கழுகின் கதை

இது கழுகின் கதையா இல்லை, கழுகுக் கதையா என்று நீங்கள் நினைக்க வேண்டாம். கழுகைப் பற்றி சொன்னால் என்ன, இல்லை இந்த கழுதையைப் பற்றி சொன்னால்தான் என்ன? அழகாய் இருந்தால் அல்லது இரசிப்பதாக இருந்தால் ஏற்றுக்கொள்வதுதானே என்றெல்லாம் உங்களைப்போன்று என்னால் திருப்பதிப்பட முடியாது. எமது வாழ்வில் அல்லது இந்த உலகில் எமக்கு கிடைக்கப் பெறுகின்ற விடயங்கள் அனைத்தும் எத்தனை இன்பமாக அல்லது இரசனைக்கு விருந்தாக இருந்தாலும் அதனை எம் அறிவுடன் அனுபவத்துடன் பொருத்திப் பார்க்க நேர்கிற போதுதான் நிஜத்தில் இன்பம் பிறக்கிறது. நீங்களும் பரீட்சித்துப் பார்க்கலாம். ஏதாவது இருந்தால்...!


இப்படித்தான் ஒரு செய்தி இன்று காலை எனக்கு கிடைத்தது. அனுப்பியவர்கள் மிகவும் அரிதானவர்கள் அனுப்பும் செய்தியும் வழமை போன்று பொருத்தமாகத்தான் இருந்தது. உலகத்துக்கு ஏற்ற சொற்றொடர்கள் ஆனால் எனக்கென்னவோ திருப்பதியாக படவில்லை. முதலில் வந்த செய்தி என்ன என்று பார்த்துவிடலாம்;. வந்த செய்தி என்ன? என்பதனைவிட அது சொல்ல வந்த விடயம் என்ன என்பதுதான் அதி முக்கியமானது. ஆனால் அனுப்பியவர்களை விட அனுப்பப்பட்டவர்கள் பாவம். ஏனெனில் எமக்கு வந்த செய்தி தெரியும் என்றாலும், அது சொல்ல வந்த செய்தி என்ன என்று புரிவது கடினம். இப்படி நான் சொல்ல வந்த செய்திதான் என்ன என்று நீங்கள் கேட்கலாம். 'அது ஒரு கழுதையின் கதை...' ஐயோ மன்னித்துவிடுங்கள் எழுத்தில் பிழை ஏற்பட்டுவிட்டது. 'அது ஒரு கழுகின் கதை...' மீண்டும் குழப்பம். இங்கு ஏற்பட்டது எழுத்துப் பிழையா? இல்லை எழுத்தில் பிழையா? என்று நீங்கள்தான் தீர்க்க வேண்டும்.

பறவைகளுள் கழுகிற்கு ஆயுட்காலம் மிக கெட்டியானது.
அதனால் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்த உலகத்தில் சீவிக்க இயலும்.
ஆனாலும், இந்த வயதை அடைந்து கொள்ள அது கடும் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டியிருக்கிறது.

அதன் 40வது வயதில், இரை பிடுங்க உசிதமாக இருக்கும் கூரிய நகங்கள் சிதையத் தொடங்குகின்றன. அதன் நீண்ட கூரிய அலகுகள் வளைய ஆரம்பிக்கிறது.

அதன் அடர்த்தியான இறகுகள் சேர்ந்து அதன் கிழட்டு இறக்கைகளின் பாரத்தினை அதிகரிக்கிறது. இதனால் அவை நெஞ்சுப் பகுதியுடன் முட்டுண்டு பறப்பதனை கடினமானதாக்கிவிடுகிறது.

இதன்போது கழுகிற்கு இரண்டு தேர்வுகள்தான் எஞ்சியிருக்கிறது: ஒன்றில் இறக்க வேண்டும் அல்லது கடுமையான வலியுடன் கூடிய மாற்றத்தினை நோக்கிய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அதுவும் 150 நாட்களுக்கு அந்த வலி தவிர்க்க முடியாதது.

இந்த வலியுடன் கூடிய அந்த மாற்றத்தினை கழுகு ஆரம்பிப்பது மலை உச்சியில் இருக்கும் அதன் கூட்டில் இருந்துதான். அங்கு அதன் வளைந்த அலகு ஒடிந்துவிடும் வரை அலகினை மலைப்பாறையுடன் சிராய்க்கிறது.

