இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் என் முதல் ஆண்டு இறுதி தேர்வில் அமர்ந்தேன். இறுதியாக கடந்த மாதம் வெளிவந்த 'வணக்கம்" இதழ் கே.டி. பிறவுனிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆடை வடிவமைப்புக்களை மூன்று பக்கங்களுக்கு குறையாமல் வெளியிட்டிருந்தது. இதற்கு விளம்பர அழகியாக இருந்தது நான்தான். நான் எதிர்வருகின்ற மார்கழி மாதத்தில்> ஆசியா பசுபிக் -2011 சூப்பர் விளம்பர அழகியாக தொலைக்காட்சியில் வலம் வருவேன். நான் என்னைப் பற்றி எந்த பிரம்மைகளையும் உண்டுபண்ணிக் கொண்டது கிடையாது. எனக்கு ஒளிக்கமரா முன்னிலையில் தோன்றுவதற்கு அத்தனை கூச்சம் அத்துடன் வயதும் 26> பட்டப்படிப்பினை தொடங்கியுள்ளேன். இருந்தும், என்னைப் பொறுத்தவரையில் இத்தனை அடைவுகளும் எனது சாதனைதான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் தவறான ஒரு திருமண பந்தத்தில் சிக்கிக்கொண்டேன். நான் எப்போதும் தன்நம்பிக்கையை கொண்டவள். கட்டுப்பாடும் கூடவே சுயமாக தீர்மானம் மேற்கொள்ளும் துணிவும் என்னுடனேயே பிறந்தவை. இத்திருமணம்தான் எனது தன் நம்பிக்கையினை சீலம் சீலமாக கிளித்தெறிந்தது. தொலைந்து விட்ட கனவுகளும், தோய்ந்துபோன வடுக்களும் இருதயத்துள் எண்ணிலடங்கா.
நான் திருமணம் செய்து ஐந்து ஆண்டுகளுக்குள் எனக்கு என்னவெல்லாம் நடந்தன என்பதனை பேசுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. தற்போது என்னைப் பற்றி முழுமையாக என்னால் கூட உணர முடியாத சோகம். இதையெல்லாம் நான் இங்கு கூற காரணம் உண்டு. எனது கதை அல்லது அதன் ஒரு பகுதியாவது இதனை கேட்கும் உங்களில் எவரையாவது தட்டியெழுப்பும் என்பதனால்தான் இங்கு அவற்றை கூறுகிறேன். இளமையின் துள்ளலும், அதன் வேகமும் என்னை 18 வயதிலேயே திருமணத்திற்கு கொண்டு சேர்த்தது. எனது இந்த அறியாமைதான் என்னவோ, அவனுக்கு சமமாக என்னையும் நடாத்த தயங்கிய ஒருத்தனோடு ஐந்தாண்டு காலம் திருமண உறவில் முடக்கி வைத்திருந்தது. இலங்கையில் வாழ்கின்ற ஏனைய ஆண்களிடம் இருக்கின்ற பழக்கமும், நடைமுறையும்தான் அவனிடமும் அப்பழுக்கற்ற விதத்தில் இருந்தன. என்னைத் தவறாக எண்ணாதே - நான் பெண்ணிய வாதி இல்லை. எல்லலோரும் அணிவதில்லை என்று தீர்மானிக்கின்ற வேளையில் ஆடைகள் யாவற்றையும் எரித்துவிடுவதில் என்னதான் நியாயம் இருக்கப்பபோகிறது. இதன் பின்னணியில் நான் எந்தவொரு காரணத்தினையும் காணவில்லை. எனக்கு எது உண்மையோ அதைத்தான் நான் பின்பற்றுகிறேன், பின்பற்றுவேன்.
நான் அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் கோவில் மதகுரு ஒருவரின் உரையொன்றை செவிமடுத்தேன். அவர் முன்பள்ளி ஒன்றினை நடாத்துவதாகவும், குழந்தைகளுடன் வேலை செய்வதன் மூலமாக அவருக்கு கிடைக்கும் ஆனந்தத்தினையும் மனதாற எடுத்துக் கூறினார். மேலும் அவர் அத்தனை குழந்தைகளையும் அவர் கவனித்துக் கொள்கின்ற போது 'துக்கம் அவரை படர்ந்து கொள்ளும்' என்றார். இதே போன்றுதான் நானும், பெண்கள் எப்படி வாழக் கூடாதோ அப்படியானதொரு வாழ்வினை அவர்கள் வாழ்கின்ற போது துக்கித்து வேதனையால் தவித்துவிடுவேன். சோகமும் கூடவே கோபமும் தவிர்க்க முடியாதன. பெண்கள் தமது உரிமைகளுக்காக எழுந்து போராட தவிக்கின்ற போதும், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்படும் போதும், பெண்கள் பாரபட்சத்தின் கெடுதியால் அல்லலுறுகின்ற போதும், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் சாதாரணமாக நடந்தேறுகின்ற போதும் எனக்கு கோபம் வருகிறது.
