தூரம் - தொலைவு

இது என்ன புதுக்கதை இன்று? இவையிரண்டும் ஒன்றுதானே என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? ஆம் நாம் இவற்றை வேறுபாடின்றித்தான் சாதாரணமாக உபயோகிக்கின்றோம். நாம் எதனைத்தான் சொந்த அறிவுடன் செய்திருக்கின்றோம். யாராவது அல்லது எமது உற்றார் உறவினர்கள் அல்லது பெற்றோர்கள் எமக்கு கூறித் தந்தனவும், நாம் உண்மையென்று கற்றுக் கொண்டவையும்தானே எமக்கு இன்றும் சோறு போட்டுக் கொண்டிருப்பதாக நாம் நம்புகின்றோமே! இவற்றைத் தாண்டியதாக நாம் எப்போவாவது எதையும் பற்றி சற்று சிந்தித்துப் பார்த்திருப்போமா? அல்லது நாம் உண்மை என்று ஏற்று நடந்த ஒரு விடயத்தை அல்லது நடக்கின்ற ஒரு விடயத்தைதான் ஒரு சில வினாடிகளுக்காவது பொய்யாக இருக்க வாய்ப்பிருக்கின்றதா என்றாவது கிஞ்சிற்றேனும் சிந்தித்ததுண்டா? இல்லைதானே! இவைகளும் எமக்கு, எமது அன்றாட வாழ் நாட்களில் தூரமும் தொலைவும்தான்.

இவையிரண்டும் காலத்தால் கட்டுண்ட ஒன்று என்பதனை நீங்கள் அடிப்படையில் கருத்திற் கொள்ள வேண்டும். காலத்தினால் கட்டுண்ணுதல் என்றால் என்ன? இந்த உலகத்தில் காலம் படைக்கப்பட்டிராது போனால் உலகத்தின் இயக்கமே இருந்திராது. இந்த உலகத்தினை படைக்க முன்பு இறைவன் காலத்தைத்தான் படைத்தான். காலம் என்பது பொன்னானதும் பொல்லாததும் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். காலத்தினால் கட்டுண்ட இந்த வஷ்துக்களினால்தான் இந்த உலகத்தில் ஜீவிக்க முடிகிறது. அல்லாது போனால் நீங்கள் இந்த உலகத்தில் வாழவும் முடியாது, மீளவும் முடியாது. ஏனெனில் இவற்றுக் கெல்லாம் காரணம் காலம்தான். எமது விஞ்ஞானம் அதனை நேரம் என்று அழைக்கின்றது ஒரு ஆய்வுக்காக. நேரங்களினது படிமங்களைத்தான் நாம் காலம் என்கின்றோம். ஆனாலும் இங்கு ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நேரம் என்று நாம் கூறுகின்ற வேளை தற்போது இடம் பெறுகின்ற நிலைகளையும், இடம்பெறயிருக்கின்ற நிலைகளையும்தான் நாம் கருத்திற் கொண்டு நோக்குகின்றோம். இத தவறான நிலைப்பாடு. காலம் என்கின்ற சொற்பதம் அப்படியல்ல அது முக்காலங்களுக்குமான தொகுப்பாக விளங்குகின்றது. 
படைப்பினங்கள் யாவும் காலத்திற்கு கட்டுண்டு கிடப்பதனால் நாமும் இயல்பால் காலத்திற்கு கட்டுப்பட்டவர்கள். இறைவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன், கட்டுண்ணாதவன். நாம் தற்போது இருக்கின்ற இயல்பில் இருக்கும் வரை காலத்திற்கு கட்டுண்டவர்களாகவே இருப்போம். இருக்கின்ற இயல்பு மாற்றம் பெறுகின்ற போது நாம் காலத்தை கடந்து, வஷ்துவாயிருப்பதனை விட்டும் காலத்திற்கு அப்பால் பிரசன்னமாயிருப்போம் என்பதுதான் உண்மை. நான் கூறுவது உங்களுக்கு விளங்கவில்லை எனில் அது உங்களுக்கு இருக்கின்ற அறிவின் தன்மையில் இருக்கின்ற குறை. அதற்காக நான் உங்கைள அறிவில்லாத ஒருத்தர் என்று கூறவில்லை. நான் எனது முதற்பந்தியில் கூறியதனை சற்று சந்தியுங்கள்.

ஒருவர் மரணித்துவிட்டால் நாம் அவரை சிலவேளை, இறந்துவிட்டார் என்றும், மரணமடைந்துவிட்டார் என்றும் கூறுகின்Nறூம். இன்றும் சில வேளை, காலமானார் அல்லது ஆகாலமானார் என்று கூறுகின்றோமே, இதன் விளக்கங்களை எப்போவாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? நீங்கள் இவ்வுலகத்தில் வாழ்ந்து நற்பெயர் கண்டு இறந்துவிடுகின்றீர்கள். அப்போது உங்களை இந்தச் சனங்கள் காலமாகிவிட்டார் என்று கூறுவார்களானால் மகிழ்ச்சி அடையுங்கள். காலமானார் என்றால் நீங்கள் காலத்தால் அழியாத இடத்தினை பெற்றுக் கொண்டீர்கள் என்பதுதான் அர்த்தம். நீங்கள் மரணித்த பின்னரும் உங்களை இந்த சமூகம் அன்றாடம் நினைவுகூருகின்றது என்பதுதான் பொருள். இது நான் மேலே கூறியதனைப் போன்று இருப்பினும், மகவும் குறுகியது.