அப்படி அலகினை சிராய்த்த பின்பு, அதன் அலகு மீண்டும் புதிதாய் வளரும் வரை அது காத்திருக்கிறது. பின்னர், அதன் கூரிய நகங்களை பிடுங்க ஆரம்பிக்கிறது.

அதற்கு கூரிய புதிய நகங்கள் முளைத்த பின்பு, கழுகு அதன் வயதுமுதிர்ந்த அதன் இறகுகளை பிடுங்க ஆரம்பிக்கிறது.

5 மாதங்கள் கடந்த பின், கழுகு தனக்கே உரித்தான வகையில் மீண்டும் பறப்பதற்கு சக்தி பெற்றுவிடுவதுடன் வாழவும் ஆரம்பிக்கிறது... மேலும் 30 வருடங்கள்.

இப்படியான மாற்றமொன்று எதற்காக?

நாம் பிழைத்து வாழ்வதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் மாற்றம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

பல வேளைகளில் நாம் எமது பழைய ஞாபகங்களையும், பழக்க வழக்கங்களையும், இன்னோரன்ன நடைமுறைகளையும் அழித்துவிட வேண்டிய தேவை ஏற்படுகின்றது. 

கடந்த கால துயரங்களில் இருந்து விடுதலை பெற்றால் மாத்திரமே, நாம் நிகழ்காலத்தின் உன்னதம் மிக்க நலன்களை அனுபவித்துக்கொள்ள முடியும்.

எமக்கு என்ன நடக்கிறது என்பதனால் எமது வாழ்வு தீர்மானிக்கப்படுவது கிடையாது. மாறாக எது நடந்தாலும் அதற்கு நாம் என்ன செய்வோம் என்பதில்தான் அது தீர்மானிக்கப்படுகிறது. வாழ்வு எமக்கு எதனைக் உணர்த்துகிறது என்பதனைவிட எமது அணுகுமுறைகளால் வாழ்க்கைக்கு நாம் எதனை கொண்டுவருகிறோம் என்பதுதான் முக்கியமானது.

ஒரு நேர்மறையான அணுகுமுறையானது நேர்மறை எண்ணங்கள், நிகழ்வுகள், மற்றும் விளைவுள் முதலியனவுக்கான சங்கிலி எதிர்வினையினை தோற்றுவிக்கிறது.   
 இது ஒரு வினையூக்கி. அசாதாரண விளைவுகளை பெற்றுத்தருகின்ற ஒரு தீப்பொறி.
ஒரு மாற்றத்தினை உண்டு பண்ண உதவுகிறது.

இவைதான் அது சொன்ன செய்தி. அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது என்றாலும் நான் முடிந்தவரை இங்கு தமிழ்படுத்தி தந்திருக்கிறேன். விடயத்துக்குள் நுளைவோம்.

கூற்றுக்கள் யாவும் மாற்றம் குறித்த கருத்துக்களையே தெரிவிக்கின்றன. முதலில் 'மாற்றம்' என்றால் என்ன? இன்று இந்த மாற்றம் என்ற ஒன்றிற்குள்தானே எல்லோரும் மயங்கிக் கிடக்கிறார்கள். அது உண்மையில் இன்று ஒரு போகப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது என்பது எனது கருத்து. இது மாற்றத்திற்கு ஒரு மாற்றமாகவும் மனித உலகுக்கு உருமாற்றமாகவும் அமைந்துவிடுகிறது. அது சரி 'மாற்றம்' என்றால் என்ன? எங்கிருந்து நாம் அதனை எதிர்பார்க்கிறோம். சாத்தியமானதை விடுத்து அசாத்தியமாக சிந்திப்பதுதானே மனிதனின் வேலை அதனால்.

