நான் ஒரு மிருகம்

இப்படி எவர்கள் கூறுகின்றார்களோ அவர்கள்தான் உண்மையான தன்னையுணர்ந்த  மனிதர்கள். காரணம் இருக்கின்றது. இந்த உலகில் எவற்றுக்குத்தான், இன்னும் எவருக்குத்தான் காரணம் கிடையாது. எதையெடுத்தாலும் காரணம் கூறுவது மனிதனாய்ப் பிறந்துவிட்டால் கூடவே வருவதுதானே. காரணம் கூறுவது வேறு...காரணம் கற்பிப்பது வேறு. இதையெல்லாம் புரிந்து கொண்டால்தான் இந்த உலகில் எப்படியாவது வாழ முடிகிறது.

எனக்குப் புரியாத ஒன்றுதான் எம்மை நாம் ஏன் மனிதர்கள் என்று கூறுகின்றோம் அல்லது புகழ்ந்து கொள்கின்றோம் என்று. சிலர் கூறுகின்றார்கள் நாம் யாவரும் எனைய விலங்குகளிடமிருந்து வேறுபட்ட ஒரு சாதி இனம் என்று. சில வேளை அதனை என்னால் நம்பமுடிகின்றது. ஆனாலும், பல சமயங்களில் எனக்குள் பல கேள்விக் கணைகள் பாய்ந்து வந்து சிதிலம் சிதிலமாக கூறுபோட்டுவிடுகின்றன. மனிதன் என்ற சொல்லுக்கு எதிர்க் கருத்தாக நாம் மிருகம் என்றுதானே பயன்படுத்துகிறோம். ஆக, எம்மிடம் அப்படி என்ன விசேட குணம் இருந்துவிட்டது என்றெல்லாம் கற்பனை பண்ணியதும் உண்டு. சிலவேளைகளில் நாம் மிருகத்தினைவிட மோசமாகவெல்லாம் நடந்துகொள்ளுவதும் உண்டல்லவா. அதாவது, மனிதனிடத்தில் மிருகத்தைவிட மோசமான கெட்ட பழக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக நான் மிருகங்களிடம் கெட்ட பழக்கங்கள் இருக்கின்றன என்று கூறவில்லை. அப்படிக்கூறுவது எனது நீதியில் நியாமுமல்ல, முறையுமல்ல. இந்த அளவு கோலை இங்கு நான் விளக்க காரணம் நீங்கள் இவ்வாறான குணநலன்களை கொண்டுதான் எமக்குள் பிரிவுகளையும், வேற்றுமைகளையும் ஏற்படுத்தி எம்மை பிளவுபடுத்திக் கொள்கின்றீர்கள் என்பதற்காகத்தான். அவற்றிடம் நல்ல குணாதிசயங்கள் இல்லாததன் காரணமாக அவை மிருகங்கள் என்று அழைக்கப்படுவதாகவும், எம்மிடம் அவற்றைவிட மேலான குணாதிசயங்கள் இருப்பதனால் மனிதர்கள் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆல்லது அவை மிருகங்கள் என்பதனால் அவற்றிடம் மோசமான பண்புகள் இருக்கின்றன என்றும் நாம் மனிதர்கள் என்பதனால் பல சிறப்புக்கள் இருக்கின்றன என்றும் நாம்தான் கற்பனை செய்து கொள்கின்றோம். இதன் உள்நோக்கம் என்னவென்று எனக்கு புரியவில்லை.

ஒருவேளை, தன்னிடம் கேவலமான குணங்களை தாங்கிநிற்கும் மனிதன் மிருகங்களை தம்மைவிட்டும் ஒதுக்கிவிடுவதற்காக செய்த சூழ்ச்சியாகவோ அல்லது தன்னை மேலான ஜென்மங்களாக மார்தட்டி பேசுவதற்கு வாய்ப்பாகவோ இதனை மேற்கொண்டிருக்க அதிக வாயப்பிருக்கின்றது. இவ்வாறு வேற்றுமை காண்பது எமக்கு புதியவிடயமல்ல. இருப்பினும் மனிதன் என்பவன் இலபமில்லாது எதனையம் செய்வும்மாட்டான், கூறவும்மாட்டான்.

