பொய் !!!???

பொய் என்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா. எப்போவாவது நீங்கள் பொய் கூறியதுண்டா? அல்லது நீங்கள்தான் உண்மை பேசுபவரா? என்ன நடக்கின்றது எமக்குள்? எம்மத்தியில். அத்தனையும் பொய்தானா? அல்லது நாம்தான் அவற்றை உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கின்றோமா? அப்படியென்றால் எதுதான் பொய்? ஏப்போவாவது நாம் சிந்தித்ததுண்டா? மண்டை குழம்பிப்போயிருக்கின்றது. இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டால் பொய் ஒன்று உண்மையொன்றாக ஆகிடுமா என்ன. இன்னும் இல்லாத ஒன்றை தேடினால் கிடைத்திடுமா? இத்தனைக்கும் மத்தியில் இருப்பது எதுவும் இல்லாததாகாது, இல்லா எதுவும் இருப்பதாகாது என்று தத்துவம் வேறு எமக்கு.

உண்மையும் அதுதான். பொய் என்று ஒன்றை நாம் தேடினால் கிடைக்காதுதான். ஆனால் பொய்யினை காட்ட முடியும், எம்மால் அனுபவிக்க முடியும். அது ஒரு அனுபவப் பொருள். நீங்கள் ஒன்றை பொய் என்று காட்ட முனைந்தால் அதனை உண்மைக்கு மாறானது என்று மறுத்துவிட்டால் போதும். எல்லாம் தவிடு பொடியாகிவிடும். சிலர் கூறுவார்கள் இவனிடம் கதைக்க முடியாது, தத்துவம் பேசுகின்றான் என்று. நீங்களும் இப்படி அனுபவித்திருப்பீர்கள். காரணம், நீங்கள் அறிந்தோ அறியாமலோ குறித்த விடயம் தொடர்பில் அனுபவத்தினை அறிவுடன் பொருத்தி நிகழ்வினை மறுத்துவிடுபவராக இருக்கின்றீர்கள். அதாவது, இப்படியொன்றும் நடக்காது, நடந்திருக்கவில்லை அதனால் அவன் கூறுவது பொய் என்று இலகுவாக கூறிவிடலாம். ஆக இருப்பது எல்லாம் உண்மைதான். இந்த உலகத்தில் எல்லாம் உண்மையாய்த்தான் கிடக்கின்றன. ஆனால் நாம்தான் அவற்றிற்கு பொய் என்று பிரிவினை யொன்றை ஏற்படுத்திக் கொண்டு எம்மை நாமே சிலவேளை முட்டாளாக கருதிக்கொள்கின்றோம், ஏமாற்றிக் கொள்கின்றோம்.

இந்த உலகத்தில் கிடைக்கின்ற எதுவானாலும் அவை உண்மைதான். உண்மையை கூறினால் பொய் என்று ஒன்று கிடையாது. அது எனக்கு பழக்கமானதுமல்ல. இது எதனைப் போன்றது என்றால்.... உங்களுக்கு இலகுவாக விளக்கப்படுத்த வேண்டுமானால்... நாம் அன்றாடம் பயன்படுத்தும் சூடு-குளிர், ஒளி - இருள் என்கின்ற பதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவையிரண்டும் எதிர்பதங்கள் என்று நாம் கூறுகின்றோம், உண்மைதான். ஆனால் நீங்கள் எதனை குளிர் என்று நம்பிக் கொண்டிருக்கின்றீர்களோ அதுவும் சூடுதான். எதனை நீங்கள் இருள் என்று நம்பிக்கொண்டிருக்கின்றீர்களோ அதுவும் ஒளிதான். என்னடா இது புதுக்கதை என்று மிரள வேண்டாம். நீங்கள் விஞ்ஞானம் படித்திருக்கின்றீர்களா? அவ்வாறென்றால் மீண்டும் சற்று ஆழமாக செல்வோம். சூட்டினை அளக்கும் கருவி எது? எத்தகைய அளவீட்டில் நாம் அதனை அளக்கின்றோம்? அதனை நாம் பரணைட் அல்லது செல்சியஸ் என்று அழைக்கின்றோம். இப்போது இன்று இரவு தொலைக்காட்சிப் பெட்டியினை திறந்து செய்தியறிக்கையினை நோட்டமிடுங்கள். அங்கு வானிலை அறிக்கையில் கூறுவார்கள் இலங்iயில் இத்தனை பாகை செல்சியஸ் வெப்நிலை இருந்தது, சுவிசுலாந்தில் இத்தை பாகை செல்சியஸ் வெப்நிலை இருந்தது என்று. 