மாற்றம் என்பது அவசியமானதுதான். அது மனிதனுக்கும் இந்த மனித உலகுக்கும் எப்போதும் தேவையான ஒன்றுதான். அப்படியென்றால் அது எத்தகைய மாற்றம். அல்லது இப்படி நாம் பேசுகின்ற மாற்றம் என்பது எது? இந்த உலகம் வீணானதல்ல, உலகத்தில் வாழ்கின்ற யாவும், அல்லது இப்பபிரபஞ்சமே ஒரு முனைப்போடுதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் என்பது ஒரு மாற்றம்தான். அதனை வேறுவடிவில் விளக்கப்போனால், இயல்பாகவே உலகம் மாற்றம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. யார் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி அது மாறும், மாறிக்கொண்டே இருக்கும். அது இறைவனின் இரகசியம். இந்த உலகம் தோன்றிய நோக்கம் எதுவோ அந்நோக்கினை ஈட்டுதற்கு தேவையான விடயங்கள் இருக்கின்றன. அவை காலத்திற்கும், நேரத்திற்கும் ஏற்ப மாற்றம் பெற்றுத்தான் வருகின்றன. அப்படி மாற்றம் ஏற்படாவிட்டால் அங்கு உலகம் என்பதற்குள் நாம் அர்த்தங்களை அல்லது யதார்த்த நிகழ்வுகளை கண்டு கொள்ள முடியாது. எல்லாம் நாம் கண்ட, அனுபவித்த அல்லது அறிந்த விடயங்களாகவே இருக்கும். மொத்தத்தில் எமக்கு தெரியாத எதுவும் இருக்க முடியாது. இவ்வாறான ஒரு மாற்றம் நிகழ்ந்து வருவதனால்தான் உலகம் என்பது முன்னோக்கிச் செல்கின்றது. அல்லாவிடில், அது அப்படியே இருந்திருக்க வேண்டும், அல்லது முன்பே அழிந்திருக்க வேண்டும். இதுதான் உண்மையில் மாற்றம் என்று எம்மத்தியில் நிகழ்வது. இந்த மாற்றம் ஒன்றுக்கு மாத்திரம்தான் அர்த்தபுஷ்டி இருக்கிறது. அது மிகவும் இயல்பானது, யாராலும், எதனாலும் தடுக்க முடியாதது, மாற்றவும் முடியாதது. இறைவனும் அதனை தற்போதைக்கு, இந்த நொடிவரை மாற்ற விரும்பியது கிடையாது. என்னடா இறைவனுடன் விருந்து சாப்பிட்டவர் போன்று பேசுகிறானே என்று நீங்கள் முனுமுனுப்பது எனக்கு கேட்கிறது. ஒருத்தரிடமும் கூறிவிடாதீர்கள். பின்பு நீங்கள் சுவர்க்கம் செல்ல நான்தான் பரிந்துரை செய்யவேண்டியிருக்கும். அவ்வாறு கூறியது ஏனென்றால், இந்த நொடிப் பொழுது வரை உலகம் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. நீங்களும் நானும் எதையாவது புதிதாக செய்துகொண்டுதான் இருக்கிறோம். இந்த இயல்பான மாற்றத்தினைப் பற்றி நாம் ஒருபோதும் பேசுவதோ அல்லது கவலைப்படுவதோ கிடையாது. ஏனெனில் அது நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதனை நாம் எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறோம்.

அப்படியென்றால், நாம் பொதுவில்; பேசுகின்ற 'மாற்றம்' என்பது எதனை? எதற்காக நாம் அது குறித்து பேசுகின்றோம்? உண்மையில் இரண்டாவது கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை. ஏனெனில் இந்த மாற்றம் குறித்த நம்பிக்கையோ, இதன் மீதான அர்தத்தினையோ என்னால் இன்னும் கண்டுகொள்ள முடியவில்லை.

நாம் பொதுவில் பேசுகின்ற மாற்றம் என்பது முற்று முழுதாக தம்முள் நடந்தேறுவது. அதாவது நாம் முன்பு பார்த்தோமே இயல்பில் அல்லது இயற்கையாக நடந்தேறுகின்ற மாற்றம் என்று. அதனைவிடுத்தும் வேறானது. அது ஒரு மனிதன் தனது சூழலுக்குள் ஏற்படுத்த முனைகின்ற விடயமாக நான் கருதுகின்றேன். அல்லது இவ்வாறும் கூறலாம். அதாவது, மனித சூழலுக்குள் மனிதன் ஏற்படுத்திக்கொள்ள போராடுகின்ற மாற்றம். இம்மாற்றத்திற்கு காரணமாகவும், காரியமாகவும் இருப்பது மனிதன்தான் என்பதனை நீங்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் ஆரம்பத்தில் நான் விளக்கிய உலகில் ஏற்படுகின்ற இயல்பான மாற்றத்தில் காரணம், காரியம் என்பன இறைவன் மற்றும் உலகம் என்பதாகும். விளங்காவிட்டால் இப்படி எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் கூறிய இயல்பான மாற்றம் என்பது கடவுளால் உலகில் ஏற்படுத்தப்படுகின்றது. இரண்டாவது வகை மனிதனால் அவனுக்குள் ஏற்படுத்த நினைக்கின்ற மாற்றும் முயற்சி. இப்பொழுது மனிதன் கடவுளாக விரும்புகிறானா? என்ற கேள்வியும் எனக்குள் தோன்றலாம். ஏனெனில் இறைவனை மீறி அவனால் தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறானே! அல்லது மனிதன் கடவுளை மறந்திருக்க வேண்டும். இது நியாயம்தானே...! இன்றெல்லாம் நியாயாம் எது என்பது பற்றி நாம் முடிவு எடுக்க முடிவது கிடையாது. அது யாரோ வேறொருவர்தான் கூறவேண்டும் என்று நாம் ஆக்கி வைத்திருக்கின்றோம்.