தற்போது விடயத்திற்கு செல்வோம். தூரம் என்றால் என்ன? நீங்கள் கணிதம் அல்லது விஞ்ஞானம் படித்தவராயின் வேகம்  நேரம் என்று இலகுவாக கூறிவிடலாம். அது உண்மைதான். ஆனாலும் நாம் பல தடவைகளில் நேரத்தினையும் வேகத்தினையும் மறந்துவிட்டுத்தான் தூரம் என்பதனை கணக்கிடுகின்றோம். 532 கிலோ மீற்றர்கள் என்பது எவ்வளவு தூரம் என்று நீங்கள் கற்பனை செய்கின்றீர்கள். எனக்கு சுமார் 250 கிலோ மீற்றர்கள் பயணிக்கவே 11 மணித்தியாலங்கள் தேவையாகின்றது. அப்படியென்றால் இது எவ்வளவு தூரமாயிருக்கிறது. இப்படித்தான் நாம் சிந்திக்கின்றோமல்லவா. எனது நண்பன் ஒருவன் ரஷ்யாவில் படிக்கின்றான். அவன் நாடு வந்தபோது ரஷ்யாவிலிருக்கும் எமது பிறிதொரு நண்பனைப்பற்றி விசாரித்து அறிந்து கொண்டேன். அப்போது அவனிடம் உன்னுடைய இடத்திலிருந்து தூரமான இடத்திலா அவன் இருக்கின்றாhன் என்று கேட்டேன். அதற்கு அவன் இல்லை, மிகவும் கிட்டத்தில்தான் இருக்கின்றான் என்றான். ஆப்போது நானும் எவ்வளவு நேரம் எடுக்கும் என்று கேட்டேன் சுமார் 20-25 நிமிடங்களில் எனது இடத்திலிருந்து சென்றிட முடியும் என அவனும் மிகவும் சாதாரணமாக பதிலளித்தான். பின்னர் தொடர்ந்து உரையாடுகின்ற வேளையில்தான் புரிந்தது அவனிருப்பது 532 கிலோ மீற்றர்கள் தொலைவில் என்று. இருந்தவர்கள் அனைவரும் வாயைப் பிளந்து நின்றனர். அவ்வளவு தூரமா என்று. இது வேகத்தினால் வருகின்ற வினை. ஆனாலும் இதனைத்தான் தூரம் என்று கூறுவது.

ஆனால் தொலைவு என்பது எனது கருத்தில் வேறானது. அதாவது தொலைவு அல்லது தொலைதல் என்பது ஒரு பொருள் எனது கட்டுப்பாட்டிலிருந்து தூரமாவது அல்லது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்படுவது எனக் கூறலாம். எனது பேனை தொலைந்துவிட்டது என்றால் என்ன? அதன் அர்த்தம் எதுவோ அதுதான் தொலைதல் என்பதன் மிக எளிமையான விளக்கம். அதாவது, நான் கட்டுண்டு கிடக்கின்ற காலத்தினை விட்டும் அது அப்பாற் சென்றுவிட்டது என்பதுதான் பொருள். ஆனால் அது வேறு நபர்களுக்கு தொலைதலாக இருக்காது. அவர்களிலிருந்து எப்போது அது காலத்தினை விட்டும் அகன்று விடுகின்றதோ அப்போதுதூன் அவர்களுக்கு தொலைவு. ஆனாலும், பாருங்கள் அந்த பொருள் (பேனை) காலத்திற்கு கட்டுண்டதாகத்தான் இருக்கின்றது.

நான் எனது குடும்பத்தினை விட்டு தொலைந்துவிட்டேன் என்றால், அவர்களின் காலக்கணக்கில் இருந்து நான் விடை பெற்றுவிட்டேன். ஆனால் எனது சுயம் காலத்திற்கு கட்டுப்பட்டதாகவே இன்னும் இருக்கின்றது. அங்கு எனக்கென்று காலம் ஒன்று இருக்கின்றது. நான் வாழ்வேன். எங்கேயாவது எனது இருப்பு கிடக்கும். என் பெற்றோர்களுக்கோ அது அப்பாற்பட்டதாக இருக்கும். பிள்ளை சென்ற இடம் தெரியாது பரிதவிக்கும்  தாயின் நிலமை இதுதான். இதனை தூரம் என்று கூற முடியும்தானே என்று நீங்கள் கேட்கலாம். அப்டியென்றால் அங்கு வேகமும் நேரமும் இருக்க வேண்டுமல்லவா? அங்குதான் அவை இருக்காதே.

