விபத்தும் விபரீதமும்

என்னடா தலைப்பே விபரீதமாக இருக்கின்றது என்று நினைக்காதீர்கள். இது கதையல்ல நிஜம் என்று உங்களை ஏமாற்றவும் முடியாது. ஏமாற்றுவதை விட ஏமாறுவதுதான் உண்மையில் கேவலமானது. இதை ஏன் நான் குறிப்பிடுகின்றேன் என்றால் அனுபவத்தில் நானும் ஏமாளிப் பயல்களில் ஒருவன் என்பதனால். ஆனால் என்னை யாரும் கோமாழி என்று நினைத்தால் அது தவறுதான் என்று உங்களுக்கே தெரியும். விபரீதம் என்று கூறிவிட்டு என்னடா இவன் விளக்கமில்லாமல் பேசுகிறான் என்று நினைக்காதீர்கள்.

முதலில் எனக்கு ஒரு சந்தேகமுண்டு. விபத்தாக நடப்பது விபரீதமா? இல்லை விபரீதமாக நடப்பதனால் நாம் அதனை விபத்தாக கொள்கின்றோமா? அல்லது இரண்டும் ஒன்றுதானா? எனக்குத் தெரியும் இவையிரண்டும் உண்மையில் ஒன்று அல்ல. விபத்துக்கள் சில வேளை விபரீதமாக நடக்கின்றது. சிலவேளை நிகழ்கின்ற விபரீதங்கள் விபத்துக்களாகவும் உருவெடுக்கின்றன. அனுபவத்தில் நோக்கினால்,  சில விபரீதங்களும் விபத்துகளுக்கு வழியேற்படுத்திக் கொடுக்கின்றன. நிகழ்கின்ற விபத்துக்கள் விபரீதங்களை உருவாக்குகின்றன.

இப்படித்தான் இன்று எனக்கு நன்கு பழக்கமான நபர் ஒருவருக்கு விபத்து? விபரீதம்? ஒன்று நடந்தது. இப்பொழுதே எனக்கு தலை குழம்புகின்றது. நடந்தது விபத்தா அல்லது விபரீதமா என்பது பற்றி. குழம்புவதற்குக் காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? அதுதான் நேரம் என்று சொல்வார்களே! ஆமாம், நேரம்தான் எல்லாவற்றிற்கும் காரணம். சிலர் கூறுவார்களே 'நேரம் பொல்லாதது' என்று. அராபியப் பழமொழியும் ஒன்று இருக்கின்றது, 'நேரம் வாளைவிடக் கூர்மையானது' என்று. பொதுவாக இவற்றுக்கெல்லாம் விளக்கம் கூறுபவர்கள், நேரம் பொன்னானது, அதனை நன்கு பயனுள்ளதாக செலவு செய்ய வேண்டும் என்று கதையை முடித்து விடுவார்கள். ஆனால் உண்மையில் அதன் பின்னணியில் தத்துவம் ஒன்று இல்லையென்றால் அதனை கூறியவன் ஒரு மடையனாக இருக்க வேண்டும். ஏனெனில் பொதுவான விடயங்களை மீளக் கூறுவதில் பயனில்லை. பயனில்லாதவற்றை கூறுவது மடத்தனம்தானே. இதேவேளை, அதனை கூறியவன் அறிவாளியாக அல்லது மேதையாக இருந்திருப்பானேயானால் இப்படியொரு புண்ணாக்கு விளக்கத்தினை எமக்கு தருபவர்கள் நிச்சமாய மடையர்களாக இருக்க வேண்டும். இரண்டில் ஒன்றுதான் உண்மை என்றால் எது உண்மை? என்பதனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

நான் மடையனல்ல என்பதனால் இப்படி எடுத்துக் கொள்கின்றேன் (நான் என்னை அறிவாளி என்று கூற முடியாது): 'நேரம் பொல்லாதது', 'நேரம் வாளைவிடக் கூர்மையானது' என்றால் நாம் அதனை சரியாக பயன்படுத்தாவிட்டால் அது எம்மை விஞ்சிவிடும். இதனால்தான் அது பொல்லாதது. நேரத்தை நாம் விஞ்சி செயற்பட முனைவோமாக இருந்தால் அது எம்மை தாக்கிவிடும் என்பதுதான் அது கூர்மையானது என்பதன் அர்த்தம். அதாவது, அதன் வேகத்திற்கு எம்மால் ஈடு கொடுக்க நிச்சயமாக முடியாது. அவ்வாறு நாம் செய்ய எத்தணித்தால் அது எம்மை நாமே தாக்குவதாகத் தவிர வேறு ஏதுமாயிருக்காது.

