கடவுள் இறந்துவிட்டார்

நானும் எனது நண்பனும் வழமைபோன்று காலிமுகத்திடலில் ஒருவரை ஒருவர் பேசிக்கொண்டிருந்தோம். சில நிமிடங்களாவது இந்தக் கொழும்பில் சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும், சந்றேனும் அமைதியினை உருசிப்பதென்றால் இப்படியாக காலிமுகத்திடலை நோக்கி புறப்பட்டு சென்றுவிடுவோம். சுமார் இரவு 9 மணியிருக்கும், நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென அவ்விடத்தில் வெளிப்பட்ட ஒரு சிறுவன் தன்னிடம் வடையும், கடலையும் இருப்பதாகவும் எங்களை வாங்கிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டான். அப்படியே நான் அவனை உற்று நோக்கினேன். இதனை அவதானித்த எனது நண்பனும் தலையை குனிந்து கொண்டு சகிக்க முடியாத உணர்வினை தன்னுள்ளே முழுங்க முயற்சிப்பது புரிந்தது. நானும் அந்த சிறுவனை அப்படியோ உற்று நோக்கி விட்டு உனது பெயர் என்ன என்று விசாரித்தேன். அதன் பின்னர் அவனை மேலும் விசாரிக்க தொடங்கினோம். அப்பொழுது அவனில் ஏதோ மாற்றம் உருப்படுவதனை நாங்கள் இருவரம் அவதானித்துக்கொண்டோம். 

அந்த தம்பியின் ஊரைப் பற்றி வினாவிய பொழுது அவன் கூறிய ஊர் என்னையும் எனது நண்பனையும் ஒரு வினாடி திடுக்கிடச் செய்தது. காரணம் அது எனது நண்பனுடைய ஊர்தான். அப்படியே சுதாகரித்துக் கொண்ட நாங்கள் அவனை அப்படியென்றால் அந்த ஊரில் எவ்விடத்தில் உங்களுடைய வீடு உள்ளது என்று கேட்டேன். அப்போது, அவன் வயதில் சுமார் 11 (அவன் ஆறாம் ஆண்டு படிக்கின்றானாம் என்றான்) வயதுதான் இருக்கும் எங்களை சமாளிக்க முடியாமல் தடுமாறுவது புரிந்தது. நானும், அதுவரையில் அவனை விசாரித்த அனைத்தையும் விட்டுவிட்டு "உன்னுடைய வாப்பா என்ன வேலை செய்கின்றார்" எனக் கேட்டேன். அவர் கொழும்பு பொது வைத்தியசாலையில் சிறுநீரகப் பிரிவில் சத்திர சிகிச்சை முடிந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறினான். அத்தோடு உன்னுடைய தாய் எங்கே என்று வினாவிய போது அவரும் காலி முகத்திடலின் மறுபக்கத்தில் வடையும் கடலையும் விற்றுக் கொண்டிருப்பதாக கூறினான். நீங்கள் கொழும்பில் எங்கு இருக்கின்றீர்கள் என்ற கேட்டதற்கு சிலேவ் ஜலண்டில் வசித்து வருவதாக கூறினான். அப்போது எனது நண்பன் 'அப்படியென்றால் நீ முன்பு கூறியவையெலல்லாம் பொய்தானே' என்று கேட்க அவன் தலையை குனிந்து நின்று கொண்டிருந்தான். சரி என்று கூறிவிட்டு என்ன செய்வது அவனிடம் இருந்த கடலைப் பையில் இரண்டையும் வடையில் சிறிதளவும் வாங்கிவிட்டு அவனை விட்டு விட்டோம்.

இப்படியோ சற்று நேரம் தாமதித்த நேரத்தில், நாங்கள் வாங்கியவற்றை உண்டு முடித்திருக்கவில்லை. அதேவேளை மற்றொரு பெண் அவளுடைய கையை ஏந்திய வண்ணம் எங்களை அணுகி வந்தாள். எனது நண்பன் வசாரணையினை ஆரம்பித்தான்.  சுமார் 15 நிமிடங்கள் வரை நாங்கள் இருவரும் சேர்ந்து அவளை நோக்கி வினாக்களை தொடுத்தோம். அவள் மட்டக் குளியில் வசித்து வருகின்றாள். அவளுடைய பிறந்த இடம் பதுளை. பிறப்பில் ஒரு தமிழ் பெண். அவளுடைய கணவன் அவளை இஸ்லாத்திற்கு மாற்றி திருமணம் செய்துதான் கொழும்பிற்கு கூட்டி வந்திருக்கிறான். தற்போது அவளை விவாகரத்து செய்துவிட்டான். ஆனால் அவளை எனது நண்பன் விசாரித்த போது அவளுக்கு இஸ்லாத்தினைப் பற்றி எதுவும் தெரியாது. அவளுக்கு கலிமா கூட தெரிந்திருக்கவில்லை.  காலிமுகத்திடலில் அவளுக்கு ஒருநாளைக்கு சாராசரியாக 1500 ரூபா தொடக்கம் 2000 ரூபா வரையில் வசூல் கிடைக்கின்றது. சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 2000 சூபா தொடக்கம் 2500 ருபா வரையில் , சில வேளை 3000 சூபா வரையில் கிடைப்பதாக கூறினாள். பிள்ளைகள் இரண்டு இருக்கின்றது. கணவனால் எந்த உதவியும் இல்லாததன் காரணமாக இந்நிலமையாம். இவளுடைய நிலையினை கேட்ட பின்பு நீங்கள் கூறலாம் இவள் பொய் கூறுகின்றாள் என்று. ஆனால் அதற்கும் அவள் ஒரு சான்றினை என்முன் வைத்தாள். நீங்களும் அதனை இங்கே காணலாம். இரவு வெளிச்சத்தில் மிகத் தெளிவாக அதனை படம் எடுக்க முடியவில்லை.











