இதயம் திறந்து உரையாடு

நாம் மற்றவர்களுக்கு கொடுக்கின்றவைகளும் அவர்களிடமிருந்து பெறுகின்றவைகளும் தாட்சண்யம் உடையதாகவும் இரக்கமுடையதாகவும் அமையப் பெற வேண்டும் என்பது எனக்குள் இருக்கின்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கையினால் நான் என்னுடைய வாழ்வில் பல தடவைகள் எனது சிந்தனைகளை சிதறவிட்டிருக்கின்றேன். எமக்குள் பொதிந்து கிடக்கின்ற தாட்சண்யமான இயல்பினை எம்மிடமிருந்து அறுத்துவிடுகின்றவைகள்தான் என்ன? எம்மை ஒரு வன்முறை மனிதனாக கடடவிழ்த்துவிடுகின்ற விடயங்கள்தன் என்ன? மாறாக, சில மனிதர்களை அவர்களுடைய இக்கட்டான சூம்நிலைகளிலும் தாட்சண்யமான இயல்பிலிருந்தும் மாறாமல் காக்கின்ற நிலமைகள்தான் என்ன? இத்தகைய சிந்தனைகள் எனக்குள் சுடர்விடத் துவங்கியது இன்று நேற்றல்ல. எனது சிறுபராயத்திலிருந்தே இப்படித்தான் நிகழ்கின்றன.

பள்ளிக்கூடத்தில் எனது சகபாடிகள் சிலவேளைகளில் என்னை கேலி புரிகின்ற போது, ஆசிரியர் என்னை எப்போதாவது நடாத்துகின்ற விதம் என்பன இன்னும் என் மனங்களை ஊடறுத்த வண்ணம்தான் இருக்கின்றன. இதனை நான் அவதானிக்கின்ற போது எனக்குள் எழுகின்ற முடிவு யாதென்றால், தாட்சண்யத்தில் எமது இதயத்தினை தங்கியிருக்க செய்கின்ற இயல்பினை தக்கவைத்துக் கொள்வது என்பதுதான். இதனைத்தான் தாட்சண்யம் நிறைந்த தொடர்பாடல் எனக் குறிப்பிடலாம். இதனைத்தான் மாகாத்மா காந்தியும் குறித்துக் கூறினார். அதாவது எமக்குள் எழுகின்ற வன்முறைக் கிளர்சியினை தூக்கியெறிந்துவிட்டு, இயல்பாக எமக்குள் புதைந்து கிடக்கின்ற தாட்சண்யத்தினையே இப்பதம் விபரிக்கின்றது. ஏம்மையறியாமலேயே அல்லது நாம் உரையாடுகின்ற வேளை, எமக்கு வன்முறையினை கையாளவேண்டும் என்கின்ற எந்தவொரு முன்னாயத்தமும் இல்லாமலேயே நாம் உபயோகிக்கின்ற சொற்கள் மற்றவர்களையோ அல்லது எம்மையோ புண்படுத்திவிடுகின்றன அல்லது வெறுப்படையச் செய்துவிடுகின்றன.

இத்தாட்சண்யம் நிறைந்த தொடர்பாடல் எமது மொழி வண்மையினை அதிகரிக்கச் செய்வதுடன், தொடர்பாடல் திறனையும் எமக்கு ஊட்டிவிடுகின்றன எனலாம். அதாவது, சுருங்கக் கூறினால் எம்மை மனிதனாக தொடர்ந்தும் நிலைக்கச் செய்வது இந்த தொடர்பாடல்தான். பெரிதாக இதனால் வேறுபடாக எதுவும் கூறப்படவில்லை. இவை சாதாரணமான விடயங்கள்தான். ஆனால் நாம் மறந்துவிடுகின்றமையினால் மீண்டும் கூறப்படுன்றது அவ்வளவுதான். எங்களை நாங்களே சுயபரிசோதனை நடாத்திக் கொள்வது, எமக்கிடையில் மனிதத் தன்மையுடன் எவ்வாறு உறவுகளை வளர்த்துக் கொள்வது, இவ்வாறு எமக்கிடையில் புரிந்துணர்வுடன் எப்படி வாழ்க்கையினை வாழக் கற்றுக் கொள்வது என்பனவற்றினைத்தான் இங்கு கூறப்படுகின்றன.