மனிதன் என்பவன் தனித்தன்மை வாய்ந்தவன். அவனுடைய எண்ணங்களும், அபிலாசைகளும் முற்றிலும் வேறுபட்டன.  ஏனைய படைப்பினங்கள் யாவும் அவனைவிடுத்தும் வேறானவை. வேறுபிரித்து அறிய முடிவன. அவனுக்குள் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களும் உணர்வுகளும் புதிது புதிதாய் தோன்றுவதனால் இந்த உலகில் ஏனைய ஜீவராசிகளைப் போன்று அவனால் வாழ்ந்துவிட முடியாது. அது சுலபமான காரியமும் அல்ல. அவனுடைய வாழ்க்கையின் ஒவ்வவொரு அசைவுகளும் அவனுக்குள் இருக்கும் இரகசியங்களையும் வெளிக்கொணர்வதாகத்தான் அமைகின்றன. அவனுக்கென்று குணநலன்களும் பண்புகளும் உண்டு. அவை அவனுடைய வாழ்வியல் செயற்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன. இவ்வாறு வாழ்கின்ற மனிதன்தான் 'மாற்றம்' தேவை என்கின்றான்.

காரணம், அவனுக்கு மாற்றம் தேவைப்படுகிறது. ஏனெனில் அவனுடைய வாழ்வில் துன்ப துயரங்களை அனுபவிக்கும் போதும், வேண்டாத ஒன்று நேருகின்ற போதும், வேண்டுகின்ற ஒன்று அவனுடைய சக்கதிக்கு அப்பால் என்று கற்பனை பண்ணுகிற போதும், அல்லது மேலும் மேலும் ஏதாவது ஒரு காரியத்தினை அல்லது வேறு ஏதாவதினை எதிர்பார்த்து காத்திருக்கின்ற போதும், காத்திருந்து காத்திருந்து களைத்துவிடுகின்ற நிலையின்போதும் அவன் தன்னைத் தானே திருப்பதிப்படுத்திக் கொள்ள ஏதாவது பொறிமுறை ஒன்று தேவைப்டுகின்றது. இதற்கான பொறிமுறை ஒன்றாக மனிதன் கண்டுபிடித்ததுதான் இந்த 'மாற்றம்' என்ற ஒன்று. இது அவனுடைய வாழ்வில் வெறும் போலியாக சித்தரிக்கப்பட்ட ஒன்று என்பதனை அவன் எந்தவொரு கனமும் சிந்திக்க முயற்சித்தது கிடையாது. அதற்கு அவனால் நியாயமும் கற்பிக்கப்படுகின்றது. அதாவது, பொறிமுறை பொய்யாக இருந்தாலும், போலியானது என்றாலும் அதனால் அணுகூலம் இருப்பதாக கூறிக்கொள்கிறான்.

'மாற்றம்' என்பது வெறும் போலியானது என்தனால் அதனால் நாம் நன்மை என்று கூறிக்கொள்கின்றதும் போலியானது என்பதனை மறந்துவிடுகின்றான். ஓன்றினை அடையும் வழி பிழையானதாக இருப்பின் அடையப்பட்ட பொருளும் பிழையாகத்தான் இருக்கும் என்பது தெளிவு. பிற்காலத்தில் இந்த நன்மை என்று கருதிய விடயத்திற்கே அவன் மாற்றத்தினை வேண்டி நிற்பான் என்பது உறுதி. அதனால்தான் மனிதன் தான் வாழும் வரையும் மாற்றம் தேவை என்றுதான் கூறிக்கொண்டிருப்பான் என்பதனை உறுதிப்பட நான் கூறமுடியும். ஆனால் அவன் வேண்டுவது உலகில் நேருகின்ற இயல்பான மாற்றத்தை அல்ல என்பதுதான் இங்கே இருக்கின்ற சிக்கல். மாற்றத்தினை உண்டுபண்ணுவது ஒரு பொருட்டல்ல. அதனை எத்தனை காலம் அழியாது பாதுகாத்துக்கொள்ள முடியும் அல்லது அதன் பயன் எவ்வளவு என்பதில்தான் பிரச்சினையே இருக்கின்றது. மாற்றத்திற்கு ஒரு மறுமாற்றம் தேவைப்படுமாயின் அம்மாற்றத்தினால் எந்தப் பயனும் கிடையாது. கூடவே அதனை ஒரு பொருளுணர்ந்த மாற்றமாகவும் கொள்ள முடியாதல்லவா.