 





இம்மாதம் 15ம் திகதி, விடுமுறை நாள். தெஹிவளையில் வேலை ஒன்றினை முடித்துவிட்டு வழி திரும்புகையில் வெள்ளவத்தை காகில்ஸ் பூட்ஸ் சிட்டியின் அருகில் சிறிது நேரம் எனது நண்பனுக்காக காத்து நிற்க வேண்டி ஏற்பட்டது. நின்றதுதான் தாமதம், ஒருவர் என்னை அணுகி அவரிடம் உள்ள பொருளை காட்டி என்னை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். அவை வேறு ஒன்றுமில்லை, வீடுகளில் பீங்கான் கோப்பைகள் கழுவுகின்ற பஞ்சுத் துண்டங்களும், அவற்றை உராய்சி கழுவ உதவுகின்ற கம்பி இழைகளினால் தயாரிக்கப்பட்ட பொத்தியும்தான் அவரிடம் காணப்பட்டது. நான் அவற்றை வாங்கி என்ன செய்வது என்ற நோக்கில் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அவன் மீண்டும் இருதடவை 'வாங்கிக்கோங்க' என்று கூறினான். நானும் வேண்டாம் என்று கூறிவிட்டேன். சடுதியாக அவன் 'நான் முஸ்லிம்தான்'; என்று கூறினான். அப்போது அதிர்ந்து போன நானும், 'இல்லை வேண்டாம்' என்று கூறி சற்று கோபமாக பார்த்தேன், சென்றுவிட்டான்.  நான் அவனிடம் பொருட்களை வேண்டாம் என்று கூறியபோது அவன் ஏன் தன்னை முஸ்லிம்தான் என்று கூறி அதனை எனக்கு தெரியப்படுத்தினான் என்று இதுவரை எனக்கு சரியாக புரியவில்லை. சிலவேளை நான் அவனிடம் பொருட்களை வாங்கி அவனுக்கு உதவ முன்வராததன் விளைவாக நான் முஸ்லிம் என்பதனை அவண் அடையாளம் கண்டுடிருப்பானோ!

அப்படியே அவ்விடத்தில், 5-10 நிமிடங்கள் கடந்திருக்கும். 17 -21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தனது, பால்குடி மறவாத குழந்தையுடன் என் முன் வந்து வாசைன குச்சிகள் அடங்கிய மூன்று பெட்டிகளை காட்டி 'சேர் மூன்றுக்கும் 50 ரூபா சேர்' என்ற போது என்னால் என் மனத்தினை கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. அவளை நேரெதிரில் எதிர்கொள் எனக்கு இயலாமல் போனது. பின்பு அவ்விடத்தில் எனது நண்பனை சந்தித்த பின்பு அந்த பெண்ணிடம் சென்று நீங்கள் எந்த இடம் என்று கேட்டேன். அவள் கொலன்னாவை என்று பதிலளித்தாள். கணவன் கூலி வேலை செய்கிறானாம். ஆனால் அந்த சகோதரி அவளுடைய  பெயரை மட்டும் என்னிடத்தில் பொய்யாக கூறினாள் என்பது எனக்குத் தெரியும்.  அவளும் முஸ்லிம்தான் ஆனால் அவள் தன்னை ஒரு தமிழ் பெண் போன்று மறைத்துக் கொண்டாள். சில வேளை அவள் என்னை ஒரு இழிந்த சமூகத்தின் வெட்கம் கெட்ட ஒரு அங்கத்தவனாக நேக்கியிருக்கலாம். அல்லது அவளுக்கே அவள் முஸ்லிம் எனக் கூறுவது அவமானமாக இருந்திருக்கும்.

இன்று மருதானை வழியாக சென்று கொணடிருந்த நான் பள்ளிவாயலின் அருகில் ஒரு சகோதரியினை அவதானித்தேன். சுமார் 16-18 வரை வயது மதிக்கத்தக்கவள். இரு கைக்குழந்தைகளுடன் பள்ளிவாயலின் முன்றலில் இருந்து கொண்டு தனது குழந்தைகளை மடியில் போட்டுக் கிடப்பதனை காண்கையில் மீண்டும் நான் எதனைக் கூறுவது....???

சிலவேளை, தொழுகைக்கு போவது கூட எனக்கு கொரூரமாக இருக்கிறது. பிச்சை எடுக்கும் என் தாய், பிச்சை எடுக்கும் என் சகோதரிகள், அவர்களின் குழந்தைகள் முகங்களை எதிர்கொண்டுதானே பள்ளியை விட்டு வெளியில் வரவேண்டும் என்ற ஏக்கமும், வெட்கமும், கூடவே அவமானமும்தான்......... ஒன்றைக் கூற மறந்துவிட்டேன். மறுமையிலும்தான் அவர்களை எதிர் கொள்ள வேண்டும் ????????? 

"கடவுள் இறந்துவிட்டர். அவரை நாம்தான் கொண்றோம்" என  Nietzsche கூறியது உண்மைதான்.

0 comments:

Post a Comment