தொலைக்காட்சி பெட்டியினை மூடிவிட்டு மீண்டும் இங்கு வாருங்கள். வெப்பத்தினை அளக்கும் அதே கருவியால், அதே அலகினால்தான் நாம் குளிரினையும் அளவிடுகின்றோம் என்று சிந்திக்க வேண்டாம். இங்க விடயப் பொருள் அதுவல்ல. மாறாக, வெப்பம் குறைய குறைய நாம் அதனை குளிராக உணர்கின்றோம் என்பதுதான் உண்மை. அப்படியென்றால், வெப்பம் இல்லாது போனால் அதனை நாம் குளிர் என்கின்றோமே ஒழிய குளிர் என்று உண்மையில் ஒன்றும் கிடையாது. இதனை மறைப் பொருள் என்று அழைப்பது சற்று பொருத்தமாயிருக்கும் அல்லது இன்மையினைக் குறிக்கப்பயன்படும் பொருள் எனலாம். அதாவது வெப்ப நிலையின் இன்மையினை நாம் குளிர் என்கின்றோம். இப்படித்தான், ஒளி என்கின்ற பண்பியின் இன்மையினை நாம் இருள் என்று கூறுகின்றோம். ஆனால் அங்கு ஒளி கிடையாது என்று எம்மால் கூறமுடியாது. ஆங்கு ஒளி இருக்கின்றது என்றாலும் எம்மால் உணர முடியாது என்பதுதான் உண்மை. ஆனாலும் உண்மையில் இருள் அல்லது இரவு என்று உன்று கிடையவே கிடையாது.

இப்படித்தான் பொய் என்பதுவும். உண்மை என்பதன் இன்மையினைக் காட்டப் பயன்படும் ஒன்றுதான் இந்த படுபாவிப்பயல் பொய்யும். இந்த உலகத்தில் உண்மைக்கு பாரிய சக்தியிருக்கின்றதனால் இந்த பொய்யும் கூடவே தன்னுடைய பிளைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது. உண்மைக்கு மதிப்பில்லாது இருக்குமானால் பொய் என்பதனை நாம் கணக்கில் எடுக்கவேமாட்டோம். உண்மையினை உருமாறச் செய்வது இந்த உலகத்தில் நாம் வாழும் சூழலும், கூடவே நாமும் இருக்கின்றோமே!.

உண்மையொன்றினை பொய்யாக்குவதில் பெருந்தெண்டாற்றுவது இந்த வாழும் சூழல்தான். அதற்கு பல்வேறு பரிமாணங்கள் இருக்கின்றன. படுபயங்கரமான தன்மையும் அதற்கு காணப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் காலம் வேண்டும் என்று சொல்வார்களே! அது இதனைத்தான் என்று நினைக்கின்றேன். என்னை அவதானியுங்கள்.....

நான் கூறுகின்ற ஒரு விடயம் தற்போது உங்களுக்கு உண்மையாக இருக்கும். 

ஒரு விடயம் தற்போது உண்மையாகவிருக்கும் ஆனால் நேற்று (உண்மையல்லததாக) பொய்யாக இருந்திருக்கும்.