இந்த தொடர்பாடல் வழிகாட்டல் யாதெனில் அல்லது அதன் அத்திவாரம் யாதெனில், எமது கருத்துக்களை நாம் எவ்வாறு தெரிவிக்கினறோம் அத்துடன் மற்றவர்களின் கருத்துக்களை எவ்வாறு செவியேற்கின்றோம் என்பதுதான். சாதாரணமாக நாம் பேசுவது போன்றல்லாது, தன்னியல்பான பதிலளிப்பு செயற்பாடுகளுடன் அல்லது இங்கு எமது வார்த்தைகள் எமது கருத்துக்களை ஒட்டியதாக, எமது உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக, எமது தேவைகளை வெளிப்படுத்துவனவாக இதயத்திலிருந்து வெளிப்படுவனவாக இருக்கும். இங்கு நாம் எமது கருத்துக்களை தெளிவாகவும், கௌரவமாகவும் வெளிப்படுத்துவதுடன் மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவர்களாகவும், அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்பவர்களாகவும் நாம் எம்மை தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இந்நடவடிக்கை எமது வழமையான தீர்மானிக்கும மற்றும் விமர்சிக்கும்; இயல்பினால் எழும் சுயநல மனப்பாங்கை, பின்வாங்குகின்ற குணாதிசயத்தினை, தாக்குதல் செய்யும் பழக்கத்தினையும் விட்டும் எம்மை தூரப்படுத்தி எமது உறவுகளையும், குணநலன்களையும் புதியதொரு வெளிச்சத்திற்கு இட்டுச்செல்ல முயல்கின்றது. இதனால், தடை, சுயநலம் மற்றும் வன்முறை என்ப தூர வீசப்படுகின்றன. நாம் அவதானித்தவை தொடர்பாக தீர்மானமெடுப்பதனை அல்லது விமர்சிப்பதனை விட்டுவிட்டு தெளிவாக்கிக்கொள்ள முயற்சிக்கின்ற வேளை எம்மால் தாட்சண்யத்தின் ஆழத்தினை வெகுவாக புரிந்துகொள்ள இயலும். இதற்காக எம்மில் நாம் ஆழமான செவியேற்றல் - நாம் தொடர்பாகவும் மற்றவர்கள் தொடர்பாகவும், மதிப்பு, கவனிப்பு தன்னிலை உணர்தல், ஒருவருக்கொருவர் தமது ஆசைகளை பகிர்ந்து கொள்ளுதல் எனும் ஆளுமைகளை வலுப்படுத்திக் கொள்ளல் அவசியம்.

இதனை நாம் சற்று உச்சமாக சென்று சிந்தித்தால், எமது எதிர்பார்ப்புக்களை நோக்கி நாம் எங்கெல்லாம் நகருகின்றோமோ அங்கெல்லாம் எம்முடைய மனத்தினை தொடர்ந்தும் தயார் நிலையில் வைத்திருக்கின்ற முயற்சியென்றும் இதனைக் குறிப்பிட முடியும். இது மிகவும் ஆழமான ஒரு விடயம்.

என்னிடம் ஒரு சம்பவம் இருக்கின்றது. 'எனது நண்பன் ஒருவன் மோட்டர் சைக்கிளில் செல்வதற்காக தலைக்கவசம் வேண்டும், இருக்கிறதா என்று என்னிடம் கேட்டான். அப்போது நான், தலைக்கவசம் தலையிருப்பவர்களுக்குத்தானே தேவை, உனக்கு எதற்கு என்றுதான் என்னிடமிருந்து பதில் சென்றது.'

இவாவாறாக பல்வேறு சம்பவங்கள் எம்மத்தியில் இவ்வாறுதான எதேச்சையாக நிகழ்ந்துவிடுகின்றன. காலம் கடந்த ஞானம் பெறுவதனை விட கொரூரமானதுதான் காலம் கடந்து வருந்துவது என்பது. இத்தகைய வருத்தம் நமக்கா மட்டுமல்ல மற்றவர்களுக்காகவும் சில வேளை நிகழும். இதனை அனுபவிப்பதென்பது மிக மிக கொரூரமானது. இதற்கெல்லாம் காரணம் எதுவென நாம் நோக்கினால் அவை இறுதியில் நாம் மற்றவர்களைப் பற்றி, அவர்களுடைய தேவைகளையும் உணர்வுகளையும் பற்றி அதிக கரிசனை காட்டுவதில்லை என்பதுதான் மிக பிரதான ஒன்றாக இருக்கும். இத்தகைய ஒரு நிகழ்வினால் நானும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதனால் இவற்றையெல்லாம் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