நாம் வாழும் வரை 'மாற்றம்' தேவை என்று கூறுவோமானால் அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு வாழ்வில் மாற்றம் தேவை என்று கூறுவோமானால் அது வாழத்தெரியாதவனின் கோரிக்கை என்பதுததான் என்னுடைய கருத்து. வாழ்வினை பற்றி திருப்திப்பட்டுக்கொள்ள முடியாத ஒருவருக்கே இப்படி ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. வாழ்வினை இரசித்து வாழக்கற்றுக் கொண்டவனுக்கு மாற்றம் என்பது உலக வாழ்வில் இயல்பாக கிடைக்கின்றதே அது போதும். அவனுக்கு துன்பம் இன்பம் என்ற இரண்டு வேறுபட்ட அனுபவங்கள் கிடையாது. அவனுக்கு எப்போதும் நேர்ப் பொருளே தென்படும். அப்படியென்றால் அவனுக்கு இன்பம் மட்டும்தான் தெரிந்திருக்கும். துன்பம் என்ற ஒன்று அவனுடைய அகராதியிலும் கிடைக்காது. மாறாக, மனிதன் இலகுவில் திருப்பதிப்படாத அல்லது திருப்திப்படுத்த இயலாத பிறவி என்பதனால் அவனுக்கு எப்போதும் மாற்றம் பற்றிய எண்ணம் தொண்டைக் குழியில்தான் இருக்கும்.

சற்று சிந்தித்து பாருங்கள். இல்லாதவனுக்கு ஒன்றைப் பற்றிய கவவலையிருக்கும். அதே வேளை, இருப்பவனுக்கு இன்னும் ஒன்றை எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்கின்ற கவலை. அப்படிப்பெற்றுக் கொண்டாலும், அடுத்து மற்றொன்றினை பெற வழி என்ன என்ற கவலை. இப்படித்தான் மனித குணம். இதனால்தான் இத்தகைய மாற்றம் என்பது மனிதனை எப்போதும் திருப்திப்படுத்தாது. இன்னுமொன்று எனக்கு நினைவுக்கு வருகின்றது. இருட்டில் தொலைத்ததை வெளிச்சத்தில் தேடுவது முட்டாள்தனம். அதேபோன்றுதான், நாம் எல்லோரும் மாற்றத்தினை வேறு எங்கோ தேடிக்கொண்டிருக்கிறோம். அது தொலைந்த இடம் நாமாகத்தானே இருக்கிறாம் என்பதனை உணர்ந்து நடந்தவர்கள் எம்மில் மிகவும் அரிதானவர்கள். எம்மவர்கள் யாவரும் அறிந்தோ அறியாமலோ மாற்றம் பற்றித்தான் எப்போதும் சிலாகிக்கின்றோமே தவிர அது எங்கிருந்து வரவேண்டும் என்று சிறிது கற்பனை கூட பண்ணுவது கிடையாது. அது உண்மையில் நாம் கற்பனை பண்ணுவது போன்றுதான் நிகழவேண்டுமா என்றெல்லாம் சிறிதளவும் சிந்தித்து பார்ப்பது கிடையாது.