நேற்று இரவு நான் ஒரு செய்தியினை படிக்க நேர்ந்தது. அந்தச் செய்தியில் "தூரமானது மிக விரைவில் தொலைந்து போகும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை படித்த பின்புதான் மேற்கூறிய நினைவுகள் எனக்குள் தோன்றின. இன்னும் பல வகை எண்ணங்கள் எனக்குள் மீட்பு செய்தன.

ஒரு பொருள் உண்மையில் தனது சுயத்தினை காலத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து கடந்து சென்றுவிடுமானால் அதனைத்தான் நாம் இறப்பு அல்லது மரணம் அல்லது சாவு என்று கூறுவது. நான் இறந்துவிட்டேன் என்றால் காலக்கணக்கில் கட்டுண்டு கிடக்கும் உங்களுக்கு நான் பிரிந்து சென்றுவிட்டதாக தோன்றும்.(தோற்றம் பற்றி ஏற்கனவே கூறியிருக்கின்றேன்)அல்லது இல்லாமல் போய்விட்டதாக தோன்றும். ஆனால் எனது கருத்தில் அர்த்தம் அவ்வாறல்ல. மாறாக , நான் இந்த காலத்தால் கட்டுண்டு கிடப்பதனை விட்டும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றேன் அல்லது விடுதலையடைந்துவிட்டேன் என்றுதான் பொருள். இங்கு நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். ஏற்கனவே நான் கூறியிருக்கின்றேன் இறைவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். அவன்தான் என்னையும் உங்களையும் கூடவே காலத்தை படைத்தான் என்று. ஆக நான் இருக்குமிடம் காலத்திற்கு அப்பாற்பட்ட இடம். ஆனால் நான் அங்கு இருப்பேன். ஆக தொலைவு என்பது காலத்தால் கட்டுண்டவர்களுக்கு கிடைப்பது. காலத்தாற் கட்டுண்ணாதவர்களுக்கல்ல.

இதனை நாம் மிக இலகுவில் புரிந்து கொள்ள முடியாததற்கு நியாயம் இருக்கின்றன. நாம் படைக்கப்பட்டுள்ள விதம், குறிப்பாக எமது உடல்தான்; மிகவும் முக்கிய பங்காற்றுகின்றன. நீங்கள் இருக்கின்ற அறையில் ஒளிர் விட்டுக் கொண்டிருக்கும் மின் குமிழ்களினை சற்று நோக்குங்கள். அதன் ஒளியினை பற்றி சந்தியுங்கள். அந்த மின் குமிழுக்கு சக்தி எங்கிருந்து கிடைத்தன? அதன் அவ்வளவு பிரகாசத்திற்கு காரணம் என்ன? இப்பொழுது உங்களுடைய அடுத்த அறையில் இருக்கும் வேறு ஒரு மின் விளக்கிலிருந்து வருகின்ற ஒளியினையும் சற்று கற்பனை செய்து பாருங்கள். இரு அறைகளிலும் சுடர்விடும் ஒளியில் உங்களுக்கு வேறுபாடு கிடைக்கின்றதல்லவா! ஆம் நிச்சயமாக வேறுபாடு இருக்கும். இப்பொழுது, அப்படியே இரு மின் குமிழ்களும் சுடர்விட அந்த அறைகள் இரண்டும் நீக்கப்பட்டுவிட்டால் என்ன நடக்கும் என்று  சற்று கற்பனை செய்து பாருங்கள். உங்களுக்கு ஒரே மாதிரியான ஒளி கிடைக்கின்றதல்லவா? அப்படியே உங்கள் வீட்டில் இருக்கின்ற அறைகளையெல்லாம் நீக்கி விட்டு மின்குமிழ்கள் மட்டும் எரிகிறது என்று கற்பனை செய்யுங்கள். தற்பொழுது உங்களால் இந்த உலகத்திலிருக்கின்ற ஒளியிலிருந்து உங்கள் வீட்டு மின்குமிள்களின் வெளிச்சத்தினை வேறுபடுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது.

நீங்கள் வேறாக கண்ட ஒளியின் தூலங்களெல்லாம் ஒருமிக்கும் நிலைதான் அது. இப்படித்தான் எமது ஆத்மாவும். இஸ்லாமிய அறிஞர் ஒருவருடைய கூற்று எனக்கு ஞாபகம் வருகின்றது.

"உனது ஆத்மாவினை நினை. ஆதன் மகாத்மியங்களை அறிந்து கொள்ள முயற்சி செய். நீ உடலாலல்ல ஆத்மாவினால்தான் மனிதன்" - இமாம் றூமி (றஹ்)

அத்தோடு பாரதியாரின் கவிதையொன்றும் எனக்கு நினைவுக்கு வருகின்றது...

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பணம்தானோ
பலத் தோற்ற மயக்கங்களோ

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ற மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ
போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ!

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ 
அந்த குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைவதெல்லாம் காண்பதன்றோ
நானும் ஓர் கனவோ!
இந்த ஞாலமும் பொய்தானோ! 

0 comments:

Post a Comment