இவை போன்ற நிகழ்வுகளினால் எனக்குள் புலப்படுகின்ற வாசிப்பு யாதெனில், எமது கலாச்சாரமும் எம்முடைய அடித்தளங்களும் எமது தேவைகளைவிட உணர்வுகளைவிட மிகவும் பலயீனமாகத்தான் காணப்படுகின்றன. இத்தகைய தாட்சண்யமான தெடர்புகள் வாயிலாகத்தான் நாம் எமது மனத்தினை செம்மைப்படுத்திக் கொள்ள முடியும். அத்தகைய மனம்தான் எனது தேடல்களுக்கு உள்ளார்ந்த அர்த்தத்தினை வெளிப்படுத்தவல்லது. எனது வாழ்வில் நான் வேண்டுவது தாட்சண்யம். அது எனக்கும் உனக்கும் இடையில் இதயத்திலிருந்து இதயத்திற்கு பீறிட்டுத் தாவ வேண்டும்.





என்னிலிருந்து நீ எடுத்துக் கொண்டவைகளை விட
நான் அதிகமாக தருவதற்கு நினைக்கவில்லை.
நான் அனுபவிக்கின்ற இன்பங்களை
நீ புரிந்துகொள்கின்ற போது
நான் உனக்கு தருகின்றேன்.


உன்னை நான் கடனாளியாக்க கருதி,
உனக்குத் தெரியும் - எனது
கொடுக்கல் வாங்கல்கள் இன்னும் முடியவில்லை என்று.
காரணம், நான் -  உனக்காக 
அன்புடன் வாழவேண்டும்.

அருளுடன் பெற்றுக்கொள்வதுதான்
மிகச் சிறந்த கொடுப்பனவாக இருக்கலாம்.
இவையிரண்டையும் பிரித்துக் காட்ட என்னால் முடியாது.

என்னிடம் நீ தருகின்ற போது
நான் அதற்காக எனது ஒப்புதலை அளித்தேன்.
நீ என்னிடமிருந்து எடுத்துக்கொண்ட வேளை,
அவ்வாறுதான் நானும் உனக்கு தருவதாக உணர்ந்தேன்.

அமைதி - சந்தோசம்- வாழ்க்கை

அமைதி, சந்தோசம் என்றால் என்ன? இவற்றை நாம் ஏன் வாழ்கையுடன் எப்போதும் குழப்பிக் கொள்கின்றோம்? இவைதான் இன்று எனக்குள் எழுகின்றா வினா. இவ்வமைதி சந்தோசம் என்கின்ற இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தனவா? அல்லது இரண்டும் வேறு வேறானவையா என்கின்ற கேள்விக்கு அவ்வளவு சுலபமாக உங்களால் விடையளிக்க முடியமானால் நீங்கள் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் இவையிரண்டும் நீங்கள் உங்களுடைய வாழ்நாளை எவ்வளவு நேசிக்கின்றீர்கள் என்பதில்தான் தங்கியிருக்கின்றன. அதாவது, இதனை மறுவாறாக கூறுவதானால் உங்களுடைய வாழ்க்கையினை எவ்வாறு வாழப்பழகிக் கொண்டீர்கள் அல்லது வாழக் கற்றுக் கொண்டீர்கள் என்பதில்தான் எல்லாமே அடங்கியிருக்கின்றது.

நீங்கள் உங்கள் நன்பர்களுடன் அளவளாவுவதாக இருப்பினும் சரி, உங்கள் தாய் தந்தையர் சொற்படி நடப்பதாக இருந்தாலும் சரி, உங்களுக்குத் தேவையான உடு புடவைகளை வாங்குவதாக இருந்தாலும் சரி, ஏன் உங்களின் காலில் ஒரு முள் குத்திவிட்டாலும் சரி. இவை எதுவாக இருப்பினும் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையினை எவ்வளவு நேசிக்கின்றீர்கள் என்பதில்தான் தங்கியிருக்கின்றன.