எனக்குத் தெரியும், இது எதைப்போல் என்றால்! உனது கருத்தைச் சொல்கிற போது தாக்கப்பட்டாய், உன்னுடைய மறுபதிலுக்கும் தாக்கப்பட்டாய், தாக்கப்பட்டாய் ஏனெனில் நீ கூறியது அவனுக்கு பிடிக்கவில்லை, தாக்கினான் ஏனெனில் அவன் குடித்திருந்தான். அடி விழுந்தது ஏனெனில் நீ நினைத்திருந்தாய் உனக்கு உரிமைகள் இருக்கின்றதாக, அவற்றை நீ கேட்டாய். துயரத்தில் சிக்கித் தவித்தாய் ஏனெனில் உன்னிடம் சிறந்த தகுதிகள் இருந்தும் அவற்றுக்காக நீ போராட்டம் நடாத்தினாய். வேதனையின் வக்கிரமம் உன்னை ஆட்கொண்டது ஏனெனில் அவன் நினைத்தான் நீ அவனை மதிக்கவில்லை என்று. சின்னஞ்சிறு அற்ப விடயங்களுக்காகவும் நான் தாக்கப்பட்டேன், சுக்கு நூறாக தகர்க்கப்பட்டேன். இவைகளால் உனக்கு என்ன புரிகிறது என்பது எனக்கு விளங்குகிறது. உன்னிடம் எதுவும் கிடையாது, உனது பெற்றோர்கள் எதற்கும் கையாலாகாதவர்கள், நீ எங்கிருந்து வந்திருந்தாலும் உனக்கு எந்த பெறுமதியும் கிடையாது.
எத்தனை எத்தனை பொய்களையெல்லாம் நாம் நம்பவேண்டியுள்ளது என்பது எனக்கும் தெரியும்.
காவல் நிலையத்தில் காத்து நிற்கின்றதன் கொடுமை எனக்கு தெரியும். காவல் நிலையத்தில் அவர்கள் என்னை பார்த்து கேலியாக சிரிக்கின்ற போதும், நீதான் தவறானவள் என்கின்ற வகையில் அவர்கள் இழிந்து நோக்கும் பார்வையின் வலியும் மிக்க வேதனையானது. தனிமையில், அழும் குழந்தைகளை கையில் ஏந்திக் கொண்டு, கூச்சமும கூடவே அச்சமும் நிறைந்த மனத்துடன் எத்தனை பெண்கள் எமது நாட்டில் இருக்கிறார்கள். இவையெல்லாம் அரக்க குணமுள்ள மனிதனை தன்னிடமிருந்து விடுவித்துக் கொள்ளவதற்காக மேற்கொள்கின்ற போராட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய வலிகள் என்பது எனக்கு தெரியும். ஆனால் அது மிகவும் பயங்கரமானது. இன்னும் மனைவியை பார்த்துக்கொள்வதிலும், தன் குழந்தையின் தாயை பராமரிப்பதிலும், அவளுடைய உரிமைகளை மதிப்பதிலும் பாரிய பொறுப்பு அவனுக்கு உள்ளது என்பதனை நீ பின்னர்தான் அறிந்து கொண்டாய். என்றாலும், அவனுடை குழந்தையின் பொருட்டு சேர்ந்து வாழ்வதுதான் விதியென உன்னுடைய உள்ளுறுப்புக்கள் உணர்த்துவதனை நானும் ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொள்கின்றேன்.