ஒரு விடயம் தற்போது உண்மையாகவிருக்கும், ஆனால் நாளை (உண்மையல்லததாக) பொய்யாக இருக்கும்.   

ஒரு விடயம் தற்போது (பொய்யாக) உண்மையல்லாததாக இருக்கும்.

ஒரு விடயம் தற்போது (பொய்யாக) உண்மையல்லாததாக இருக்கும், ஆனால் நேற்று உண்மையாக இருந்திருக்கும்.

ஒரு விடயம் தற்போது (பொய்யாக) உண்மையல்லாததாக இருக்கும், ஆனால் நாளை உண்மையாக இருக்கும்.

இவை அத்தனைக்கும் காரண கர்த்தா எமக்கிருக்கின்ற இயக்கத்துடன் கூடவே இயங்கும் இந்த உலகமும்தான். மிகவும் தெளிவாக, இலகுவாக கூறுவதானால் எல்லாம் நேரம் படுத்துகின்ற அரிய தொண்டுதான் எம்மை சில வேளை பொய்யனாக்கி விடுகின்றது.

மேலும், நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்....

அதாவது, எனக்கு உண்மையென்று தென்படுகின்ற ஒன்று உங்களுக்கு உண்மையல்லாததாக இருக்கலாம். எனக்கு உண்மையல்லாத ஒன்று உங்களுக்கு உண்மையாக இருக்க முடியும். இதுதான் அடிப்படை விதி. நாம் கருத்து வேறுபாடுகள் என்று கூறுவது இதனைத்தான். ஆனால் உண்மை என்பது நிச்சயத்தன்மை வாய்ந்தது என்று கூறுகின்றார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அவ்வாறு கிடையாது. மேற்கூறிய நிகழ்வுகள் அடிப்படையில் அது நிச்சயதன்மையற்றது. ஆனால் நானும், அடிப்படையில் எல்லாம் உண்மை என்பதனை ஏற்றுக்கொள்ளவதனால் மாத்திரம் உண்மை நிச்சத்தன்மை வாயந்ததுதான் என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். 

இப்படித்தான் பாருங்கள் அன்று ஆடையொன்றினை வாங்குவதாற்காக எல்லயைற்ற ஒரு இடத்திற்கு சென்றேன். அங்கு எனக்கு குறித்த ஆடை பிடித்திருந்தது ஆனால் அதன் நிறம் அவ்வளவு விருப்பமாக இல்லாததனால் அதே அடையில் வேறு ஒரு நிறத்தினை சுட்டிக்காட்டி கேட்டேன். அங்கு வேலை புரிகின்ற நபர் தேடிப்பார்ப்பதற்காக அங்குள்ள களஞ்சிய பகுதிக்கு சென்று ஒரு நிறத்தினை எடுத்து வந்தார். ஆனால் அது எனக்கு பிடிக்காததனால் குறித்த நிறம் இல்லiயா? என்று கேட்டேன். அதற்கு அந்நபர் அங்கு அவர் காட்டிய நிறம்தான் இருப்பதாக கூறிவிட்டார். எனவே அவர் கூறியது உண்மையாக இருந்தது. சற்று நேரத்தில் அங்கு சேவை புரிகின்ற என்னுடைய நண்பர் வந்ததும் அவரிடம் எனது தேவையினை கூறினேன். அப்போது அவர் களஞ்சிய பகுதிக்கு சென்று நான் கேட்ட நிறத்தினை எடுத்து வந்தார். இப்போது முதல் நபர் கூறிய வார்த்தைகள் பொய்யாக மாறிவிட்டது.