பாருங்கள், எமக்கு தெரிந்த எத்தனையோ செல்வந்தர்கள் பணமிருந்தும் அதனை செலவு செய்ய முடியாமல், திருப்பதிகரமாக அல்லது விரும்பிய உணவுகளை கூட உட்கொள்ள முடியாமல் திக்கு முக்காடுகின்றனர் அல்லவா? வருடமொன்றிற்கு கோடி ரூபாய் பணம் சம்பாதித்தும் நிம்மதியை தேடி அலைகின்ற எத்தனையோ பேர் வாழ்கின்றார்கள் அல்லவா? இரவு பகலாக குடும்பத்திற்காக உழைத்துக் கஷ்டப்பட்டவர்கள் அத்தனை சொத்துக்களையும் ஒரே தடவையில் தொலைத்துவிட்டு ஓட்டாண்டியாகி நடுத் தெருவில் நின்ற கதைகளும் எமக்கு தெரியும்தானே!. அதைவிடுங்கள், குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைத்த பெற்றார்களை கடைசிக்காலத்தில் கைவிட்ட எத்தனை பிள்ளைகள் இவ்வுலகத்தில் வாழ்கின்றார்கள். இப்படித்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கின்றது என்றால் இந்த அமைதி சந்தோசம் என்பன வாழ்க்கையில் எப்போது? யாருக்கு கிடைக்கும்? 

நாளென்றுக்கு நூறு ரூபாய் உழைப்பவனுக்கு பத்து ரூபாய் கடன் என்றால் கோடி ரூபாய் உழைப்பவனுக்கு பத்து இலட்சம் ரூபாய் கடன் இருந்துதான் ஆகும். ஆனால் எமக்கு பத்து ரூபாய் பெரிதாக படுகின்ற அளவுக்கு அவனுக்கு பத்து இலட்சம் கடனாக இருப்பது பெரிதாக படுவது கிடையாது. அதற்கு எமது மூளையும் வேலை செய்வதும் கிடையாது. இதற்கு காரணம் எம்மில் எமக்கு நேசம் இருந்தால்தானே தன்னைப்பற்றி ஒரு நம்பிக்கை வரும். தன்னம்பிக்கையும் சுயதிருப்பதியும் இல்லாவிட்டால் எம்மை நாமே எவ்வாறு நேசிக்க முடியும். என்னை நானே நேசம் செய்து கொண்டால் மற்றவர்கள் கூறுபவைகளுக்கெல்லாம் செவி சாய்க்க வேண்டிய தேவை வருமா? 

வீதியோரத்தில் பெட்டிக்கடை வைத்து சீவியம் நடாத்துகின்ற ஒருவனின் நிலமையினை சற்று கற்பனை செய்து பாhத்திருக்கின்றீர்களா? அவனுடைய கடையிலிருக்கின்ற பொருட்கள் அனைத்தையும், பொருட்களை ஏன்? அவனுடைய கடையினையே எமது காசுப்பையினுள் இருக்கின்ற பணத்தினை வைத்து வாங்கிட இயலுமா இல்லையா? பெரிதாகப் போனால் அவனுடைய கடையிலிருக்கின்ற பொருட்களுடைய மொத்த மதிப்பு இரண்டாயிரம் தொடக்கம் மூவாயிரம் ரூபாவினை தாண்டாது. இதற்கிடையில் அவனுக்கு தனியே வீடு வாசல் கிடையாது. ஆனால் குடும்பம் குட்டி, கிடா எல்லாம் இருக்கின்றது. என்றாலும், அவன் அந்த வீதியில் அனுபவிக்கின்ற அமைதியினையும் சந்தோசத்தினையும் நீங்கள் உங்களுடைய வீட்டில் அனுபவிக்க முடிகின்றதா? 