இது நடுநிசியில் வீட்டை வெளியில் பூட்டிவிடுவதைப்போல, ஏனெனில் அவன் அதனை உனக்கு செய்ய முடியும் என அவன் நினைக்கிறான். சிலவேளை, நீ அச்சத்தினால் திக்கமுக்கு அறியாது திணறுவதும், அவ்வப்போது கண்ணீரினால் உனது படுக்கை விரிப்பை நனைத்துக் கொள்வதும் இதனால்தான். எனக்குத் தெரியும், நீ மெய்யாகவே இத்தனை வன்முறைகளிலிருந்தும் உன்னை விடுவித்துக் கொள்ள நினைக்கின்ற வேளையில், 'உனக்கும் காலம் வரும், அது உன்னுடைய அத்தனை துன்பங்களுக்கும் முடிவுகட்டும், காலம் விடைகொடுக்கும், அவனை மாற்றிவிடும், நீ பொறுமையாக இரு" எனவெல்லாம் உன்னைச் சுற்றியுள்ளவர்கள் கூறுவார்கள். இப்படி எத்தனை பெண்கள் இன்று இந்தக் கனவின் ஆழத்துள் தம்மை தாமே மூழ்கடித்துக்கொண்டு மூச்சுத் திணற வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? எத்தனை பெண்கள் 'பொறுமை" என்பதனையே சந்தோசமான குடும்ப வாழ்வின் மூலாதாரமாக சொல்லி சொல்லி அடுப்பங்கரைக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள்? குனியக் குனிய குட்டுப்பட்டிருக்கிறார்கள்? இன்னும் எத்தனை பெண்கள் தாங்கள் பெற்றெடுத்த குழந்தை செல்வங்களின் முகத்துக்காக வாழ்ந்து தொலைக்கின்றார்கள்? எத்தனை பெண்கள் தங்கள் கணிவனிடம் பேசும் போது கவனமாக பேசும்படி ஏவப்பட்டிருக்கிறார்கள்? அவரிடம், கணவனுக்கு பயந்து நடந்துகொள் என முடக்கப்பட்டிருக்கிறார்கள்? கோவிலுக்கு செல்ல? எழுதுவதற்கு? பாவமன்னிப்பு கோர? பூசைகள் நடாத்த? கடவுள் பக்தியில் ஈடுபட? மேலும், எத்தனை பெண்கள்தான் தாக்கப்படுவதற்கு மேலதிகமாக, அநியாயமாக அவதூறுகளையும், பழிகளையும் சுமக்க வேண்டியிருக்கிறது? எத்தனை பெண்கள் இத்தனை குற்ற உணர்வோடு தம் வாழ்நாள் பூராகவும் வேதனைகளை சுமந்துகொண்டிருக்கிறார்கள்? இவர்களை இவ்வாறு நடாத்தக் கூடாதென உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
பெண்களுக்கெதிரான வன்முறை பற்றியும், அதனை முக்கியப்படுத்தும் கல்விக்கும் இங்கு நிறையவே பஞ்சம் நிலவுகிறது. பேச மறுக்கப்படுகின்ற விடயத்திற்காக நாம்தான் பங்களிப்பினை வழங்க முடியும். குடும்ப வன்முறையின் எதிரும் புதிருமான பக்கங்கள் வெறும் சித்திரங்களாலும், குறியீடுகளாலும்தான் மேலும் மேலும் சித்தரிக்கப்பட வேண்டுமா? ஆனால் நாம் ஏன் அதனைப் பற்றி பேசுவது கிடையாது? எம் போன்ற நடுத்தட்டு அல்லது மேல்தட்டு குடும்பங்கள் நினைப்பது குடும்ப வன்முறையின் தாக்கம் பாமர மக்களிடமும், ஏழை எளியவர்களிடமும்தான் காணப்படுகின்றன என்று. எவ்வாறோ! ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை என்னவென்றால், குடும்ப வன்முறையானது எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. கீழ் வர்க்கமாக இருப்பினும் சரி, மேல் வர்க்கமாக இருப்பினும் சரி பெரும்பாலான வீடுகிளில் அது இடம்பெறுகின்றது. இன்னும், எங்களில் பெரும்பாலோர் அவமானம் என்கின்ற ஆடைக்குள்
ஒழிந்து கொண்டு அதனைப்பற்றி பேச மறுக்கின்றோம்.
