால்,
நான் ஏன் உன்னை வெறுக்க வேண்டும்.
உன்னுடைய திசை வேறு பக்கமாக இருந்தால்,
நான் ஏன் உன்னை வெறுக்க வேண்டும்.


எம்மிருவருக்குமிடையில் இறைவனை தீர்மானிக்கவிட்டு,
நான் ஏன் உன்னை வெறுக்க வேண்டும்.
மனிதாபிமானத்தை வாழச் செய்து,
நான் ஏன் உன்னை வெறுக்க வேண்டும்.


என் சகோதரியைப் போலவே உன்னையும் வாழ்த்தி,
நான் ஏன் உன்னை வெறுக்க வேண்டும்.
சுவர்க்க லோகத்தை தகர்த்துத் துண்டாடி,
நான் ஏன் உன்னை வெறுக்க வேண்டும்.


நாம் எல்லோரும் ஒரு பிடி மண்ணிலிருந்து பிறந்தவர்கள்,
நான் ஏன் உன்னை வெறுக்க வேண்டும்.
நான் ஏன் உன்னை வெறுக்க வேண்டும்,
நிச்சயமாக - இறைவன்,
இந்த விளையாட்டில் கேலி செய்யவில்லை.

0 comments:

Post a Comment