நேற்று நண்பகல் ஒரு மணியிருக்கும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று கொண்டிருந்தேன். சமிக்கை விளக்கினை பின்பற்றி சைக்கிளை நிறுத்தி வைத்திருந்த நான் அனுமதி கிடைத்ததும் மீண்டும் புறப்பட்ட போது தவறுதலாக என் முன்னால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த ஒருவர் என்னுள் சிக்குண்ணப் பார்த்தார். இதன் போது ஹேய்....என்று நான் சற்று குரல் கொடுத்ததுடன் சற்று விலத்தி எனது மோட்டார் சைக்கிளை ஓட்ட முயற்சித்தேன். இதன் போது துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் தனது பாதையினை விலத்திக் கொண்டு என்னைப் பார்த்து "சோறி...அண்ணன்" என்ற போது நானும் "பரவாயில்லை" என்று கூறி எனது கையினால் சமிக்கை காட்டியபோது ஏற்பட்ட திருப்தி என்பது உண்மையில் உள்ளுர மகிழ்ச்சியால் அளவிட முடியாதது.

இப்படி எத்தனையோ விடயங்களில் நாம் எம்மை மறந்துவிடுகின்றோம். மேலும் எத்தனையோ விடயங்கள் எம் வாழ்வில் என்றும் மறக்க இயலாதவையாக குவிந்து கிடக்கின்றன. என்றாலும் எமது கோசங்களும் கருத்துக்களுக்கும் எப்போதும் பஞ்சம் நிலவியதே கிடையாது. எங்கு பார்த்தாலும் மாற்றத்திற்கான குரல்கள்தான் ஒலிக்கின்றன. இங்கு நாம் இதனை நாம் மறக்க கூடாது, இவற்றை நாம் மறந்துவிட வேண்டும் என்று எதனையும் செய்வதும் கிடையாது. அத்தகைய முடிவுகளை எடுத்து நாம் செயற்படுவதும் கிடையவே கிடையாது. இயல்பாகவே எவற்றை மறந்துவிட வேண்டும், எவை மறக்க முடியாதது என்று எமக்கிருக்கின்ற சிறப்பியல்புகள்தான் முடிவெடுக்கின்றன. இத்தீர்மானத்தினை மேற்கொள்ளவென எமக்குள் இருக்கின்ற சிறப்பான இயல்பு என்தனால் அது நபருக்கு நபர் வேறுபடுகின்றதனை நாம் அவதானிக்கலாம். இவற்றில் ஒருவர் மாற்றத்தினை வேண்டுவாராயின் அது அவருக்கிருக்கின்ற சிறப்பியல்பில் மாற்றத்தினை வேண்டுவதாக அமைந்துவிடுகிறது. மறுவாறாக கூறினால், அந்நபர் தனக்கிருக்கின்ற அத்தகைய சிறப்பியல்பில் குறைதகுதி காண்கிறார் என்பதுதான் அர்த்தம்.

குறிப்பாக, நேர்ப்பொருளை அனுபவிப்பவர்களோ மாற்றம் குறித்த பேச்சுக்களில் ஈடுபடுவது கிடையாது. மாற்றம் பற்றி அதிகம் சிந்திப்பவர்கள் ஒன்றில் ஏதாவது விடயத்தினால் பாதிக்கப்பட்டவராக இருப்பார்கள். அல்லாது போனால் அத்தகைய மாற்றம் பற்றிய ஆலோசனைகளை வழங்குபவர்களாக இருப்பார்கள். இவ்விருதரப்பினரும் ஒரே குழுவின் இரு பங்குதாரர்களாவர். இவ்விரு அங்கத்தவர்களும் நேர்ப்பொருளை பார்ப்பதனை விடுத்தும் நேர்எதிர் கருத்துக்களின் பால் அதிகம் கவனம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் அர்த்தம். ஒரு பழமொழி சொல்வார்கள் தெரியுமா? "உப்பைத் திண்டவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்". இன்னுமொன்று இருக்கிறது கூடவே சிந்தியுங்கள். "வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்". அவரவர் ஈட்டிய வினைகள் அவர்களுடைய கருமங்களின் விளைவு என்பதனை நாம் மனத்தில் நிறுத்திக்கொண்டுதான் செயற்பட வேண்டியிருக்கிறது.