இதனை படிக்கின்ற இளைஞர்களே! உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உனது அப்பா உன்னுடைய அம்மாவின் மனதை புண்படுத்தவில்லையா? அல்லது உனது அப்பா அம்மாவை நோவினை செய்யவில்லையா? யுவதிகளே! உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். வீட்டைவிட்டு வெளியேறிச் சென்று உங்களால் எந்த அளவில் சமூக வாழ்வில் பங்கெடுக்க முடிகிறது? உன்னுடைய அம்மாவின் வாழ்க்கை பாதை எத்தனை கரடுமுரடானதாக இருக்கிறது? உனது அன்புக்கு பாத்திரமான தந்தை அம்மவை எப்படியெல்லாம் வதை செய்கிறார்? ஆம், இவைக்கு விதிவிலக்குகளும் இல்லாமலில்லை. ஆனால் நான் அவர்களுக்காகவோ, அவர்களைப் பற்றியோ இங்கு பேசவில்லை. இன்று எவர்கள் இவை போன்ற காரணிகளால் வதைகளுக்கும் வற்பறுத்தல்களுக்கும் ஆளாகின்றார்களோ அவர்கள் யாவருக்காகவும்தான் நான் இங்கு பேசுகின்றேன். மேலும், எவர் சமத்துவம் பற்றி பேசகிறாரோ, எவர்கள் உள்ளத்திற்கு இதமளிக்கும் உளவளத்துணை பற்றி அக்கரை கொள்கின்றாரோ, வாழ்வின் கட்டங்களுடன் துணிச்சலாக பேராடுகின்ற வாழ்க்கை துணைகளின் நலன்களை காக்க எவர்கள் முன்வருகின்றனரோ, எவர்கள் உள்ளாரக் கிடக்கின்ற ஆத்திரங்களை அழித்துவிட பொறிமுறைகளை தேடுகின்றனரோ அத்தகைய ஆண்களுக்குமாகத்தான் நான் இங்கு பேசுகின்றேன். இவைகள்தான் உன்னுடைய துணையுடன் சுகமானதும், சுமுகமானதுமான உறவினை வாழ்வதற்கு நிலையான அடித்தளத்தை கட்டியமைக்கின்றன. நான் உன்னுடன் பேசுகிறேன் - ஏன், நீ பேசக் கூடாது? இத்தகைய நடத்தைகளும், மனப்போக்குகளும் நேரடியாக 'இல்லை" என்று பெயரிடப் பட்டுவிடக் கூடாது.
எத்தனை தாய்மார்கள் தங்களுக்கு விருப்பமில்லாத திருமணத்துடன் பிள்ளையின் முகத்துக்காக, அவர்களின் எதிர்காலத்துக்காகவும் இன்று குடித்தனம் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலமையில் வீட்டில் நடக்கின்ற விடயங்களில் சரி எது? பிழை எது? என்பதனை பிரித்தறிவது எத்தனை கடினமானது. எத்தனை பெண்கள் அவர்களுடைய ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை நியாயமாக நடத்தும்படியும், அவர்களுடைய உரிமைகளை மதித்து நடக்கும் படிம் அறிவுரை கூறுகின்றார்கள்? எத்தனை பெண்கள் கணவன்மார் தங்களை விரும்பியபடி நடாத்த அப்படியே விட்டுவிடுகிறார்கள்? பெண்கள் தரப்பில் துணிச்சல் துளியளவும் இல்லாதவரை வரை, அவர்களிடத்தில் சில மடத்தனங்கள் உலவித்திரியும் வரையில் வன்முறை சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கும். வளர்ந்த ஆண் பிள்ளைகள் அவர்களுடைய பெண்களையும் (அவர்களுடைய எண்ணம் எவ்வாறிருப்பினும்) அநியாயாமாக நடாத்த ஆரம்பித்து விடுவார்கள். அத்துடன் வயது வந்த பெண் பிள்ளைகளும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள பின்வாங்குவார்கள். திருமணம் என்பது சந்தி சிரிக்கும்படியாக அமைந்துவிடும். அத்துடன் பிள்ளைகள் (என்போன்ற) குடும்ப உறவுகளை அறுத்துவிட்டு தொலைவில் எங்கோ சென்றுவிடுவார்கள். ஆனால், என்னிடம் பெறுமதியான கேள்வி ஒன்று உள்ளது. அப்பாக்கள் இல்லாத குடும்பங்களில் ஏற்பட்ட உடைவுகளை விட, அப்பாக்கள் இருக்கின்ற குடும்பங்களில் ஏற்பட்ட உடைவுகளும் சரிவுகளும் எத்தனை குறைவானது? நிச்சயமாக குறைவானதல்ல.