உண்மையிலேயே முதல் நபர் அதனை காணவில்லையோ என்னவோ எனக்குத் தெரியாது. அவர் களஞ்சிய அறைக்கு மீண்டும் செல்ல விரும்பாது அந்த பொருள் இல்லையென்று கூறியிருந்தால் அவர் கூறியது பொய் என்று அவருக்குத்தான் தெரியும், எனக்கு அது பொய்யல்ல. உண்மையிலேயே அவர் அந்த பொருளை களஞ்சியத்தில் தேடி களைத்து வந்து இல்லை என்று கூறியிருந்தால் அது அவருக்கும் எனக்கும் உண்மைதான். அடுத்தது, அவர் அங்கு குறித்த நிறத்தினை காணாது வந்து கூறியிருந்தாலும் அது உண்மைதான் என்பதனை மனத்தில் பதிந்து கொள்ளுங்கள். இங்கு நாம் அவருக்கு சாதகமாக அவர் களஞ்சியத்தில் தேடிக் களைத்து வந்துதான் என்னிடம் குறித்த பொருள் இல்லை என்று கூறினார் என ஒரு கருதுகோளை எடுத்துக் கொள்வோம். எனவே அது உண்மையானதாகும். அந்த உண்மை சில நிமிட நேரங்களுக்கு நீடித்தது. அங்கு வேலை புரிகின்ற எனது நண்பர் வந்து அதனை எனக்காக கொண்டு வந்ததும் அந்த உண்மை நிகழ்வு உண்மைத்தன்மை அற்றதாக மாறிவிட்டது. ஆனால் இங்கு நிதர்சனத்தில் எனது நண்பருக்கு முதல் நபருடைய கூற்றை பொய்ப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கம் இருக்கவே இல்லை. ஏனென்றால் நான் முதல் சம்பவத்தினை கூறியிருக்கவில்லை.
      
எனவே, உண்மைத்தன்மையில் நேரம் காலம் எனவற்றுடன் மனித குலம் எப்படி போட்டி போட்டுக்கொண்டு வாழந்து கிடக்கின்றது என்று பாருங்கள். இப்படித்தான் எமது வாழ்வின் ஒவ்வொரு நொடிகளும் உண்மையென்றும், உண்மையல்லாதது என்றும் மாறி மாறி எம்மை இயக்கமாகிக் கொள்கின்றது. அதே நேரத்தில், உலகத்தில் எமக்கு இந்த மறைப்பொருள் இல்லாவிட்டால் சக்தி நிச்சயம் பிறக்காது. சக்தி பிறக்காது போனால் எம்மால் இயக்கமுற இயலாது என்பதனை நாம் சற்று சிந்திக்கத்தான் வேண்டும்.

உண்மைக்கும் உண்மை

அறிவாளி, ஞானி
யாரும் கண்டிருக்க முடியாது,
உண்மைக்கும் உண்மை.

அவர்கள் உண்மை என்றது
வெறும் உண்மைதான்,
அது உண்மையல்ல.
உண்மைக்கும் உண்மை.

உண்மை தெரியாதது,
அறியாதது,
நாம் அப்படி முதிர்ச்சியானவர்களல்ல -
உண்மைக்கும் உண்மை.

நாம் உண்மையின் ஒரு பகுதி,
அதனை காண எமக்கு ஆவலுண்டு,
எமது தலைவிதி – 
உண்மைக்கும் உண்மை.

எம்மால் ஆன வலிகள்
கடினமானது, 
உயர்ந்தது என்றாலும்,
வாழ்வினை வெறுக்க முடியாது,
உண்மைக்கும் உண்மை.

உனக்கு எது உண்மையோ
அது எனக்கு சமமல்ல,
எமது மாற்று நொடிகள்,
உண்மைக்கும் உண்மை.

அவனுக்கு எது உண்மையோ,
எல்லோருக்கும் அது உண்மையல்ல.
அதைத்தான் நான் -
உண்மைக்கும் உண்மை என்கின்றேன்.

இவை அனைத்தும், 
நான் கூறியன - எனக்கு உண்மை,
எனக்கு மட்டும்,
உண்மைக்கும் உண்மை.

0 comments:

Post a Comment