ஒருவர் தான் செய்த செயல் வெற்றி பெறவில்லை என்பதற்காக கவலைப்படுகிறான் எனில் அது யாராலும் தவிர்க்க முடியாத ஒன்று. அதனை யாராலும் மாற்றவும் முடியாது. ஏனெனில் அது புரியப்பட்ட காலம் என்பது கடந்து சென்ற ஒன்று. நாம் நினைக்கின்ற போது சில விடயங்கள் நடந்து விடுவது கிடையாது. நாம் நினைக்காத விடயங்களும் பலவேளைகளில் நடந்துவிடுவதும் உண்டு. இதனைத்தான் விதி நாம் கூறுவது. விதியினால் ஏற்பட்ட வலியினை நாம் மாற்ற முயற்சிப்பது என்பது முற்றிலும் முட்டாள்தனம். அதாவது அந்த நபரை அது குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், மகிழ்ச்சியாக இருக்கும் படியும் அறிவறுத்துவோமானால் அது அறிவுக்கு ஒவ்வாத செயல் என்றுதான் நான் கூறுவேன். ஏனெனில் சாவு நடந்த வீட்டிற்கு சென்று புதுவருட வாழ்த்து தெரிவிக்க முடியுமா? இது உங்கள் அறிவுக்கண்களுக்கு அவ்வளவு நியாயமாக படாது என்பது எனது நம்பிக்கை. 
இப்படி ஆறுதல் கூறுவதாக, அறிவுறுத்துவதாக அன்றாடம் எத்தனையோ விடயங்களை, எம்மால் கேட்கவும், பார்க்கவும், வாசிக்கவும் முடிகிறது. அவை எல்லாம் ஏதோ வகையில் மாற்றம் குறித்த வேண்டு கோள்களாகத்தான் இருக்கின்றன.
.
வாழக் கற்றுக்கொள், சாகக் கற்றுக்கொள்ளதே.
புன்னகை என்பது அமைதியின் இருப்பிடம்.
இப்பாதையை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
ஏதிர்காலம் உங்கள் கையில்.
ஆழகு என்பது இதயத்தில் உண்டு.
வேகம் திகிலானது, ஆனால் கொலையும் செய்யும்.
கோபம் என்பது நோயில் ஒரு வகை.
நின்று போன கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டு தடவை நேரம் காட்டும்.
பிறரை அறிந்தவன் கெட்டிக்காரன், தன்னை அறிந்தவன் ஞானி.
வாயைத் திறவாத மீpன்கள் தூண்டிலில் அகப்படுவதில்லை.
பேசிச் சாதிப்பதைவிட நிதானித்து சாதிப்பதுதான் புத்திசாலித்தனம்.
கல்வி என்பது ஒரு பணியோ அல்லது சிக்கலோ அல்ல. அது உலகில் வாழ ஒரு வழி.
துன்பம் வரும்போதுதான் ஒருவனுக்கு தன்னை அடையாளம் தெரிகிறது.
உள்ளே நுளைய முன்பு வெளியே வருவது பற்றி யோசிக்க வேண்டும்.
சேற்றில் புதைந்த யானையை காக்கையும் குட்டும்.
நேரத்தை சேமிக்க கடிகாரத்தை நிறுத்தி வைக்க முடியுமா.
சுத்தமான குடிநீரையே பருகுங்கள்.
நல்லது செய்யுங்கள்.
சூழலைப் பாதுகாப்போம்.


இப்படி எத்தனை வாக்கியங்கள் எம்முன்னால் குவிந்து கிடக்கின்றன. இவை எல்லாம் எம்மை மாற்றம் குறித்துத்தானே வேண்டுகின்றன. இவை யாவும் நாம் கண்டு பிடித்தவைதான். அவை ஒவ்வொன்றிற்கு பின்னாலும் உங்களுக்கு என்ன புரிகிறது. ஊங்களிடம் கேட்டால் நாம் மாறவேண்டும், அல்லது இந்த உலகில் 'மாற்றம்' வர வேண்டும். அது நிகழ்ந்தால்தான் எல்லாம் சரி வரும். இதைத்தானே கூறுவீர்கள். அன்று எனது வீட்டில் இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது. அம்மா எனது தம்பியினை அழைத்து "இங்கே வா, அந்தக் கடையில் மாவு இடிக்க கொடுத்தன். போய் வாங்கிகொண்டு வா" என்று சொன்னார். அவனும் 'உம்" என்று கூறிவிட்டு வரும் வழியில், நான் அவனிடம் எங்கு போகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவன் "மாவு இடிக்க கொடுத்ததாம், அத வாங்க போறன்" என்று கூறினான். எனக்கு ஒரு சந்தேகம். மாவை ஏன் இடிக்க கொடுக்க வேண்டும்?