என்னடா இவன் விபத்தும் விபரீதமும் என்று கூறிவிட்டு இங்கு வேறு ஏதோ உழறிக்கொண்டிருக்கின்றான் என்று ஆதங்கப்பட வேண்டாம். இவை இரண்டிற்கும் காரணம் நேரம்தான் என்பதுதான் எனது கருத்து. உதாரணமாக, தனது நண்பர் ஒருவரின் பரீட்சை பெறுபேறுகளை அறிந்துகொள்வதற்காக ஒருவர் அலுவலகத்திற்கு செல்கின்றார். அங்கு வேலை புரிகின்ற பலர் இருந்த போதும், அவர்களில் குறித்த ஒருவரிடம் சென்று இவர் தனது நண்பியின் பெறுபேறுகளை காண வந்திருப்பதாக கூறுகின்றார். அதற்கு அந்த பணி புரியும் நபர், இவரிடம் பெறுபேறு தொடர்பான ஆவணங்கள் பெட்டகம் ஒன்றில் இருப்பதாக சுட்டிக்காட்டி அதனை திறந்து பார்க்குமாறு வேண்டுகின்றார். இதனைத்தான் நேரம் என்று கூறுவது.

இவர் அந்த கூற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டிருந்தால் அது விபரீதத்தில் முடிந்திருக்கும். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்டு பெட்டகத்தை திறந்து பார்த்தால் என்னவாகும்? என்று நீஙகள் கேட்கலாம். பார்க்கும் வரை ஒன்றும் நடக்கவில்லை. பார்த்து முடிந்த பின்பு நடந்தவைதான் இங்கு முக்கியமானது. அப்படியென்ன நடந்தது? பெட்டகத்தினை திறந்து தனது நண்பியின் பெறுபேறு இருந்த ஆவணத்தை கவனித்து விட்டு பெட்டகத்தினை மீண்டும் மூட வேண்டுமல்லவா? அங்குதான் நேரம் தன் வேலையை காட்டியது. பெட்டகத்தினை மீண்டும் மூடும் போது கைவிரல்கள் அதற்குள் சிக்குண்டதனால் பாவம் இன்று வைத்தியசாலையில் விரல்களுக்கு தையல்கள் போடவேண்டியிருந்தது. போதாக் குறைக்கு இன்று நாள் முழுக்க கைகளை அசைக்க கூடாது என்று வேறு வைத்தியர் கூறியிருக்கின்றார் பாருங்கள். இதனைத்தான் நேரம் என்று கூறுவது.

ஆனாலும், அவர் என்னிடம் இதனை தெரிவிக்கின்ற போதுகூட பெட்டகம் ஏதோ அவருடைய கைவிரல்களை குறிபார்த்திருந்து நறுக்கிவிட்டதாக கூறுவது மாதிரியாக இருந்தது. அதாவது 'நான் பெட்டகத்தினை மூடும்போது கைவிரல்களை வெட்டிவிட்டது' என்றார். இப்படித்தான் பொதுவாக நாம் கூறுவது. காரணம் எமக்கு பழிபோடும் புத்திதானே எப்போதும் வேலை செய்வது. மற்றவர்களில் பழிபோடுவதும் அதனால் ஏற்படுகின்ற அற்பமான மகிழ்ச்சியில் உயிர்வாழ்வதும்தானே எமக்கு வாழ்நாளில் கிடைத்த அரும்பெரும் பாக்கியம் என்று, மனிதனாய் பிறந்த எமக்கு இன்று பெருமை தருவதாக நாம் எல்லோரும் எண்ணுகின்றோமே!