எனக்குத் தெரிய கொழும்பில் லிப்டன் சதுக்கத்தில் சிலான் வங்கிக்கருகில் இருகுடும்பங்கள் சுமார் இரண்டு வருடங்களாக சீவியம் நடாத்தியது. அவ்விரு குடும்பங்களுக்கும் இருந்த வாழ்க்கை என்பது சற்று வித்தியாசமானதுதான். என்றாலும், அங்கு அமைதியிருந்ததே என்று நினைக்கும் போதுதான் எனக்கு பொறாமையாக இருக்கிறது. அவர்கள் தமது காலைக்கடன்களை முடித்துக்கொள்வது, றஹுமானியா பள்ளிவாயலிலும், அருகிலிருக்கும் ஆலயத்திலும்தான். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் குளிக்குமிடமும் சற்று வித்தியாசமானதும், அது மிக அலாதியானதும் மகிழ்ச்சிகரமானதுமான இடம். சில வேளை நானும் அவ்விடத்தில் குளித்தால் எவ்வளவு அலாதியாக இருக்கும் என்று பல தடைவ சிந்தித்திருக்கின்றேன்.  லிப்டன் சதுக்கத்தின் சுற்றுவட்டத்தில் மலச் செடிகளுக்கு நீர் விசிறுவதற்காக ஒரு நீர் வினியோக குளாயினை கொழும்பு மாநகர சபை அந்த சற்றுவட்டத்தினுள்ளேயே ஏற்படுத்தி வைத்துள்ளது. அந்த இடத்தில்தான் அவர்கள் மாலை ஆறு அல்லது ஏழு மணியளவில் குளிப்பார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் இரவுப் பொழுதானதும் அவ்விடத்தில் குளிப்பார்கள். இதுவும் சந்தோசமான வாழ்ககைதான். ஆனால் அது வித்தியாசமான வாழ்க்கை எமக்கு. ஏனென்றால் நம்முடைய வாழ்க்கை வேறுபட்டதாக இருப்பதனால், நாம் வாழ்க்கையினை வேறுபட்டதாக சித்தரித்து வைத்திருப்பதனால் அவர்களை குறைகாணத் துடிக்கிறது எமது மனம். அத்தோடு நின்றுவிடாமல் அவர்களை இழிவாகவும் பச்சை குத்திவிடுகின்றது எமது புறக்கண். இதனையெல்லாம் நான் அவதானித்திருக்கின்றேனா? என்றெல்லாம் நீங்கள் சிந்திப்பது தவறு. ஏனென்றால் என்னைப் பொறுத்த வரை வாழ்வில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அனுபவம்தான். நான் அனுபவங்களைத் தேடி அலைகின்றவன்.

இதுமட்டுமல்ல இன்னும் இருக்கின்றது பாருங்கள். எனக்குத் தெரிந்த இன்னும் இருவர் இருக்கின்றனர். இவர்களும் வீதியில்தான் வசித்து வருகின்றனர். ஆனால் அதில் ஒருவர் பெண்மணி, உங்களுக்குத் தெரியுமா? அவர் வசிக்கின்ற இடமே மிகவும்....மிக மிகவும் வேறுபட்டது. அவர் தனக்காக தயார் படுத்தியிருக்கும் குடித்தனம் மிகவும் பழமையானது. அவருடைய புராதன இருப்பு அவருடைய குடித்தனத்தில் என்றும் அழியாதிருக்கும். இதனை நீங்கள் காணவேண்டுமானால் ஒரு நாள் தெகிவளை ஹில் வீதியால் சென்றுதான் பாருங்களேன். அவருக்கும் இவ்வுலகில் குடும்பங்கள் இருந்திருக்கத்தானே வேண்டும். இந்த வயதான பாட்டிம்மாவுக்கு என்ன நடந்திருக்கும், ஏன் இந்த இடத்தில் அவர் வசிக்கின்றார்; என்பது எனக்கு தெரியது. ஆனால் அவருக்கும் இறைவன் நாளாந்தம் உணவளித்துக் கொண்டுதான் இருக்கின்றான் என்பதனை நினைக்iகையில் எனக்க பெருமையாக இருக்கின்றது. மற்றயவர் கொலன்னவையில் இருக்கின்றார். விடயம் என்னவென்றால், இவ்விருவரும் நான் அந்த வீதியினால் செல்கின்ற போதெல்லாம்  மிகவம் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பதனை நான் அவதானித்திருக்கின்றேன். அவ்வேளைகளில், எமக்கு சிறிய சத்தமொன்று கேட்டாலே நித்திரையில் இருந்து அரண்டுவிடுகின்றோமே இவர்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சுகமாக நித்திரை கிடைக்கின்றது என்று, அதுவும் இத்தனை வாகனங்களின் இரைச்சல்களுக்க மத்தியில் என்று என்னுடைய மனம் என்னை எப்போதும் உறுத்திக்கொண்டுதான் இருக்கின்றது.