இத்தகைய வாக்கியங்களின் பின்னால் எமது பலயீனம்தான் எனக்கு தெரிகின்றது. மனிதனாய் வாழும் நாம் எமது பண்புகளை உடனுக்குடன் பிரயோகிப்போமாயின் அல்லது எமது பண்புகள் தமக்கே உரித்தான வகையில் வெளிக்கொணரப்படுகையில் இத்தகைய அறிவுறுத்தல்கள் தேவைப்படுமா? நான் இங்கு கூறுவது மனிதனுக்கென தனித்துவம் இருக்கின்றதே அதனை. ஆக எமக்கு தேவை இந்த மாற்றமல்ல. அதைவிட முக்கியமானவை பல இருக்கின்றன. அவற்றை ஒரே வார்த்தையில் கூறுவதானால் வாழ்வியல் நுணுக்கங்கள் என்று கூறலாம் அவற்றைத்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவை இந்த உலகில் நாம் அனுபவிக்கின்ற அல்லது எமக்கு தென்படுகின்ற எதுவாகவும் இருக்கலாம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அவை மதிக்கப்படல் வேண்டும் என்பதனை நாம் மறந்துவிடமுடியாது. மனிதனாய் இருக்கலாம், மிருகமாய் இருக்கலாம், தாவரமாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். யாவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. இந்த நுண்ணறிவு வினைத்திறனுடன் பயன்படுத்தப்படுகின்ற வேளையில் மாத்திரம்தான் இயல்பான மாற்றத்திற்கு கூட சிறப்பு நேர்கிறது. மற்றெல்லாம் நாம் எம்மை நாமே சொற்ப காலத்திற்கு திருப்திப்டுத்திக்கொள்ள கண்டுபிடித்த வெறும் மாயைகள். 
மாயைகள் எனும் போதுதான் எனக்கு பாரதி கூறிய சில வரிகள் நினைவுக்கு வருகிறது, கேழுங்கள்.

"காலமென்றே ஒரு நினைவும்
காட்சியன்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ! இந்த குணங்களும் பொய்களோ!

காண்பதெல்லாம் மறைவதென்றால்
மறைவதெல்லாம் காண்பதன்றோ
நானும் ஓர் கனவோ! இந்த ஞாலமும் பொய்தானோ!"


மற்றொரு இடத்தில்...

"தோற்றங்கள் மாறிப்போகும்
தோல் நிறம் மாறிப்போகும்
மாற்றங்கள் வந்து மீண்டும் மறுபடியும் மாறிப்போகும்
ஆற்றிலே வெள்ளம் வந்தால் அனுதினமும் மாறிப்போகும்..."


என்று செல்கிறது அந்தக் கவிதை... இந்த உலகம் பற்றியும், நாம் ஜெபிக்கின்ற மாற்றம் குறித்தும் பாரதி கூறிய விதம் மிகவும் அப்பட்டமானது. நீஜத்தில் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டியன. இன்னும் நான் முடிக்கவில்லை. இவை இரண்டிற்கும் பொதுவில் ஒன்று உண்டு. அதுதான் நாம் வாழும் வாழ்க்கை. ஆந்த வழியில்தானே நாம் மாற்றத்தினை தேடுகிறோம். அதனை பற்றியும் ஒரு வித்தியாசமான மனிதர், இந்த உலத்தில் எல்லோராலும் வியந்து கூறப்படுகின் அசகாயமான ஒருத்தரின் ஆக்கத்தில் ஒரு சில பக்கங்களை அன்று என்னால் வாசிக்க முடிந்தது. அதில் சில வசனங்களில் "வாழ்க்கை' என்பது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

"வேறுபட்ட விளைவினை பெற்றுகொள்ளவென ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் செய்வதுதான் மிக மடத்தனமான ஒன்று. உன்னுடைய வாழ்வினை நீ வாழ்ந்து காட்டுவதற்கு இரண்டு வழிகள் மாத்திரம்தான் உண்டு. ஒன்று "அதிசயமாக எதுவும் இல்லை" என்பது மற்றொன்று "எல்லாம் அதிசயமாக உள்ளது" என்பதுதான். வாழ்க்கை என்பது துவிச்சக்கர வண்டியினை செலுத்துவதற்கு ஒப்பானது. நீர் சமநிலையை பேண வேண்டுமெனில் முன்னகர்ந்து செல்ல வேண்டும். சாக்கடை மனிதன் என்றாலும் சரி, சனாதிபதி என்றாலும் சரி நான் அதே வகையில்தான் பேசுகிறேன்." – ஐன்ஸ்டைன்

இப்போதாவது புரிகிறதா?

0 comments:

Post a Comment