நான் இங்கு கூறியது எனது கதையை மட்டும்தான். ஏனெனில் எனக்கு வயதாகிவிட்டது, எனக்கு புத்தியிருக்கிறது, நான் தற்போது பலமான ஒருத்தி. ஆனாலும், குடும்ப வன்முறையை பொறுத்தவரை வெறும் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வதனை விட இது பற்றிய சம்பாசனைகளும், அங்கீகாரமும், அதிகளவிலான ஆதரவும் அவசியம் தேவை. இலங்கையை பொறுத்தவரையில் அது நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது. அதன் நீதி முறைமை என்பது வெறும் தாமதத்தினாலும், நிருவாக சீர்கேடுகளாலும், கையூட்டல்கள் மற்றும் முறைகேடுகளாலும் சிதறடிக்கப்பட்டு காணப்படுகிறது. திருமணம் குலைந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்டன என்றாலும், நான் தேடுகின்ற நீதியை பெற்றுக்கொள்ள இன்னும் காத்திருக்கின்றேன். சட்ட முறை இன்னும் பலமான வகையில் கட்டமைக்கப்பட வேண்டும். நன்மதிப்பு வாய்ந்த சட்டத்தரணிகள் எமக்கு தேவை. அவர்கள் எப்போதும் நீதிமன்ற வளாகத்தினுள் நிலவுகின்ற முறைகேடுகளுக்கும், கையூட்டல்களுக்கும் முடிவுகட்டுபவர்களாக இருக்க வேண்டும். உளமாற சிகிச்சையளிக்கின்ற உளவளத்துணையாளர்களும் எமக்கு தேவை. கல்வி என்பதனால் ஒரு தொழிலை பெற்றுக்கொள்ள முடியும் என்றும், அதனால் தாம் சுயமாக சம்பாதிக்க முடியும் என்று விளங்கிக்கொள்கின்ற பெண்களும் எமக்கு தேவை. நம்பிக்கைக்கு பாத்திரமான குழந்தைப் பராமரிப்பும், நம்பிக்கைக்கு மாசு ஏற்படுத்தாத பொலிஸ் அதிகாரிகளும் எம்மிடம் வேண்டும். ஆமாம், இவைகளை விடுத்தும் நாம் வெகு தொலைவில்தான் இருக்கின்றோம்.
அனால் இன்று, நான் ஓங்கி ஒலித்திருக்கிறேன். நாளை நீ அதனை செய்வாய் என நம்புகின்றேன். அத்துடன் நாளை மறுநாள் அதிகம்; பேர் இதனைப் பற்றி பேசுவார்கள். அடுத்த சந்ததியில் எமது பிள்ளைகள் இவற்றிலிருந்து பயன் பெறுவார்கள்.
இந்த நாட்டில் இளவயதில் தாய்மை அடைவதென்பது ஒன்றும் இலகுவான காரியமல்ல. நான் எல்லா வேளையிலும் எதாவது காரியம் பற்றி உடனடியாக தீர்மானம் செய்துவிட முற்படுகின்றேன். முச்சக்கர வண்டி ஓட்டுனர், முதலாளிமார், மனம் நிறைய அழுக்குகளை சுமந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மானம் கெட்ட அயலவர்கள், வக்கிர புத்தியுடைய சக உறவினர்கள், முறைகேடான ஆசிரியர்கள், பாடசலை அதிபர் என்று மொத்தத்தில் எத்தனபேரைப் பற்றி நான் கவலைப்படுவது. இறுதியில் நான் உணர்ந்து கொண்டது இதுதான். தனித்த பெண்ணொருத்தி அல்லது தாயொருத்தி முகம்கொடுக்கின்ற இன்னல்கள் யாவும் ஏதோவொரு விதத்தில் சமூகம் கற்பிக்கின்ற களங்கம்தான்.
இன்னும் நான் காலையில் கண்விழித்தெழுகின்ற பொழுது, எனக்குத் தெரியும் அந்த நாள் எனக்கே உரித்தானது. நான் வடித்து வைத்த குறிக்கோள்கள் யாவும் என்னுடையவை, அடைந்த இலக்குகளும் அப்படியே எனக்கு சொந்தமானவை, நான் செய்த தீர்மானங்களும் எனக்கே சொந்தமானவை. அதேபோன்று இந்த பிள்ளையும் என்னுடைது, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நீதி எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதுதான் ஆனால் காலம் எடுக்கும்.