நானும் இப்படித்தான் ஒரு நாள் வீட்டில் படித்துக் கொண்டிருக்கும் போது என்னை நோக்கி வந்து கொண்டிருந்த எனது அப்பா நின்று சட்டென ஒரு சத்தம் கேட்டது அத்துடன் வருகையை நிறுத்திவிட்டார். ஆப்போது நான் என்ன நடந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் மேசையின் கால் அவருக்கு அடித்துவிட்டதாக கூறினார். ஆனால் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததனால் 'அது எப்படி உங்களுக்கு அடித்தது? நீங்கள்தான் அதற்கு அடித்திருப்பீர்கள்' என்று கேட்டேன். அவ்வளவுதான்....

அதுமட்டுமல்ல, வீட்டில் சில போது கூறுவார்கள் இந்த ஆடை குட்டையாகிவிட்டது அல்லது இந்த ஆடை காணாது என்று, இதன்போதும் நான் மடையன் இல்லை என்பதனால் 'அது எப்படி திடீரென குட்டையானது, நீங்கள்தான் வளர்ந்து பெருத்திருப்பீர்கள்' என்றெல்லாம் கெட்டு கடைசியில் அவமானப்படுவதும் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏல்லாம் அவரவர் நேரம்தான்.

காலம் காலமாக பழி சொல்லி மற்றவர்களிடம் இழி சொல்லை வாங்கிக் கொள்கின்ற எமக்கு அஃறினைப் பொருட்களை கூட அசைத்துத்தான் பார்க்க வேண்டும் என்ற கற்பனை. என்னதான் செய்தாலும் அது எப்படி அசையும், எம்மை பழி தீர்க்கும்? எமது அசல் அப்படி.

இங்கு ஒருவேளை குறித்த பணிபுரியும் ஆள் அதனை பார்த்துக் கூறியிருந்தால் அவ்வாறான ஒரு விபத்து நிகழ்ந்திருக்காது. அங்கு நேரம் தன் வேலையினை காட்டியதனால், இவர் பெட்டகத்தினை திறக்கும் படியாக இருந்தது. இவர் அதனை திறந்த படியினால் அதனை மூட வேண்டியிருந்தது. மூடியதனால் கைவிரல் அகப்பட வேண்டியிருந்தது, அகப்பட்டதினால் நறுக்கென்று வெட்டுண்ண வேண்டியிருந்தது, இவையெல்லாம் நடந்து முடிய வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியிருந்தது, சிகிச்சை பெறவிருந்தது, வைத்தியர் இன்று நாள் முழுக்க கையினை அசைக்காமல் இருக்க அறிவுறுத்தல் வழங்க வேண்டியிருந்தது. இவையெல்லாவற்றிற்கும் காரணம் நேரம்தான். ஆனால் அது எங்கு ஆரம்பித்தது என்று இலகுவில் கூறமுடியாது. என்றாலும், காரணமாக கூறுவதானால், இதற்கு காரணம் அவளுடைய குறித்த நண்பி அங்கு வந்து அவளுடைய பெறுபேறுகளை காண முடியாதிருந்ததுதான் என்று சுலபமாக கூறலாம்.

ஆனாலும், அதற்கும் இதேபோன்று செயற்கோவை அல்லது சங்கிலி தொடர்பு ஒன்று இருக்கின்றது. இதனை 'வண்ணத்துப் பூச்சிக் கொள்கை' (Butterfly theory) என்று கூறுவோம். இதன்படி:

அவளுடைய நண்பி அதற்கான கோரிக்கையினை இவருக்கு கொடுக்காமல் இருந்திருந்தால், இவர் பரீட்சை பெறுபேற்றினை அறிய அலுவலகம் சென்றிருக்க தேவையில்லை, அலுவலகம் சென்றிராவிட்டால், அது பற்றி பணிபுரியும் நபரை சந்தித்திருக்க முடியாது, அவரால் பெட்டகத்தினை திறக்க கூறப்படவும் முடியாது, திறக்கவும் முடியாது, திறந்திராவிட்டால் அவரினால் மூடப்பட முடியாது. மூடப்பட அவரினால் முடிந்திருக்காத போது, கைவிரல்கள் உள் நுளைந்திருக்காது, வெட்டுப்படவும் முடிந்திருக்காது, வைத்தியசாலைக்கு சென்றிருக்கவும் வாய்ப்பிருந்திருக்காது.