இதேபோன்றுதான், கடந்த ஞாயிற்றக் கிழமை ராஜகிரியவிலிருந்து பொரல்லை கனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் சிவப்பு சமிக்கையில் நிற்கவேண்டியதாயிற்று. அப்போது நான் என்னுடைய வாகனத்தினை ஒரு முச்சக்கரவண்டிக்கு பின்னால் நிறுத்திக்கொண்டு தயாராக இருந்தேன். அவ்வீதிப் பாதை மூன்று வழிப்பாதையாக இருந்ததனால் ஏனைய வழிகளிலும் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது பச்சை விளக்கு ஒளிர்ந்ததனால், எல்லா வாகனங்களும் மீண்டும் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தன. ஆனால், நான் தங்கி நின்ற வழிப்பாதையில் எனது வாகனத்திற்கு முன்னால் நின்ற முச்சக்கர வண்டி சிறிதேனும் நகர முடியாமல் சத்தத்தினை செய்து கொண்டு நின்று கொண்டிருந்தது. சற்று தாமத்தித்து பார்த்த நான் அந்த முச்சக்கர வண்டியினை தாண்டி செல்ல முற்பட்டு வாகனத்தினை மற்றய வழியினால் திருப்பிக்கொண்டு புறப்பட்டேன். அப்போதுதான் தெரிந்தது அந்த வழியப்பாதையில் முச்சக்கர வண்டிக்கு முன்னால் ஒரு பிச்சைக்காரர் அவருடைய வண்டியில் பச்சை விளக்கிற்காக காத்து நின்றவர், அதேகனத்தில் அப்படியே தூங்கிக் கொண்டிருந்தார். நாங்கள் எவ்வளவு ஒலி எழுப்பியும் அவரால் அரள முடியவில்லை என்றால் பாருங்கள் எவ்வளவு அமைதியான ஆழ்ந்த உறக்கம் அவருக்கு இறைவனால் கிடைத்துள்ளது என்று.

இதனைத்தான் அமைதி சந்தோசம் வாழ்க்கை என்று குறிப்பிட்டேன். எங்கு உன்னதமான வாழ்க்கை இருக்கின்றதோ அங்குதான் அமைதி பிறக்கும், அமைதி பிறந்துவிட்டாலே ஒரு சந்தோசம்தான்! ஆனால் இவை அவரவர் வாழ்க்கையில் மாற்றங்களினால் சிதைந்துவிடுகின்றன. இத்தனை சிதைவுகளுக்கும் காரண காரியம் நாம் வாழ்க்கையினை எவ்வாறு சித்தரித்துக் கொள்கின்றோம் என்பதுதானே தவிர வேறொன்றுமில்லை.

மாசற்ற மதிப்பு
உனக்கு முன்னால் நீ காண்பவைதான் என்ன?
இது எண்ணங்களின் உருத்தோற்றம்,
சிந்தனைகளில் எழுந்த ஆறாவடு,
செல்வத்திற்கும் இறைவனுக்குமிடையில்
வெறுமைகளின் கருவறை.

செல்வம் எங்கு ஈடேற்றமாகிறது
இறைவன் என்பது நம்பிக்கை
ஆனால் செல்வம் பேறாயிருக்க,
வேறுபட்ட கூட்டமிருக்கிறது.
நீ வேண்டிய எண்ணங்களுக்கு
இறைவனும் சொந்தக்காரன்.
இன்னும் - நீ 
ஒன்றுக்கும் பெறுமதியற்ற
இவர்களின் கண்களில் இருந்து பிரிந்து செல்.

இதுதான் எண்ணம்,
நிராசையின் ஊற்று,
நற்செய்தியாய்க் கிடைக்கப்பெற்ற
சோதனைகளின் சஞ்சல வெளிப்பாடு.
எல்லாவற்றையும் விட உன்னை மாசற வைத்திரு.

ஆனால் அதுதான் நீ காண்பது,
அதுதான் உருத்தோற்றம்,
இறைவன் மாற்றமேதுமில்லை என்றால்
அதுதான் உனது விதி.

ஆதலால் பேறாயிருக்க கற்றுக் கொள்.
உன்னுடைய தங்கம் இறைவனுடையதல்ல என்கும் வரை. 
தரம் எதுவாயிருப்பினும் பேறாயிரு,

அது உன்னுடைய விருப்பம்.
நிம்மதியினை சுவீகாரம் செய்.