இந்த உலகில் வாழ்கின்ற அனைத்து ஜீவன்களுக்கும் தேவைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். அதற்காக நாம் அவை யாவுக்கும் ஒரே மாதிரியான தேவைகள் இருக்க வேண்டும் எனக் கூறமுடியாது. ஆவற்றின் தேவைகளுக்கு ஏற்ப அவைகளின் வாழ்க்கை வட்டம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றது. எனவே, நாம் காண்கின்ற இந்த முன்னேற்றங்கள் என்பது தேவைகளை அதிகரித்துக் கொண்டு அதனை பூர்த்தி செய்து கொள்வதிலா அல்லது தேவைகளை அளவோடு நிறுத்திக்கொண்டு அவற்றை சுவைத்து அனுபவிப்பதிலா என்பது நாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. எமது வாழ்வை ஆசைகளால் நிரப்பிக்கொண்டு காணும் இன்பத்தினைவிட  எமக்கு துளிர்விடுகின்ற ஆசைகளை வாழும் வாழ்க்கையினால் எழிலுறச்செய்வது எப்டியானதொரு இன்பமாக இருக்கும் என்பதனை சற்று கற்பனை செய்து பாருங்கள். எனவே, எல்லாவற்றிலும் ஆசை வைத்துக்கொண்டு அவற்றை நிறைவு செய்ய முடியாது அவதியுறுகின்ற நாம் எந்தவிதத்தில் மிருகங்களைவிட உயர்ந்தவர்கள். ஆனாலும் நாம் அதிலிருந்து எம்மை வெளிப்படுத்திக்கொள் இட்டுக் கொண்ட பெயர்தான் 'முன்னேற்றம்' என்பது.

உங்கள் மத்தியில் நான் ஒரு மிருகம் எனபதற்காக இப்படியான பல்வேறு விடயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், நீங்களோ உயர்ந்தவர்கள், அவற்றில் பலவற்றை நீங்களே சிந்தித்து உணர்ந்து கொள்ள முடியும் என்று நினைக்கின்றேன். அவ்வாறில்லையானால் நீங்கள் உண்மையில் மனிதர்களே அல்ல. இருப்பினும் நீங்கள் உங்களை மிருகம் என்றோ கூறமுடியாது.

சில தினங்களுக்கு முன்பு இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசையில்; நிகழ்ச்சி ஒன்றினை இரசித்துக் கொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அங்கு எதிரில் இருந்த நபரிடம் 'நீங்கள் இந்த உலகில் மன்னிப்புக் கேட்பதாக இருந்தால் யாரிடம் கேட்பீர்கள்?'என்று ஒரு வினாவினை கேட்டார். கேட்டதுதான் தாமதம், எனக்குள் இராசாண மாற்றம் நடந்தேறியதனால் எனது மனம் அந்த வினாவினை என்னை நோக்கி திரும்பக் கேட்டது. மனம் என்னை அறியாமலேயே மன்னிப்பினை நான் கேட்பதற்கு உரித்தான அந்த முக்கிய நபரொன்றினை தேடிக்கொண்டு சென்றது. ஒரு சில கனப்பொழுதுகளுக்கு இது நீடித்ததனால் மிகவும் துயர்வுடன் எனது மூளையின் ஏனைய பக்கங்கள் கெடுபிடியாக செயல்பட்டு நிகழ்வுகளை கனதியுடன் அள்ளி வைத்தன. பல பக்கங்களுள் ஒரு பக்கத்தை புரட்டிய போது ஏதோ செய்தியினை எனது கண்கள் கூற முனைந்து, இறுதியில் அதுவே நான் மன்னிப்பு கேட்டக வேண்டிய நபரை எனக்கு தெரிவித்தது.