எனவே, விபத்திற்கும் விபரீதத்திற்கும் காரணம் முழுமையாக நேரம்தான். நாம் விபத்தினை தவிர்க்க முயன்றால் அதனால் ஏற்படும் விபரீதத்தினை தடுக்க முடியாமல் போகும். நாம் விபரீதத்தினை தவிர்க்க முயன்றால் அதனால் ஏற்படவிருக்கும் விபத்து நடந்துவிடும். நாம் நேரத்தினை மிகவும் கரிசனையுடன் கையாண்டால் இவற்றில் ஒன்றினை எம்மிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். ஆனால் இரண்டையும் ஒரே தடவையில் தடுக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. ஏனெனில் நான் ஏற்கனவே கூறியவாறு நேரம் மிகவும் அசட்டு வேகமானது, அதiனை எம்மால் கட்டுப்படுத்தவோ அல்லது அதற்கு ஈடுகொடுத்து இணையாக பயணிக்கவோ முடியாது.

இன்னும் ஒரு பகுதி இருக்கின்றது. எவர் இவையிரண்டினையும் ஒருங்கே எதிர்நோக்குகின்றாரோ! அதாவது விபத்தினையும் விபரீதத்தினையும் வாங்கிக் கட்டிக்கொள்கின்றாரோ அவருக்கு நேரத்தை விட மோசமான எதிரி வேறு யாரும் இருக்க முடியாது. அப்படியென்றால், அவருக்கு நேரத்தை சரியா ஓட்டத் தெரியவில்லை என்பதுதான் பொருள். எனது நன்கு பழக்கமான நபருக்கு நேரத்தை நன்கு ஓட்டத் தெரிந்திருக்கின்றது. ஆனால் ஈடு கொடுக்க முடியவில்லை. என்னடா இவன் அந்த சம்பவத்தினை கூறவேயில்லையே என்று சிந்திக்காதீர்கள். நான் உதாரணமாக குறிப்பிட்டது அதனைத்தான்.

இன்றும் நேரத்தின் பெறுமதியினை நீங்கள் அறிய வேண்டுமாக இருந்தால் வாருங்கள்.....


சகோதரியின் அருமையை,
இல்லாத ஒருத்தனிடம் கேள்.
பத்து வருடங்களின் அருமையை,
பரிந்து கிடக்கும் தம்பதியிடம் கேள்.


நான்கு வருடங்களின் அருமையை,
ஒரு பட்டதாரியிடம் கேள்.
ஒரு வருடத்தின் அருமையை,
பரீட்சையில் தோற்ற மாணவனிடம் கேள்.


ஒன்பது மாதங்களின் அருமையை,
குழந்தையினை பெற்றெடுக்கவிருக்கும் தாயிடம் கேள்.
ஒரு மாதத்தின் அருமையை,
குறைமாத சிசுவை பெற்றெடுத்தவளிடம் கேள்.


ஒரு வாரத்தின் அருமையை,
வாராந்த பத்திரிகையின் ஆசிரியரிடம் கேள்.
ஒரு மணித்தியாலத்தின் அருமையை,
சந்திக்க தேம்பும் காதல் சோடியிடம் கேள்.


ஒரு நிமிடத்தின் அருமையை,
பஸ்ஸினை, புகையிரதத்தை அல்லது விமானத்தை
தவறவிட்ட மனிதரிடத்தில் கேள்.
ஒரு வினாடியின் அருமையினை,
விபத்தில் தப்பிப் பிழைத்த ஒருவனிடத்தில் கேள்.


ஒரு நொடிப் பொழுதின் அருமையினை,
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் பெற்றவரிடம் கேள்.


நேரம் யாருக்காகவும் காத்திருக்காது...
ஓவ்வொரு கனப் பொழுதும் - நீ
பொக்கிசங்களை தாங்கி நிற்கின்றாய்.
ஆசையான ஒருத்தருடன் - நீ
அவற்றை பகிர்ந்து கொள்ள முடியுமானால்,
பொக்கிசம் மிக அதிகமாக தோன்றும்.

தோழமையின் அருமையை அறிய:
தொலைத்துவிடு ஒன்றை.

0 comments:

Post a Comment