அந்தப் பக்கம் எனது பாடசலையின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தினை குறித்துத்தான். எனது வகுப்பில் நான் சண்டையிட்டுக் கொண்டு ஒருத்தனுடன் சில காலம் பேசாமல் இருந்தேன். அவன் பலதடவை என்னுடன் பேச முனைந்தும் நான் அதற்கு ஒத்துளைக்காமல் இருந்ததனால் அது பல நாட்களுக்கு நீடித்துக் கொண்டு சென்றது. ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கையில் அவனைப் பார்த்து கணிதத்தில் கணக்கை போடச் சொன்னார். அவனால் அந்தக் கணக்கிற்கு விடைகாண முடியாது தோற்றுப் போய் நின்ற கனம் அது. அடுத்ததாக யார் என்று நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்த போது அது நானாகத்தான் இருந்தேன். நான் அந்த கணக்கை போட்டு முடித்தேன். அப்போது அந்த ஆசிரியர் என்னை அவனுக்கு மண்டையில் ஒரு குட்டுப் போடக் கூறினார். கூறியதுதான் தாமதம்.... ஏனக்குள் எங்கிருந்து சக்தி கிடைத்தது என்று தெரியாது....அத்தனை நாளும் அவன்மீது எனக்கிருந்த பகையினை அள்ளி எனது கைக்குள் இறுக முடிந்துகொண்டு அவனிடம் சென்றேன்....என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ஒங்கி அவனுடைய மண்டையில் பலமாக குட்டினேன். அவனுக்கு குட்டியவேளையில் எனது கைக்குள் இருந்த நரம்புகள் எப்படி வலித்தன என்பது இன்னும் எனது நரம்புகளுக்குத் தெரியும். இந்த சம்பவத்தினை நான் புரட்டிப் பாhக்கிற வேளையில்.... இன்னும் எனது கை வலிக்கிறது. நான் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நண்பா என்னை மன்னித்து விடு. நான் ஒரு மிருகம்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கின்றது. எனக்குள் இருக்கும் மிருகமே படிப்படியாக செத்துப் போ... எனக்குள் இருக்கும் மனிதமே மெல்ல மெல்ல வெளியே வா....உனக்காகத்தான் நான் காத்துக் கிடக்கின்றேன்.

நீ புன்னகையால் வடிந்த போது...
நானும் நகைத்திருக்க வேண்டும்...
உன் புன்சிரிப்பால் தூவமிட்ட போது...
நானும் சிரிப்பால் அலங்கரித்திருக்க வேண்டும்...
உன் அழுகுரல் என்னை ஆர்ப்பரித்த போது...
நான் உன் கண்ணீரைத் துடைத்திருக்க வேண்டும்...
நீ மௌனம் சாத்தித்த கனங்களில்...
நான் உன்னை நலம் விசாரித்திருக்க வேண்டும்...
நீ பேசிய வார்த்தைகளை...
நான் செவிமடுத்திருக்க வேண்டும்...
நீ ஏன் என்று கேட்டால்...
நான் பதிலளித்திருக்க வேண்டும்....
நீ என்னை விட்டும் அகல முற்பட்டால்...
நான் பிரிந்திருக்க கூடாது...
உன்னுடைய அலறல் கேட்டதும்...
நான் உன்னை நோக்கி விரைந்திருக்க வேண்டும்...
உன்னுடைய உடல் நிலத்தில் கிடத்த கண்டிருந்த போது...
என் கண்கள் நம்பிக்கையிழந்து மன்னிக்க முடியா அந்தரத்தில்...
நான் செய்திருக்க வேண்டின எல்லாம்...
எனது மனத்துள் வந்து உறைந்து கொண்டன...

0 comments:

Post a Comment